மே 26, 2009 விகடன் முகப்பில்
சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.
வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்குள் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.
"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.
ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.
'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய எடுப்பாத் தெரியும் வேற ! இப்பல்லாம் பட்டன் சைஸ்ல வருதாமே. அதைவிடக் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற தாத்தாவின் குரல் மாடர்னாய் ஒலித்தது.
"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழியர். பரவாயில்லை எடுங்க என்றதற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.
'ரெண்டு டமாரமும் அவுட்டு. ஒன்னு வச்சாக் கூட சரியா வராது. அதனால ரெண்டா வாங்கிட்டு வந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.
நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்களும், வழக்கம் போல நண்பர்களுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு தலைவலித் தைல பாட்டில்கள், டைகர் பாம், சில டி.ஷர்ட்கள், சாக்லேட் வகையறாக்கள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
அன்றிரவே சென்னை வந்தடைந்து, நேரே மருத்துவமனைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவரை அந்த நிலையில் பார்க்கவே பாவமாய் இருந்தது. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில நாட்கள் வரை திடமாக இருந்தவர். சமீபத்தில் சாலையில் நடந்து செல்கையில், பின்னால் மிதிவண்டியில் வந்த சிறுவன் மோத, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்டது. மிதிவண்டியின் மணியை அடித்துக் கொண்டே வந்த அவன், எப்படியாவது இவர் விலகிக் கொள்வார் என நினைத்து, அவர் பக்கம் வரை வந்து, மோதிவிட்டான்.
ரொம்ப வருடங்கள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்பது நின்றுவிட்டிருந்தது. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வரை அது எதுக்கு, வேண்டாம் என்று மறுத்து வந்தார். விபத்துக் காரணத்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வழியாய் சம்மதித்திருக்கிறார்.
தலையில் லேசாய்க் கீரலுக்கு மருந்திட்டு, சிறாய்புக்களுக்கு கட்டுபோட்டு நீட்டிய கால்களுடனும், பெட்டில் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.
அவர்முன் நிற்க, பொக்கை வாய் திறந்து (பல் செட் அதற்கான அழகிய ப்ளாஸ்டிக் டப்பாவில் நீந்திக் கொண்டிருந்தது), என்னை கிட்டே வரச் சொல்லி, ஆரத் தழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று சற்று விலகி தள்ளி நின்று கொண்டேன்.
சத்தமாகப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச, வாய் திறந்து தாத்தா பதிலளித்தார். காற்றில் கலந்த கலவையாய் வார்த்தைகள் தெறித்தது.
பையைப் பிரித்து, அழகாக ஜொலித்த ஹியரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிடன் நீட்டினேன். இந்த முறை அழுதே விட்டார்.
ஒன்றைப் பிரித்து, எப்படி ஆப்பரேட் செய்ய வேண்டும் என விளக்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவரது இடது காதில் பொறுத்தினேன்.
"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.
படபடவென பட்டாசு வெடிப்பதாய் உணர்ந்திருப்பார் போல. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக சிலிர்த்துக் கொண்டார்.
"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.
"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று பதில் அளித்தார்". பெருமிதம் தாங்கவில்லை அவருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அளவிற்கு முகத்தில் ஆனந்தம்.
"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.
"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.
மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...
"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகானந்தன்.
"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வழிசலாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வளவு நல்லவனு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த சிரிப்புக்கு இதுதான் அர்த்தமா ?!' என நொந்து போனார்.
வந்தவரும், போனவரும் ... 'கெழம் எப்ப போகும், எடம் எப்ப காலியாகும்' என்ற நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன கருமத்துக்கு இந்த மெஷின் நமக்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை கழட்டி குப்பையில் விசிறி அடித்ததை தாத்தா சொல்ல, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஹியரிங் எய்டை பாவிக்க தயங்கும் என் அப்பா, மாமனார் ஞாபகம்தான் வந்தது.
ReplyDeleteகடைசியில் கதையின் கனம் மிகவும் கூடி விட்டது. அருமையான நடை. அழகான கதைக்கு நன்றி.
Amazing coincidence! I read this story about 15 years ago in Vikatan. The dubai return grandson gifted an expensive hearing aid, when granpa finds that he was happier earlier not hearing any of the relatives comments and throws the aid into the well. Well thought about story. Sad that most of us don't realize that youth is not forever.
ReplyDeleteமனிதாபிமானமற்ற மக்களை எண்ணி வருத்தப்பட வைக்கிற கதை. அழகா எழுதி இருக்கீங்க.
ReplyDeletenice story!!
ReplyDeleteஅன்பின் சதங்கா
ReplyDeleteஅருமை அருமை - இயல்பான நடையில் எழுதப்பட்ட கருத்தாழம் மிக்க கவிதை. உண்மை நடைமுறை இதுதான். உலகியல் புரிந்தால் உலகைவிட்டு ஓடி விடலாம்.
நல்வாழ்த்துகள் சதங்கா
நெஞ்சை வருத்தும் நிதர்சனம். நிஜங்களின் தரிசனம் பல நேரங்களில் கிடைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது என்பதை மனதை தொ(சு)டும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள். நன்று சதங்கா!
ReplyDeleteஇன்றையக் காலக்கட்டத்தில் உலகின் நிலையும் உறவின் நிலையும் அப்பட்டமா இப்படித்தான் இருக்கு(-:
ReplyDeleteநல்ல 'கதை'
பாராட்டுகள்.
நாகு அண்ணா, அனானி, மீனா அக்கா, சரவனா, சீனா ஐயா, ராமலஷ்மி அக்கா, துளசி டீச்சர் ...
ReplyDeleteஅனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !!!