Thursday, January 31, 2013

விஸ்வரூபம்



ஊர்ல நாட்ல எல்லாரும் கமலோட விஸ்வரூபம் பத்தி பேசலைன்னாலோ இல்லை அதப் பத்தி லேட்டஸ்ட்டா ஏதாவது தெரியலைன்னாலோ "எதுக்குடா பொறந்தே"ங்கர மாதிரி பாக்கராங்க.  சரி இப்படி எதையாவது எழுதிட்டா.  "இங்க பார்டா இவனெல்லாம் எழுதரான்"ந்னு சொல்ல தோணினாலும், கமல் பத்தி கூகுள் பண்ரவங்க கண்ல நம்ம ப்ளாக் தெரிஞ்சு அவங்க இங்க வந்தா, நம்ம ப்ளாகுக்கு தானே பெறுமைன்னு நீங்க இருக்கனும் சரியா.  

நான் நிறைய பேர்கிட்ட அடிக்கடி சொல்லி அடிவாங்கர ஒரு விஷயம் "சோ" வை எனக்கு பிடிக்கும்ங்கரது.  அது எப்படி விஸ்வரூபம் விஷயத்துல ப்ரச்சனையாச்சுன்னு சொல்றேன் அதுக்கு முன்னாடி விஸ்வரூபம் பத்தி சொல்லிடரேன்.

ரிச்மண்ட்ல பல ஃப்ரெண்ட்ஸ் சொன்னா மாதிரி இது ஒரு ஹாலிவுட் படம் அதுல கமல் நடிச்சு அதை இயக்கியிருக்காருன்னு சொல்லனும்.  அப்படி ஒரு படம்.  கதை என்னன்னு முழுசா சொல்ல மாட்டேன்.  கமல் ஒரு முஸ்லீம், ஆஃப்கானிஸ்தான்ல தீவிரவாதிகளோட பயிற்சி எடுத்துக்கர/கொடுக்கர ஒருத்தர்.  விஸ்வநாதன்ங்கர பேர்ல கதக் டான்ஸ் கத்து கொடுக்கர ஐயரா ஒருத்தர்.  "யோவ்  விஸ்வநாதன்னு பேர் வெச்சுட்டு ஐயங்காராவா இருப்பார்"ன்னு கேக்கக்கூடாது.  இவரோட மனைவி பூஜா, மாணவி ஆண்ட்ரியா, மாமா சேகர் கபூர், நண்பர் மைல்ஸ், வில்லன் ராஹூல் போஸ் மற்றும் பலர்.  பாட்டு வைரமுத்து, கமல்.  டான்ஸ் பண்டிட் பிர்ஜு மஹராஜ்.  கமல் டான்ஸ்ல பிச்சு ஒதரரார்ன்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமான ஸ்டேட்மெண்ட்.  கண்ணாடி ரூம்ல காமிரா தெரியாம சுழண்டு சுழண்டு ஆடரதும், காமிராவுக்கு எதிரா ஆடராரா, இல்லை ஆடரத கண்ணாடியில காமிச்சு அதை படம் பிடிக்கராங்களான்னு யோசிக்கக்கூட விடாம,  மாத்தி மாத்தி காமிச்சு பின்னிட்டார்.  வசனம் அங்கங்க நல்லா இருக்கு.  கண்டிப்பா ஹாலிவுட்ல பல டைரக்டர்கள், நடிகர்களுக்கு சரியான சவால் விடக்கூடியவன்னு காமிச்சிருக்காரு.  இளையராஜா ம்யூசிக்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.  


முஸ்லீம் கமல்தான் ஐயர் கமல் ஆ? இல்லை ரெண்டு பேரா? என்ன ஏதுன்னு தெரியரதுக்கு தியேட்டருக்கு போய் சட்டுன்னு படத்தைப் பாத்துட்டு வந்துருங்க.  பாவம் கமல் கைகாசப் போட்டு வீட்டை அடமானம் வெச்சு படம் எடுத்திருக்கரதா சமீபத்துல பேட்டி கொடுத்திருக்காரு.  வளராத (இல்லை வராத) முடியை வெட்ட மாசா மாசம் 20 டாலர் கொடுத்துட்டு பெருமையா வீட்டுக்கு வருவோமில்ல,  அத மாதிரி நெனச்சுண்டு ஒரு 16 டாலர் கொடுத்து இந்தப் படத்தை பாத்துடுங்க.  நிஜமா சொல்லனும்னா 20 டாலர் கொடுத்தே இந்தப் படத்தை பாக்கலாம்.  அவ்வளவு நல்லா எடுத்திருக்காரு.  நான் படம் பார்த்த அதே நாள்ல படம் பார்த்த ஒருத்தர் "என்னய்யா படம் எடுத்திருக்கான், போலீஸ் வந்து நம்மள பிடிச்சுண்டு போயிடுவானோன்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு" ன்னு சொன்னார் அவர் சொன்ன மாதிரியெல்லாம் இல்லை அதனால தைரியமா போய் பாருங்க.  அப்படியும் நம்பிக்கை வரலைன்னா டுபுக்கு இந்த இடத்துல http://dubukku.blogspot.com/2013/01/blog-post_25.html எழுதியிருக்கரத முச்சூடும் படிச்சுடுங்க.

இப்போ தமிழ்நாட்டுல கமலுக்கு நடக்கர ப்ரச்சனை:
இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிரான படம்ன்னு சொன்னா யாரும் நம்ம மாட்டாங்கன்னு எல்லோருக்கும் தெரியும், அதனால கேட்பார் பேச்சை கேட்டு, கண்ட மேனிக்குக் குரல் கொடுத்துண்டு இருக்காங்க.  இது ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில நடக்கர சில சம்பவங்கள்னு கமல் சொன்னது சரிதான்.  இதுல இவரும் தீவிரவாதிங்க சிலரும் தமிழ் பேசரதும் கொஞ்சம் லாஜிக் இல்லாம இருந்தாலும் சினிமான்னா கமல் பம்மல் சம்பந்தம் படத்துல சொன்னா மாதிரி "அனுபவிக்கனும் ஆராயக்கூடாது"  அவ்வளவுதான்.  இந்தப் படத்துல வந்திருக்கர விஷயத்தைவிட பல மடங்கு விஷயம் சுமார் 15 வருஷத்துக்கு முன்னாடியே  தி சீஜ் "The Seige"ந்னு ஒரு படத்துல விலாவரியா வந்திருக்கு.  கமல் தமிழ்நாட்டுல கஷ்டப் படரதை பார்த்தா விஜய் ஒரு படத்துல (திருமலை) அவரோட ஃப்ரெண்ட்ஸை வில்லனுங்க்க கடத்திட்டு போனதும் யாருன்னு தெரியாம, "தெரியலையே காத்துல கத்தி சுத்தரமாதிரி இருக்கு"ந்னு சொல்லுவாரு அது மாதிரிதான் இதுவும் இருக்கு. 

இந்தப் படத்தை ஜெயா டிவி கிட்டயிருந்து விஜய் டி.விக்கு கொடுத்துட்டாரு அதனாலதான் ஜெ. இவரை இப்படி வறுக்கராங்க, இவர் பி.சி தம்பரம்  இருந்த ஒரு விழாவுல அடுத்த ப்ரதமரா ஒரு வேட்டி கட்டிய தமிழன் தான் வரனும்னு சொன்னாரு (அப்படி சொல்லியிருந்தா அதுக்கே கமலை ஒரு காட்டு காட்டலாம்.  இதுக்கு முன்னாடி வேட்டி கட்டின தேவ கெளவுடா என்னத்தை கிழிச்சாருன்னு தெரியலை) அதுல கடுப்பாயி அம்மா இவரை ஒரு காட்டு காட்டராங்க, அப்படி இப்படின்னு நிறைய கேள்விப் படரோம்.  இதுல எது உண்மை எது பொய்யின்னு யாருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது.  அதே சமயம்,  இப்படி ஒன்னு பண்ணி தமிழ்நாட்டுல ஒரு ப்ரச்சனைன்னு வந்தா அது ஜெ வுக்கு தலைவலியா இருக்கும்னு நினைச்சு யாராவது பண்ணியிருக்கலாம்னும் நான் சொன்னா அதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டா நான் எங்க போவேன்.   இதுக்கெல்லாம் புல்ஸ்டாப் வெச்சு ஜெ. கமல் சொல்லி யாரும் ப்ரதமர செலக்ட் பண்ணப் போரது இல்லை அதனால இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அதோட ஜெ டி.வி  நிர்வாகத்தும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு போட்டு ஒடச்சிட்டாங்க.  அதை மறுத்து யாரும் இது வரைக்கும் ஒன்னும் சொல்லலையே அது ஏன்?

ஜெயகாந்தன் (எழுத்தாளர் இல்லை, நம்ம ரிச்மண்ட் நண்பர்) ஃபேஸ்புக்ல சொன்ன மாதிரி கமல் படத்துக்கு இந்த தடங்கல் ஒரு பெரிய பப்ளிசிட்டிதான்னு நினைக்கறேன்.  

இதுக்கு நடுவுல "சோ" கமலுக்கு சார்பா ஜெ கிட்ட பேசனும்னு குப்பன் சுப்பன்னு எல்லோரும் ஒரு அட்வைஸ் கொடுத்திருந்தாங்க.  அதை கேட்டு அவர் கிட்ட போய் யாரோ பேட்டி எடுக்க அவர் "தடை சரிதான்"ந்னு சொல்ல, இப்போ எல்லாரும் அவரை சரமாரியா திட்டிட்டிருக்காங்க.  இதுல ஹை லைட்டு என்னன்னா, ஆபீஸ்ல ஒருத்தர் "யோவ் பெரிசா சோ வைப் பத்தி பேசுவியே, இட்லி வடை பதிவை படிச்சியா (http://idlyvadai.blogspot.com/2013/01/blog-post_31.html)  இப்ப என்ன சொல்றே, அந்தாளுக்கு மண்டைல முடிதான் இல்லைன்னா, இப்ப மூளையும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.  இப்படி இருக்கரதுக்கு அந்தாளு...... " ந்னு அவரத் திட்ர சாக்குல என்னை நல்லா திட்டிட்டு போயிட்டாரு.  

முகமது பின் துக்ளக் படமும் சரி நாடகமும் சரி காலத்தை கடந்து இருக்கர விஷயம்.  அதுல முஸ்லீம்களுக்கு எதிரா எதுவும் இல்லைன்னு தெரிஞ்சாலும் "சோ" வை அலைக்கழிக்கனும்னு அதுக்கு தடை மேல தடை போட்டாங்க.  ஆனா விஸ்வரூபம் அப்படி இல்லைன்னு அந்த டிராமா/படம் பார்த்தவங்களுக்கும், விஸ்வரூபம் பார்த்த/கேட்டவங்களுக்கு தெரியும், தெரியாத மாதிரி நடிச்சா ஒன்னும் பண்ண முடியாது.  

இந்தப் படத்துலயும் ப்ராமின்ஸ்ஸ கேவலமா கிண்டல் பண்றாங்க, அதுவும் கமல் டான்ஸ் ஆடறேன் பேர்வழின்னு நடை, பேச்சு, பாவனைனு எல்லாத்தையும் ஒரு 'திரு நங்கை' மாதிரி பண்ணி வெறுப்பேத்தராரு.  நம்மூர்ல டான்ஸ் கத்துக்கரவங்க, கத்து தரவங்க எல்லாரும் அப்படியா இருக்காங்க. இவரை பார்க்கும் போது, டி.வில மோகன் வைத்யான்னு ஒருத்தர் இப்படிதான் நடிப்பாரு அவர மாதிரியே இருக்கு.  அது என்ன லாஜிக்கோ தெரியலை, கண்றாவியா இருக்கு, அவர் மனைவியா வர்ர பூஜாவை NRI ஐயர்ன்னு சொல்லி அவங்க தமிழ கொலை பண்ணி, நடுவுல ஜோக்குன்னு தத்து பித்துன்னு பேசி படுத்தரதுக்காக இந்தப் படத்துக்கு தடைன்னு சொல்லியிருந்தா சரியா இருந்திருக்கும்.  திரைக்கதைல நிறைய ஓட்டை, டுபுக்கு சொன்ன மாதிரி எடிட்டிங்க் கொஞ்சம் சொதப்பல், நடிகர்கள் செலக்‌ஷன் கொஞ்சம் தண்டம்.  ஆண்ட்ரியா வையும் பூஜாவையும் விசாரிக்கர எஃப். பி.ஐ பெண் ஆபீசர் தண்டமோ தண்டம்.  5 ரூபாய்க்கு நடிச்சுட்டு கண்டிப்பா ஒரு 5000$ -10000$ வாங்கிட்டு போயிருப்பாங்கன்னு நெனைக்கரேன்.

வில்லன் நல்லா பண்ணியிருக்காரு.  "இவர் பெரிய ஆக்டர் இவரைக் கூடத் தெரியாம எப்படி இருக்க" ன்னு போன வாரம் அரவிந்தன் கேவலமா பார்த்தார்.  அதுக்கப்புறம் இவரைப் பத்தி படிச்சா நிஜமாவே நிறைய படங்கள்ல நடிச்சிருக்காரு, எனக்குத்தான் தெரியலை.  இவரை பத்தி நான் படிக்கரது இருக்கட்டும், அப்பா காபி பத்தி சூப்பரா எழுதியிருக்காரே அதைப் படிச்சியான்னு அவரை சதாச்சிட்டேன், அது ஒரு தனிக்கதை.  

கடைசியா, இந்தப் படம் இப்ப சொல்ற விஷயத்துக்காக  தடை பண்ணப் படவேண்டிய படமில்லை.  ப்ராமின்ஸ கிண்டல் பண்றதுக்கும், டான்ஸர்ஸ கிண்டல் பண்றதுக்கும், எஃப்.பி.ஐ. போலீஸ்ன்னு எல்லோரையும் கிண்டல் பண்றதுக்கும் தடைன்னா பரவாயில்லைன்னு சொல்லலாம்.  அது நம்ம வாழ் நாள்ல நடக்கப் போரதில்லை.  அதனால வழக்கம் போல (தி.க உருவான காலத்துல இருந்து) நாம அவங்கள மன்னிச்சிடுவோம்.  அடுத்து "சோ" வோட முகமது பின் துக்ளக் படத்துக்கு கொடுத்த ப்ரச்சனைக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.  அப்படி கம்பேர் பண்ணினா அது சரியான பித்துக்குளித்தனம்.

எப்படியோ, இந்தப் படம் இன்னும் ஒரு வாரம் இல்லை ரெண்டு வாரத்துல internet-ல வரதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல தியேட்டர்ல வந்து கமலுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கட்டும்.



பி.கு 1: கமல் இவ்வளவு நல்லவர், அவ்வளவு நல்லவர்ன்னு எல்லோரும் சொல்றோமே, அவர் ஒரு பேட்டியில எனக்கு மஹாத்மாவை விட மோஹந்தாஸ் கரம்சந்த் காந்திங்கர வக்கீலதான் பிடிக்கும்னு உளறியிருந்தாரே அதை யாரும் ஏன் கேள்வி கேக்கலை?  

பி.கு 2: காதலா காதலா படம் வெளிவரதுக்கு கமலுக்கு ப்ரச்சனை வந்த போது, மணிவண்ணன் நடிக்க மாட்டேன்னு சொன்னதும் அந்த ரோலுக்கு எம்.எஸ். விஸ்வநாதனை போட்டு ஒப்பேத்தி வெச்ச போது வலுவில வந்து நான் உன் படத்துல நடிப்பேன் எனக்கு ஒரு ரோல் குடுன்னு சொல்லி அதை கல கலப்பா செஞ்ச, ரொம்ப நல்லவர்ன்னு கமல் பாராட்டின "சோ"  இப்ப அவரோட கருத்தை தைரியமா சொன்னதும் கெட்டவரா ஆயிட்டாரே அது எப்படி?

பி.கு3: மஞ்சள் அடிக்காம எதையாவது பின் குறிப்புன்னு எழுதினா யாரும் கவனிக்க மாட்டாங்கன்னு (ஹி ஹி) மஞ்சள் தடவிட்டேன்.


முரளி இராமச்சந்திரன்.


4 comments:

  1. எப்போ வரும் என்று தான் தெரியலை... தியேட்டரில் தான் பார்ப்போம்...

    ReplyDelete
  2. முரளி,

    உங்கள் கருத்துக்களுக்கு நிறைய மாற்றுக் கருத்துக்கள் என்னிடம். ஒரு மறுமொழி போட நினைத்து, அனுமார் வால் போல நீண்டு, ஒரு பதிவாக ஆகிவிட்டது. இங்கெ பதிந்திருக்கிறேன்.

    RTS blogக்கு கூடுதலாக ஒரு பதிவு :) ஊருப்பக்கம் வந்தா, நாகு ஐயா கவனிச்சுகுவார் என்ற நம்பிக்கையில் ;)

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன்,
    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. வரும் வரும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.

    முரளி.

    ReplyDelete
  4. சதங்கா,

    மாற்றுக் கருத்து கண்டிப்பா இருக்கனும். இல்லைன்னா, நாமெல்லாம் ஆட்டு மந்தையாத்தான் இருக்கனும். என் பார்வை உங்களோட பார்வைல இருந்து வேறாயிருக்கலாம். அதே நேரம் பாரதியை தயவு செஞ்சு கமலோட கம்பேர் பண்ணாதீங்க. கமல் எனக்கு மிகப் பெரிய நடிகர், கலைஞன், எங்களோட குடும்ப நண்பரோட நெருங்கின உறவினர் இப்படி பலப் பல. ரஜனியை விட எனக்கு கமலோட திரைப்பட தீவிரம் பிடிக்கும் அதுக்காக அவரை பாரதி, கம்பர், வள்ளுவர்ன்னு சொன்னா ஏத்துக்க முடியாது.

    ஒரு டி.வி. இண்டர்வ்யூல அவர் மதன் கிட்ட சொல்றார், நான் ஒரு நாத்திகவாதியானவன். அப்படி நாத்திகவாதியா இருந்தாலும் என்னை கடவுள் தண்டிக்க முடியாது, அப்படி தண்டிச்சா அப்புறம் அவர் என்ன க்ருபா சமுத்திரம்னு. அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதே சமயம், எனக்கு எல்லா நல்லதும் கடவுள் பண்ணனும். இதுக்கு மேல அவரோட அறிவு ஜீவித்தனத்தை என்ன சொல்றது.

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!