வேற்றுமை உருபு
என்பது பெயர்ச்சொல்லோடு ஒரு உருபு (suffix) சேர்ந்து வேறுபட்ட பொருளை (meaning), தொடர்பை உணர்த்துவது.
ஒரு எளிய noun எப்படி மாற்றமைடைந்து சொல்ல வந்த செய்தியை உணர்த்துகிறது என்ற கோணம் வியப்பூட்டும் ஒன்று.
இது தொடர்பாக உள்ளூர் உரையாடல் குழுவுக்கு எழுதிய கட்டுரை பின்வருவது.
------------------------------
ஒரு சிலரை உடனடியாக இடத்தை விட்டு ஓட வைக்கணும்னா சில தலைப்புகளை பேசத் துவங்கினால் போதும். அப்படியேஏஏஏ கழண்டுக்குவாங்க.
சில நேரங்களில் நல்ல, தேவையான தலைப்புகளே அப்படிப்பட்டவையாக அமைந்து விடுவது உண்டு. ஆனால் தேன் தடவி மாத்திரையை விழுங்க வைக்கவும் முடியும்.
எங்க தமிழ் ஆசிரியர் அதில் கில்லி. மற்ற வகுப்பு மாணவர்களும் பாடம் கசந்தால் எங்க தமிழ் ஆசிரியரை அணுகுவார்கள். எங்கள் ஆசிரியரால் தேன் சுவையோடு எளிதில் புரியவைக்க முடியும். புரிஞ்சதும் ஆசிரியருக்கு வணக்கம் போட்டுட்டு போய்டுவாங்க. எங்க வாத்தியாரும் இதுல என்னடா பெருமைன்னு "ஆசிரியரின் கடன் புரிய வைத்துக் கிடப்பதே"ன்னு போய்கிட்டே இருப்பார். ஆனா இந்த குறிப்பிட்ட ஆசிரியரது திறன் அவ்வளவு எளிதில் அடைய முடிவது அல்ல. பள்ளி மாணவர்கள் என்றில்லை, யாருக்கு புரிவதில் சிக்கல் என்றாலும் இந்த ஆசிரியார்கிட்ட வருவதைத் தான் விரும்புவார்கள். அவ்ளோ நல்லவரு. திறமையானவரு.
இருக்கட்டும்.
இப்போ, மேலே உள்ள பத்தியில் "ஆசிரியர்" என்ற சொல்லை மட்டும் கவனியுங்கள். 7
முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது தற்செயல் நிகழ்வு இல்லை. ஏன்,
எதற்காக அப்படி-ன்னு பார்ப்போம்.
1. ஆசிரியர்
2. ஆசிரியரை (ஐ)
3. ஆசிரியரால் (ஆல்)
4. ஆசிரியர்க்கு (கு)
5. ஆசிரியரின் (இன்)
6. ஆசிரியரது (அது)
7. ஆசிரியார்கிட்ட (கிட்ட)
ஆசிரியர் என்ற பெயருடன் ஒரு suffix சேர்ந்து அந்தப் பெயருடைய பொருளில் (meaningல்) வேறுபாடு உண்டாக்குது இல்லையா?
அதாவது, வெறும் "ஆசிரியர்" என்ற பெயருக்கான பொருளை வேறுபடுத்திக் காட்டுகிறது இந்த suffixகள் எல்லாம்.
suffix என்றால் தமிழில் "உருபு".
எந்தப் பெயருக்கும் உள்ள பொருளை வேற்றுமைப் படுத்திக்காட்டும் உருபு = வேற்றுமை உருபு.
அவ்வளவே தான்.
மொத்தம் 7 வே.உகள்.
எதைப் பேசுகிறோமோ அந்தப் பெயரே முதல் வேற்றுமை உருபு.
மீதி 6: ஐ, ஆல், கு, இன், அது, கண்*.
மகிழ்ச்சி.
இவ்வளவுதான், இப்போ நமக்கு வேற்றுமை உருபுகள் என்றால் என்னன்னு தெரிஞ்சு போச்சு.
குறிப்பு:
* இப்போ நாம "கண்" அப்படிங்கறதை "கிட்ட" என்று சொல்றோம். "அவர் கண்
கேட்டறிந்தேன்" அப்படின்னு சொன்னா, ஏங்க, உங்க கண்ல பார்வைக் கோளாறா-ன்ற
கேள்வி வரலாம். அதனால, அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்-ன்னு சொல்றோம்
போல. ஆனால் உண்மையிலேயே கண் என்ற வேற்றுமை உருபு தற்காலத் தமிழில் "கிட்ட" என்று பயன்படுத்தப்படுகிறது. கண்ணுக்கு கிட்டப்பார்வைன்னு நினைவு வைச்சுக்கலாம். :-)
எங்க வாத்தியார்கிட்ட இருந்து தேன் பாட்டிலை வாங்கிக்க நினைத்தேன். சில தேன் மிட்டாய்கள் கிடைத்தால் கூட போதும். :)
-----------------------
எப்போதோ சில நண்பர்களுக்காக எழுதிய சிறு கட்டுரை. நம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு விளக்க பெற்றோர் வசதிக்காக இங்கே மறுபதிப்பு.