Saturday, May 23, 2009

தமிழர் காது எதனால் ஆனது?

தமிழர்களின் காது எதனால் ஆனது என நீங்கள் நினைக்கிறீர்கள்? காது இரும்பால் ஆனதாம். அதனால்தான் தெரியாத மொழிகளில் இவ்வளவு காலம் பாடித் தள்ளிக் கொண்டிருக்கிறார்களாம். தெரிந்த மொழியில் பாட்டு கேட்கிறவர்கள்தான் தோல்செவி படைத்தவர்கள் என்கிறான் பாரதி. இசைக்கு மொழியில்லை என்கிறவர்கள் ஒரு நல்ல புரிந்த மொழியில் பாடல் கேளுங்கள். அப்புறம் நீங்கள் அன்றாடம் கேட்கும் புரியாத மொழிப் பாடலைக் கேளுங்கள். வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றால் மேலே படிக்காதீர்கள்.

அண்மையில் ரிச்மண்டில் சௌம்யா அவர்களின் கச்சேரி நடந்தது. அற்புதமான குரலில் அனைவரையும் மகிழ்வித்த அவரது கச்சேரியில் எனக்கு மிகவும் பிடித்தவை தமிழ்ப் பாடல்கள். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' பாடல் தேவகானமாய் இருந்தது. அர்த்தமும் தெரிந்து இசையும் உயர்வாக இருந்தால் அந்த அனுபவமே வேறு.

இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் தமிழ்ச் சங்கத்தில் தமிழிசை விழா நடத்தினோம். அது என்ன அற்புதமாக அமைந்தது தெரியுமா? நீங்களே இங்கு சென்று பாருங்கள். என் மனதில் இன்னும் நிற்கும் பாடல்களில் சில - வருவாய் வருவாய் கண்ணா, சாந்தி நிலவ வேண்டும், முருகா முருகா... அதுவும் குறிப்பாக சாந்தி நிலவவேண்டும் பாடல். நிகழ்ச்சிக்கு முதல்நாள் ஒரு நூலகத்தில் ஒத்திகை நடந்தது. அந்த ஒத்திகையில் எந்த ஒலிப்பெருக்கியும் இல்லாமல் குழந்தைகள் பாடிய சாந்தி நிலவ வேண்டும் பாடல் தேவகானமாக இருந்தது. கேட்கும் மனதில் எல்லாம் நிஜமாகவே சாந்தி பரவும்விதமான அற்புதம். இங்கு ரிச்மண்ட் வாசிகளுக்கு வருவாய் வருவாய் கண்ணா என்று மனமுருகி அந்தக் குழந்தை பாடுவதை இன்று பார்த்தால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. உடல்நலம் குன்றி இருக்கும் அவளை பார்த்துக் கொள்ள கண்டிப்பாக வருவான் கண்ணன். மேலே இருக்கும் சுட்டியில் நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய இன்னொரு பாடல் காற்றின் மொழி! மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று வலியுறுத்தும் பாடல் :-) என்னமாய் அனுபவித்து, சந்தோஷமாய் பாடுகிறாள் பாருங்கள்.....

இனிமேல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையேனும் தமிழ்ச் சங்கம் தமிழிசை விழா நடத்தவேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம். தமிழ்ச் சங்கம் மூன்று விழா, ஒரு பிக்னிக்கோடு நிற்கிறதா அல்லது வளர்கிறதா என்று பார்ப்போம் ;-) ;-)

சங்கீத உலகில் எனக்குப் பிடிக்காத மற்றொரு விஷயம் வார்த்தைகளின் இறுதியைக் கொல்வது. கர்நாடக உலகில் பயன்படுத்தும் வார்த்தைகள் - ராகா, தாளா, பாவா எல்லாம் எந்த மொழி? எனக்குத் தெரிந்தவரை - தமிழும், தெலுங்கும், மலையாளமும் ஹிந்தியும் அல்ல. கன்னடத்தில் மட்டும்தான். நம்மவர்களுக்கு கன்னடர்கள் மீது அவ்வளவு பயமரியாதையா என்ன? எனக்கு என்னவோ இது ஆங்கிலப்பைத்தியத்தினால் வந்தது என்று தோன்றுகிறது. ராகா என்று சொல்லிவிட்டால் அது தமிழல்லாத மொழி மாதிரி இருப்பதால் வடக்கிந்தியர்களுக்கும், ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்ற அறியாமையோ?

சென்ற மாதம் இங்கே ஒரு மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதில் வீட்டில் ஹிந்தி பேசும் பெண் அவளுடை ய பாட்டை அறிவிக்கும்போது அழகாக ராகம் என்று சொன்னாள். அவளுக்கு இருக்கும் மரியாதை நம்மூர் சங்கீதக்காரர்களுக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.

தோல்செவி உடைய மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மொழிப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எட்டுத் திக்கும் சென்று இசைச் செல்வங்கள் கொண்டுவந்து எட்டுத் திக்கு மொழிகளிலேயே பாடுவதுதான் இரும்புச்செவி கொண்டோர் செய்வது. புரிந்த மொழியில் பாடுவது மெல்லிசையைச் சேர்ந்த ரகம் என்றும் பஜனைகள் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரிகிறதாம். என்னைக் கேட்டால் ஒரு சில பாடல்கள் தவிர கர்நாடக சங்கீதத்தில் எல்லாமே இறைவழிபாடுதான், பஜனைதான். அதை புரிந்த மொழியில் பாடினால் மோட்சமாவது கிட்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தமிழ் கர்நாடக வித்வானுக்கு நடந்த விழாவில் ஒரு தமிழ் எழுத்தாளர் அந்த வித்வானின் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார். தமிழனின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுக்குமளவு நிலமை இருக்கிறது. அதில் அந்த வித்வான் பேசும்போது ஒரு மலையாளப் பாடகர் ஒரு தமிழ் பாடலை கொலை செய்தார் என்று பேசினார். தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த.... என்று பாடினாராம். கண்ணாடி மாளிகையில் இருந்து கல்விட்ட கதை இது. இந்தப் பாடகரின் மற்ற மொழிப் பாடல்கள் - குறிப்பாக மீரா பஜன் - கேட்டால் அவரது பரம விசிறிகளே பத்து மைல்ஓடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இடையில் எதற்கோ வெளியே சென்று திரும்பும்போது ஒரு பாடகி பாடிக் கொண்டிருந்தார். சம்மா நம்மா கும்மா என்று போய்க்கொண்டிருந்தது பாடல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது என்று என் நண்பனைக் கேட்டேன். அந்த பாடல் எது தெரியுமா? சௌம்யா பாடிய தேவகானம்தான் அது. இசைக்காக வார்த்தைகளை சிதைத்து பாடினால் இப்படித்தான். அதுவே பொருள் தெரிந்தால் அப்படி சிதைக்க மனம் வராது. பொருள் தெரிந்தால், எங்கோ மணம்தான் பறக்கும். வேறு எதுவும் பறக்காது. நீங்கள் அடுத்த முறை எந்தரோ மகானுபாவுலு யாராவது பாடினால் கவனியுங்கள். நிறைய பேர் 'எந்தரோ'வையே ஒரு கை பார்ப்பார்கள். entha ro என்பார்கள் அது போகட்டும். நான் சொல்வது கடைசி லு. வார்த்தைகளை ஒலியில் பொருத்தும்போது லு அடுத்த வரிக்கு தள்ளப்படுகிறது. பொருள் தெரிந்தவர்கள் அதை சேர்த்து சிதைக்காமல் பாடுவார்கள். மற்றவர்கள்

எந்தரோ மஹானுபாவு
லூஊஊ அந்தரிகி

என்று மாற்றி விடுவார்கள்.

இன்னொரு தமிழ்ப்பற்று கொண்ட கூட்டம் இருக்கிறது. ஒரு பாடகி இப்படி பாடினார்...

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு ( nambaavaikku) ஷாற்றி நிராடினாள்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் ஷென்னேல் உடுக்கையருகல
பூங்குவலை போதில் பொரிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து ஷீற்ற முலை பற்றி வாங்க கடும் நிறைகள்
வண்ணப் பரும் பஷுக்கள் நீங்காத ஷெல்வம் நிரைந்தேலொரெம்பாவாய்......

கல்கியே வந்து யாரும் தமிழில் பாடவேண்டாம் என்று தடையுத்திரவு போடுமளவுக்கு இருக்கிறது டமிலிசை.

ஒரு பாடலுக்கு இசை வடிவம் கொடுக்கும்போது கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உ.வே.சா.வுக்கு ஒரு கிராமக் கூத்தில் நடந்தமாதிரிதான் இருக்கும். ஒரு கிராமத்தில் உ.வே.சா. போகும்போது கூத்து நடந்து கொண்டிருந்ததாம். இவர் போய் உட்காரும்போது பாடகன் இப்படி பாடிக் கொண்டிருந்தானாம்.

மரத்தேப்பூ மரத்தேப்பூ
டிங்கினானே டிங்கினானே

என்ன பாடுகிறான் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்?

4 comments:

  1. Bravo Nagu, இனிமே கல்லுதான்.
    அது மரத்தை புடுங்கினானே. பீம பராக்ரமத்தை பத்தின பாட்டு.

    - Ravi

    ReplyDelete
  2. என் எழுத்து திறமையின் மேல் நம்பிக்கை இல்லாததால் இம்மாதிரி ப்ளாக் உலகத்தில் பங்கு பெறுவது சற்று அரிது தான். ஆனால் நண்பர் நாகுவின் இந்த பதிவு என்னை எழுதும் அளவிற்கு ஊக்குவிதுள்ளது. எழுத்து பிழைகளை பொறுக்கவும். கருத்து பிழை என்றெண்ணினால் வாதிக்கவும்.

    சிறுவயதில் ("விஷயம்" தெரிந்த வயதில்) எங்கள் வீட்டருகே இருக்கும் சேரியில் தெருக்கூத்துகள் நடக்கும். அந்த கூத்துதான் நினைவிற்கு வருகிறது. அவர்கள் வெகு நாஸுக்காக பாய், தேன் மற்றும் கரண்டி விற்பவர்கள் மாதிரி நடித்து காட்டுவது, நினைவிற்கு ஓடோடி வருகிறது.

    உடன்படும் கருத்து:

    1. கலைஞர்கள் பாடும் பாட்டின் உச்சரிப்பு, அந்த மொழியின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. பாடல்களை வாத்யங்களில் வாசிக்கும் போது கூட அந்த வார்த்தை பிரிவுகள் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
    2. கலை ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு படைப்பை கற்றுக்கொள்ளும் பொழுது மொழியின் உச்சரிப்பு, பாடலின் அர்த்தம், ராகத்தின் இனிமை, ராகத்தின் லக்க்ஷணம், தாளத்தின் உணர்வுகளை அறிந்து கற்றால் அந்த அனுபவமே வேறு தான். இவ்வாறு கற்ற பாடல்களை படைக்கும் பொழுதும் ஒரு ஈடுபாடு (பாவம் என்றும் சிலர் கூறுவர்) ஏற்படுவது நிச்சயம். இது கலைஞருக்கும் சரி. ரசிகர்ளுக்கும் சரி. அதை கற்றுக்கொள்ளும் தருணத்திலேயே இதில் சிறிது கவனம் செலுத்தினால் நன்று. அதுவும் இந்த இன்டர்நெட் கால கட்டத்தில் இது மிக மிக எளிது.
    3. மேலும் ஒரு மொழியை சார்ந்தோர் இப்பிழைகளை சுட்டி காட்டினால், அதை பணிவுடன் ஏற்று, தம்மை மாற்றி கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போரும்.
    4. சங்கீதத்தில் மொழிக்கு முக்கியத்துவம் வேண்டாமென்று கருதுவோர் எதற்கு பாடல்களை பாடவேண்டும். வெறும் ஆலாபனையும் ஸ்வரமும் மட்டும் பாடவேண்டியது தானே?
    5. இதுவே ஒரு காரணம், நான் ஹிந்தி பாடல்களை பொது இடங்களில் பாட மறுப்பதற்கு. எனக்கு படிக்க, எழுத, ஓரளவிற்கு பேச கூட தெரியும். அனால் முத்துதிர்ந்ததும், தமிழா?, என்று கேட்கும் அளவிற்கு இருக்கும்.

    முரண்படும் கருத்து:

    1. இரும்பு செவி கொண்டோர் (தமிழர்) பிற மொழிகளில் பாடுவது ஒரு குறை அல்ல. அது அவர் திறந்த மனப்பான்மையை வெளிபடுத்துகிறது.
    2. கச்சேரிகளில், வெவ்வேறு மொழியினர் அமர்ந்திருக்கும் சபையில், ஒரே மொழி பாடல்களை பாடுவதென்பது சாத்யம் அல்ல. அதுவும் பிரத்யேகமாக அமெரிக்காவில் இது நடைமுறைக்கு உதவாது.
    3. கலைஞர்கள், தாம் பாடும் பாடல்கள் எழுதபட்டிருக்கும் மொழிகளையெல்லாம் கற்று கொள்வதென்பது சாத்யமல்ல. அனால் அதை சற்று கொல்லாதிருப்பது முற்றிலும் சாத்யமே. சங்கீதம் கற்று கொடுப்பவர்கள் அவர்களுக்கு இயன்ற வரை பாடலின் பொருளையும், உச்சரிப்பையும் கற்று கொடுக்கவேண்டும். சில சந்தர்பங்களில் கற்று கொள்பவரே அவர்களது குருக்களுக்கு அந்த நுணுக்கங்களை புகற்றுவதும் நாம் கேள்விபட்டிருக்கிறோம்.
    4. நீர் போற்றும் தோல் செவியினர் மைகேல் ஜாக்சனின் பீட் இட் என்ற பாடலை ஒரு வார்த்தை புரியாமல் ரசித்ததை நான் கண்டு இருக்கிறேன். அந்த மெட்டும் பீட்டும் அவர்களை கவர்திருந்தால் அதில் என்ன தப்பு. அவரவர், அந்த பாடலுக்கு, அவர்கள் மனதுக்கு வந்த வார்த்தைகளை சேர்த்துக்கொண்டு பாடி மகிழ்கின்றனர். அந்த அளவு பெருந்தன்மை ஏன் இப்பாடல்களுக்கும் காட்ட கூடாது? மேற்கத்திய பாடல்கள் ஏன், இக்காலத்தில் தமிழ் சினிமா பாடல்களையே அர்த்தம் புரியாமல் ரசிக்கிறோம் (நாக்க மூக்க போன்றவை).
    5. எனக்கு தெரிந்த ஓர் சிலர், இம்மாதிரி பிழைகளை சுட்டி காட்டி மார் தட்டி கொள்வதையே ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றனர். சங்கீதம் ரசிப்பதை விட்டுவிட்டு இதையே ஒரு நோக்கமாக எண்ணி கச்சேரிகளுக்கு செல்கின்றனர். எல்லோருக்குள்ளும் ஒரு சுப்புடு உறங்குகிறார் என்று ஒரு எண்ணம். மற்றவர் ஏன். நானே கூட சில நேரங்களில் இந்த மனப்பான்மைக்கு பலியாகி இருக்கிறேன்.

    நாராயணன்
    ~~~~~~~~

    ReplyDelete
  3. மரத்தைப் பிடுங்கினானே


    அருமையான பதிவு நாகு.

    ReplyDelete
  4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ரவி, நாராயணன். டீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் சலாம்.

    இதுபோல் எழுதினால், பதிவுப் பக்கம் வராதவர்கள் எல்லாம் எழுதுகிறார்கள் என்றால் இந்த மாதிரி நிறைய எழுதலாம்.

    இந்த நட்சத்திர வாரத்தில் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மீனாவும், நாராயணனும். மிக்க நன்றி. இருவரும் made my week. (விகடன் தமிழுக்கு மன்னிக்கவும்)

    நாராயணன் மாதிரி பாட்டின் பொருளையும் எல்லா மொழிப்பாடல்களின் வார்த்தை உச்சரிப்பை சரி செய்து கொள்வதில் காட்டும் சிரத்தையில் பாதி மற்றவர் செலுத்தினால் போதும். எங்கேயோ போய்விடுவார்கள்....



    இனி முரண்பட்ட கருத்துக்கள் பற்றி...
    1. பிறமொழியில் பாடுவது குறையல்ல. பத்துப் பாட்டு பாடினால், அதில் தமிழில் எத்தனை என்பதுதான் குறை. ஒரு மூன்று-நான்கு தமிழில் இருந்தாலும் போதும் என்னை மகிழ்விக்க! :-)
    2. அமெரிக்காவில் இது உதவாதுதான். நான் சொல்வது பொதுவாகவும் நம்ம ஊரிலும்தான். இனி சபையில் உட்கார்ந்திருக்கும் எண்ணிக்கை பேரில் ஒரு ரிசர்வேஷன் கோட்டா சிஸ்டம் கொண்டு வர வேண்டும். :-)
    4. கல்லூரி நாட்களிலும், சமவயதினர் தாக்கத்திலும் கேட்கும் பாடல்கள்தான் பீட் இட், நாக்க முக்க போன்றவைகள். அவை எத்தனை நாட்கள் நிலைக்கின்றன? மற்றவர்கள் பற்றித் தெரியாது. பொருள் தெரிந்த ஆங்கிலப் பாடல்கள்தான் என் நினைவில் நிற்கின்றன. அதுவும் தோல்செவியார் அந்த ரகப் பாடல்களை தலைமுறை தலைமுறையாகப் பாடுவதும் கேட்பதும் கிடையாது.

    மேலும் இந்த கால தமிழ் சினிமா பாடல்களில் அர்த்தம் இருந்தால்தானே புரிவதற்கு. அட்றாட்றா நாக்க முக்க...

    5. எனக்கு சங்கீதம் ரசிப்பதற்கு இந்த வார்த்தைக்கொலை பெருந்தடையாக இருக்கிறது. ஜேசுதாசின் தர்ரி மொர்ர கிர்ர்ர்ர்ரி மாதிரி... :-) நான் ஒரு சங்கீத ஞான சூன்யம் என்பதால் எனக்குப் தெரிந்த நிறை,குறையெல்லாம் வார்த்தைகளிலும், பொருளிலும், குரல்வளத்திலும், இசையிலும்தான். (order of priority for me)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!