Friday, May 29, 2009

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேங்க. வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போறதில்லைங்க.

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்குதுங்க. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வெப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வருகிறது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாதுங்க. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

-மீனா சங்கரன்

பின் குறிப்பு: தமிழ் சங்கம் தளத்துல அழுக்கு துணிக்கு என்ன வேலைன்னு முகம் சுளிப்பவங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் "மன்னிச்சிடுங்க.....எத்தனை யோசனை பண்ணியும் வேறு விஷயம் கிடைக்கலை" :-)

14 comments:

  1. //இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார். //
    வைக்கோல்போர் மாதிரி துணிப்போரா? :-)

    நீங்க விவரிக்கறத படிக்கும்போது அப்படியே மனசுல ஒரு வீடு தோணிச்சி. பாத்தா எங்க வீடு... எங்க வீட்டு கதையெல்லாம் எழுதி எங்கள் வீட்டு அழுக்குத் துணியை இப்படி பகிரங்கமாக துவைப்பது கொஞ்சங்கூட நல்லாயில்லை. (அதாங்க வாஷிங் அவர் டர்ட்டி லாண்டிரி) அவ்ளதான் சொல்வேன்...

    ReplyDelete
  2. meena just now i saw a mountain of clothes lying in a room and waiting for me. What a coincidence. i think we all sail in the same boat and thank god not only me but so many people r like me.

    ReplyDelete
  3. thuvaikaamal irudhaal thuni madikaamal irukalaam.

    ReplyDelete
  4. இதெல்லாம் ஒன்யுமே இல்ல பா. எங்க வூட்ல ஒரு பதினாலு வயசு கஸ்மாலம் ஒண்ணு இருகுது. படா பேஜாரான இந்த வேலைய எடுத்து வுட்டுகினு பண்ணி முடிச்சா, ஒரு ரெண்டு மூணு நாளைக்கி மடிச்சத கொண்டு போய் அதோட ரூம்ல வெச்சுக்காது. அப்டியே வெச்சுகினாலும் மொதோ நாள் அந்த துணி ஒண்ணு எடுக்க சொல்லோ ரெண்டு துணிய கசக்கி போடும். ரெண்டாவது நாள் பாக்கி இர்கரதெல்லாம் நாசம். மூணாவது நாள்லேந்து அந்த கூடை கிளாசெட் தூக்கி வெச்சா மாதிரி இற்கும்.

    இத்த யாராண்ட சொல்லி ஆயுவரது?

    ReplyDelete
  5. நாகு,

    எங்க வீட்டு டர்டி லாண்ட்ரிய தானே துவைச்சேன்னு நினைச்சேன்? உங்க வீட்டுலயும் இதே கதை தானா? கேட்கவே சந்தோஷமா இருக்குங்க......ஹி ஹி ஹி

    ஜெயஸ்ரீ,

    என்னுடைய டெக்னிக்கையே நீயும் முயன்றுப் பார். கண்ணுக்கு தெரியற மாதிரி வச்சா தானே மலை மலையா குமிஞ்சிருக்கும் துணி நம்மை உறுத்தறது. நீ ஒன்று செய். உபயோகப்படுத்தாத அறையில் அவைகளை போட்டு கதவை தாளிட்டு நகர்ந்து போயிடு. :-)

    ReplyDelete
  6. மீனா,
    என்னது அதுகுள்ள உங்களுக்கு ரைட்டர்ஸ் ப்ளாக்கா!!! அப்படி சொல்லியே இப்படி ஒரு சூப்பர் பதிவா!!!
    திருப்பதில மொட்டையை தேடரதும் ஒன்னு வீட்டுல இருக்கர சாமான் செட்டை ஒழிக்கரதும் ஒன்னு. உங்க வீட்டு கதையேதான் எல்லார் வீட்டிலேயும். நீங்க சாமான் செட்டை ஒரு ரூம்ல தூக்கி போட்டு நாயை காவல் வெக்கரீங்க எங்க வீட்டுல இன்னும் சூப்பர், அப்படி சாமான் செட்டை தூக்கி 'என் ஆபீஸ் ரூம்ல' (அப்படின்னு நான் மட்டுந்தான் சொல்றேன்) போட்டுட்டு அதுக்கும் என்னையே காவல் வெச்சுடராங்க. அது முக்கியமா பண்டிகை நாள்ல வீட்டுக்கு யாரையாவது கூப்பிட்டா கதை இன்னும் கந்தல். இப்படி நடந்த ஒரு கூத்துல எங்க வீட்டம்மா அந்த ரூமா அது ஒரு டன்ஜன் ரூம்னு சொல்லி நம்ம கிட்ட இல்லாத இமேஜையும் சேர்த்து வாங்கிட்டாங்க. அத நம்பாம என் அருமையான ஒரு நண்பர் அந்த கதவை திறந்து பார்த்துட்டு, "ஏன்யா இன்னுமா ஆடு குதிரை, பார்பி பொம்மைன்னு சேர்த்து வெச்சுகிட்டு இருக்கே, ஆமா என்ன ரெண்டு குக்கர், கரண்டி எல்லாம் இருக்கு, இங்கயே சமைச்சு சாப்பிட்ரயான்னு கேட்டார்" நானும். "ஆமாம், நமக்கும் ஆபீஸ் டென்ஷன்ல இருந்து அப்ப அப்ப விடுதலை வேணும்ல" ன்னு சொல்லி சமாளிச்சேன்.

    நாராயணன், என்னது சென்னைத் தமிழ்ல புகுந்து விளையாடரீங்க. நான் நாடகம் எழுதினா, கார்த்திகேயன் கேக்கர முதல் கேள்வி, இந்த நாடகத்திலயாவது மெட்ராஸ் தமிழ் இல்லாம எழுதியிருக்கியான்னு அந்த அளவுக்கு அந்த மொழி பழக்கம். இப்ப நீங்களும் சேர்ந்துட்டீங்க. ஆமாம், 'கஸ்மாலம்' ன்னா என்னன்னு தெரியுமா?

    மீனா கடைசியாக உங்க பின்னூட்டதில எழுதியிருக்கரத கொஞ்சம் எடிட் செய்திடுங்க.
    //கண்ணுக்கு தெரியற மாதிரி வச்சா தானே மலை மலையா குமிஞ்சிருக்கும் துணி நம்மை உறுத்தறது. நீ ஒன்று செய். உபயோகப்படுத்தாத அறையில் அவைகளை போட்டு கதவை தாளிட்டு நகர்ந்து போயிடு.//

    உங்க பதிவை ரிச்மண்டில் நிறைய பெண்மனிகள் படிக்கிறார்கள். ஒரு சமுதாயமே கெட்டுப் போக நீங்களும் உங்கள் எழுத்தும் காரணமாகிவிடக் கூடாது.

    குமிஞ்சிருக்கும் துணி உறுத்தினா தூக்கி உபயோகப்படுத்தாத அறையில் போடரதுக்கு முன்னாடி அந்த துணியில அவங்க வீட்டுக்காரர் ஒட்டிகிட்டு இருக்காரான்னு பார்க்கனும், உபயோகப்படுத்தாத அறையில் அவரே ஏதாவது பண்ணிகிட்டு இருக்காரான்னு பார்க்கச் சொல்லனும். ஹூம் ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னோரு ஆம்பளைக்குதான் தெரியும்.

    முரளி

    ReplyDelete
  7. அனானிமஸ்,

    "thuvaikaamal irudhaal thuni madikaamal irukalaam."

    பிரமாதமான point ங்க. நீங்க வக்கீலோன்னு நினைக்க வைக்குது உங்க வாதம்.

    ReplyDelete
  8. தமிழினி,

    வருக.

    நாரீ,

    "இத்த யாராண்ட சொல்லி ஆயுவரது?"

    பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே. ஒரு நிமிஷம் சென்னையில் எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் முனியம்மா இங்க எப்படி வந்தான்னு நினைக்க வைத்தது உங்க மறுமொழி. :-)

    வருகைக்கு நன்றி நாரீ.

    ReplyDelete
  9. முரளி,

    முதலில் உங்க வருகைக்கும் மிகப் பெரிய பின்னூட்டத்துக்கும் நன்றி.

    " உங்க வீட்டு கதையேதான் எல்லார் வீட்டிலேயும்."

    கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் அப்படின்னு யாரோ சொல்லி கேட்டிருக்கேன். இப்ப தான் அதன் அர்த்தமே புரியுது.

    "உங்க பதிவை ரிச்மண்டில் நிறைய பெண்மனிகள் படிக்கிறார்கள்."

    அப்படியா...யாரும் சொல்லவேயில்லையே?

    "ஒரு சமுதாயமே கெட்டுப் போக நீங்களும் உங்கள் எழுத்தும் காரணமாகிவிடக் கூடாது."

    உங்க சமுதாய உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்குதுங்க.

    "குமிஞ்சிருக்கும் துணி உறுத்தினா தூக்கி உபயோகப்படுத்தாத அறையில் போடரதுக்கு முன்னாடி அந்த துணியில அவங்க வீட்டுக்காரர் ஒட்டிகிட்டு இருக்காரான்னு பார்க்கனும், உபயோகப்படுத்தாத அறையில் அவரே ஏதாவது பண்ணிகிட்டு இருக்காரான்னு பார்க்கச் சொல்லனும்."

    சொல்லிட்டா போறது. இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் துணிகளை கண் மறைவாக விட்டெரியும் முன் ஒரு முறை உதறிவிட்டு கணவர் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு விட்டெறியவும். கணவர் அறையில் உட்கார்ந்திருந்தால் அவர் மேல் விட்டெரியலாமா என்பதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. :-)

    ReplyDelete
  10. Attic ஐயும் Garage ஐயும் விட்டு விட்டீர்களே!

    ReplyDelete
  11. "Attic ஐயும் Garage ஐயும் விட்டு விட்டீர்களே!"

    அத இன்னுமொரு பதிவுக்காக வச்சிருக்கேங்க :-)

    வருகைக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  12. very nice!! I will make an attempt to post a blog to adress this mega universal problem!!
    vasantham

    ReplyDelete
  13. Meena,

    andha anonymous adiyen thaan. I forgot to login. I visited RTS blog last week and I enjoyed reading your post.

    ReplyDelete
  14. அரவிந்த்,

    வாங்க வாங்க....நீங்க தான் அனானிமஸ் னு தெரிஞ்சு ரொம்ப சந்தோசம். அதை விட முக்கியமா என் எழுத்தை படிச்சு ரசிச்சேன்னு சொன்னதுக்கு ஒரு பெரிய நன்றி. :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!