- சென்னை!
எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது சென்னை! செல்போன்(மன்னிக்கவும் - அலைபேசி) எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. வீட்டு வேலைக்காரி கையில், கோயிலில் பெருக்கும் ஆயா கையில், திருவண்ணாமலையில் தாலி கட்டி முடித்தவுடன் மணமகன் கையில்... இவ்வளவு நாள் ஒரு போன் இணைப்புக்கே அல்லாடியவர்கள் ஒரு கொலைவெறியுடன் தழுவியிருக்கும் சாதனம் அலைபேசி. அப்பாவின் முகவரிப் புத்தகத்தில் முகவரிகள் எல்லாம் போய் ஒரே போன் நம்பர்களாகத்தான் இருக்கின்றன. போனில் இதுவரை பதில் மட்டுமே பேசிவந்த அம்மா சித்தியின் செல்போன், வீட்டு போன் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே போடுவதை பார்த்து அசந்து விட்டேன்.
செல்போனிலேயே வினாடிகளில் உங்கள் அக்கவுண்டை டாப்- அப் செய்து விடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுக்காதீர்கள். குறுஞ்செய்தி வந்து குவிந்து விடும். அண்ணன் மகன் தினத்துக்கு நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு என்ன செய்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று இன்னொரு அண்ணன் மகள் புகார் செய்தாள். இன்னொரு அண்ணன் மகன் இவன் செய்திகளுக்கு பயந்து எண்ணையே மாற்றிவிட்டான். இன்னொரு அண்ணன் மகன் இன்னும் செல்போன் பாவிக்கும் வயதுக்கு வரவில்லை. அவன் என்ன செய்யப் போகிறானோ? என்னிடம் முறைத்துக் கொள்பவர்களின் அலைபேசி எண்களை அவனுக்கு கொடுப்பதாக உத்தேசம்.
அண்ணன் சுஜாதா அஞ்சலி வந்த பத்திரிக்கைகளை சேர்த்து வைத்திருந்தான். சதங்காவின் கவனத்திற்கு - ராமகிருஷ்ணன் மூன்று பக்கத்துக்கு மேல் அஞ்சலி எழுதியிருக்கிறார்.
இவ்வளவு நாள் அமெரிக்காவில் இருந்து வந்து பொருட்களின் விலையைப் பார்த்து 'ஆ ஸம்' என்று வாங்கி குவித்தவர்கள், இப்போது நாற்பதால் வகுத்து பார்த்துவிட்டு அம்மாடி என்று ஓடுகிறார்கள். சரவணா, நெல்லி, சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களை விட பணியாளர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எது எதற்கோ ஆடி தள்ளுபடி. ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுத் தம்பதிகள் SMS செய்துகொள்ள ஆடி அட்டகாச தள்ளுபடி!
திருமண மேடையில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள், மணமக்கள், புரோகிதர் தவிர மற்ற அனைவரும் செருப்பணிந்து இருக்கிறார்கள்.
சென்ற மறுதினம் மதிமுகவின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது சேலையூரில். ஓபாமாவுடன் வைகோவின் படம் பெரிய பேனரில்.
ஒரு பேச்சில்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஓபாமாவை சந்தித்து கை குலுக்கி, கட்டித் தழுவி முத்தமிட்ட முதல் தமிழன் என்று எங்கோ போய்விட்டது பேச்சு. ஓபாமாவும் வைகோவும் கேட்டிருந்தால் நெளிந்திருப்பார்கள்... குடியரசுக் கட்சியினருக்கு இந்த பேச்சு போயிருந்தால் வரும் தேர்தலில் ஓபாமாவுக்கு எதிராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. என்னை அசர வைத்த இன்னொரு பேனர் பாண்டிச்சேரியில்.
எந்த பேனரிலும் இவர் பெயரே கிடையாது. புதுவையின் காமராஜர் என்று ஆரம்பித்து ஒரே அடைமொழிதான். அவ்வளவு பிரபலமா என்று வியந்தேன். புதுவை முழுவதும் இவர் பிறந்தநாள் பேனர்தான். சில பேனர்களில் இவர் அமர்ந்திருக்க பக்கத்தில் சிங்கம், புலியெல்லாம். நிறைய பேனர்களில் அந்த வட்டார கட்சி பிரமுகர்கள் அனைவர் முகமும் போட்டு ஒரே அட்டகாசம். எந்த காங்கிரஸ் முதல்வர் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறார்? அதனால்தான் போலிருக்கிறது காங்கிரஸின் தேசிய விளையாட்டான உட்கட்சி பூசல் அதிகமாகி இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நீங்கள் இதை படிக்கும்போது முதல்வராக இருக்கிறாரா என்று பார்ப்போம்.
எல்லா கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங்தான். ஒரு மளிகை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு பில்லைப் பார்த்தால் அதில் ஒரு வஸ்து: Burpy. என் மகன் சிரி சிரி என்று சிரித்தான். அது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? பெட்ரோல் பங்குகள், பண்ருட்டி மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ப்ரஷ் என எங்கிலும் பெண்கள்தான். இந்திய ராணுவத்திலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் பெண் தேடி அல்லாடுகிறார்கள்.
எஃப் எம் ரேடியோ தமிழ் கலக்குகிறது. அதாவது நம் பித்தன் என் பேச்சை சொன்னமாதிரி, ஆங்கிலத்தில் கொஞ்சூண்டே கொஞ்சூண்டு தமிழ் கலந்து பேசுகிறார்கள். சில DJகள் குரலைக் கேட்டால் நம்ப ஊர் லாவண்யா ராம்கி போலவும், பார்கவி கணேஷ் மாதிரியும் இருக்கிறது. ரிச்மண்டில் எஃப் எம் ரேடியோ ஆரம்பிக்கவிருக்கிறவர்கள் கவனிக்கவும். இதைவிட மோசம் மெகாசீரியல் தமிழ். பார்ப்பவர்கள் அனைவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல மெதுவாகப் பேசுகிறார்கள். பிற்காலத்தில் ஒரு ஆராய்ச்சி பண்ணி இதனால் தமிழர்களின் மூளை அவ்வளவு விரைவாக வேலை செய்யாது என்று டாக்டரேட் செய்யாமல் இருந்தால் சரி.
குசேலன் படப் போஸ்டரில் ஒன்றிலும் அந்தப் படத்தின் கதாநாயகனைக் காணமுடியவில்லை. பாவம் பசுபதி! அனைவர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது. நாம்தான் இங்கே நின்டென்டோ விற்கும் சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் கம்ப்யூட்டரில் gameboy advance, DS எமுலேடர் புரோகிராம் வைத்து அந்த விளையாட்டுகளை பைசா செலவு இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கிறது. சாலையில் சென்றால் எண்திசைகளிலிருந்தும் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்ட தும்பி மாதிரி கூட்டுக்கண்தான் வேண்டும். இன்னும் மேலே கீழே இருந்துதான் போக்குவரத்து வரவில்லை. அடுத்த முறை அதுவும் வந்துவிடும். நண்பனின் மாமனார் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். நான் எடுத்துக் கொண்டு போனால் அவர் காரை திரும்ப 'எடுத்துக் கொண்டுதான்' வரவேண்டும் என்று மறுத்துவிட்டேன். டாடாவின் நேனோ வராமலே இந்த கதி! நானோ வந்துவிட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் புஷ் நானோவை காரணமாக சொல்லுமளவுக்கு பிரச்னை வரப் போகிறது....
இனி உங்களுக்கு சில கேள்விகள்....
1. இது என்ன பூ?
2. இது எந்த மலைக்கோட்டை?
3. இந்த மலைக்கோட்டை?
4. இந்த மலை அடையாளம் தெரிகிறதா? - மேலே கோயிலோ கோட்டையோ கிடையாது....
5. கீழ்காணும் அமைப்பு என்ன? படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் சொல்லவும் :-)
பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோயில் சுவற்றில் இருக்கும் சித்திரம்.
சிலோத்துமத்தில் சிலோத்துமம் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முற்றினால் மருந்து கிடையாது. (கிளிக் செய்து பெரிய படத்தில் பார்க்கவும்).
6. கடைசி கேள்வி - எனக்கு எத்தனை அண்ணன்மார்? :-)
தொடரும்...
நாகு,
ReplyDeleteநல்லா தான் சுத்தறீர். சென்னையை பற்றி அருமையான கவரேஜ்.
எண்ணிடாமல் எண்ணிலடங்கா கேள்வி கேட்டால் என்னவென்று பதிலுறைப்பது ?!!!!
பாருமையா கீழே பதிலளிக்க எவ்வளவு பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது:
சரி, முதல் பூ - மாதுளை.
கடைசியில் இருக்கும் இரு மலைகள் - மீனம்பாக்கம் அருகில் இருக்கும், ஏதோ 'தி'ல ஸ்டார்ட் ஆகும் ?!
கடைசி படத்துக்கு முந்தின படம் - நவக்கிரகம்
கடைசி கேள்விக்கான பதில் - இன்னோரு அண்ணன் x 4
என்சாய் மாடி :)) :))))
முதலில் பதிலுரையுங்கள் :-)
ReplyDeleteமாதுளை சரி. அண்ணன்மார் சரி... நவக்கிரகம் பெரிசாக்காமல் சொன்னேன் என்று ஜல்லியடிக்க வேண்டாம். :-)
திருநீர்மலை இல்லை!
நாகு, என்ன ஊரில் ப்ளாக் எழுதும் அளவுக்கு ஃப்ரீயா. ரிச் மண்டில் இருந்த வரை பதிவே வெளியிடாமல் இப்போ சென்னை விஜயம் சென்னையிலிருந்தேவா, கலக்குங்க.....
ReplyDeleteபித்தன்.
பித்தரே - சத்தமா சொல்லாதீரய்யா. ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டு பதிவு நடக்குது :-)
ReplyDeleteஉரை உறைகிறது, நீங்க இப்ப வந்து ஸ்பெல் செக் பண்றத நிறுத்தியதால. :(
ReplyDelete//ஸ்டோர் ரூமில் ஒளிந்து கொண்டு பதிவு நடக்குது :-)//
ஓஹோ, இததான் ரூம் போட்டு யோசிக்கறதும்பாய்ங்களோ :))))