Wednesday, August 05, 2015

கடிலக்கரையினிலே... ரெண்டாவது ஈ

குள்ளக் குள்ளனே
குண்டு வயிறனே
வெள்ளிக் கொம்பனே
விநாயக மூர்த்தியே!

முத்தையர் பள்ளியில் 'ரெண்டாவது ஈ' வாத்தியார் சொல்லிக் கொடுத்தது. இன்றும் எந்த  பிள்ளையார் சன்னிதியில் நின்றாலும் மனதுக்குள் சொல்லும் பாட்டு.  எங்காவது உனக்கு பிடித்த குருவை நினைத்துக் கொள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது தங்கராசு வாத்தியார்தான். முத்தையர் பள்ளியில் ஆசிரியர்களை பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ரெண்டாவது ஈ வாத்தியார், மூனாவது சி டீச்சர், நாலாவது டீ வாத்தியார் இப்படித்தான். இங்கே கிண்டர்கார்டனில் பிள்ளைகள் மிஸஸ் வாட்ஸன் என்று அழைப்பதை பார்த்து அதிர்ந்தவன் நான். இன்றும் அவசரத்தில் பெயர் மறந்து 'உங்க கணக்கு சார்' என்று என் மனைவி சொல்லும்போது பிள்ளைகள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். 

நான் படிக்கும்போது பண்ருட்டியில் சில ஆரம்பப் பள்ளிகள்தான் இருந்தன. ஊருக்கு கிழக்குப் பக்கம் இருப்பவர்கள் முத்தையர் பள்ளியில் - முத்தைஸ்கூல்! ஊருக்கு மேற்குப் பக்கம் இருப்பவர்கள் ஏ.வி. ஸ்கூலில். நானும், நம் வெங்கட் செட்டியார் மாமனாரும் படித்தது முத்தைஸ்கூலில். ஒரே சமயத்தில் அல்ல. கான்வென்டில் படிக்க ஆசைப்படுபவர்கள்  பாலவிஹார் ஆங்கிலப் பள்ளியில் அல்லது மஹேஸ்வரி நர்சரியில் காசு கட்டிப் படிப்பார்கள். இன்னும் சில மிகவும் சின்ன துவக்கப் பள்ளிகள் இருந்தன. மணிவாத்தியார் ஸ்கூல், நகராட்சிப் பள்ளி... நானும் மஹேஸ்வரியில்தான் ஆரம்பித்தேன். அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடையாது, அங்கே படித்தால் ஹைஸ்கூல் போக முடியாது என்று கிளம்பிய புரளியால் அப்பா என்னை முத்தைஸ்கூலுக்கு மாற்றி விட்டார். கான்வெண்டில் தொடர்ந்திருந்தால் இந்நேரத்துக்கு முதல்வர் ஆகியிருக்கலாம். விதி!

முத்தையர் பள்ளியில் ஒன்னாங்கிளாஸில் இருந்து எட்டாவது வரை உண்டு. ஆனால்  வெகுசிலர்தான் எட்டாவது வரை முத்தையரிலும் ஏவி ஸ்கூலிலும் தொடர்வார்கள். மற்றவர்கள் ஹைஸ்கூலுக்கு மாறி விடுவார்கள். 

'ரெண்டாவது ஈ'க்கு வருவோம். ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு தமிழ்ப் பள்ளிக்கு வரும்போது நிறைய மாற்றங்கள்.  தரையில் உட்காருவது,  இன்னமும் சிலேட்டில் எழுதுவது, மதிய உணவு மற்ற வகுப்பு, தெருத் தோழர்களோடு கும்பல் கும்பலாக மாந்தோப்பில் உட்கார்ந்து சாப்பிடுவது, மாந்தோப்பை கண்காணிக்கும் 'சோவை'க்கு தெரியாமல் மாங்காய் அடிப்பது, லேட்டாய் ப்ரேயருக்கு வந்தால் டிரில் மாஸ்டரிடம் அடி வாங்குவது,  மதிய உணவுத் திட்டத்தில்(பெருந்தலைவருடைய திட்டம், புரட்சித் தலைவருடையது அல்ல) சாப்பிட்டுவிட்டு சுத்தம் செய்யாமல் போயிருப்பார்கள் - நம்முடைய இடத்தில் அந்த கோதுமை சாதப்பருக்கைகளை சுத்தம் செய்வது, கரியும் கோவையிலையும் கலந்து போர்டுக்கு கரி பூசுவது, மணியடித்தவுடன் பழி வாங்க வெளியே காத்திருக்கும் மாணவ மணிகளிடம் இருந்து தப்பிப்பது என்று பலவிதம்.  ரெண்டாவதில்தான் வீரட்டன் எனக்கு அறிமுகமானான். அவன் கூட நான் ரெண்டாவது மட்டும்தான் படித்தேன். ஆனாலும் தொடர்ந்து பழக்கதில் இருந்தோம். இன்றும் பண்ருட்டி போனால் அவசியம் சந்திக்கும் ஒரு சிலரில் வீரட்டனும் ஒருவன்.  பண்ருட்டி பக்கத்தில் இருக்கும் திருவதிகை பாடல் பெற்ற ஸ்தலம் அதைப் பற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன். அந்தக் கோவிலில் இருப்பது வீரட்டேஸ்வரர். அந்தப் பெயர்தான் வீரட்டனின் முழுப்பெயர். வீரட்டேஸ்வரன். 

வீரட்டன் தான் எனக்கு முதல் நண்பன். ஆங்கிலப் பள்ளியில் இருந்து வந்ததால் மற்ற மாணவர்களுக்கு ஏய்க்க நாந்தான் கிடைத்தேன். அதுவும் ஆறுமுக ஆசாரிக்கு என் மீது 'பாசம்' கொஞ்சம் கூடவே ஜாஸ்தி. திட்டுவது, அடி,உதை கிள்ளு, கொட்டு என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தான். வீரட்டன் நிறைய தடுக்கப் பார்ப்பான். ஒன்றும் நடக்காது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து 'அஞ்சாவது ஏ'யில் இருக்கும் என் அண்ணனிடம் சொல்லி ஒரு நாள் அழைத்து வந்தேன். வீரமாக வந்த அண்ணன் ஆறுமுக ஆசாரியைப் பார்த்து விட்டு சும்மா போய் விட்டான். எனக்கு ஒரே கடுப்பு. வீட்டுக்கு வந்து சண்டை போட்டேன் என்னடா பயந்துட்டியா என்று. அண்ணன் சொன்னான் அந்தப் பையன் தாயில்லாப் பையன், அடிக்க மனசு வரலை. அண்ணன் அடிக்காததாலோ ஏனோ அதிலிருந்து ஆறுமுக ஆசாரி நண்பனான். வகுப்பு லீடர் மாபெரும் ரவுடி சுப்பிரமணிக்கும் ஏனோ என் மீது பாசம். அந்தக் காலத்தில் சினிமா பட பிலிம்கள் - நெகட்டிவ்கள் தான் கலெக்டர் அய்ட்டம். ஒற்றை ஒற்றையாக இருக்கும். அபூர்வமாக சிலர் சுருள் சுருளாக வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு எம்ஜியார் பட பிலிம்கள்தான் பிடிக்கும். நான் சிவாஜி பாசறை. சுப்பிரமணி சிவாஜி பிலிம்களை அழிக்காமல் எனக்கு அவ்வப்போது கொடுப்பான். எப்போதாவது சண்டை போட்டால் என் கண் எதிரே சிவாஜி பிலிம் கிழித்துப் போடுவான். என்ன தண்டனைடா சாமி! 

தங்கராசு வாத்தியார் ரொம்ப அமைதியானவர். கொஞ்சம் குண்டாக இருப்பார். அதனால் சில பெரிய வகுப்பு மாணவர்கள் இட்லிப்பானை என்பார்கள். ஆனால் என் வகுப்பில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். எப்போதாவதுதான் அடிப்பார். லீவ் எடுக்கும்போது அப்பா ஆங்கிலத்தில் லெட்டர் எழுதிக் கொடுப்பார். அதை தங்கராசு வாத்தியார் நிறைய நேரம் ஏனோ படித்துக் கொண்டேயிருப்பார். மற்ற மாணவர்கள் சாருக்கு இங்கிலீஷ் தெரியாது என்று கிசுகிசுப்பார்கள்.  தெரியாமலில்லை. எதுக்குடா பெங்களூர் போற என்றோ யாருக்கு கல்யாணம் என்றோ படித்துத் தெரிந்துகொண்டுதான் கேட்பார்.  ஏன் அவ்வளவு நேரம் படிப்பார் என்பது இதுவரை புரியாத புதிர். 

2 comments:

 1. நாகு, நிறைய எழுத வந்து சட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு இந்தப் பதிவு. ஏன்?

  நல்லாத்தானே போயிட்டிருந்துது.

  முரளி.

  ReplyDelete
 2. அன்புள்ள நாகு

  உங்களுடைய கெடிலக்க்ரையினிலெ என்ற தொடர் மிகச் சிறப்பு..சிறு வயது

  அனுபவங்களை அசை போடுவது என்பது ஒரு சுகமான அனுபவம் .அதை புரிந்து கொள்ள

  ஓரளவு அந்த பகுதியின் கலாச்சார ம் தெரிந்திருப்பது அவசியம் .தலைமுறைக்கு தலைமுறை அனுபவமும் .ரசனையும் மாறுபடுகிறது அந்த ரசனை தெரிந்து எழுதுவதில்தான் வெற்றி இருக்கிறது
  நீங்கள் அமெரிக்க வாசகர்களுக்கு எழுதுவதையும் மனதில் கொண்டு எழுதுவது கூ டுதலான
  சிறப்பு. .தாமதமாக எழுதுவதற்கு காரணம் என்னுடைய கம்புட்டர் செய்த கோளாறு .
  நான் என்னுடைய கடந்தகாலம் பற்றி எழுதாதற்கு காரணம் அது மிகப் பழமையானது என்பதுதான்
  பல முறை முயற்சி செய்து நிறுத்திவிட்டேன் .எப்படியாவது அதிகமான நண்பர்கள் பங்கெடுக்க
  முயற்சி செய்யுங்கள்.வேறு பிளாக்கிலிருந்து எடுத்து போட்டாலும் சரிதான் .  மு.கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!