Monday, May 25, 2009

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்!

காட்சி - 1
எலியூர் அரண்மனை

"யாரங்கே?" இடி போல் முழங்கியது எலியூர் அரசனின் குரல். இரு காவலாளிகள் எங்கிருந்தோ நொடியில் வந்து வணங்கினர்.

"மன்னா, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்."

"உடனே சென்று ஆஸ்தான புலவரை அரண்மனைக்கு அழைத்து வரவும். இரண்டு நாட்களாக அவர் சபைக்கு வரவில்லை. இன்று பல்லியூரில் இருந்து வந்த புலவரை தர்க்கத்தில் நான்கு கேள்விகள் கேட்க நம் சபையில் ஒருவரும் இல்லை. எலியூருக்கு எத்தனை பெரிய அவமானம்?" கோபத்தில் அரசனின் முடுக்கிய மீசை துடித்தது.

விரைந்து சென்ற காவலாளிகள் சில நிமிடங்களில் புலவருடன் திரும்பினர். அழுது வீங்கி நிராசையுற்ற கண்களுடன் தன் முன்னே நின்ற புலவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் மன்னன்.

"புலவரே, என் நாட்டின் குடிமகனின் கண்களில் கண்ணீரா? ஐயகோ, நான் என் கடமையை செய்ய தவறியவன் ஆனேனே. என்ன குறை உங்களுக்கு? என்னிடம் சொல்லுங்கள்."

"சின்னத்திரையில் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிரும் மெகா சீரியல் இன்றுடன் முடிவடைகிறது மன்னா. ஐந்து வருடங்களாக என் குடும்பத்தின் அங்கமாகவே ஆகி விட்ட சின்னத்திரை நடிகர்களை இனி பார்க்கவே முடியாதே என்ற வருத்தத்தில் அழுது அழுது எனக்கு ஜன்னி கண்டு விட்டது. அதனால் தான் என்னால் சபைக்கு வர இயலவில்லை அரசே."

"என்னது, சின்னத் திரையில் வரும் மெகா சீரியல் நடிகர்களிடம் உங்களுக்கு அவ்வளவு பிரியமா? ஆச்சர்யமாக உள்ளதே! அதன் காரணத்தை சற்றே விளக்கமாக சொல்லுங்கள் புலவரே."

"எலியூர் அரசே, தினமும் சபை முடிந்து வீடு திரும்பினால் எனக்காக மெகா சீரியல் குடும்பங்கள் காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது மன்னா. இவைகளின் கதாநாயகிகள் மாமியாரிடம் உதைப்பட்டு, கணவனிடம் அடிபட்டு, பிறந்த வீட்டார் முன் அவமானப்பட்டு, தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டு, கொலை சூழ்ச்சியில் அகப்பட்டு........அப்பப்பா...அவர்கள் படும் பாட்டை பார்த்து எத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டுருப்பேன். அரசே.....உங்கள் கண்களில் கண்ணீரா?"

"புலவரே...போதும் போதும். இனி சொல்லாதீர்கள். உங்கள் மெகா சீரியலில் நல்லது எதுவுமே நடக்காதா?"

"மன்னா....எலியூரில் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்...மெகா சீரியலில் நல்லதாக எதுவும் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை."

"புலவரே, எனக்கு ஒரு நல்ல யோசனை. நாளை பல்லியூர் புலவர் சபைக்கு வரும் போது நீர் இந்த மெகா சீரியல் பற்றி நாலு கேள்வி அவரைக் கேளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே."

"அப்படியே செய்யலாம் மன்னா. நாளைக் காலையில் சபையில் பல்லியூர் புலவரை சந்திக்க தயாராக வருகிறேன்."

காட்சி - 2
புலவர்களின் மோதல் (சீக்கிரமே தொடரும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க, இதுவே ஒரு மெகா சீரியல் மாதிரி இழுக்குதேன்னு பாக்கறீங்களா? இன்றைய சம்பவங்களை வரலாற்று நாட்களில் புகுத்தி பார்க்க ஆசைப்பட்டேன். அதன் விளைவு தான் இது. சீரியல் மாதிரி இழுக்காமல் சீக்கிரமே முடிக்க முயற்சி செய்கிறேன்.

-மீனா சங்கரன்

11 comments:

  1. பலே பலே - முதல் காட்சி வெகு ஜோர். மெகா சீரியல் குறித்த சீரியல் :-)

    அடுத்த காட்சிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி நாகு. இரண்டாம் காட்சி இனி தான் எழுத வேண்டும்.:-)

    ReplyDelete
  3. சபாஷ்! சரியான போட்டி!

    ஆமாம் பாம்பூரிலிருந்தும் ஓணானூரிலிருந்து புலவர்கள் போட்டியில் உண்டா?

    மீனா, ஆரம்பமே அசத்தல். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமையான ஆரம்பம். அடுத்தடுத்த தொடர்களை சீக்கிரமா வெளியிடுங்க!

    ReplyDelete
  5. Waiting for ur next episode.goo creativity meena.

    ReplyDelete
  6. நையாண்டி நைனா, பரதேசி, ஜெயகாந்தன் மற்றும் ஜெயஸ்ரீ,

    வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் என்கிற ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. கூடிய சீக்கிரத்தில் அடுத்த காட்சியை வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  7. மினா, கசினி தோத்தான் என்னிடம்! பலே! சக்கை போடு போடுகிறாய்! அடுத்த எபிசோட் விரைவில் வெளியிட வேண்டி ஒரு எக்ச்பிரச் விண்ணப்பம்! Tamil tigers, hold your horses! Its been decades since I wrote in tamil!

    ReplyDelete
  8. :))))) மீனா, கலக்கல்!!

    ReplyDelete
  9. ஷான் and விஜய்,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :-))))

    ReplyDelete
  10. அருமையான தொடக்கம். சீரியல் சிறப்பான முறையில் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!