Wednesday, May 27, 2009

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்! (மூன்றாவது பாகம்)

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)
---------------------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

8 comments:

  1. Your post on the megaaaa tamil serials was much much more interesting than all the poignant moments (if any) of the serials put together. It is amazing how they boast of so much audience.
    Iniya thamizhukku en vazhthukkal.

    ReplyDelete
  2. அனானிமஸ்,

    வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  3. meena really superb. why dont u write a script for comedy serial?

    ReplyDelete
  4. Jeyashree,

    Thanks for the vote of confidence. Right now I am simply enjoying writing what comes to mind, that's all. As to what I am going to write next, your guess is as good as mine. :-)

    ReplyDelete
  5. அட்டகாசம். உமது சீரியல் புலமையை மெச்சினோம். இதோ பிடியுங்கள் இன்னும் இது போன்ற பல தொடர்களை எழுதி நாட்டு மக்களை மகிழ்விக்க எங்கள் கோரிக்கை.

    ReplyDelete
  6. நாகு,

    உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு நிறைய 'சரக்கு' கொடுக்க வேண்டி நான் இறைவனுக்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கிறேன். :-)

    ReplyDelete
  7. மீனா, உன் ஆற்றலை பாராட்டி யாம் உமக்கு அளிக்கும் பட்டம், 'ப்லாகர் திலகம்'. இன்னும் மேல் மேலும் நிரைய பட்டங்கள் பெற யாம் வாழ்த்துகிறோம்!Whew!

    ReplyDelete
  8. ஷான் அவர்களே,

    உங்களின் 'ப்ளாகர் திலகம்' பட்டத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் பெருந்தன்மைக்கு யாம் மிகவும் கடன் பட்டிருக்கிறோம். :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!