வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு. வாசல் கதவை திறந்து வெளியே வந்தாலே தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது. அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.
எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும். பத்து வருஷத்துக்கு முன்னாடி, கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு தான் இருந்தது இந்திய குடும்பங்கள். தெரியாம ரெண்டு கூமான் (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க. களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது.
ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு எங்க அம்மா கிட்ட கேட்டா சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது.
இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான். நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே இவங்க கொண்டாடறாங்கன்னு ஊர்ல பேசிக்கறாங்க. . நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.
ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள். Racial discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம். இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.
அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க. புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.
ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம். IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள் ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம். நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும் சலவை துணி பை சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம். கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை.
போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க. தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே.
இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க. மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app எழுதிக் கொடுக்க கூடாதா? தெரியாம தான் கேக்கறேன். இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா? இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?
காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன்.
-மீனா சங்கரன்
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!