Showing posts with label வெடிகுண்டு. Show all posts
Showing posts with label வெடிகுண்டு. Show all posts

Saturday, February 23, 2008

இன்ஸ்ப்ரூக்கில் வெடிகுண்டு...

வெள்ளிக்கிழமை மதியம் ஒரு ஐந்து மணி இருக்கும். எப்போதடா வீட்டுக்கு கம்பி நீட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சக ஊழியர் கூப்பிட்டார் - "ஏய் இங்கே வந்து பாரேன்". போய் ஜன்னல் வழியாக பார்த்தால் தூக்கிவாரிப்போட்டது. சூப்பர் ஸ்டார் சிவாஜி படத்துல ஸ்பேஸ் ஸூட் போட்டு வருவாரே, அதுபோலவும் அசலாய் கீழே படத்தில் இருப்பவர்போலவும் ஒருவன் பார்க்கிங் லாட்டில் ஒரு காரைச் சுற்றி சுற்றி வந்தான்.

அதுவும் நம் காருக்கு அடுத்த வரிசையில் ஒரு காருக்கு பின்னால் மண்டியிட்டான். அப்புறம் எழுந்து வேகமாக ஜகா வாங்கினான். சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் வந்து காருக்கு பின்னால் மண்டியிட்டு ஏதோ செய்தான். மறுபடியும் ஜகா வாங்கினான். சக ஊழியன் சினிமாவில் வருவது போல சிவப்பு வயர் இல்ல, நீல கலர் வயரை கட் பண்ணு என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான். 
இப்படியே போய் கொண்டிருந்தது. பிறகு முகமூடி மனிதன் காணவே காணோம். நான்கு தீயணைப்பு வண்டிகளும், இரண்டு இன்ஸ்ப்ரூக் பேட்ரோல் கார்கள், சில போலீஸ் கார்கள் வந்து பார்க்கிங் லாட்டை நிரப்பி விட்டார்கள். இதற்குள் வெடிகுண்டு பயம் போய், கார் சுக்கு நூறாய் வெடிக்கும் காட்சியைப் பார்க்கும் ஆசை பாழும் மனதில் தொற்றிக் கொண்டது. ஆனால் யாரும் கார் கிட்டேயே போகவில்லை. கிட்டே போனால்தானே தப்பான வயரை வெட்டுவதற்கு...
கொஞ்ச நேரம் அந்தக் காரையே வேடிக்கை பார்த்துவிட்டு போரடித்ததால் வீட்டுக்கு கிளம்பி விட்டேன். இப்போது கவிநயாவின் கவிதையில் புல்லரித்துப் போய் உட்கார்ந்திருந்த போது, சக ஊழியனிடம் இருந்து இந்த சுட்டி வந்தது. இதற்குத்தானா இவ்வளவு கலாட்டா? ஆனால் அவ்வளவு காத்திருந்ததற்கு அந்த சின்ன வெடிப்பையாவது சீக்கிரம் பண்ணித் தொலைத்திருக்கலாம் :-)