Tuesday, September 06, 2011

பஹாமாஸ் விஜயம் - 5இந்த பதிவுல பஹாமாஸ் பத்தி எழுத அதிகம் இல்லை.  இப்படி ஒரு சொகுசு கப்பல் பயணம் போனா மறக்காம தினமும் இரவு நடக்கர சில பல விஷயங்களை பாருங்க.  நான் போகல, அதுக்கு தாக சாந்தி பழக்கம் இருக்கரவங்க போனா பலன் அதிகம் அதோட கல்யாணம் ஆகாதவங்களுக்கும் விசேஷமோ விசேஷம் அம்புட்டுதேன்.

5ம் நாள் கப்பல்ல இருக்கர இஞ்சின் ரூம் போய் பார்க்க எங்களுக்கு ஒரு சிறப்பு அழைப்பு தந்தாங்க சரின்னு காதுமடலெல்லாம் ஜிவ்வுன்னு ஆகி புளகாங்கிதமடைஞ்சு போனா எங்கள மாதிரி 5 குடும்பம் வந்திருந்தது. 

முதல்ல போனது கண்ட்ரோல் ரூம்.  அதுதான் கப்பலோட தலைமைச் செயலகம்.  அங்க என்ன ஒரு ஒழுங்கு அப்படி ஒரு ஒழுங்கான ரூமை எங்க வீட்டுல ஒரே ஒரு தடவை வீடு வாங்கினப்ப பார்த்தது, வீட்டுக்குள்ள சாமான் செட்டெல்லாம் வந்ததுக்கு பிறகு பார்க்கல.  என் வீட்டு கதை எதுக்கு இப்ப, கப்பல் கதைக்கு வருவோம். 

அந்த ரூமில் 4-5 இஞ்ஜினியர்கள் எப்போதும் இருக்காங்க.  எங்க என்ன கப்பல் வருதுன்னு தெரிஞ்சுக்க ஒரு ராடார் கருவி அதை பார்த்துக்கரதுக்கு ஒரு இஞ்ஜினியர், ஒரு பைனாகுளர் வெச்சுக்கிட்டு ராடாரில் தெரியாத கப்பல்களையும், ராடாரில் தெரியும் கப்பல்களையும் கண்காணிக்க ஒரு இஞ்ஜினியர், கப்பல் கடலில் எங்க இருக்குன்னு ஜி.பி.எஸ் கருவி மற்றும் ராடாரை வெச்சு கவனமா குறிக்கர ஒரு இஞ்ஜினியர், கம்ப்யூட்டரில் குறிக்கப்பட்ட இடத்தை ஒரு பெரிய வரைபடத்தில் குறிக்க இன்னொரு இஞ்ஜினியர். இவங்களை மேற்பார்வை பாக்கர 2 இஞ்ஜினியர்கள்ன்னு ஒரு கூட்டமே இருக்கு.  இவங்களை மாதிரி இன்னும் ரெண்டு குழு இருக்காம் அது எதுக்குன்னா 24 மணி நேரமும் கப்பலை பார்த்து ஓட்டனுமே அதுக்காகத்தான். 

நாமதான் உடனே கேள்வி கேப்பமில்ல, “ராத்திரில எப்படி பைனாகுளர் வெச்சுகிட்டு பாப்பீங்க பக்கத்துல வர கப்பல் தெரியாதே அப்ப என்ன பண்ணுவீங்க?”

“அது ஒன்னும் கஷ்டமில்லை, அந்த கப்பல்கள்ள ஒரு விளக்கு இருக்கும் அதை வெச்சு கண்டு பிடிச்சுடுவோம்.  பெரிய கப்பலா இருந்தா கண்டிப்பா ராடார் இருக்கும், சின்னதா இருந்தா கண்டிப்பா லைட் இருக்கும்”

“லைட் சரியா வேலை செய்யலைன்னா?”

“கவலைப் படாதீங்க.  எல்லா கப்பலும் தரையில் இருக்கர கண்ட்ரோல் டவரோட தொடர்பு வெச்சுகிட்டே இருக்கணும் அவங்க எங்களுக்கு தொடர்ந்து தகவல் தருவாங்க அதை கண்காணிக்க தனியா ஒரு இஞ்ஜினியர் இருக்கார்”

இப்படி பேசிகிட்டே வெளியில ஒரு சின்ன பால்கனி மாதிரி இருந்த இடத்துக்கு கூட்டிகிட்டு போனாங்க.  கப்பல்ல கண்ட்ரோல் ரூமுக்கு ரெண்டு பக்கமும் பால்கனி இருக்கு அதுல ஒரு சின்ன ரிமோட் எஞ்ஜின் கண்ட்ரோல் இருக்கு அது மூலமா கப்பலை இயக்க முடியும்.  அதை கூடுமான வரைக்கும் கப்பலை துறைமுகத்தில ஒழுங்கா பார்க் பண்ண மட்டுமே யூஸ் பண்றாங்க.  இன்னொரு உபரித் தகவல், இந்த மாதிரி சொகுசு கப்பல்கள் நின்ற இடத்திலேயே 360 டிகிரி திரும்பும், அதை துறைமுகத்தில் பார்க் செய்யும் போது ரிவர்ஸில் வந்து பார்க் செய்ய ரொம்ப வசதியாம். 

இதுக்கு பிறகு எஞ்ஜின் ரூம் போய் பார்த்தாதான் தெரியுது ஒரு கப்பலை ஓட்டரது எவ்வளவு கஷ்டம்ன்னு.  ஏறக்குறைய 250 சிப்பந்திகள் கப்பலை ஓட்ட மட்டும் இருக்காங்க, கப்பல்ல 1000 சின்னச் சின்ன எஞ்ஜின்கள் இருக்கு அதுல ஒன்னு பழுதடைஞ்சாலும் உடனே ஒரு ஹார்ன் சப்தம் இவங்களுக்கு எஞ்ஜின் ரூமில் கேட்கிறது, உடனே அதைச் சரி செய்ய ஒரு குழு தயாராக ஓடுகிறது. ஆனால் யாரும் எதுக்கு அலுத்துக் கொள்ள வில்லை.  சிரித்தபடி இருக்கிறார்கள்.  எப்புடி!

இனி சில டிப்ஸ்:

நாங்க போனது ராயல் கரீபியன் கப்பல், என்னை மாதிரி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கின சாப்பாட்டு ராமன்களுக்கு இந்தக் கப்பல்ல அதிக பட்சமா ஊத்தப்பம், கிச்சடி, ரவா உப்புமா, சாம்பார், சப்பாத்தி, சப்ஜி கிடைக்கும்,  இதுக்கு பதிலா கார்னிவல் கப்பல்ல போனா சரவணபவன் ரேஞ்ஜில் சாப்பாடு கிடைக்குமாம்.  மத்தபடி வேறு என்ன வித்யாசம்ன்னு எனக்குத் தெரியலை. 

டிக்கெட்டை காஸ்ட்கோ வழியா வாங்கினோம்.  அதனால டிக்கெட் விலையில 10 பர்செண்ட் நமக்கு க்ரெடிட் கொடுதாங்க அதனால ஒரு 300$ கிட்ட நமக்குக் கிடைச்சுது.  அதை வெச்சு 10-15 ஃபோட்டோ வாங்க முடியும், 30 டி-சர்ட் வாங்க முடியும், நல்லா தாக சாந்தி பண்ண முடியும். 

பஹாமாஸ் - நஸாவு ல இருக்கர அட்லாண்டிஸ்ஸில் 4 பேருக்கு ஒரு நாள் எண்ட்ரிக்கு காசு ஏறக்குறைய 720$ ஆகும் அதை தவிர்க்க ஒரு ஐடியா எங்க வீட்டம்மா கண்டு பிடிச்சாங்க அதுனால ஒரு 410$ மிச்சபிடிச்சாங்க.  விஷயம் இவ்வளவுதான்.  நஸாவுல Comfort Suites Paradise Island ஹோட்டல்ல ஒரு நாள் தங்க சார்ஜ் வரியோட 310$ ஆகுது, அதுக்கு அவங்க அட்லாண்டிஸ் சுத்தி பாக்க 4 ஒரு நாள் பாஸ் தராங்க அதனால எங்களுக்கு 410$ மிச்சம். 

கப்பல்ல லாப்டாப் கொண்டு போறது வேஸ்ட், wifi கிடையாது, கடலுக்கு நடுவில செல்ஃப்போன் சிக்னல் இல்லாம சும்மாதான் இருக்கும் அதனால அதை ஆஃப் பண்ணி வெச்சா பாட்டரி சார்ஜ் குறையாம கரைக்கு வந்ததும் உபயோகமா இருக்கும். 

கப்பல் பயணத்தை நல்லா என்ஜாய் பண்ணுங்க, கடல்ல போகும் போது நமக்கு ஒரு விஷயம் புரியும், இயற்கைக்கு முன்னாடி நாமெல்லாம் வெறும் தூசுன்னு.

 முந்தைய பதிவுகள்:


-முரளி இராமச்சந்திரன்.

5 comments:

 1. நல்லா இருந்திச்சு, நீங்க என்னெ(?)ல்லாம் பண்ணீங்கன்னு விலாவாரியா எழுதுங்க.

  ReplyDelete
 2. சத்யா,

  நாங்க பண்ணினதை எழுதிட்டேன். அதைத் தாண்டி வேற ஏதாவது எழுதினா என் விலா எலும்புகளை எங்க வீட்டுல இருக்கர 4 பெண்மணிகள் வரி வரியா எண்ணிடுவா ங்க. அப்படி ஒரு ஆசையா உங்களுக்கு.

  முரளி.

  ReplyDelete
 3. //எங்க வீட்டுல இருக்கர 4 பெண்மணிகள் //

  பஹாமாஸ் கதையை விடும். இந்த 4 கணக்கை கொஞ்சம் விவரித்தால் நன்றாக இருக்கும். நான் நேற்றுகூட இடமிருந்து வலமாக, வலம் இருந்து இடமாக எண்ணிப் பார்த்தேன். மூன்றுக்கு மேல் தாண்டவில்லை...

  ReplyDelete
 4. நாகு,

  கணக்கில் இவ்வளவு வீக்கா, என் மாமியாரை கணக்கில் விட்டுவிட்டீரே?

  அடுத்த முறை அவங்க கலிஃபோர்னியாவிலிருந்து வரும் போது இந்த விஷயத்தை அவங்க காதில் போட்டு வைக்கிறேன். நீர் காலி.

  முரளி

  ReplyDelete
 5. //எங்க வீட்டுல இருக்கர//
  இதிலே மாமியார் வருவாங்கன்னு நான் என்ன கண்டேன். அப்படின்னா உங்க வீட்டுக்காரம்மாவோட மாமியார் ஏன் கணக்குல வரல? :-)

  கொளுத்திப் போட்டாச்சு ;-)

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!