Saturday, May 23, 2009

உங்கள் கணிணியை தொலைப்பது எப்படி?

இப்போதெல்லாம் கணிணிப் பராமரிப்பு நாம் எல்லோரும் பிடித்தோ பிடிக்காமலோ செய்ய வேண்டிய வேலை. உங்கள் கணிணியைத் தொலைப்பது ரொம்ப சுலபம். கீழ்க்காணும் செயல்களில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை தொடர்ந்து செய்தாலே போதும். உங்கள் கணிணி கவிழ்ந்துவிடும்.

1. என்னை மாதிரி எத்தனை பேர் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும், விடாது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் கட்டி அழல்.
2. விண்டோஸ் அப்டேட்டுகளை நிறுவாமல் இருத்தல்.
3. கண்ட தளங்களில் உங்கள் உண்மையான மின்னஞ்சலை பதிதல்.
4. உங்களுக்கு வரும் அனைத்து மடல்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் மென்பொருள்களையோ, குப்பைகளையோ பரம விசுவாசத்துடன் திறந்து பார்த்து இயக்குதல்.
5. பாதுகாப்பற்ற தமிழ்வாரப் பத்திரிக்கைகளின் இணையத் தளத்திலேயே குடியிருத்தல்.

இவற்றில் ஒவ்வொன்றைப் பற்றியும் கதை கதையாக எழுதலாம். எழுதி என்ன புண்ணியம்? நீங்கள் மாதத்திற்கொருமுறை உங்கள் கணிணியில் ஆபரேடிங் சிஸ்டத்தை நிறுவ தயாராய் இருக்கும்போது என்ன கவலை?

உங்கள் கணிணியைப் பாதுகாப்பது மிகவும் சுலபம். எனது கணிணிகளில் நான் எந்த அன்டி-வைரஸ்கூட பாவிப்பதில்லை. இந்த சிலவற்றை கடமையே கண்ணென்று செய்தால் போதும்.

1. வேறு புரௌஸர் பயன்படுத்துதல். மற்றவற்றில் பிழையோ பலவீனங்களோ இல்லாமலில்லை. ஆனால் பலவீனங்களை பயன்படுத்துவோர் குறி வைப்பது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தான். நெருப்பு நரியில் (Firefox) பல வசதிகள் இருக்கின்றன.
2. விண்டோஸ் அப்டேட் தானாக நிறுவிக்கொள்ளும்படி அமைத்தல் (automatic windows update setting)
3. உங்களுக்கு அறிமுகமில்லா தளங்களில் கவனத்துடன் இருத்தல்.
4. நெருப்பு நரியின் விளம்பரத்தடை சாதனத்தை பயன்படுத்துதல்.(adblock plus extension)

கணிணி உபயோகம் அதிகமாகி வரும் இந்த நாட்களில் அனைவருக்கும் இந்த விஷயங்களில் கொஞ்சம் கவனமிருப்பது மிக அவசியம். அன்புடன் கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ் பாபு மிக எளிமையாக வைரஸ், ஸ்பாம் போன்ற பல விஷயங்களை விளக்கியிருந்தார். அதை இங்கே படிக்கலாம்.

உங்கள் கணிணியைப் பாதுகாக்கும் விஷயத்தில் அவசியம் படிக்க வேண்டிய தளம் இது. உங்கள் வசதிக்கேற்ப நான்கு படிகளையோ, எட்டு படிகளையோ தாண்டவும்.

ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ப்ராக்ஸோமித்ரன் போன்ற ஒரு மித்திரன் வலையுலகில் கிடைக்கமாட்டான். நீங்கள் வலையில் உலாவும்போது வரும் குப்பைகளை வடிகட்டுவதில் அவனுக்கு நிகர் அவனே. ப்ராக்ஸோமித்ரனுடன் சேர்ந்து குப்பைத் தளங்களை வடிகட்டும் இந்தப் பட்டியலை நிறுவிக் கொண்டால் போதும். உங்கள் கணிணி நிம்மதியாக வாழும்.

அந்தப் பட்டியல் செயல்முறை மிக எளிமையானது. உங்கள் உலாவி(ப்ரௌஸர்) ஒரு தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அந்த தளத்திற்கான வலை முகவரி தேவை. இந்தப் பட்டியல் குப்பைத் தளங்களுக்கெல்லாம் தப்பான முகவரி கொடுத்துவிடும். வலைத் தபால்காரர் தப்பான முகவரி என்று குப்பையில் கடாசிவிட்டு போய்விடுவார். அவ்வளவுதான் விஷயம்.

அந்த பட்டியல் தளத்தில் உங்கள் மின்னஞ்சலைப் பதிந்து கொண்டால், அவர்கள் அந்தப் பட்டியலில் புதுக்குப்பைகளை சேர்க்கும்போதெல்லாம் உங்களுக்கு சொல்லிவிடுவார்கள்.

இவை அனைத்தைவிட சுளுவான முறை இருக்கிறது. ஆப்பிள் மேகின்டாஷ் அல்லது உபுண்டு பாவித்தல். லினக்ஸின் ஒரு பிறவிதான் - உபுண். டு நீங்கள் கணிணியில் நிறுவக்கூட வேண்டியதில்லை. சிடியில் இருந்தே ஓட்டலாம். பிறகு வேண்டுமானால் உங்கள் கணிணியிலேயே விண்டோஸுடன் நிறுவிக் கொள்ளலாம். ஆபத்தான வாழ்க்கை வாழ ஆசைப்படும்போது விண்டோஸும், நிம்மதியான வாழ்க்கை வாழ உபுண்டுவும் பாவித்து உய்யுங்கள்.

4 comments:

 1. You Are Posting Really Great Articles... Keep It Up...

  We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
  http://www.namkural.com.

  நன்றிகள் பல...

  - நம் குரல்

  ReplyDelete
 2. Nice n informative post..
  Mac n Linux are devoid of any malware..

  ReplyDelete
 3. வருகைக்கும், உங்கள் பாராட்டுக்கும் நன்றி கிருபா, ரிபெல்.

  ReplyDelete
 4. அறிய பல தகவல்கள். நெருப்பு நரி பயன்படுத்தியும், அட்மின் அக்கவுண்ட் இல்லாமல் சில யூசர் ஐ.டி.க்கள் பயண்படுத்தியும், கடந்த மாதங்களில் இருமுறை கணினியின் இயங்குதளத்தைப் புதுப்பிக்கும்படி ஆகிவிட்டது.

  //ப்ராக்ஸோமித்ரன் போன்ற ஒரு மித்திரன் வலையுலகில் கிடைக்கமாட்டான்.//

  இந்த மித்திரனைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். தகவல்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!