Monday, February 19, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 3

வைரஸ்களின் வகைகள்:

மேக்ரோ வைரஸ்:
மேக்ரோ என்பவை கணிணியில் பயன்பாட்டு மென்பொருள்கள் தங்களை நுணுக்கமாகப் பயன் படுத்திக் கொள்ள பயன்பாட்டாளர்களுக்கு கொடுத்த வசதி ஆகும் .மைக்ரோசாப்டின் ஆபிஸில் உள்ள விசுவல்பேசிக்பார்அப்ளிகேசன் மூலம் எழுதப்படும் மேக்ரோ மூலம் மைக்ரோசாப்டின் ஆபிஸில் பல வேலைகளை தானாக நாம் செய்ய வைக்க முடியும் . இந்த வசதியைத் தான் வைரஸ் எழுதுபவர்கள் தவறாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். இந்த மாதிரி மேக்ரோ மூலம் எழுதப்படும் வைரஸ்கள் மேக்ரோ வைரஸ்கள் என அழைக்கப் படுகின்றன. மேக்ரோ வைரஸ் உள்ள பைலை நாம் இயக்கினால் மட்டுமே நம் கணிணியை இவை தாக்கும் .
அதனால் தெரியாதவர்களிடமிருந்து வரும் பைலை இயக்காதீர்கள். இவ்வகை வைரஸ் உள்ள பைல்கள் கவர்ச்சிகரமான வாசகங்களுடனே வரும் . மயங்கி தட்டி விட்டால் அவ்வளவுதான்.. மிகப் புகழ் வாய்ந்த மெலிஸா வைரஸ் எழுதப் பட்ட 3 நாளிலேயே 100,000 கணிணிகளை தாக்கியுள்ளது.

நினைவகத்தில் தங்கும் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் முதலில் இயக்கப் பட்டவுடன் நம் கணிணியின் நினைவகத்தில் தங்கிக் கொள்ளும். பின்னர் இயக்கப் படும் ஒவ்வொரு புராகிராமிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பைல்சிஸ்டம் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் இயக்கப் படும் ஒவ்வொரு பைலிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பூட் வைரஸ்:
கணிணி இயங்க அத்தியாவசமான மென்பொருள்கள் எல்லாம் கணிணியில் டிஸ்கில் பூட் செக்டார் எனப்படும் பகுதியில் இருக்கும் . இவ்வகை வைரஸ்கள் பூட் செக்டரை பாதிப்பதன் மூலம் ஒவ்வொரு கணிணி இயங்கும் போதும் ( அல்லது பிளாப்பியை அணுகும் போதும்) செயல்படத் துவங்கும் வண்ணம் தம்மை நிறுவிக் கொள்ளும் .

மல்ட்டி பார்டைட்:
இவை மிகச் சாமார்த்தியமாக வடிவமைக்கப்பட்ட வைரஸ்கள். மேலே சொன்ன மூன்று வழிகளிலும் செயல்படக் கூடியவை.

வார்ம் :
மெயிலில் உள்ள அட்டாச்மெண்ட் வசதி மூலம் பரவக்கூடிய வைரஸ்கள் வார்ம். இவை அந்த அட்டாச்மெண்ட் உள்ள மெயிலை யாராவது படிக்கையில் அவரது கணிணியை தாக்கி விடும். பிறகு அவரது சிஸ்டத்தில் உள்ள அட்ரஸ்களைத் திருடி அவர்களுக்கும் அந்த மெயிலை அனுப்பிவிடும் . பின்பு இதேச் சுற்று துவங்கும்.

டிரோஜன் குதிரை:
அந்த கால கிரேக்க இதிகாசத்தில் ஒரு சம்பவம் வரும். ஒரு அழகியை (ஹெலன்) டிராய் தீவுக்காரர்கள் கடத்தி விட டிராய்க்கும் கிரீஸுக்கும் சண்டை மூண்டு விடும் . பல வருடங்கள் ஆகியும் கிரேக்கர்களால் டிராயை தகர்க்க முடியவில்லை. பின் ஒரு சதி செய்தனர். ஒரு பெரிய மரக்குதிரையை செய்து உள்ளே ஒருசில வீரரை வைத்து அதை டிராயின் கோட்டை வாயிலில் விட்டுவிட்டு கிரேக்க வீரர்க்ள் மறைந்து விட்டனர் . மறுநாள் அதைப் பார்த்த டிராய் நகரத்தவர் அந்தக் குதிரையை நகருக்கு உள்ளே தள்ளி செல்ல , இரவில் மறைந்திருந்தவர் வெளியே வந்து மற்றவர்க்கு கதவைத் திறந்து விட கிரேக்கம் வென்றதாக வரும். இது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் டிரோஜன் வைரஸ் இவை போலவேச் செயல்படும் . நல்ல மென்பொருள் போல் ஒன்றை வழங்குவதாக நடித்து ஒரு மென்பொருள் நமக்கு கிடைக்கும். அதை இயக்கினால் அதிலிருந்து டிரோஜன் கிளம்பும். அந்த நல்ல மென்பொருளாக நடிப்பதையே டிராப்பர் என்று அழைக்கிறார்கள் .

வைரஸ் ஹௌக்ஸ்:
நடிப்பு திலகங்கள். இந்த மாதிரியான மெயில்கள் சில பைல்களின் பெயரைக் குறிப்பிட்டு அவை எல்லாம் வைரஸ் எனவும் , அவற்றை நீக்கும் படியும், மெயிலை பலருக்கும் அனுப்பும்படியும் வரும் . பின்னர் பார்த்தால் நாம் நீக்கிய பைல் எல்லாம் கணிணிக்கு தேவையான பைல்கள் எனத் தெரிய வரும் .
எப்படி ஹௌக்ஸ் அடையாளம் காண்பது? - இம்மாதிரி மெயில்கள் வந்தால் உடனே கூகுளில் சர்ச் இடுங்கள், http://www.f-secure.com/virus-info/hoax/ பாருங்கள்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

-தொடரும்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!