Monday, June 29, 2026

கிரந்த எழுத்துக்களின் தேவை

உலகம் எங்கும் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறோம், பொது இணைப்பாக மொழியுணர்வு கொண்டு இருக்கிறோம். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அதைப் பற்றி பேசி மகிழ்கிறோம். 

நல்லது.

இப்படியாக மனிதரை இணைக்கும் அட்டகாசமான கருவியான தமிழ் எப்படி இவ்வளவு காலம் பிழைத்துக் கிடக்கிறது? பேசும் மனிதர்கள் தோராயமாக 80 ஆண்டுகள் மட்டுமே வாழ்கிறோம். ஆனால், சங்கிலித்தொடராக அடுத்தடுத்த தலைமுறைக்கு தமிழைச் சொல்லிக் கொடுத்து பயன்படுத்தவும் ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கிறோமே எப்படிச் சாத்தியப்பட்டது, படுகிறது?

எத்துணை புறக்காரணிகள் இருந்தாலும் அதை எல்லாம் விட தமிழின் அடிப்படைச் சட்டகம் (Foundational framework) கொண்டிருக்கும் உறுதியே காரணம்.

 எவ்வளவு வட்டார வழக்குகள், பிறமொழியில் இருந்து வந்து இயல்பாகக் கலக்கும் சொற்கள், சொல்லாடல்கள், சட்டம் சமயம் போன்றவை தொடுக்கும் அழுத்தங்கள். இத்தனையும் தாண்டி அதன் அடிப்படை மாறாது இருக்க நாம் ஏற்று, பழகிக் கொண்ட இலக்கண முறைமையே தமிழைக் காத்து வருகிறது. 

குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித்தரும் போது ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வழக்கமான ஒரு கேள்வி, "ஏன் தமிழில் பேசுவதும் எழுதுவதும் வெவ்வேறு மாதிரி இருக்கு?" என்பது. மாணவர்களிடம் பதில்-கேள்விகள் கேட்டு அவர்களே அவர்களின் கேள்விக்கான விடையைச் சொல்ல வைத்து புரியவைப்பார்கள் தமிழாசிரியர்கள்.

மாணவர்களின் கேள்விக்கான எளிய விடை: தரப்படுத்துதல் (Standardization).

எப்படி வேணா பேசிக் கொள்ளலாம், எழுதும்போது இலக்கண முறையில் எழுதுதல் வேண்டும் - ஏனெனில் பேசும் போது கேட்பவர் எதிரில் இருக்கலாம், புரியாவிட்டால் மீண்டும் புரியும்படி விளக்கமாகச் சொல்லும் வாய்ப்பு உண்டு, எழுதியதைப் படிப்பவர் எங்கும் இருக்கலாம் பலகாலம் தாண்டியும் படிக்கலாம் அவருக்கும் புரிய வேண்டும் எனில் தரப்படுத்தப்பட்ட வடிவில் (standardized formatல்) எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அச்சு, செய்தி வாசிப்பு போன்றவை வருவது தரப்படுத்தப்பட்ட வடிவில்.

தமிழ் பிழைத்துக் கிடப்பது அதன் இலக்கணத்தால். எவ்வளவு வளைத்தாலும் ஒடிந்து போகாமல் காப்பது அதன் தரப்படுத்தலால்.

இப்போது தலைப்புக்கு வருவோம்.

தமிழ் எழுத்துக்கள் 30.
உயிர் 12, மெய் 18 - மிதம் உள்ளவை அனைத்தும் இதன் சேர்க்கை. 

முதல் பத்தியில் சொன்னது போல எல்லா நாடுகளிலும் வாழ்கிறோம், தமிழ் பேசுகிறோம். அப்படியெனில் அந்தந்த வட்டார மொழிகளின் "மணம்" தமிழிலும் கமழும், - அது மிக இயல்பானது. அம்மொழிகளின் சொற்கள், சொல்லாடல்களை தமிழாக்கி தமிழில் பேசும் போது பயன்படுத்துகிறோம், தவறில்லை. வினைச் சொற்களில் கைவைப்பதே இல்லை. (லவ் பண்ணு, லைக் பண்ணு போன்ற சலம்பல்கள் அவ்வப்போது வரும், தானாக மறைந்தும் போகும்)

பெயர்ச் சொற்களில்தான் குழம்பிப் போகிறோம். 

தமிழ்நாட்டின் இந்நாள் முந்நாள் முதலமைச்சர் பெயர்களை எப்படி எழுதுவது? January, August போன்றவை, Paris, Texas, Washington, Thomas Jefferson, தொடங்கி Nagesh, Suresh வரை எப்படி தமிழின் 30 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி எழுதுவது? சனவரி, பாரீசு, சுரேசு என்று எழுதினால் படிப்பவர் சிரிக்கமாட்டாரா?

சிரிக்கட்டும். பின் சிந்திக்கக்கூடும்.

உலகின் எல்லா மொழிகளின் ஓசைக்கும் தனித்தனி எழுத்து தமிழுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு அறிவார்ந்தது?

பிரஞ்சு மொழியில் John என்பதை எப்படி உச்சரிப்பார்கள் என்று தேடிப்பாருங்கள். அந்த ஒலிக்கொரு தனி எழுத்து ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளச் சொல்லாமா? சீன அரேபிய மொழிகளின் ஒலிகளுக்கும் தமிழில் தனித்தனி எழுத்துக்கள் வைத்துக் கொள்ளலாமா? இந்தப் பட்டியலை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?
அப்புறம் தமிழ் என்னாகும்?

மற்ற மொழிகளை விடுவோம், நம்மில் கிட்டத்தட்ட எல்லோரும் கற்ற/ கற்கும் மொழி ஆங்கிலம். அதன் Z எழுத்தைத் தமிழில் எப்படி எழுதுகிறோம்? J என்பதற்கு என்ன "தமிழ் அல்லாத" வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறோமோ அதையே "மறுசுழற்சி" செய்து ஒப்புக் கொள்கிறோம் - எவ்விதச் மனச்சிக்கலும் இன்றி.

Zimbabwe, Jeep இரண்டையும் தமிழில் எழுதும் போது அவற்றின் முதல் எழுத்து ஒரே வரி வடிவம் - தமிழ் எழுத்து இல்லை என்றாலும் குழம்புவதில்லை. ஒரே எழுத்தை வெவ்வேறு ஒலிகளுக்கு மனத்தடை இன்றி பயன்படுத்துகிறோம்.

அதே மனம் மற்றவற்றுக்கும் ஏன் வர மறுக்கிறது?

சிம்பாவே, சீப் என்று எழுதினால் உலகம் அழிந்தா போய்விடும்?

எழுதும் போது சனவரி, அதை வாசிக்கும் போது January என்பதில் என்ன குழப்பம், கூச்சம்?

மனம் வருவதும் கூச்சம் வருவதும் அவரவர் கல்வி, கேள்வியறிவைப் பொறுத்தது. ஆனால் தமிழ் இலக்கண விதி, அப்படித்தான் தமிழ் எழுத்துக்களை மற்ற மொழி ஒலிகளுக்கு "மாற்றாக" கொண்டு எழுதச் சொல்கிறது. தொல்காப்பியர் எனும் கண்டிப்பான ஆசிரியர் தொடங்கி பணவந்தியார் எனும் மென்மையான சமணத் துறவியார் வரை வகுத்துக் தந்த வழிமுறை அதுதான். தமிழ்ப் பேட்டைக்குள் தமிழ் இலக்கணமே முதன்மை. அமெரிக்கச் சாலையில் எவரும் வலது புறம்தான் வண்டியோட்ட வேண்டும் - வேற்று நாட்டில் மன்னனாகவே இருந்தாலும்.

தொல்காப்பியர் காலத்தில் பரவலாக இச்சிக்கல் இல்லை. ஓரத்தில் குத்த வைத்து உட்காந்திருந்திருக்கும் போலிக்கிறது. அன்னார் ஒரு கோடி மட்டும் காண்பித்து எச்சரித்து விட்டு விட்டார்.

சில நூற்றாண்டுகளுக்குப் பின் பணவந்தி முனிவர் நன்னூல் என்ற தொல்காப்பியத்தின் வழிநூல் எழுதும் போது சமயம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு இச்சிக்கல் நடு வீட்டில் வந்து அமர்ந்து விட்டிருக்கிறது.

சமயக் காரணங்களுக்காக அந்தந்த சமயம் சார்ந்த பெயர்ச் சொற்களை எழுதும்போது இம்முறையைப் பயன்படுத்துங்கள் என்று ஒரு "நடுப்பாதை" போட்டுக் கொடுத்திருக்கிறார். தமிழ் எழுத்துக்களை மட்டும் கொண்டு எழுதும் முறை. பாம்பும் சாகாமல் கோலும் உடையாமல் இருக்க வழி சொல்லி இருக்கிறார். அந்தப்பட்டியலும் விளக்கமும் இன்னொரு கட்டுரையில்.

சுருக்கமாகச் சொன்னால் "தாமசும் சுரேசும் வாசிங்டனில் சந்தித்தனர்" என்று எழுதுவது சாலச்சரி. எழுதுபவர் சரியாக எழுதியிருக்கிறார். படிப்பவர் சரியாகப் படிப்பது அவரது கடமை, பொறுப்பு.

அதெல்லாம் முடியாது, இல்லியனாய்சு, சோசப்பு விசய் என்று எழுதினால் சிரிப்போம் என்பவர் யாரெனப் பார்த்தால், தமிழ் அறியாதாரோ, சரியாகப் படிக்க முடியாதவரோ அல்லர். போகட்டும்.
சரியாகத் தமிழை எழுதியதை எள்ளுவோர்க்கு ஒரு பெயரை யோசிக்க வேண்டாம். தமிழ் அறம் அவரையும் காக்கட்டும்.

வேற்று மொழிக் கதையைத் தமிழில் பெரும் கற்பனை சேர்த்து அட்டகாசமாக எழுதிய கம்பன் ஓரிடத்தில் கூட கிரந்தத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழை தம் சமய வழிபாட்டுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திய சீர்திருத்தக்காரர் இராமனுசர், கிரந்தம் இன்றியே கையெத்திட்டுருக்கிறார்.

கம்பனை விட இராமானுசரைவிட தமக்கு மேலாகத் தமிழ் தெரியும் என்று நினைத்துச் சிரிப்போர் சிரித்துக் கொள்ளட்டும். அச்சிரிப்பு தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத தம் சொந்த இயலாமையை நோக்கியது என்பது உறைக்கும் போது நின்றுபோகும்.

சிரிப்போரைத் திருத்த "அது கண்ணாடி சார்" என்று நாம் சொல்ல வேண்டியதில்லை

நம் கடன், நம் கைக்கு பல பல நூற்றாண்டுகள் கடந்தும் அழகிய வடிவோடு வந்து நம்மை இணைக்கும் தமிழுக்கு நல்லது செய்யாவிடினும் காயப்படுத்தாது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது. இயன்ற போது ஒரு துரும்மையாவது கிள்ளிப்போடுவது. அப்பணியைச் செய்து கிடப்போம்.

இக்கட்டுரையில் கிரந்தமோ வேற்று மொழிச் சொற்களைத் தமிழ் போலவோ கொண்டு எங்கும் எழுதவில்லை. அவற்றின் தேவை இல்லவே இல்லை, அவையின்றி எந்த இழப்பும் இல்லை என்பது கண்கூடு.

தமிழ் அப்படித்தான் - தனித்தே இனிக்கும், மணக்கும், மயக்கும், இயங்கும்!

வாழ்க தமிழ்.

தலைப்புக்கான விடை: 0

Friday, April 10, 2026

தமிழ்ச்சங்கம் எனும் ஊர்க்கிணறு

 உலகின் எந்த மூலையில் தன் வாழ்க்கை அமையப் போகிறது என அறிந்திடாத காலம். தமிழ்நாட்டில் பிறந்து, நல்ல முறையில் படித்து தேறி, இந்திய ஒன்றிய அரசு, "எங்க வேணா ஓடிப்போ" என கொடுத்த கடவுச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு அலைந்து கிடந்த காலம்.

அமெரிக்கா போகலாம் எனும் வாய்ப்பு வருகிறது. இரிச்மண்டு என்று ஒரு ஊர் இருப்பதோ, கேப்பிடல் ஒன், ஏந்தம் போன்ற நிறுவனங்கள் இருப்பதோ தெரிந்திருக்கவில்லை. அலுவலகத்தில் மேலதிகாரிகள் கூப்பிட்டு, ஆன்சைட்டு போக வேண்டி இருக்கும், ஏற்பாடுகளைச் செஞ்சுக்கோ என்ற போது, காலம் என்ற மலையருவி வாழ்க்கை எனும் பாறையை இரிச்மண்டு நோக்கி உருட்டி விடப் போகிறது என்று அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் நடந்தது. உருண்டு வந்து சேர்ந்தோம்.

20-25 ஆண்டுகளுக்கு முன் இரிச்மண்டு வந்து இறங்கிய பெரும்பாலான தமிழர்களின் வாழ்க்கை-வரலாற்றின் பொதுப் பகுதி மேலே உள்ள பத்திகள். சில சிறு மாற்றங்கள் இருக்கலாம். வேறு ஊருக்கு போய் கொஞ்ச நாள் இருந்து பின் இங்கு வந்து சேர்ந்திருக்கலாம், இங்கே வந்து பின் வேறு இடத்துக்கு போய் மீண்டும் திரும்பிய பலர் உண்டு. எதுவாகினும், அடிப்படைச் சட்டகம் (template) மேலே உள்ள பத்திகள் தான்.

வந்துவிட்டோம். புது ஊர், குளிர் இதுவரை காணாதது, இணையம் அதன் மழலைப் பருவத்தில் இருந்தது (ஊருக்கு தொலைபேசியில் பேச பல வேலைகள் செய்ய வேண்டும், அது பற்றி பிற்பாடு). எல்லோரும் புதுசு. எங்காவது தமிழ் போன்ற முகங்களைக் கண்டால், அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கம். நம்மைப் போலவே தயக்கத்தோடு உள்ளவரிடம் சிறு புன்னகை புரிந்து நெருங்கிப் போனால் "மீரு தெலுகா" எனக் கேட்டு இல்லை என்றதும் அவர் U-turn அடித்ததில் வாங்கிய மொக்கை என திருவிழாவில் காணாமல் போன குழந்தையென நின்றிருந்த காலங்கள் உண்டு. இளையராசாவும் யாகூ மெசஞ்சரும் மட்டுமே துணையிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக, தமிழும் பேசும் நண்பர் குழு அமைத்துக் கொண்டு, ஆற்றில் மிதந்து ஓடும் பரிசலாக வாழ்க்கையின் போக்கில் அப்படியே ஓடிக்கொண்டிந்தோம். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கின. ஊர் நடுவே உள்ள பொதுக் கிணற்றில் நீர் நிரம்பியது போல ஆனது. நட்புறவை நாடி தாகத்தோடு காத்திருந்தவர்கள் கூடும் இடம் ஆனது தமிழ்ச்சங்கம். இன்றுவரை, பழைய தமிழ்ப்பட நாயகன் பேருந்தில் இருந்து புதிய ஊருக்கு திருதிருவென முழித்தபடி இறங்குவது போல இரிச்மண்டில் வந்திறங்கும் தமிழர்களுக்கு ஊர்க்கிணறு தமிழ்ச்சங்கம்தான். புதியவர்களுக்கு மட்டுமல்ல; பலருக்கு நட்புகள் அரும்பியது இங்கே தான். நம் பிள்ளைகள் தமிழ் படிப்பது இங்கே தான். தமிழ்நாட்டுக்கு இயற்கையால் துன்பம் நேர்கையில் பொருளுதவி செய்திட ஓடி வந்து நாம் நிற்பதும் இங்கேதான். உள்ளூரில் ஏழை மக்கள் குளிர் போக்க போகனாக கம்பளி கொடுக்க அணுகியதும் இங்கேதான்.

விளையாட்டு நிகழ்ச்சிகளாகட்டும், கலைநிகழ்ச்சிகளாகட்டும், இலைபோட்டு பொங்கல் விருந்து படைப்பதாகட்டும் இரிச்மண்டு தமிழரிடையே நட்புறவுப் பாலத்தைக் கட்டியதில் பெரும்பங்கு ஐயம் திரிபற தமிழ்ச்சங்கத்துக்கேதான்.

யாதும் நம் ஊரேதான், 'கட்றா பொட்டிய' -ன்னு முரட்டுத் துணிச்சலில் வந்தவரை, இரிச்மண்டில் உள்ளவர் யாவரும் கேளிரே என நட்பியல் எழுதிக் கொண்டிருப்பது தமிழ்ச்சங்கம்.

ஒப்புறவு எனில் Social Service என்று பொருள்.
"எம்புள்ளைக்கு வெந்நீர் போடக்கூடத் தெரியாது, வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டான்/ள்" என்று ஒரு காலத்தில் உயரிய பட்டம் வாங்கியவர்கள் சட்டையை மடித்துக் கொண்டும் முந்தானையை வரிந்து கொண்டும் செய்யும் பொது வேலைகளை பார்க்க வேண்டுமே.

விடிய விடிய வேலை செய்து காட்டுக்குள் கூடாரம் அடித்து மக்களை தங்க வைத்ததாகட்டும், கைமாறு வேண்டா கடமையாளர்களாக ஆண்டு முழுதும் ஞாயிறுதோறும் தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்களாகட்டும், காலில் சக்கரம் இல்லாமலே சுழன்றடிக்கும் நிருவாகக் குழுவினராகட்டும், எங்காவது இடர் நேரும் போது பொருள் திரட்டிட உள்ளூர் இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிக் கொடுப்பதாகட்டும் எவ்வளவு வேலைகள் சேர்ந்தாலும் கொஞ்சம் கூட சலித்துக் கொள்வதில்லை மேலே குறிப்பிட்ட "பட்டத்து இளவரசர்கள்/ இளவரசிகள்". பிடிச்ச வேலையைச் செய்வதில் ஏதுடா/டீ துன்பம்? வேலைதானே, இன்னொரு லோடு இருந்தால் அதையும் கொண்டு வா என அசராது செய்கிறார்கள்.

ஆம், பொதுச் சேவை செய்வதால் துன்பம் வரும் எனில் காசு கொடுத்துனாலும் அந்த "துன்பத்தை" வாங்கிக்கறேன் கொண்டு வாங்கடான்னு வரிசைல தமிழ்ச்சங்கமாக நிற்கிறார்கள் உள்ளூர்காரர்கள்.

மிகச் சுவையான பழங்களைக் கொடுக்கும் ஒரு பெருமரம் காய்த்துக் குலுங்கி ஊர்க்கிணற்றின் அருகே பொதுமக்களுக்காக இருப்பது போல இரிச்மண்டில் நட்பையும் உறவையும் மகிழ்ச்சியையும் வழங்கி 25 ஆண்டுகளாக தமிழ் வளர்த்து வரும் தமிழ்ச்சங்கம் வாழிய வாழிய வாழியவே.

----

கட்டுரையில் உள்ள உவமைகள் அனைத்தும் வள்ளுவரும் பூங்குன்றனாரும் சொல்லியவை. நடுநடுவே மானே தேனே பொன்மானே சேர்த்து Remix மட்டுமே புதுசு.

-
தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டு மலருக்காக எழுதி கட்டுரை.


 

Thursday, March 19, 2026

அமெரிக்க குடும்ப சொத்து திட்டமிடல் வழிகாட்டி - உயில் (Will) மற்றும் நம்பிக்கை நிதியம் (Trust)

 வர்ஜீனியா மாநிலச் சட்ட தேவைகளுடன். இந்த ஆவணம் பொதுவான விழிப்புணர்வுத் தகவல் மட்டுமே. சட்ட ஆலோசனை அல்ல. உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப Estate Planning Attorney உடன் ஆலோசிக்கவும்.

For English Version: Click here


நிதித் திட்டமிடல் (Financial Planning)

நிதித் திட்டமிடல் என்பது உங்கள் நிதி இலக்குகளை நிர்ணயித்தல், முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். இது உங்கள் நிதியின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான உத்தியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வரவு-செலவு திட்டமிடல் (budgeting), சேமிப்பு (saving), முதலீடு (investing), வரித் திட்டமிடல் (tax planning), காப்பீடு (insurance), ஓய்வூதியம் (retirement), மற்றும் சொத்து திட்டமிடல் (estate planning) ஆகியவை அடங்கும். 

கடந்த மாதம், இரிச்மண்டு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உயில் மற்றும் நம்பிக்கை நிதியம் (Will & Trust) குறித்த விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் நம் சங்க உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் உயில் (Will), நம்பிக்கை நிதியம் (Revocable Trust), ஆள் செயலுரிமை ஆவணம் (Power of Attorney), மற்றும் மருத்துவ பராமரிப்பு உத்தரவுகள் (Healthcare Directives) குறித்து நம் சங்க உறுப்பினரும், ஆதரவாளருமான திரு.கணேஷ்குமார் (XCurve Financial Solutions) தெளிவாக உறுப்பினர்களுக்கு விளக்கினார். அவர் நடைமுறை உதாரணங்களுடன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தும், நிகழ்ச்சியின் போது பலர் எழுப்பிய கேள்விகளுக்கு பொறுமையுடன் விளக்கமும் அளித்தார். இந்த நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கி, எதிர்கால திட்டமிடலில் தெளிவு ஏற்படுத்தியது.

இந்த பதிவில் அந்த நிகழ்ச்சியில் விவாதித்த சொத்து திட்டமிடல் (estate planning) தேவைகளில் அவசியமான உயில் (Will), நம்பிக்கை நிதியம் (Trust) மற்றும் மரண பரிமாற்ற பத்திரம் (Transfer on Death Deed - TOD) பற்றி விரிவாகக் காணலாம். இவற்றைத் தவிர மேலும் பல வழிகள் இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு மிக எளிதான இம்மூன்று வகைகள் போதுமானது. பெரும்பாலான சட்ட விதிகள் நீங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து மாறும்.  இந்த பதிவில், நாம் வர்ஜீனியாவில் இருப்பதால் அதன் சட்டதிட்டங்களை சார்ந்து எழுதியிருக்கிறோம்! 

பொறுப்பு துறப்பு: இந்த ஆவணம் பொதுவான விழிப்புணர்வுத்  தகவல் மட்டுமே. சட்ட ஆலோசனை அல்ல. உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு Estate Planning Attorney உடன் ஆலோசிக்கவும்.


இந்த ஆவணம் பொதுவான தகவல் மட்டுமே. சட்ட ஆலோசனை அல்ல.  உங்கள் கருத்துகளை  மின்னஞ்சலில் அனுப்ப: njayakanthan@gmail.com 

வர்ஜீனியா மாநிலச் சட்ட தேவைகளுடன். இந்த ஆவணம் பொதுவான விழிப்புணர்வுத் தகவல் மட்டுமே. சட்ட ஆலோசனை அல்ல. உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப Estate Planning Attorney உடன் ஆலோசிக்கவும்.


- நா. ஜெயகாந்தன். இரிச்மண்டு, வர்ஜீனியா


வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் -அறிவியல் தேனீ

 வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் -அறிவியல் தேனீ, குறள் தேனீ 2026



பதிவு செய்ய கடைசி நாள் : மார்ச் 31,2026


வணக்கம்,  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து நடத்தும் “வட அமெரிக்க வாகைசூடி” போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

 

🔗பதிவு செய்ய விரைந்திடுவீர்!

 

போட்டிகளுக்கான முழு விவரங்கள்: 

https://fetna.org/contests2026

https://contests.fetna-convention.org/contests

⛳️⛳️⛳️

பொது அனுமதி சீட்டு/Regular Ticket

முன்பதிவிற்கான சிறப்பு தள்ளுபடி : 10%

இறுதி நாள் : ஏப்ரல் 15,2026

💥💥💥💥


இன்றே பதிவு செய்வீர் !

வருகையை உறுதி செய்வீர்!

 

Venue : New Jersey Convention and Exposition Center, Edison, New Jersey

Date : July 2, 3 & 4 - 2026

https://fetna-convention.org/

 

Please forward to your friends and community. 

தமிழே எழுக! 

தரணியை வெல்க!  

💐💐

நன்றி, 

விழா ஒருங்கிணைப்புக் குழு,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.