Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

16 comments:

  1. ஆஹா - இதுவல்லவா சபதம்! பதிவின் தலைப்பு எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கவில்லை. தலைப்பைப் பார்த்த உடனே உங்க வீட்டுக்குக் கிளம்பலாம் என்றிருந்தேன். மானசீக மிக்சரா? :-)

    இப்படி மிக்சர், சரவண பவன் சாம்பார் வடை என்று எங்களை வெறுப்பேற்றிவிட்டு நீங்களெல்லாம் அங்கே போய் வெட்டு வெட்டு என்று வெட்டப் போகிறீர்கள். தலைவரிடம் சொல்லி இனிமேல் யாரும் சாப்பாட்டு பதார்த்தங்களை பற்றி இந்தப் பதிவுகளில் எழுதக்கூடாது என்று ஒரு தடை போடப் போகிறேன்.

    போன அன்றைக்கே உங்கள் சபதம் நிறைவேற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. சரவணா பவன்ல என்னை கவர்கின்ற சமாச்சாரம் பரோட்டாவும், ரவா தோசையும் தான் . போன வாரம் ஒரு யு ட்யூப் பதிவில் ஓட்டல்களில் ரவா தோசை செய்யும்முறை கண்டு அதை செய்து பார்த்தோம். ஓஹோ வென்று அமைந்தது. அதனால் இனிமேல் அங்கு சாப்பிட வேண்டிய ஐடம் ல அதை எடுக்க வேண்டியது தான்.

    நாம், வீட்டில், எதை ஹோட்டல்கள் தயாரிக்கும் அளவிற்கு செய்ய முடியாதோ அதையே நான் அடிக்கடி சாப்பிடுவேன்.

    என் கனவில் வந்து கொண்டிருப்பது என்ன தெரியுமா? மாம்பழமும், பனனுங்கும், இன்டோ-சைனீஸ் சாப்பாடு வகைகளும்.

    ஜொள்ளை முழுங்கி காத்திருக்கும்....

    நாரீ

    ReplyDelete
  3. கனவு நனவாக வாழ்த்துகள் மீனா! அதாவது கீழ்ப்பாக்கமெல்லாம் போகாம... நேரா சரவணபவன் போக! :)

    //மானசீக மிக்சரா? :-)//

    அதானே!

    ஒரே ஒரு கருத்து: நீங்க பேச்சு வழக்கில் எழுதும் போதுதான் இன்னும் நல்லாருக்கு.

    ReplyDelete
  4. :))

    சபதத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. meena sambar vadaiyum nam familyium nagamum sadayum madiri. Ne mattum viddi villaka enna?
    I still remember my dad used to tell the same thing like u whenever he make a trip to madras from madurai.

    ReplyDelete
  6. சரவணபவன் சாம்பார் வடையை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.

    சபதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Sabash Meena! Milking your trip to India to the fullest, I see! Good luck in all (except kilpauk, ofcourse)
    Naree, adhu enne video nnu engalukkum thaan sollungalen?

    ReplyDelete
  8. நாகு,

    கவலைப்படாதீங்க. உங்களையும் மற்ற தோழர்/தோழிகளையும் நினைச்சுண்டு தான் நான் சாம்பார் வடை சாப்பிடுவேன். நான் சாப்பிட்டா என்ன, நீங்க சாப்பிட்டா என்ன? கிட்ட தட்ட மானசீக மிக்சர் மாதிரின்னு வச்சுக்கங்களேன். :-)

    நாரீ,

    ஜொள்ளை முழிங்கிய கூடிய சீக்கிரத்தில் உங்கள் கனவு கனிகளான மாம்பழமும், பன நுங்கும் சாப்பிட என் நல வாழ்த்துக்கள்.

    மீனா,

    என்னை கீழ்பாக்கத்துக்கு அனுப்ப சில மக்கள் போட்ட சதி திட்டத்தை முறியடிப்பேன்னு இன்னும் ஒரு சபதம் எடுத்திருக்கேன். என் சபதங்களை நியாபகம் வச்சுக்கவே ஒரு லிஸ்ட் போடணும் போல இருக்கு. உங்களோட கருத்தை நான் வரவேற்கிறேன். இனி வழக்கு மொழியிலேயே எழுத முயற்சி செய்யறேன். :-)

    சென்ஷி,

    உங்க முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிங்க.

    ஜெயஸ்ரீ,

    மாமா குணம் மருமாளுக்கு வராம போகுமா. கூடிய சீக்கிரத்தில் உன்னை சென்னையில் பார்க்கறேன். :-)

    சதங்கா,

    ஏதோ என்னால ஆன உதவிங்க. உங்களுக்கெல்லாம் மானசீகமா சாம்பார் வடை சாப்பிட ஒரு வாய்ப்பு கொடுக்க முடிஞ்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.:-)

    ஷான்,

    என் வண்டவாளத்தை ஏன் இப்படி தண்டவாளத்துல ஏத்தணும்? 'இந்திய பயணம்' நு சொன்னாலே இனி மக்கள் ஓடற மாதிரி செய்திடுவேன் போல இருக்கேன்னு நானே வருத்தப்பட்டுண்டு இருக்கேன். வெந்த புண்ணுல வேல் பாய்ச்சரீங்களேம்மா!

    வந்து பதிவிட்ட எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  9. http://www.youtube.com/watch?v=7FDbSvQ8wGo

    இது எல்லோருக்கும் கை வந்த கலயாயிருக்கும் என்றெண்ணி லிங்க் போஸ்ட் பண்ண வில்லை. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    ReplyDelete
  10. புரசவாக்கத்து பக்கத்துல எங்கயோ இளநீர் பாயசம் கிடைக்குதாம். அதுக்கு ஏழு கடல் ஏழு மலை தாண்டி போகணும். போயிற வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. //புரசவாக்கத்து பக்கத்துல எங்கயோ இளநீர் பாயசம் கிடைக்குதாம். //
    அடப்பாவிகளா - எளநிய இப்படி எல்லாம் பாழடிக்கறாங்களா? அடுத்தது என்ன சக்கர போட்ட தேனா? :-)

    ReplyDelete
  12. ஆஹா மீனாவின் சபதம்!! பலே பலே
    விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்!

    வசந்தம்

    ReplyDelete
  13. நல்ல சபதம் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அனானிமஸ், வசந்தம் மற்றும் ஜாக்கீ சேகர்,

    உங்கள் வாழ்த்துக்களுக்கும், வந்து பதிவிட்டதுக்கும் ரொம்ப நன்றிங்க. என் சபதம் நிறைவேறப்போகும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்த்திண்டிருக்கேன்.

    ReplyDelete
  15. அட ஆண்டவா! எனக்கும் ஆசை வந்துடுச்சே!

    ReplyDelete
  16. அபி அப்பா,

    வாங்க. உங்க ஆசை தீர கூடிய சீக்கிரம் சாம்பார் வடை சாப்பிட என் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!