Tuesday, January 15, 2013

காப்பி புராணம் - இரண்டாம் பகுதி

காப்பி புராணம் முதல் பகுதி இங்கே...
இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை வெள்ளைத் துரைமார்களின் பானமாக இருந்த  காப்பி மேட்டுக் குடியைச் சேர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் தலை காட்டியது.விதேசிகளின் பானமாக இருந்த காப்பி படிப்படியாக சுதேசிகளின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும்  அடையாளமாக வளர்ந்தது. பணக்காரர்கள் காப்பி குடிப்பதை நாகரீகத்தின் ஒரு அம்சமாக கருதத் தொடங்கினார்கள்.

அப்பொழுது புதிதாகத் தொடங்கிய காப்பி கிளப்புகளில் மட்டும் காப்பி விற்பனையானது,. காலப்  போக்கில் நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க குடும்பங்களில் காலை உணவு காப்பியுடன் தொடங்கும் நிலை வளர்ந்தது.

குறிப்பாக 1920களில் காப்பி குடிக்கும் பழக்கம் பிராமண சமூகத்தில் எல்லா பகுதியினரிடத்திலும்  நிலை பெற்றது. வீட்டு விசேஷங்களில் காப்பி நன்றாக அமைவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். பிராமணர்கள் காப்பி கிளப்பில் டிகிரி காப்பி என்று பெருமையோடு விளம்பரம்  செய்தார்கள். 

சில ஹோட்டல்கள் நல்ல காப்பிக்காக புகழ்ந்து பேசப்பட்டது. வியாபார போட்டியில் காப்பி  பொடியுடன் போதை பொருட்கள் சேர்க்கப்படுவதாக சில ஹோட்டல்களுக்கு எதிராக வதந்தி  உலவத் தொடங்கியது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும்  நகரங்களில் பல ஹோட்டல்கள் நல்ல காப்பிக்கு புகழ் பெற்றவை. அந்த ஹோட்டல்களில் காப்பி குடிப்பதை வாழ்நாள் பாக்கியமாக அந்த பகுதி மக்கள் நம்பினார்கள். திருச்சிக்கு அருகில் ஒரு  கிராமத்தில் உள்ள பெரியவர் தன் இளமைக் காலத்தில் பிரபல ஹோட்டலில் காப்பி குடிப்பதற்காக நகரத்துக்கு போனதைப் பற்றி பெருமையாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ரயிலில் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு தினமும் திருச்சி சென்று அந்த ஹோட்டலில் காப்பி குடித்த பெருமையை அளந்து கொட்டுவார். 

இப்படி காப்பிக்கு அடிமையாகிப் போனவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள் மத்தியில் அதிகமாக இருந்தனர். ஆனால் இன்று மற்ற சமூகத்திலும் காப்பிக்கு அடிமையானவர்களைப் பார்க்க முடியும். 

வீட்டில் காப்பி தயாரிக்கும் பழக்கத்தை பிராமணர்கள்தான் முதல்முதலாக தொடங்கினார்கள் என்பது சரிதான். அந்த காப்பியை நுரை போங்க ஆற்றி குடிப்பதும், அவர்களுடைய தனி பாணி. அவர்களுடைய ஆச்சாரம் கெடாதபடி காப்பியை குடிப்பதற்கு தனியாக டம்ளர்களும் தயாராகியது.  பித்தளை பாத்திர உற்பத்திக்கு புகழ் பெற்ற கும்பகோணம்தான் விளிம்பில் வளைந்த தம்ளர்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்தது. உதட்டில் வைக்காமல் மேலே தூக்கி காப்பியை குடிப்பதற்காகவே இந்த தம்ளர்கள் பயன்படுத்தப்பட்டன. டவரா, டம்ளரில் காப்பி கொண்டு வந்து வைக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் காணமுடியாது. பிராமணர்கள் அதிகம் வாழும் நகரம் கும்பகோணம்.காப்பி பிரியர்களான பிராமணர்களும் அங்கே அதிகம்.நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தமிழ்நாட்டில் டவரா டம்ளரில் காப்பி குடிக்கும் பபழக்கத்தைப் பற்றி படத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. 

தரமான காப்பி தயாரிப்பதில் புகழ் பெற்ற ஹோட்டல்காரர்கள் அபின் போன்ற போதைப் பொருளை பயன்படுத்துவதில்லை என்று மறுக்கிறார்கள். காப்பிக் கொட்டையை தேர்வு செய்வதிலும்,அந்த கொட்டையை பக்குவமாக வறுப்பதிலும்தான் தரம் அமைகிறது என்று கூறுகிறார்கள். பில்ட்டர் முறையில் தயாரிக்கும்போது, சேர்க்க வேண்டிய நீரின் அளவும் கலக்கப்  பயன்படும் பாலும் காப்பியின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதோடு மட்டுமல்ல, அத்துடன் போடும் சர்க்கரையின் அளவும் காப்பியின் தரத்தையும், ருசியையும் தீர்மானிக்கிறது, சற்று கூடுதலான சர்க்கரை காப்பி ருசியை கெடுத்து விடும் என்கிறார் ஹோட்டல்காரர். 

பல ஆண்டுகளாக காப்பி தயாரித்த அனுபவம் காரணமாக பல பிராமண குடும்பங்களில்  காப்பி சுவையாக அமைகிறது. காலப்போக்கில் மற்ற சாதியினர் வீட்டிலும் பக்குவான முறையில் காப்பி தயாரிக்க முடியும். 

உணவுப் பழக்கங்களில் பழமையை தொடர்ந்து வற்புறுத்தும் பிராமண சமூக முதியவர்கள், காப்பி குடிப்பதால் வரும் பசிமந்தம், மற்ற நோய்கள் பற்றி கூறி மாறிவரும் உணவுப் பழக்கங்கள்  பற்றி எச்சரிக்கை செய்தார்கள். காலப் போக்கில் அவர்களும் காப்பி பிரியர்களாக மாறியதுதான் கண்ட பலன். 

எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள் வளர்ந்து வரும் காப்பி கலாச்சாரத்தை கண்டித்தன.சில மருத்துவர்கள் காப்பி குடியால் வரும் நோய்களை பட்டியல்  போட்டு பத்திரிகைகளில் எழுதி எச்சரித்தனர்/. தமிழ் அறிஞர் திரு. வி. க. வின் பத்திரிகையான  நவசக்தி தொடர்ந்து, காப்பி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது. நூறாண்டு வாழ்வது எப்படி என்ற நூலை எழுதிய மறைமலை அடிகள் காப்பி போன்ற நவீன பழக்கங்கள் மனிதனின் ஆயுளைக்  குறைத்து விடும் என்று எச்சரித்தார்.  

ஆனால் திரு. வி. க.வின் நவசக்தியில் தன் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய கல்கி  காப்பியைப் பொறுத்த வரையில் மொடாக் குடியராக மாறினார்.  உயர்சாதி காங்கிரஸ் தலைவர்கள் பலர் காப்பி குடிப்பதை பழக்கமாக வளர்த்துக் கொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்கு எடுத்துக் கொள்ளத் தொடங்கிய மேட்டுக் குடிப்  பெண்கள் காப்பி குடிப்பதை புதிய நாகரீகமாக வளர்த்துக் கொண்டார்கள். தீவிர காந்தியவாதிகள் பலர் காப்பியை மினி கள் என்று வர்ணித்தனர். இப்படி நாகரீகமாக காப்பி குடிப்பவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுவதை போலித்தனமான அரசியல் என்று சாடினார்கள்.

இவர்களுடைய காப்பிக் குடி பழக்கத்தை குறை கூறி காந்தியடிகளிடம் பல காங்கிரஸ்வாதிகள் புகார் கொடுத்தார்கள் இத்தகைய புகார்கள் தன்னிடம் வருவதாகத் தெரிவித்து காந்தியடிகள் தன்னுடைய யங் இந்தியா இந்தியா பத்திரிகையில் வருத்தம் தெரிவித்தார் என்றசெய்தியைக் கேட்டால் இன்று எல்லோருக்கும் சிரிப்புத்தான் வரும்.

தமிழ்நாட்டின் மூத்த காந்தியவாதியான ராஜாஜியே ஒரு பெரும் காப்பிபிரியர் என்பதுதான் வேடிக்கையான செய்தி அதுமட்டுமல்ல கொதிக்கும் சூட்டில் உள்ள காப்பியை அவர் அனாயாசமாக குடிப்பதை நேரில் கண்ட பலர் அயர்ந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக ராஜாஜி  மிகச் சூடாக காப்பி குடிக்கும் பழக்கத்தை அவரோடு பழகிய பலர் எழுத்தில் பதிவு  செய்திருக்கிறார்கள்

காலையில் பழைய நீராகாரம் சாப்பிடும் பழக்கம் பல தலைமுறையாக இருந்தது. அந்த பழக்கத்தை விட்டு காப்பி குடிக்கத் தொடங்கியதைக் கண்ட பலர் அது பற்றி எச்சரித்தார்கள். காலையில் பழைய நீராகாரம் சாப்பிடுவதை விட்டு ஆரோக்கியத்துக்கு கேடான காப்பி  பழக்கத்தை வளர்த்துக் கொண்ட நிலையை வர்ணித்து பாடல்களை பாடினார்கள். இந்த வகையில்  இங்கிலாந்து காப்பி vsஇந்திய பழையது என்ற சிந்து பாடல் பிரசித்தமாக இருந்த காலம் உண்டு. இந்த காப்பி பழக்கம் ஆச்சாரமான வாழ்க்கை,ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் உடைத்து விட்டதாக பழி கூறி காப்பி மீது வசை பாடும் பாடல் பலர் வாயில் முணுமுணுக்கக் கேட்கலாம்.

அமாவாசை விரதத்தை அடியோடு கெடுத்தாயே  
ஆனதோர் கார்த்திகை விரதத்தை தடுத்தாயே 
ஏகாதசி விரதம் இடுப்பை ஒடித்தாயே  

என்று ஜனரஞ்சகமாக அந்த பாடல் செல்லும்.

காளமேகப் புலவர் என்ற பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அவருடைய சிலேடைப்  பாட்டுத் தான் நினைவுக்கு வரும். இரண்டு பொருள் தரும் வகையில் அவருடைய பாடல்கள் நகைச்சுவையாக இருக்கும். தென்னை மரத்தையும் பனை மரத்தையும் ஆசை வார்த்தை கூறி மயக்கி பணம் பறிக்கும் தாசியோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் பாடியிருக்கிறார். வாயில் போட்டு  மெல்லும் வெற்றிலையைக் கூட தாசியுடன் ஒப்பிட்டு அவர் பாடியிருக்கிறார். 

அந்த காளமேகப் புலவர் பாணியில் ஒரு புலவர் காப்பியை தாசியுடன் ஒப்பிட்டு பாடியிருக்கிறார்.அந்த பாட்டையும் கொஞ்சம் ரசிக்கலாம்.

முன்னால் இருந்த நல்ல பழக்கத்தை எல்லாம் கைவிடச் செய்தாய், உன் பழக்கத்தை கொண்டவரை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய், பின்னர் பல நோய்களைக் கொடுத்தாய், இவ்வளவு மோசமான காப்பியே நீயும் விலை மாதுவும் ஒன்றுதான் என்று காப்பி மீது வசை பாடினார் இந்த நவீன காளமேகம்.

முன்னர் எளிதிற் பழக்கம் முற்றுவித்துச் சார்ந்தோரை  
தன்னடிமையாக்கித் தளைப் படுத்தும், பின்னர்ப்  
பிணி மல்கச் செய்விக்கும் பெற்றியால் பொல்லாக்  
கணிகையோடு காப்பி ஒப்பாம் காண்  

என்பதுதான் அந்த பாடல். யார் எவ்வளவுதான் வசை பாடினால்தான் என்ன, காலையிலும் மாலையிலும் காப்பியை  மறக்க முடியாதவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆனார்கள்.  நிஜ வாழ்க்கையைப் போலவே எழுத்தாளர்கள் எழுதும் கதைகளிலும் காப்பி பிரதானமான  இடத்தைப் பிடித்தது. காலையில் மனைவி கொண்டு வந்து வைத்த காப்பியை குடித்தபடியே  ஹிந்து பேப்பரை படிக்கத் தொடங்கும் கதாபாத்திரத்தை வர்ணிப்பதை எழுத்தாளர்கள் தங்கள்  பாணியாகக் கொண்டார்கள். ஆபீசிலிருந்து மாலை களைப்போடு வந்த கணவனை சூடான  காப்பியோடு வரவேற்கும் மனைவி பற்றி எல்லா எழுத்தாளர்களும் வர்ணனை செய்திருக்கிறார்கள். 

இப்படி எல்லா வகையிலும் காப்பி என்ற அந்நிய நாட்டுப் பானம் இந்தியாவில் குறிப்பாக  தமிழ்நாட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. எதிர்ப்புகளை சமாளித்து, சாதி போட்ட வேலிகளை ஓரளவு களைந்து சமபந்தி போஜனம் நடத்தியது. பழமைவாதிகளையும் விரதம் இருக்கும் வைதீகர்களையும் மனம் நோகச் செய்தது. இறுதியில் அவர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது 

இன்று தமிழ்ச் சமூகத்தில் காப்பி வியாபார தந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்.  LET US TALK OVER A CUP OF COFFEE, என்ற சொல்லாடல் அதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறது.  

ஒரு மனிதனின் விருந்தோம்பும் பண்பையும் (கஞ்சத்தனத்தையும்) அளந்து பார்க்க  காப்பிதான் அளவுகோலாக இருக்கிறது. அந்தப்பயல் வீட்டுக்குப் போனால் ஒரு டம்ளர் காப்பி கூட  கிடைக்காது என்று எச்சரிக்கையாக சொல்வதை பல சமயங்களில் காதால் கேட்டிருக்கிறோம்  ஒரு பெண்ணின் குடும்பப் பொறுப்பை அளந்து பார்க்கும் அளவு கோலாக காப்பிதான் இருக்கிறது. புதிதாக வீட்டுக்குவந்த மருமகளைப் பற்றி "அந்த பெண்ணுக்கு ஒரு காப்பி போடக் கூடத்  தெரியலையே" என்று மாமியார் குறை பட்டுக் கொள்ளும்போது வேறு எப்படி நாம் பொருள்  கொள்ள முடியும்?

- மு.கோபாலகிருஷ்ணன்  

( எ. ஆர். வெங்கடாச்சலபதியின் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற கட்டுரையை படித்த  பிறகு, தோன்றிய சிந்தனையை பதிவு செய்திருக்கிறேன்.)  .   .     .

2 comments:

  1. காப்பியின் ஆதிக்க வரலாற்றை சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

    கலைவாணர் 'விஞ்ஞானத்த வளக்கப் போறேண்டி' பாடலின் இறுதியில் நாட்டுப்புற பெண்களுக்கும் நகர்ப்புற பெண்களுக்கும் வித்தியாசத்தை இப்படி சொல்வார்.

    அவ காட்டுக்குப் போவா, களை எடுப்பா, காரியம் பாப்பா, கஞ்சி குடிப்பா.

    இவ காருல போவா, ஊர சுத்துவா,
    கண்ணாடி பாப்பா, காப்பி குடிப்பா...


    ராஜாஜி காபி குடிக்கும் சூடு அவர் கைகூட தாங்காதாம். அதனால் ஒரு துண்டால் குவளையைப் பிடித்துக் கொண்டு காப்பி குடிப்பார் என்று படித்திருக்கிறேன். காப்பி குறித்த புகார் காந்தி வரை போயிருக்கிறது.

    எங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு காப்பி, டீ கொடுக்கும் பழக்கம் இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதாம் காப்பி, டீ குடிக்க ஆரம்பித்தேன். காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் வழக்கம் இன்றும் கூட இல்லை. மேற்கத்தியர்கள் காலை உணவுக்குப் பிறகுதான் காப்பி குடிப்பார்கள். வெறும் வயிற்றில் காப்பி குடிக்கும் மோசமான பழக்கம் தென்னகத்தில் மட்டும்தான். அதுவும் குறிப்பாக பிராமணர்களிடம் அதிகம். காலையில் காப்பி கிடைக்காவிட்டால் கொலவெறிதான் :-)

    ReplyDelete
  2. காபி குடிப்பது கெடுதல் என்று சொல்லிவிட்டு காபியை விட மோசமான பானங்களை குடிப்பவர்களும் ஏராளம் தான்.
    அது இருக்கட்டும்.

    அந்தக் காலத்திலிருந்தே நான் ஒரு காபி குடியனாக இருந்திருக்கிறேன். கல்லூரிக்குச் செல்லுகையில் ஒரு டம்ளர்,
    கல்லூரியின் வகுப்புகளிடையே ஒரு டம்ளர், கல்லூரி விட்டு வருகையிலே ஒரு டம்ளர் என்றும் 1957 முதல் 1960 வரை.
    பின் அலுவலகங்களில் காலை 10 முதல் 4 அல்லது 6 வரை இருக்கையில் குறைந்த பட்சம் ஒரு ஐந்து தடவையாவது
    குடிப்பது வழக்கம். இப்பொழுது தான் குறைந்திருக்கிறது.

    ஒரு வாரத்திற்கு அரை கிலோ என்ற கணக்கில், ஒரு வருடத்திற்கு 24 கிலோ காபி பொடி ஏ காபி, சிக்கரி கலப்பது
    காபியின் கெட்டித்தன்மையைக் கூட்டும் என்பதைத் தவிர சுவைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. கடந்த 50 வருடங்களில்
    1200 கிலோ காபி பொடி வாங்கி இருக்கிறோம்.

    காபி பொடி 1960 களிலே 15 முதல் 20 ரூபாய். இன்றோ 380 ரூபாய். சராசரியாக, 250 எனக் கணக்கிட்டால் கூட, இந்த
    50 ஆண்டுகளில் அல்லது 70 ஆண்டுகளில் ரூபாய் 175000 காபி பொடிக்கான செலவு செய்திருக்கிரோம். இதற்கான பால்
    செலவு அதற்குமேலே இருக்கும். நாங்கள் பாலை டைல்யூட் செய்வதில்லை. காபி டிகாஷனும் முதல் தடவை க்கு மேல் இறக்குவதில்லை.
    சக்கரை குறைவாக இருந்தால் தான் நன்றாக வும் இருக்கும்.

    மொத்தம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுமார் ரூபாய் 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் காபிக்காக செலவு செய்திருக்கிறோம்.
    சில மாதங்களில் காபி, பால், சக்கரைக்கான செலவு காய்கறிக்கான செலவை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.

    ஆனால், இப்பொழிதெல்லாம், சென்னையில் குடி நீரே 20 லிட்டர் ஜாடி ஒன்று ரூபாய் 60 விற்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!