'வேலை' போய் 3 மாதம் ஆகிவிட்டது. வேலை தேடும் படலம் தொடரும் வேளையில், என்னடா இத்தனை நாட்களில் என்னதான் சாதித்தோம் என்ற எண்ணம் சில நேரங்களில் வந்து அலைகழிக்கும். நேற்று அந்த எண்ணம் மிக அதிகமாக, உடனே ஒரு வெள்ளை தாளை எடுத்து இந்த நாட்களில் நான் அறிந்தவைகள், கற்றவை மற்றும் சாதித்தவைகளை பட்டியலிட்டேன். எனக்கே ஆச்சரியம்! பட்டியல் நீண்டு கொண்டே போனது.
சிறிது காலமாக தமிழில் எழுத இருந்த ஆசையினால், இன்று அந்த பட்டியலில் இருந்தவைகளை உங்களுடன் ஒவொன்றாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவே - இந்த முயற்சி. சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்!
பாகம் ஒன்று : காய்கறி தோட்டம்
நீண்ட நேரம் கணணி முன் உட்கார பிடிக்காத எனக்கு, வேறு பொழுது போக்கு தேவைப்பட்டது. மேலும் செலவை குறைக்க வழிகளை யோசிக்கையில் இந்த வருடம் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே பயிரிடலாமே என்று உதிக்க, சிறிது சிறிதாக ஆரம்பித்தேன். காய்கறி வளர்ப்பு முறைகளையும் அதன் பயன்களையும் பற்றி இணையத்திலும் நுலகத்திலும் நிறைய படித்தேன். பல காய்கறிகள் செடியில் இருந்து பறித்த 24 மணி நேரத்தில் நிறைய சத்துக்களை இழந்து விடுவதாக அறிந்தேன். உதாரணத்துக்கு மக்காசோளம், பீன்ஸ் போன்றவை பறித்த சில மணி நேரங்களில் 50 சதவீதம் சர்க்கரை சக்தியை இழந்து விடுகிறது. ஏன்டா இத்தனை நாளாக பெண்டாட்டி சமையலை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று மண்டைக்கு விளங்கியது.
இப்போது தோட்டத்தில் முள்ளங்கி, கீரை, மக்காசோளம், காரட், பீன்ஸ், மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, வேண்டை, வெந்தயகீரை, பூசணி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, தக்காளி, கத்தரிக்காய், அவரைகாய், வெங்காயம் என்று செடிகள் அழகாக வளர்ந்து கொண்டு வருகிறது.
சக்தான ருசியான காய்கறி கிடைப்பது மட்டுமில்லாமல், செடிகள் வளருவதை பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு எல்லாம் மேலாக நான் எதிர்பார்க்காத சில பயன்கலை உணர ஆரம்பிக்கிறேன். என்னுள் பொறுமை வளர்ந்துள்ளது - என் பெண்டாட்டி கிட்ட தான் இதை நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ளணும். செடி வளர்ப்பில் நாட்டம் உள்ள நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளர்கள். தோட்டத்துக்கு நிறைய அழகான பறவைகள் வருகின்றன. இயற்கையை இன்னும் அதிகமாக ரசிக்க ஆரம்பித்துள்ளேன். வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் என்ன செய்வது என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது!!
"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடு மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடு மனிதற்கு மொழியே தேவையில்லை"
இதை படிக்கும் உங்களில் காய்கறி மற்றும் புசெடி வளர்ப்பதில் ஆர்வம் இருப்பின், ஏதேனும் உதவி தேவையெனின் தெரிவிக்கவும்.
உங்களால் முடியும் - உதவ நான் தயார்!!
ஒரு சிறு திருத்தம்:
ReplyDeleteஇயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை
பலே ஆசாமி நீர்.
ReplyDeleteபயிரிட்ட காய்கறிகளை உபயோகித்து செய்த பண்டங்களை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்கள் என்றல்லவா எண்ணி காத்திருந்தோம். சும்மா ஒரு கிண்டலுக்கு தான் சொன்னேன் (ஜஸ்ட் கிட்டிங்). தப்பா நினைக்க வேண்டாம்.
Facebook ல நீர் பதிவு செய்த படங்களை பார்த்த நாள் அன்றே உங்களுக்கு ஒரு சிறிய கோயில் கட்டியானது, எங்கள் மனதில். வாழ்க/வளர்க உங்களது ஆர்வம்.
வருக! வருக!
ReplyDeleteஅருமையான துவக்கம். உங்க தோட்ட படங்கள பார்த்த பின்னர் தான் எனக்கு இன்னும் ஆர்வம் அதிகமாகியிருக்கு. போன தடவை காய்கறி எல்லாம் போட்டு ஒன்னும் உருப்படியா வரலைன்னு இந்த முறை அதெல்லாம் கட்.
வா, வா, வசந்தமே.... :-)
ReplyDeleteவெறும் களைதான் கட்டியிருக்கிறது என்று நினைத்தேன். கல்யாண களைக்கும் மேலாக இருக்கிறது, சங்கப் பதிவு.
வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கும்போது, வலுக்கட்டாயமாக இப்படி கொஞ்சம் ஓய்வு தேவை போலிருக்கிறது. உங்கள் ஓய்வு சீக்கிரம் முடிய வாழ்த்துக்கள்.
உங்கள் காய்கறி தோட்டம் பற்றித்தான் ரிச்மண்டில் ஒரே பேச்சாக இருக்கிறது. ஊரில் பேச்சு வரை இருக்கும்போது நிம்மதியாக இருந்தது. இப்போது வீட்டிலும் ஆரம்பித்து விட்டது. உங்கள கட்டிகிட்டதுக்கு ஒரு - உங்கள் நீண்ட பட்டியல் - உண்டா என்று ஒரே இடி, மின்னல், சூறாவளிதான்.
செடி வளர்ப்பதே ஒரு கலை. அதை சிறுவர் பார்த்து கற்றுக் கொள்வதும் ஒரு பெரிய நன்மை. சிறு வயதில் அவரைக் கொடி படர்ந்து ஏறுவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் உதவ முன் வந்திருப்பதற்கு மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்தது, உங்களிடம் கற்றுக்கொள்ள வூட்டுக்காரம்மாவை அனுப்புகிறேன். மற்றபடி உங்கள் வீட்டில் சேரும் காய்கறிகளை பயன்படுத்துவதில் என் முழு ஒத்துழைப்பு தங்களுக்கு எப்போதும் உண்டு என்று சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கு இது கூட செய்ய மாட்டேனா?
வசந்தம்,
ReplyDeleteவாங்க வாங்க......பதிவு ரொம்ப அருமையா இருக்கு.
"வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கும்போது, வலுக்கட்டாயமாக இப்படி கொஞ்சம் ஓய்வு தேவை போலிருக்கிறது. உங்கள் ஓய்வு சீக்கிரம் முடிய வாழ்த்துக்கள்."
நாகுவின் வார்த்தைகளை நான் பின் மொழிகிறேன். வசந்தமான எதிர்க்காலம் உங்களுக்கு ரொம்ப தொலைவில் இல்லைன்னு நான் நம்பறேங்க.
அடுத்த வருஷம் காய்கறி தோட்டம் போட ஒரு பிளான் இருக்கு. உங்க உதவியை அப்போ நாடுவேன்னு நினைக்கறேன். உதவ ரெடி அப்படின்னு சொன்னதுக்கு மிகப் பெரிய நன்றி.
வருக வருக வசந்தமே ...
ReplyDelete//நீங்கள் உதவ முன் வந்திருப்பதற்கு மிக்க நன்றி. ஏதோ என்னால் முடிந்தது, உங்களிடம் கற்றுக்கொள்ள வூட்டுக்காரம்மாவை அனுப்புகிறேன். //
கரெஸ்பாண்டஸ் கோர்ஸ் இருக்கா ? நாங்க ரெடி ...
வருக வருக வசந்தம் அவர்களே,
ReplyDeleteஎன்னது காய்கறித் தோட்டமா? கோவிலில் பார்த்தபோது சொல்லவேயில்லை? அதுக்காக கவலைப் படாதீங்க, கண்டிப்பாக உங்களுக்காக, நாகுவுக்கும் முன்பாக, உங்கள் வீட்டில் சேரும் காய்கறிகளை பயன்படுத்துவதில் என் முழு ஒத்துழைப்பை குடும்பத்துடன் செய்கிறேன் என்று உளமாறக் கூறுகிறேன்.
நானும் காய்கறி பயிரிடுவதில் அதீத ஆர்வம் மட்டும் உள்ள ஒருவன், எனக்கு உங்கள் உதவி கண்டிப்பாகத் தேவை. அடுத்த முறை கோவிலில் அல்லது வெளியில் பார்க்கும் போது "வுடு ஜூட்" என்று பறக்க முடியாது சொல்லிவிட்டேன்.
சென்னையில் இருந்தவரை வீட்டில் பல விஷயங்கள் தோட்டத்தில் செய்திருக்கிறேன், இங்கு சீதோஷ்ண நிலை சரிவர புரிபட மாட்டேன் என்கிறது, உங்கள் உதவி தேவைப் படும் என்பது நன்றாகப் புரிகிறது.
உங்கள் கட்டாய ஓய்வு கூடிய சீக்கிரம் முடிவுக்கு வர எனது வேண்டுதல்கள்.
அன்புடன்,
முரளி.