Saturday, February 03, 2007

வலைவலம்

Mac வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
windows update செய்தே நோவார்.



முதற்கண் நன்றி நவில வேண்டும்.

இந்த பதிவை உயிருடன் வைத்திருக்கும் பரதேசியாரே! உமக்கு ஆயிரம் பொற்... கும்பிடு...

நம் வலைப்பதிவு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். சமீபத்தில் பரதேசியாரின் லொள்ளையும், கடுப்ஸையும் தமிழ்ப்பதிவுலக பிரபலங்களான துளசியும் பெங்களூர் செந்தழல் ரவியும் படித்து ரசித்திருக்கிறார்கள். துளசியக்கா நியூசிலாந்தில் தமிழ் வளர்க்கிறார்கள். அவரின் எவரிடே மனிதர்கள் தொடர் படிக்க வேண்டிய ஒன்று. செந்தழல் ரவி சென்ற ஆண்டு நட்சத்திர வலைப்பதிவர் பரிசு வாங்கியவர். சென்ற மாதத்தில் நம் பதிவுக்கு இங்கிருந்தெல்லாம் வருகை தந்திருக்கிறார்கள். வலது கோடியில் துளசி எட்டிப் பார்ப்பது தெரிகிறதா?




அதெல்லாம் சரி - நம் ஊரில் யார் படிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

இதோ வந்து விட்டது தமிழில் யாஹூ. சினிமா, ஆரோக்கியம், ஆன்மீகம் என்று விகடன் கல்கி பாணியில் போகிறது. இதை பார்த்தவுடன், எம்பெருமான் கூகுளாண்டவர் ஞாபகம் வந்தது. அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தால், இந்தியப் பக்கத்தோடு நிற்கிறார். தமிழில் தேடலாம் இந்த தளத்தில். பழக்க தோஷத்தில் தமிழில் தேடினால், கிடைத்தது நானே! ஹி... ஹி...

அதெல்லாம் கிடக்கட்டும். இந்த கலாட்டாவைப் பாருங்கள். பண்ருட்டிக்காரர்களுக்கு கல்யாணத்தில் என்ன குறை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காலை டிபனுக்கு இட்லி இல்லைபென்றால் பெண்வீட்டுக்காரர்களாய் இருந்தாலும் பொங்கியெழுந்து விடுவோம். கடலூர்காரர்களுக்கு எச்சரிக்கை.

சென்னையில் புத்தகக் கண்காட்சி மிக கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போது நிறைய ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. நல்ல கும்பலும் வருகிறது. மக்கள் புத்தகங்களும் நிறைய வாங்குகிறார்கள். வாஸ்து, ஆன்மீகம் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்பதாக ஒரு நண்பனின் தகப்பனார் சொன்னார். துளசி கோபால் ரொம்பவே பாராட்டியிருக்கிறார். தமிழ் இனி அழியாது என்று. அவருக்கு அந்த சந்தேகம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. இத்தனை பேர் தமிழில் எழுதும்போது, நியூஸிலாந்தில் தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, அது ஏன் அழிகிறது? கிழக்குப் பதிப்பகத்தை நடத்தும் பத்ரியின் பதிவிலும் ஒவ்வொரு நாளைப்பற்றியும் படிக்கலாம். நான் கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை நெய்வேலியில் இந்த புத்தகக் காட்சி போயிருக்கிறேன். புத்தகக் கடைகளுடன் மின்சாரத்தில் இயங்கும் பலவிதமா ராட்டினங்கள்(rides) எல்லாம் சேர்ந்து ஒரே அமர்க்களம்.ஒரு ராட்டினத்தில் உட்கார்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால் இன்னும் சுற்றிக் கொண்டிருந்தது. எங்க வீட்டு கரண்டா, உங்க வீட்டு கரண்டா?

சமீபத்தில் ஐரோப்பாவில் விஞ்ஞானிகள் கூடி உலகம் வெப்பமடைவதற்கு மனிதன்தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம். அதற்கு டைனோசார்கள்தான் காரணம் என்று இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். டப்யு இது குறித்து என்ன நினைக்கிறார் என்று யாராவது கேட்டுச் சொன்னால் நல்லது.

'டூர் டி பிரான்ஸை' இவ்வளவு நாள் தன் ஹேண்டில்பாரில் வைத்திருந்த லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் புற்றுநோய் வந்து பிழைத்தவர் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இப்போது புற்றுநோயை குணமாக்கும் ஆராய்ச்சிக்கு வாஷிங்டனில் முக்கியத்துவம் கொடுப்பதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் லேன்ஸ். என்ன செய்யப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை(எனக்கு). ஆனால் நம்மால் முடிந்த, பெயர் பதிவை செய்வோம். லிவ் ஸ்ட்ராங். Go Lance!(அதை தமிழில் எழுதினால் ஏனோ நன்றாக இல்லை)

விக்கி பசங்களின் பதிவும் அறிவை வளர்ப்பதில் அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டியது. நான் அந்த பக்கம் எல்லாம் போவதில்லை. நயன்தாரா சிம்பு விவகாரம் என்னாயிற்று என்று தெரிந்தாலே போதும். ஜென்ம சாபல்யம் அடைவேன்.

இந்தியாவில் காதலர்(வேலைண்டின்) தினம் இப்போதெல்லாம் கோலாகலமாக நடக்கிறது. இந்த சிவசேனையும் தமிழர் மரபுக்காவலர்களும் இந்த ஆண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். எனக்கு கல்லூரி முடிக்கும் தறுவாயில்தான் அப்படி ஒரு தினம் இருக்கிறது என்று லேசாக தெரிந்தது. முதலில் யார் அந்த வேலண்ணன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பென்ஸர் பிளாஸாவில் நடந்த போட்டிகளைப் பற்றி விகடனில் படித்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன். இப்படியெல்லாம் ஏன் நமக்கு நடக்கவில்லை என்று!

சரி இதெல்லாம் போகட்டும். பதினேழாம் தேதி மதியம் மூன்று மணிக்கு ஹிந்து மையத்துக்கு பொங்கல் விழா காண வந்து விடுங்கள். சென்ற முறை ஜால்ரா சரியாக அடிக்காததால், இந்த முறை அதற்குக்கூட யாரும் என்னைக் கூப்பிடவில்லை.

காணவில்லை: பித்தன், முரளி, ரமேஷ், எதிரொலி, தருமி, அஜாதசத்ரு, கவிநயா. கண்டுபிடித்து இப்பதிவுக்கு அழைத்து வருவோர்க்கு ஒரு பதிவு இனாம். அப்படியே இந்த இடது பக்கத்தில் அணிவகுக்கும் அமைதிப் படையினருக்கும் ஒரு சலாம். ஏனிந்த மௌனம் ஏனோ, ஏழை எமக்கருள?

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!