Showing posts with label கணிணி வைரஸ் ஸ்பாம். Show all posts
Showing posts with label கணிணி வைரஸ் ஸ்பாம். Show all posts

Tuesday, May 08, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 14

பார்மிங்:

நமக்கு வேண்டிய இணையதளம் போன்றே உள்ள வேறொரு இணைய தளத்தை நாம் அடைவதே பார்மிங் ஆகும் .

நமக்கு வேண்டிய இணையதளத்தின் பெயரை நாம் உள்ளீடு செயதவுடன் நம் கணிணி டிஎன்எஸ் சர்வரைத் தொடர்பு கொள்ளும் . டிஎன்எஸ் சர்வரானது நமக்கு வேண்டிய ஐபி முகவரியைத் தரும். பின் நம் கணிணியானது அந்த முகவரியின் மூலமாக நமக்கு வேண்டிய இணையதளத்தை அடையும். பார்மர்கள் இந்த டிஎன்எஸ் சர்வர்களைத் தாக்கி ஐபி முகவரிகளை மாற்றி விடுவர் . பின் அது குறிப்பிட்ட பெயரைக் கேட்போருக்கெல்லாம் தவறாகவே செயல்படும். தவறான முகவரி கிடைக்கப் பெற்ற கணிணியானது தவறான இணையதளத்தை அடையும். உண்மையான இணையதளத்தைப் போன்றே இந்தத் தளமும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அதனால் வித்தியாசம் எளிதில் தெரியாது பார்மரின் வலையில் செல்பவர் விழுந்து விடுவர் .

பிஷிங் வலையில் மாட்டாமல் விடுபட :

வங்கிகள் நம்மை மின்னஞ்சல் மூலமாக சரிபார்க்க கேட்கவும் மாட்டார்கள் . நாமும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். மீறி சந்தேகம் இருப்பின் உரியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள் .

ஏதேனும் சுட்டிகள் தென்பட்டால் அதை அப்படியே சொடுக்கும் பழக்கத்தினை விடுங்கள் . அந்தச் சுட்டியை கட் செய்து பிரௌசரில் பேஸ்ட் செய்து அதன் மூலம் பயணியுங்கள்.

சில முகவரிகள் https எனத் துவங்கும். அவை ஓரளவு பாதுகாப்பானவை. அந்த பிரௌசரின் கீழ் தங்கப்பூட்டு பூட்டப்பட்டு காட்சி அளிக்கும். அது பாதுகாப்பான இணைய பக்கம் என்பதைக் குறிக்கும் . சிலர் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் அதே மாதிரி பூட்டைக் காண்பிக்க இயலும். ஆனால் நாம் அந்த விண்டோவையே நகர்த்தினால் அந்தக் குட்டு வெளிப்படும்.

பாதுகாப்பான இணையப் பக்கங்கள் மூலமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யவேண்டும் .

நெட்கிராப்ட் செயலியை நிறுவுதன் மூலம் பிஷிங் சைட்டை நாம் அடைந்தால் எச்சரிக்கையினைப் பெறலாம் http://www.netcraft.com .

முடிந்தது.
என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன். குறைகள் இருப்பின் பொறுத்தருள்க. நான் எழுத நினைத்த விதம் வேறு. ஆனால், நேரத் தட்டுபாடு என்னை பாதித்ததால் இவ்வாறாக வந்திருக்கிறது.
என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

-சுரேஷ்பாபு.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

Thursday, May 03, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 13

பிஷிங்(phishing)

இதற்கு உரிய தமிழ்பெயர் இனிமேல்தான் வரவேண்டும். இது அடையாளத் திருடர்களால் கையாளப் படும் ஒருவகை தந்திரம். நமக்கு ஒரு மின்னஞ்சல் நம் வங்கி கணக்கினை சரிபார்த்துக் கொள்ளச் சொல்லி வரும் . நாம் அதன் மூலம் பயணித்து விபரங்களை அதில் இட்டோமானல் அவ்வளவுதான் நம் விபரங்கள் பிஷர் கையை அடைந்து விடும் .

பெரும்பாலும் இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள் நம்மைத் தூண்டும் வண்ணமே வரும் . அவ்வாறு வருதலில் உங்களுக்கு உண்மையானது எனத் தோன்றினால் கடிதம், போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப் பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பின் பதில் அனுப்பவும் .

இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய www.antiphishing.org

பிஷிங் செய்பவர் கையாளும் வழிமுறைகள்:

மின்ஏமாற்றுதல்(spoofing) தான் பிஷர்களின் முக்கிய ஆயுதம்.

மின்னஞ்சல் முகவரி மூலமாக ஏமாற்றுதல் - நமக்கு அனுப்பும் மின்னஞ்சலின் தலைப்பு விபரங்களை (header information)மாற்றி, அது உண்மையான மின்னஞ்சல் என நம்பவைத்து விடுவர் .

சுட்டிகள் மூலமாக எமாற்றுதல் - சுட்டிகள் எப்பொழுதும் பெயர் வேறாகவும் , அந்த இணைப்பு வேறாகவும் இருக்கும். உதாரணம் சுரேஷின் இணையதளம் இதில் சுரேஷின் இணையதளம் நம் கண்ணுக்கு தெரியும். .காம் தெரியாது. சுரேஷ்பாபு.காமை ரமேஷ்பாபு. காம் என மாற்றினாலும் வெளியில் ஒன்றும் தெரியாது. அப்பாவித் தனமாக அதை சொடுக்கி விடுவர் .

இணையதள பெயர் மூலம் ஏமாற்றுதல் - இன்டர் எக்ஸ்புளோரரில் சில குறைகள் உள்ளது. அதை பயன்படுத்தி நாம் ஒரு இணையதளத்தில் இருந்தாலும் வேறொரு தளத்தில் இருப்பதுபோல் காட்ட முடியும். இதை வைத்தும் பிஷர் நம்மை ஏமாற்றி விடுவர். இந்த குறைபாடு நம் கணிணியில் உள்ளதா இல்லையா என நாம் அறிய http://secunia.com/internet_explorer_address_bar_spoofing_test/ . சொடுக்குங்கள் . உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பார் பொய் முகவரியை காட்டியது என்றால் உங்க பிரௌசரில் இந்தக் குறைபாடு இன்னும் சரி செய்யப் படவில்லை என்று அர்த்தம் . பேஜ் கேனாட்பி டிஸ்பிளேயிட் வந்தால் உங்களது பிரௌசரில் இந்தக் குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, April 30, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 12

அடையாளத் திருட்டு:

நமது வங்கி கணக்கின் பெயர், மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி அதன்மூலமாக நம் வங்கிகணக்கிலிருந்து பணத்தைத் திருடுதல்.

இன்னும் சிலர் ஒருவருடைய அடையாளங்களைத் தெரிந்துக் கொண்டு வங்கிக் கடன் அட்டைக்கு முயல்வர் . சில காலம் நல்ல முறையாக பரிவர்த்தனைகள் செய்து கடன் எல்லையை அதிகரித்து காலம் ஒத்துழைக்கையில் பெரும் தொகையை கணக்கில் ஏற்றி விட்டு காணாமல் போய்விடுவர் .

இந்தியாவில் இவை அதிகம் பிரபலம் இல்லை. ஏனென்றால் நாம் கணிணி மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகம் செய்வதில்லை.

பாதுகாப்பு வழிமுறைகள்:(வெளிநாடுகளில் உள்ளவரையும் கணக்கில் எடுக்கப்பட்டது.)


நமது ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் விபரம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் சோசியல் செக்யூரிட்டி எண்(இருப்பின்) பாதுகாப்பாக வைக்கவும். இவற்றில் சிலவற்றைக் கொண்டு நம்மைப் போல் இன்னொருவர் கணக்கு துவங்க இயலும் .

இவற்றினை உரிய நபர்களிடம் மட்டும் தேவைப்படும் பொழுதுக் காட்டவும் .

இந்த விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மற்றும் பைல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அழிக்கும் பொழுது இலவச ஸ்ரெட்டர் புரோகிராம் ஏதேனும் கொண்டு அழிக்கவும் .

கூடுமானவரை ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகளை வைத்திருத்தல் நலம் . அப்பொழுதுதான் அவ்வப் பொழுது அவற்றினைச் சரிபார்க்க இயலும்.

மின்னஞ்சல் மூலமாக கடன் அட்டை விபரங்களை யாருக்கும் தெரிவிக்காதீர்கள் .

இது பற்றி மேலும் விபரங்களுக்கு. http://www.idtheftcenter.org

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, April 09, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 11

மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர்:

இல்லத்துக் கணிணிகளுக்காக வரும் இத்தகைய மென்பொருள்கள்

நிரவுவதற்கு எளிதாக இருக்கும், குறைந்த அளவு இடம் போதும், நம்மை அடிக்கடித் தொந்தரவு செய்யாது.

விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் நெருப்புச்சுவர்:

உங்கள் எக்ஸ்பி இயக்கத்தில் இது இல்லையெனில் சர்வீஸ்பேக் 2ல் இருக்கிறது. இறக்கி உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இதை இயக்கிவிட்டால் போதும். அமைதியாகத் தன் பணியை தொடங்கிவிடும் . இதனால் கணிணியின் வேகத்தில் எந்த மாறுதலும் நமக்குத் தெரியாது.

பிற இலவச நெருப்புச்சுவர்கள்:

ஜோன்அலார்ம் www.zonelabs.com

சைகேட் www.sygate.com


ஹார்ட்வேர் நெருப்புசுவர்கள்:

நெட்வொர்க் அட்ரஸ் டிரான்ஸ்லேட்டர் நெருப்புசுவர்கள் (NAT Firewalls) இதில் பிரசித்தம் . சிஸ்கோ, ஜுனிபர் நெட்வொர்க்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கணிணி நெட்ஒர்க்குகளை பாதுகாக்கும் நெருப்புச் சுவர்களைத் தயாரிக்கிறார்கள் .

ஹேக்கர் தாக்குதலின் அறிகுறிகள் :

நமது கணிணியில் நமக்கே புரியாத வண்ணம் சில தகவல்கள் சேமிக்கப் பட்டிருக்கும். இந்த தகவல்கள் ஹேக்கரின் கைவரிசையாயிருக்கலாம்.

நமது வங்கி கணக்கில் பணம் குறைதலும் தாக்குதலின் அறிகுறி. நாம் நம் கணிணியில் நம் வங்கி கணக்கு விபரங்களை சேமித்து வைத்திருந்தோமானால் இம்மாதிரி நடக்க வாய்ப்புண்டு . ஆனால் இதற்கு ஹேக்கர் மட்டுமே காரணமாயிருக்க குடியாது. பிஷிங், கீலாக்கர் போன்றவையும் காரணமாக இருக்கலாம் .

ஹேக்கர் தாக்குதல் தெரிந்தால் செய்யவேண்டியது :


முதலில் இணையத்தில் இருந்து துண்டியுங்கள்.

நெருப்புசுவரை இயக்குங்கள்.

அன்று மாற்றப்பட்ட பைல்களை சர்ச் ஆப்சன் மூலமாகத் தேடுங்கள். சந்தேகத்திற்கு இடமாயுள்ள பைல்களை அழித்து விடுங்கள் .

இன்னும் சந்தேகமாயிருந்தால் கணிணியில் உள்ள அனைத்தையும் அழித்துவிட்டு புதிதாகத் துவங்குங்கள்.

பொதுவாக 2 நெருப்புச்சுவர்களை உங்கள் கணிணியில் நிறுவுதல் நலம் .

வாய்ப்பு இருப்பின் ஹார்டுவேர் நெருப்புச்சுவரும் நிறுவலாம். சில

டிலிங்க் www.dlink.com ,

நெட்கீர் www.netgear.com ,

லின்க்சிஸ் www.linksys.com ,

பெல்கின் www.belkin.com ,

எஸ்எம்சி www.smc.com

ஆப்பிள் www.apple.com javascript:void(0)
Publish


அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Thursday, April 05, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 10

ஹேக்கர்ஸ் உபயோகப்படுத்தும் கருவிகள்:

டிரோஜன் குதிரைகள் - உபயோகமாகவும், பாதுகாப்பானதாகவும் கருதும் படி , வடிவமைக்கப் பட்ட மென்பொருள்கள். ஆனால் உள்ளே சில தீங்கு தரக்கூடிய நிரலிகள் மறைந்திருக்கும் .

வைரஸ்கள் - பொதுவாக வைரஸ் செயலிகளை எழுதுபவர் அனைவரும் ஹேக்கர் அல்லர் , இருப்பினும் வைரஸின் வரிகள் ஹேக்கருக்கு உபயோகமாயிருக்கும்.

வார்ம்க்ள் - மனித எத்தனம் இல்லாமல் தானாக பரவும் நிரலிகள்.

வல்நரிபிலிட்டி ஸ்கேனர் - கணிணியில் உள்ள செயலிகளின் பலவீனங்களை ( நிரலிகளின் வடிவாக்கப்பிழைகள், பாதுகாப்பு குறைபாடுகள்) ஆராயும் நிரலிகள்.

ஸ்னிஃப்பர் - மற்றவரின் ஐடி, சங்கேத குறியீடு ( பாஸ்வேர்டு) இவற்றைத் தேடும் நிரலிகள்.

சமூக ஆர்வலர் வேடம் - ஒருவர் உதவுவது போல் நடித்து நம் கணிணியில் விசமத் தனமான நிரலிகளை நிரவுதல் .

ரூட்கிட் - செக்யூரிட்டி புரோகாராம் களிடமிருந்து விசமத்தனமான நிரலிகளை தப்பவைக்கும் வண்ணமாக எழுதப் படும் நிரலி .

எக்ஸ்பிளாயிட் - கணிணியில் உள்ள தெரிந்த பாதுகாப்பு பலவீனங்களை உபயோகப் படுத்திக் கொள்ளல் .

நெருப்புச் சுவர் (Fire wall);


நெருப்புச் சுவரானது நமது கணிணிக்கும், இணையத்திற்கும் இடையே மின்னணு தடுப்புச்சுவராக பணியாற்றுகிறது . இதில் கதவுகளை ஒத்த அமைப்பாக போர்ட்க்ள் இருக்கும். போர்ட்களை நிரலிகள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரௌசர்கள் போர்ட் 80ஐ உபயோகிக்கும். மின்னஞ்சல் அனுப்ப 25 உபயோகமாகும், எம்எஸ்என் 1863, 6891-6900, மற்றும் 6901ஐ உபயோகிக்கும்.

முறையாக நெருப்புச் சுவரை இயங்க வைத்திருந்தோம் ஆனால் பெரும்பாலான பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

நெருப்புச் சுவர்கள் அடிப்படையில் இரண்டு வகைப் படும். அவை மென்பொருளால் ஆன நெருப்புச்சுவர் , ஹார்ட்வேர் நெருப்புச்சுவர் ஆகும்.

விண்டோஸ் எக்ஸ்பி இலவச நெருப்புச்சுவருடனே வருகிறது.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, March 26, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 7

ஸ்பைவேரில் இத்தனை வகைகளா?

ஸ்பைவேர்-நம் செயல்கள் அத்துணையையும் நாம் அறியாமல் ஒற்றறியும் மென்பொருள் .

ஆட்வேர்- நாம் கணினியை இயக்கும் போதெல்லாம் விளம்பரங்களை காட்டி எரிச்சலடைய வைப்பது .

ஸ்னூப்வேர்- வேறு ஒருவருக்காக கணிணயில் நாம் செய்யும் செயல்கள் அத்துணையும் பதிவு செய்து பிறகு அவருக்குத் தெரிவிக்கும்.

பிரௌசர் கடத்தி( ஹைஜாக்கர்) -நாம் ஏதேனும் ஒரு வலைத் தளத்தை நோக்கச் சுட்டினால் வேறு எங்காவது நம்மை அழைத்துச் செல்லும் .

கீலாக்கர்- நம் தட்டச்சினை அப்படியே பிறருக்குத் தெரிவிப்பது.

டையலர் - தானாகவே டையல் செய்து இணையத்தைத் தொடர்பு கொண்டு வேறுசில கொடிய நிரலிகள் நம் கணினியை தாக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பது .

பெரும்பாலும் ஆபாச வலைத் தளங்களைப் பார்ப்பவர்கள் கணினியானது ஸ்பைவேர் தொந்தரவுக்கு அடிக்கடி இலக்காகிறது .


ஸ்பைவேர் தாக்குதலின் அறிகுறிகள்


கணிணியின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்.

பிரௌசரில் சில டூல்பார்கள் புதிதாக தென்படும். அவற்றை ஒழிக்கவும் முடியாது.

புதிது புதிதாக பாப்பப் விளம்பரங்கள் தோன்றும்.

நமது பிரௌசரின் செட்டிங்குகள் தானாக மாறியிருக்கும். நமது பிரௌசரின் முதல்பக்கம் மாறியிருக்கும்.

ஏதாவதொன்றை தேடுபொறியில் தேடினீர்களேயானால் வேறு முடிவுகள் வரும் .

இணைய தொடர்பு விடுபடும்.

மென்பொருள்கள் தவறாக இயங்க ஆரம்பிக்கும்.

கணிணியும் இயங்க மறுக்கும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Sunday, March 25, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 9

ஹேக்கர்ஸ் :

நாயகன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று, அதைப்போல ஹேக்கர்ஸ் நல்லவரா? கெட்டவரா ? என்று வாதிடுவோர் கணினி உலகில் உண்டு. பொதுவாக ஹேக்கர்ஸ் என்றாலே கணிணி அல்லது கணிணிகள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு வளையத்தை உடைத்து , அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்ய நினைப்பவரையே குறிக்கும். ஆனால் பாதுகாப்பு வளையத்தை சோதனை செய்வதற்காக தாக்குபவர்களை ஹேக்கர்ஸ் எனவும் , தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களை கிராக்கர்ஸ் எனவும் கூறலாம். இனி இதில் வரும் ஹேக்கர்ஸ் எனும் சொல் தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களையே குறிக்கும்.

ஹேக்கர்ஸ் பொதுவாக நல்ல அறிவு உடைய சட்டத்தை மதிக்காத நபராகவே இருப்பர், சிலர் அரசின் மேலுள்ள கோபத்திலும் ஹேக்கர்ஸ் ஆக மாறுவதுண்டு . இவர்கள் தங்களுக்குள் இணைய குழுக்களை அமைத்துக் கொண்டு தங்கள் வழிமுறைகளை பரிமாறிக் கொண்டு நல்ல வலுப் பெற்று விடுகின்றனர். நல்ல திறமுடைய ஹேக்கர்ஸ் வழிமுறைகளையும், கருவிகளையும் வடிக்க, தொடக்க நிலையிலுள்ளோர் அதன் மூலம் அனுபவம் பெறுகின்றனர் .

ஹேக்கர்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் :

சம்மந்தமே இல்லாத நபரின் கணிணி காரணமே இல்லாமல் தாக்கி தகவல்கள் பாதிக்கப் படும்.

சில அரசு இயந்திரங்களின் வலைப்பின்னல் இது மாதிரி தாக்குதல்களுக்கு ஆளாகும். காரணம் என்று பார்த்தால் தாக்கியவரின் சமூகத்திற்கு எதிரான கோபம் இவ்வாறு திசை மாறியிருக்கும் .

மற்றவரின் அறிவுசார் தகவல்களைத் திருடவும் இவ்வாறு நுழைபவர்கள் முயல்வது உண்டு.

லாபநோக்கில் தாக்கும் ஹேக்கர்ஸ் நம் கணிணியில் டிரோஜன் குதிரையையோ, வைரஸையோ நம் கணிணியில் நிறுவி , நம் கணிணியை அடிமைக்கணிணி(ஜோம்பி)யாக மாற்ற வாய்ப்பு உண்டு .

அடையாளத் திருட்டு: நம் கணிணியில் உள்ள நமது தகவல்கள் திருடப்பட்டு, நமது வங்கி கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

வருங்காலத்தில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ஹேக்கிங்கை உபயோகப் படுத்தக் கூடும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Wednesday, March 21, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 8

ஸ்பைவேர் தாக்குதலை தவிர்க்கும் முறைகள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் நிரலிகளில் ஏதேனும் இரண்டினை தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்தலாம் .

Microsoft AntiSpyware - http://www.microsoft.com/spyware/

Spybot Search & Destroy http://www.safer-networking.org

Ad-Aware SE Personal Edition http://www.lavasoft.de


பிரௌசரின் செட்டிங்கை உயர்த்துதல்;

இன்டர்னெட் எக்ஸ்புளோரர் இயக்குங்கள்.

அதில் டூல்ஸ் மெனுவைத் தேர்ந்து, இன்டர்னெட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

அதில் செக்யூர்ட்டியைத் தேர்ந்தெடுங்கள்.

வெப் கன்டென்ட் சோன் தெரிவு செய்து, பாதுகாப்பின் அளவை கூட்டுங்கள்.

விண்டோஸ் அப்டேட்டுகளை அவ்வப்போது தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

ஸ்பைவேர் மாதிரிகளை(Signature) வலிமைப் படுத்துங்கள்.


வலைத்தளத்தில் உலாவ யோசனைகள்


நம்பிக்கை இல்லாத தளத்தில் இருந்து மென்பொருள்களை தரவிறக்கம் செய்யவேண்டாம் .

வலைதளத்தில் உள்ள சட்ட விதிகளைப் படித்து பின் தரவிறக்கம் செய்யவும்

பாப்பப் விண்டோ ஏதேனும் நீங்கள் எதிர்பார்க்காமல் வந்தால் உள்ளே உள்ள பொத்தான்களை தட்டவேண்டாம் . மேலே உள்ள பெருக்கல் குறியையே தட்டவேண்டும்.

தாக்குதல் இருப்பதை அறிந்தால் செய்யவேண்டியது:


அந்த மென்பொருளில் உள்ள நீக்கும் வழிமுறையையே உபயோகப்படுத்துங்கள் .

அப்பொழுதும் அது நீங்கவில்லை என்றால் கணிணியை சேப் மோடில் ஆன் செய்து (முன்னரே சொல்லியிருக்கிறேன்) நீக்கவேண்டும் .

விண்டோஸில் ரிஸ்டோர் என்னும் உதவியுடன் பழைய நாளிற்கு ரிஸ்டோர் செய்து பின் நீக்கலாம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Wednesday, March 14, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 6

ஸ்பைவேர்

ஸ்பைவேர் என்பது நாம் அழைக்காமல், தேவையில்லாமல் , மறைவாக, நம்மை பாதிக்கும் வகையில் நம் கணினியை தாக்கி நமது விபரங்களை நாம் அறியாமலே வெளியாருக்குத் தெரிவிக்கக் கூடிய கணினி மென்பொருள்கள் .

ஸ்பைவேரினால் ஏற்படும் பாதிப்புகள்:

நம்மை அறியாமலே நம் கணிணியை வந்தடைந்து, நமது விபரங்களை கேள்விக் குறியாக்கிவிடும்.

நம்மை எரிச்சலடைய வைக்கும் வகையில், விளம்பரங்களை அவ்வப்போது திரையில் இடும்.

நமது கணினியின் நினைவகத்தில் இடத்தை பிடித்துக் கொள்ளும். இதனால் நம் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்பு உண்டு.

சில ஸ்பைவேர் நிரலிகள் நமது கீஸ்ட்ரோக்களைக் கூட சேகரித்து வெளியாருக்கு அனுப்பி விடும் . இதனால் நம் சங்கேத வார்த்தைகள் (பாஸ்வேர்டு ) அறியப் பட்டுவிடும்.

சில ஸபைவேர் நிரலிகள், ஸ்பாம் செலுத்தும் கணினியாக நம்முடயதை மாற்றி விடும் நிரலிகளை நம் கணினியில் நிறுவும் அபாயமும் உள்ளது.

சில ஸபைவேர் நிரலிகள் நம் பிரௌசரில் செட்டிங்கை மாற்றி நம் பிரௌசர் துவங்கும் போதெல்லாம் வேறு ஏதேனும் வலைப்பக்கத்திற்கு நம்மை கடத்தும் .

சில நம் கணினியில் நன்றாக ஊடுருவி, நீக்குவதற்கு கடினமானதாக மாறிவிடும்.

ஸ்பைவேர் எவ்வாறெல்லாம் நம் கணிணியை வந்தடைகிறது:


சில வலைத்தளங்களை பார்க்கும் போதெல்லாம் தானாக அவற்றிலிருந்து ஸ்பைவேர் நம் கணிணியை வந்தடையும் .

நமக்கு பரிசு இருப்பதாக ஆசைக்காட்டி ஸ்பைவேர் உள்ள சுட்டிகளைத் தட்டத் தூண்டி விடுவார்கள் .

சில பைரேட்டட் மென்பொருள்களில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு . சில தரவிறக்க மென்பொருள்களிலும் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு. kazaa இதற்கு நல்ல உதாரணம் .

மின்னஞ்சல் இணைப்புகளில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்பு உண்டு.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

Thursday, March 01, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 4

வைரஸ்கள் யாரால் எதற்காக எழுதப்படுகின்றன?

வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களாலேயே எழுதப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம் இது உண்மை. பெரும்பாலான வைரஸ் நிரலி (புரோகிராம்) 13-20 வயது வரை உள்ளவர்களால் தான் எழுதப் படுகின்றன . அவர்களும் விளையாட்டாக இது போன்ற செயல்களைச் செய்கின்றனர். உண்மையில் ஒரு வைரஸ் நிரலியை நாம் எழுத வேண்டுமானால் நமக்கு கணிணி பற்றிய விபரங்கள் அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைரஸ் நிரலி எழுதுவோருக்கென சில குழுக்கள் உள்ளன அவற்றில் அனுபவமும், அவர்கள் சாட்ரூமில் பழக்கமும் இருந்தால் போதும் . (அவர்களுக்கென குழூஉக்குறியும் உண்டு.) ஒருவர்க்கு எளிதில் மூல வரிகள் கிடைத்து விடும். அதை அவர் மாற்றினால் போதும். எளிதில் வைரஸ் நிரலி தயார்.

மிகச்சிலரே இதன் மூலம் பணம் சம்பாரிக்கலாமென சில சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்கி மிரட்டுகிறார்கள் . அவ்வாறு தாக்க அப்பாவிகளின் கணிணிகளை வைரஸ் கொண்டு தாக்கி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து , பின் அந்தக் கணிணிகளை சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்க உபயோகிக்கிறார்கள்.




நாம் செய்யக்கூடாதவை:

பெரும்பாலான வைரஸ்கள் மின்னஞ்சல் மூலமாகத் தான் வருகின்றன. அதனால் தெரியாதவர் களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் அதில் இணைப்பு (அட்டச்மெண்ட்) இருந்தால் அதைத் திறக்காதீர் .

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்தாலும், அதில் உள்ள இணைப்பைக் காரணம் இல்லாமல் திறந்து பார்க்காதீர்கள். முதலில் அவர் உங்களுக்கு ஏதேனும் இணைப்பை அனுப்புவதாகக் கூறியிருந்தாரா ?, என்று ஆராய்ந்து பிறகு அந்த இணைப்பை உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இறக்கம் செய்து, பின் வைரஸ் ஸகேனர் கொண்டு அந்த இணைப்பை ஆராய்ந்து, அதில் வைரஸ் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு பின் திறக்கவும் .

ஆண்டி வைரஸ் பாதுகாப்பை நிறுத்தி வைக்காதீர்கள். அப்படி ஓரு தேவை ஏற்பட்டால், இன்டர்நெட் இணைப்பையும் உடன் நிறுத்தி வைத்து விடுங்கள் .

பிளாப்பி, சிடி மற்றும் டிவிடி இவற்றில் எதை உபயோகப் படுத்த வேண்டுமானாலும் அதற்கு முன் வைரஸ் ஸ்கேன் செய்து விடுங்கள் .

நெருப்புச் சுவர் ( பயர்வால்) உங்கள் கணிணியில் இயங்குவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.( பயர்வால் பற்றித் தெரியாவர்களுக்காக பின்னொருநாள் விளக்குகிறேன்.)

சாட்டில் வரும் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் பைல்களை உபயோகிக்காதீர்கள் .

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

Monday, February 19, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 3

வைரஸ்களின் வகைகள்:

மேக்ரோ வைரஸ்:
மேக்ரோ என்பவை கணிணியில் பயன்பாட்டு மென்பொருள்கள் தங்களை நுணுக்கமாகப் பயன் படுத்திக் கொள்ள பயன்பாட்டாளர்களுக்கு கொடுத்த வசதி ஆகும் .மைக்ரோசாப்டின் ஆபிஸில் உள்ள விசுவல்பேசிக்பார்அப்ளிகேசன் மூலம் எழுதப்படும் மேக்ரோ மூலம் மைக்ரோசாப்டின் ஆபிஸில் பல வேலைகளை தானாக நாம் செய்ய வைக்க முடியும் . இந்த வசதியைத் தான் வைரஸ் எழுதுபவர்கள் தவறாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். இந்த மாதிரி மேக்ரோ மூலம் எழுதப்படும் வைரஸ்கள் மேக்ரோ வைரஸ்கள் என அழைக்கப் படுகின்றன. மேக்ரோ வைரஸ் உள்ள பைலை நாம் இயக்கினால் மட்டுமே நம் கணிணியை இவை தாக்கும் .
அதனால் தெரியாதவர்களிடமிருந்து வரும் பைலை இயக்காதீர்கள். இவ்வகை வைரஸ் உள்ள பைல்கள் கவர்ச்சிகரமான வாசகங்களுடனே வரும் . மயங்கி தட்டி விட்டால் அவ்வளவுதான்.. மிகப் புகழ் வாய்ந்த மெலிஸா வைரஸ் எழுதப் பட்ட 3 நாளிலேயே 100,000 கணிணிகளை தாக்கியுள்ளது.

நினைவகத்தில் தங்கும் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் முதலில் இயக்கப் பட்டவுடன் நம் கணிணியின் நினைவகத்தில் தங்கிக் கொள்ளும். பின்னர் இயக்கப் படும் ஒவ்வொரு புராகிராமிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பைல்சிஸ்டம் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் இயக்கப் படும் ஒவ்வொரு பைலிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பூட் வைரஸ்:
கணிணி இயங்க அத்தியாவசமான மென்பொருள்கள் எல்லாம் கணிணியில் டிஸ்கில் பூட் செக்டார் எனப்படும் பகுதியில் இருக்கும் . இவ்வகை வைரஸ்கள் பூட் செக்டரை பாதிப்பதன் மூலம் ஒவ்வொரு கணிணி இயங்கும் போதும் ( அல்லது பிளாப்பியை அணுகும் போதும்) செயல்படத் துவங்கும் வண்ணம் தம்மை நிறுவிக் கொள்ளும் .

மல்ட்டி பார்டைட்:
இவை மிகச் சாமார்த்தியமாக வடிவமைக்கப்பட்ட வைரஸ்கள். மேலே சொன்ன மூன்று வழிகளிலும் செயல்படக் கூடியவை.

வார்ம் :
மெயிலில் உள்ள அட்டாச்மெண்ட் வசதி மூலம் பரவக்கூடிய வைரஸ்கள் வார்ம். இவை அந்த அட்டாச்மெண்ட் உள்ள மெயிலை யாராவது படிக்கையில் அவரது கணிணியை தாக்கி விடும். பிறகு அவரது சிஸ்டத்தில் உள்ள அட்ரஸ்களைத் திருடி அவர்களுக்கும் அந்த மெயிலை அனுப்பிவிடும் . பின்பு இதேச் சுற்று துவங்கும்.

டிரோஜன் குதிரை:
அந்த கால கிரேக்க இதிகாசத்தில் ஒரு சம்பவம் வரும். ஒரு அழகியை (ஹெலன்) டிராய் தீவுக்காரர்கள் கடத்தி விட டிராய்க்கும் கிரீஸுக்கும் சண்டை மூண்டு விடும் . பல வருடங்கள் ஆகியும் கிரேக்கர்களால் டிராயை தகர்க்க முடியவில்லை. பின் ஒரு சதி செய்தனர். ஒரு பெரிய மரக்குதிரையை செய்து உள்ளே ஒருசில வீரரை வைத்து அதை டிராயின் கோட்டை வாயிலில் விட்டுவிட்டு கிரேக்க வீரர்க்ள் மறைந்து விட்டனர் . மறுநாள் அதைப் பார்த்த டிராய் நகரத்தவர் அந்தக் குதிரையை நகருக்கு உள்ளே தள்ளி செல்ல , இரவில் மறைந்திருந்தவர் வெளியே வந்து மற்றவர்க்கு கதவைத் திறந்து விட கிரேக்கம் வென்றதாக வரும். இது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் டிரோஜன் வைரஸ் இவை போலவேச் செயல்படும் . நல்ல மென்பொருள் போல் ஒன்றை வழங்குவதாக நடித்து ஒரு மென்பொருள் நமக்கு கிடைக்கும். அதை இயக்கினால் அதிலிருந்து டிரோஜன் கிளம்பும். அந்த நல்ல மென்பொருளாக நடிப்பதையே டிராப்பர் என்று அழைக்கிறார்கள் .

வைரஸ் ஹௌக்ஸ்:
நடிப்பு திலகங்கள். இந்த மாதிரியான மெயில்கள் சில பைல்களின் பெயரைக் குறிப்பிட்டு அவை எல்லாம் வைரஸ் எனவும் , அவற்றை நீக்கும் படியும், மெயிலை பலருக்கும் அனுப்பும்படியும் வரும் . பின்னர் பார்த்தால் நாம் நீக்கிய பைல் எல்லாம் கணிணிக்கு தேவையான பைல்கள் எனத் தெரிய வரும் .
எப்படி ஹௌக்ஸ் அடையாளம் காண்பது? - இம்மாதிரி மெயில்கள் வந்தால் உடனே கூகுளில் சர்ச் இடுங்கள், http://www.f-secure.com/virus-info/hoax/ பாருங்கள்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

-தொடரும்.

Monday, February 12, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 2

வைரஸ்கள் பற்றிய விளக்கங்கள்.

வைரஸ் என்றால் என்ன?
மற்றவரின் கணிணியை பாதிக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் எழுதப் படும் புரோகிராம்களே வைரஸ்கள் ஆகும்.


யார் வைரஸ்களைத் தூண்டி விடுவது?
ஒரு புரோகிராமில் வைரஸ் உள்ளது என்பதை அறியாமல் இயக்கும் யாரும். வைரஸ்களைத் தம்மை அறியாமல் தூண்டி விடுகின்றனர். முதலில் தூண்டப்பட்டவுடன் வைரஸானது தன்னைத் தானே பல பிரதிகள் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளில் இறங்கிவிடும் . பிறகு பரவுதல் மற்றும் பாதித்தலைத் துவங்கும்.


வைரஸ்களினால் ஏற்படும் பாதிப்புகள்:
ஜோக்ஸ் அல்லது வன்டலிசம் :
இவை கணிணியில் விதவிதமான அலர்ட்களை கொடுக்கும். உதாரணமாக உங்கள் கணிணியில் ஐஸ்வர்யா ராயின் அழகான படத்துடன் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஓ .. போடுங்கள் என்பது போன்ற அலர்டுகள் வரலாம். இப்படி வந்தால் சந்தோசப் படாதீர்கள். உங்கள் கணிணி ஒருவித வைரஸால் பாதிக்கப் பட்டு விட்டது என்று அர்த்தம் .

தகவல் (டாடா ) பாதிப்பு:
வைரஸ்கள் உங்கள் கணிணியில் உள்ள பைல்களை அழித்து விடக்கூடியவை. சில மொத்த ஹார்ட் டிஸ்கையும் கூட அழித்துவிடக்கூடும்.

ஸ்பாம் வினியோகம்:
ஸ்பாம் என்பவை மொத்தமாக வியாபார நோக்கில் அனுப்பப் படும் மெயில்களைக் குறிக்கும். வைரஸ் பாதிக்கப் பட்ட கணிணியானது இது போன்ற ஸ்பாம்களை அதை உபயோகிப்பவருக்குத் தெரியாமலே அனுப்பும் படி செய்து விடுவார்கள். அல்லது பாதிக்கப் பட்ட கணிணியில் உள்ள அட்ரஸ் புக்கிலிருந்து அட்ரஸ்களைத் திருடி விடுவார்கள்.

தகவல் திருட்டு:
சில வைரஸ்கள் பாதித்தக் கணிணியில் இருந்து அதில் உள்ள தகவல்களை திருடி அனுப்பி விடும். இதனால் நமது அகவுண்ட்களின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும். மற்றும் நம் நற்பெயருக்கும் களங்கம் வந்து சேரும் .

ஹைஜாக்குகள்:
இந்த வகை வைரஸ்கள் தாக்கப்பட்ட கணிணியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளக் கூடும். பிறகு அவர்களின் தீச்செயல்களுக்கெல்லாம் நம் கணிணியும் உடந்தை ஆகிவிடும். அவர்கள் ஏதாவது ஒரு சர்வரை மாஸ் அட்டாக் செய்ய நமது கணிணியை உபயோகப் படுத்தலாம் . நமது கணிணியை திருட்டு மென் பொருள்களை வினியோகிக்க உபயோகப் படுத்தலாம்.

கையூட்டு:
சில வைரஸ்கள் நம் கணிணியின் தகவல்களை முடக்கி விட்டு மீட்டுத் தர கையூட்டைக் கேட்கக் கூடும்.

வைரஸ் வினியோகம்:
சில வைரஸ் நம் கணிணியைப் பாதிக்கச் செய்து அதன் மூலமாக பிறருக்கு வைரஸை பரப்பும் வண்ணம் பாதிக்கும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

-தொடரும்.

Tuesday, February 06, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 1

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி. இனி சுரேஷ் தொடர்வார்:


ைரஸ், ஸ்பாம் மற்றும் விசமத் தனமான புரோகிராம்களிடமிருந்து உங்கள் கணிணியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் வைரஸ்கள் என்றாலே தீங்கு தரும் புரோகிராம்கள். நாம் அறியாமலே நம் கணிணியை அடைந்து நமது பைல்களை பாதிக்கும். என்ற விளக்கமே போதுமானதாக இருந்தது.

ஆனால், இன்றெல்லாம் இலக்கியத்தை புரிந்து கொள்வதைவிட கடினமானதாக வைரஸை புரிந்து கொள்வது ஆகிவிட்டது.

உங்கள் கணிணியில் உள்ள வைரஸை பற்றிய விளக்கம் பின்வருமாறு இருக்கலாம்.

" உங்க கணிணி ஒரு டிராப்பரால் பாதிக்கப் பட்டுள்ளது. அது ஒரு டிரோஜனை உங்கள் சிஸ்டத்தில் நிறுவக்கூடும். அப்படி நிறுவப்படும் டிரோஜன் ஒரு மல்ட்டி பார்டைட்டை உங்கள் சிஸ்டத்தில் நிறுவும். அந்த மல்ட்டி பார்டைட் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் மாஸ்டர் பூட் ரெகார்டை பாதித்து உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்தையும் அழித்துவிடக்கூடும்."

என்ன இது ஒன்றுமே புரியவில்லை என்கிறீர்களா? கவலைப் படவேண்டாம் உங்களுக்காகத்தான் இந்த கட்டுரைத் தொடர்.

இந்தத் தொடரில்

1.வைரஸ் என்றால் என்ன? என்ன என்ன சிக்கல்களை வைரஸ்கள் விளைவிக்கக் கூடும்? வைரஸ்களின் தாக்குதலை எப்படித் தவிர்க்கலாம்?

2.ஸ்பைவேர் என்றால் என்ன? என்ன என்ன சிக்கல்களை ஸ்பைவேர்கள் விளைவிக்கக் கூடும்? ஸ்பைவேர்களின் தாக்குதலை எப்படித் தவிர்க்கலாம்? இந்த முறைகளைப் பயன்படுத்தினால் உங்கள் கணிணியின் வேகம் 30சதம் முதல் 50 சதம் வரை உயர்வதைக் காண்பீர்கள்.

3.ஹேக்கர்ஸ் யார்? என்னவற்றிற்கு முயல்வார்கள்? எப்படி இவர்களைச் சமாளிப்பது?

4.அடையாளத் திருட்டு மற்றும் பிஷிங் என்றால் என்ன? இவர்கள் எப்படியெல்லாம் வலை விரிப்பார்கள்? எப்படி இவர்களைச் சமாளிக்கலாம்?

5.ஸ்பாம் என்றால் என்ன? எப்படி ஸ்பாமைச் சுத்தம் செய்வது?

6.மொத்தத்தில் உங்கள் கணிணியை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் மேற்கொள்ள வேண்டி செய்ய வேண்டியவை?

போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளேன்.

- சுரேஷ்பாபு


-தொடரும்.