Friday, September 01, 2023

சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின்.

 

உலகம் முழுக்க "பெரிய" நோயாக மாறி வருவது உடல் எடை கன்னா பின்னான்னு கூடிப் போவது.

பல காரணிகள் இதற்கு இருந்தாலும் தேவைக்கு மேல் உண்பது பெரிய காரணமாக இருக்கிறது. உணவுப் பற்றாக்குறையை அறிவியலின் துணை கொண்டு வென்று விட்டோம். மனித வரலாற்றில் உணவு இவ்வளவு எளிதில் எப்போதும் கிடைத்ததில்லை. ஆனாலும் பஞ்சங்கள் பல கண்ட மனிதன், உணவைப் பார்த்ததும் பாய்ந்து விடுகிறான்.

இன்றைக்கு கைக்கு எட்டிய தொலைவில் எப்போதும் ஏதோ ஒன்று தின்பதற்கு இருக்கிறது. இனிப்பாக, காரமாக, உப்பாக என சுவையாக ஏதோவொன்று நினைத்த போதெல்லாம் தின்பதற்கு பக்கத்திலேயே வைத்திருக்கிறோம். தின்று தின்றே ஒரு வழியாகிறோம்.

போதாக்குறைக்கு தூக்கம் என்பதை ஏதோ நேரத்தை வீணடிக்கும் ஒன்றாக நினைத்து தூங்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டோம். உடலுக்குத் தேவையான ஓய்வைக் குறைத்து, தேவைக்கும் அதிகமான உணவை உள்ளே தள்ளி பெருத்துப் போய் விடுகிறோம். மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இந்தப் போக்கை சரி செய்யச் சொல்லி மன்றாடுகிறார்கள்.

நம் நண்பர் மருத்துவர் பழனியப்பன் மாலை மங்குவதற்குள் உண்டு முடித்து பின் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து நல்ல உறக்கம் கொள்ளுங்கள்; நலம் கொடுக்கும் உணவை கவனமாக, அளவாக உண்டு நோயைத் தவிருங்கள் மருந்தின்றி நல்வாழ்வு வாழலாம் என ஒரு முழு நீள தொலைக்காட்சித் தொடரே கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேட்போர் கேட்கட்டும், கேட்டு நல்லபடியாக நடப்போர் நடக்கட்டும். கேளாதோர் மருத்துவமனைக்கு நடக்க வேண்டியிருக்கும்.

ஏன் நலம் கொடுக்க வேண்டிய உணவே உடலைக் கெடுக்கும் நஞ்சாகிறது? உண்பது மகிழ்வாக இருக்கிறது ஆனால் தீங்கு விளைவிக்கிறதே ஏன்? குறைவாக உண்டாலும் சிக்கல், நிறைய உண்டாலும் சிக்கலாகிறதே ஏன்?

பதில் சொல்கிறார் ஐயன் வள்ளுவர்.

மருந்து என ஒரு அதிகாரம் நட்பியலின் கீழ் எழுதுகிறார். அதன் பத்து குறள்களில் ஏழு குறள்கள் உணவைப் பற்றியது. கிட்டத்தட்ட எல்லா குறள்களிலும் அவர் அழுத்தி அழுத்திச் சொல்வது "அளவோடு உண்" என்பதைத்தான்.

நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவை உண்ணலாம். புலால் வேண்டாம் என அவர் வலியுறுத்துவது துறவற இயலில், துறவிகளுக்கு. மற்றவர்களுக்கு அவர் சொல்லும் கட்டுப்பாடு உணவின் அளவு மீதுதான். மரக்கறி உணவோ புலால் உணவோ, அளவோடு உண்டால் சிக்கலில்லை.

சாப்பிட்ட சாப்பாடு செரிச்சுதா என கவனிச்சு செரிச்சபின் அடுத்த முறை சாப்பிடுவது நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வதற்கான வழி; செரிச்சு இருந்தாலும் பசித்த பின் சாப்பிடு; மிகப் பிடிச்ச உணவு என்றாலும் கூட "போதும்" என அளவோடு சாப்பிட்டால் துன்பமில்லை, பெருந்தீனி தின்பவர் நோய்க்கு ஆளாவது தவிர்க்கவே முடியாத ஒன்று என தலையில் குட்டாத குறையாக சொல்கிறார்.

மருந்து என பெயர் கொண்ட அதிகாரமில்லையா, மருந்தைப் பற்றி சொல்லாமல் இருப்பாரா? சொல்கிறார். அதில் ஒன்று,

என்ன சாப்பிட்டோம், சாப்பிட்டது ஒழுங்காகச் செரித்ததா என்பதை கவனத்தில் கொண்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கை கழுவினாய் என்றால், மருந்து என்பதே உன் உடலுக்குத் தேவைப்படாது என்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


மருந்தென வேண்டாவாம் = மருந்து என்பதே தேவையில்லை
யாக்கைக்கு = உடலுக்கு
அருந்தியது = உண்டது
அற்றது = செரித்தது
போற்றி = கவனத்தில் கொண்டு
உணின் = உண்டால்

"உண்டதையும், செரித்ததையும் கவனத்தில் கொண்டு சாப்பிட்டு வருவோர்க்கு மருந்து என்பதே தேவையில்லை" என்கிறார்.

நல்ல சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு வருவோர்க்கு "சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்" என எந்த மருந்தும் தேவைப்படாது.

ஐயன் வள்ளுவராகட்டும் மருத்துவர் பழனியப்பனாகட்டும், அவர்கள் சொல்வதெல்லாம் "போதும் என்ற வயிரே பொன்னுடல் போற்றும் வழி" என்பதுதான். வாயைக் கட்டி, வயிற்றையும் கட்டி உடலையும் ஆயுளையும் கெட்டியாக்குவோம்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!