Saturday, June 20, 2009

மீனாவுடன் மிக்சர் - 5 {வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா)

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

-மீனா சங்கரன்

23 comments:

 1. மீனா - உங்கள் சபதம் இப்படியாக நிறைவேறியதில் வருத்தமாக இருக்கிறது. உங்கள் உடம்பு குணமாக வாழ்த்துக்கள்.

  தினத்தந்தி தலைப்பு...

  சாம்பார் வடை சாப்பிட்ட மீனா பஜ்ஜியானார்!

  ReplyDelete
 2. காமெடிக்கு மன்னிக்கவும். Couldn't resist!!

  ReplyDelete
 3. மீனா,
  சாம்பார் வடை சாப்பிட்டு பஜ்ஜியான பிறகும் (மன்னிக்கவும் - திட்ட வேண்டுமென்றால் நாகுவை திட்டவும்) இவ்வளவு தெம்புடன் உங்கள் 'டாக்டர் விஜயம்' பற்றி விலா வாரியாக விவரித்திருக்கிறீர்கள். இது போல் நானும் என் மனைவியும் 'கச்சோரி' (அதுவும் ராஜ் கச்சோரி), பானி பூரி சாப்பிட்டு 'attic', 'basement' எல்லாம் வீக்கான கதை நினைவுக்கு வருகிறது. விரைவில் குணமடைந்து எடுத்த சபதத்தை நிறைவேற்ற வாழ்த்துகள்!

  //ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள்.//

  சொர்க்க வாசல்?? அப்போ ராசியான டாக்டர் தான்!


  //ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி//

  வந்த வியாதிக்கே போர் அடித்து ஓடிவிடும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 4. //சாம்பார் வடை சாப்பிட்டு பஜ்ஜியான பிறகும் (மன்னிக்கவும் - திட்ட வேண்டுமென்றால் நாகுவை திட்டவும்) //

  ஐயா பரதேசியாரே - என்னை பஜ்ஜியாக்குவது என்று முடிவு கட்டி விட்டீரா?

  இந்த ஊர் எமர்ஜென்சி மாதிரி - காத்திருந்து காத்திருந்து வந்த வியாதி எல்லாம் போய்விடும்.

  ReplyDelete
 5. "காமெடிக்கு மன்னிக்கவும். Couldn't resist!!"

  எதுக்காக அனாவசியமா resist பண்ணனும்? தினத்தந்தி தலைப்பு அருமையான தலைப்பு. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நாகு.

  ReplyDelete
 6. "இது போல் நானும் என் மனைவியும் 'கச்சோரி' (அதுவும் ராஜ் கச்சோரி), பானி பூரி சாப்பிட்டு 'attic', 'basement' எல்லாம் வீக்கான கதை நினைவுக்கு வருகிறது. விரைவில் குணமடைந்து எடுத்த சபதத்தை நிறைவேற்ற வாழ்த்துகள்!"

  என் நிலைமை உங்களுக்கு நல்லா புரியுதுன்னு எனக்கு புரிஞ்சது பரதேசி. நீங்க சொல்லற அதே வீக்னஸ் தான் எனக்கும். அதுவும் விலாவாரியா அதை பத்தி எழுதி முடிக்கவே காவு தீந்துபோச்சுங்க. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 7. வாங்க அன்புடன் அருணா. உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 8. மீனா,

  சரவண பவன் சாம்பார் வடை ஒரு சன் டிவி வில்லி ரெஞ்ஜுக்கு படுத்தி விட்டதே! பரவாயில்லை ஒரு தடவை சாதாரண கையேந்தி பவன் ஒரு தடவை சாப்பிட்டு இதுக்கு ஒரு பரிகாரம் செஞ்சுடுங்க.

  உங்க ரைட்டிங் டெக்னிக் பிடிபட்டுடுச்சு. டுபுக்கு ன்னு ஒருத்தர் எழுதரார் அவரோட டைப்ல சாதாரண எழுத்துக்களோட எழுதரீங்க. உதாரணத்துக்கு அவரோட பாம்பே விஜயம் http://dubukku.blogspot.com/2006/08/blog-post_30.html படிச்சு பாருங்க. இவர மாதிரி எழுத நானும் முயற்சி பண்ணி பாத்துட்டு முடியாம விட்டுட்டேன். நம்ம ரிச்மண்டில் என் நண்பன் ஒருத்தன் இன்னமும் அது மாதிரி எழுத ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கான். எப்போ கேட்டாலும், 'ஆல்மோஸ்ட் தேர்' பான். எப்போன்னுதான் தெரியலை. ஆனா நீங்க சொல்லாமலேயே செய்துட்டீங்க.

  பித்தன்.

  ReplyDelete
 9. "உங்க ரைட்டிங் டெக்னிக் பிடிபட்டுடுச்சு."

  வாங்க பித்தரே. என்னோட எழுத்துல டெக்னிக் எல்லாம் இருக்கா? கேக்கவே சந்தோஷமா இருக்குங்க.

  டுபுக்கு அவர்களோட ப்ளாக் படுச்சேன். நல்லா இருந்தது.

  "இவர மாதிரி எழுத நானும் முயற்சி பண்ணி பாத்துட்டு முடியாம விட்டுட்டேன். நம்ம ரிச்மண்டில் என் நண்பன் ஒருத்தன் இன்னமும் அது மாதிரி எழுத ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கான். எப்போ கேட்டாலும், 'ஆல்மோஸ்ட் தேர்' பான். எப்போன்னுதான் தெரியலை. ஆனா நீங்க சொல்லாமலேயே செய்துட்டீங்க."

  ரொம்ப நன்றி.:-)

  ReplyDelete
 10. மீனா, நீங்க இந்தியா போனதும் உங்களுக்கு எக்கச்சக்க துரும்பு கிடைக்கும்னு (பதிவு எழுதத்தான் :) தெரியும். ஆனா அதுக்குன்னு இப்படியா! உடம்பைப் பாத்துக்கோங்க!

  ReplyDelete
 11. lively commentary ன்னு சொல்லுவாங்களே அது தானா இது
  ரொம்ப நல்ல இருந்தது
  இன்னும் நிறைய எழுதுங்க
  அதுக்காக வைத்தியர் கிட்ட எல்லாம் போகாதீங்க
  (meena keep safe. we need your healthy return)

  ReplyDelete
 12. கவிநயா மற்றும் வேதாந்தி,

  வாங்க. உடல்நிலையை காக்க நான் பண்ணற தியாகங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சொல்லறேன் கேளுங்க. நேத்து தி. நகர் பக்கம் போனோம். என்ன பாத்தேன்? அருமையான் மாங்காயை துண்டு போட்டு கார பொடி தூவி விக்கறாங்க. பக்கத்துலையே இலந்தப் பழமும், பலாச்சொளையும். என் கைகளை வாங்க விடாம தடுக்க என்ன பாடு பட்டேன் தெரியுமா? பீச் பக்கம் போனோமா. அங்க பஜ்ஜி வாசனை தூக்கறது. நம்மல்லாம் சென்னை வந்து என்னங்க புண்ணியம். அதெல்லாம் அனுபவிக்க ஒரு குடுப்பினை வேணும். என் பெருமூச்சு காதுல விழுதா?

  வந்து பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றி. :-)))

  ReplyDelete
 13. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  //அருமையான் மாங்காயை துண்டு போட்டு கார பொடி தூவி விக்கறாங்க. பக்கத்துலையே இலந்தப் பழமும், பலாச்சொளையும். //

  ஆஹா, படிக்கவே தித்திப்பா இருக்கே !!!

  ///அதெல்லாம் அனுபவிக்க ஒரு குடுப்பினை வேணும்.

  சரியா சொன்னீங்க :))

  ReplyDelete
 14. வாங்க சதங்கா. ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் என்னோடு சேர்ந்து நீங்களும் பலாச்சொளையையும், இலந்தைப் பழத்தையும் நினைத்து ஜொள்ளு விடுவதை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்படறேன். உங்களுக்காவது இதெல்லாம் சாப்பிட சீக்கிரமே ஒரு வாய்ப்பு கிடைக்க என் வாழ்த்துக்கள். :-))

  ReplyDelete
 15. தலைப்பு செய்திகளில் வந்ததிற்கு பாராட்டுகள். ஆனால் சபதம் நிறைவேறிய விளைவு ஒரு புறம் வருத்தத்தை தந்தாலும் மறுபுறம் பதிவிற்கு உதவியிருக்கிறது! விரைவில் நலம் பெற வாழ்ததுக்கள்!

  ReplyDelete
 16. ninaichu ninaichu sirukkirenn....
  UM.Krish

  ReplyDelete
 17. இங்கு ஒரு டிஸ்க்லைமெர் போட விரும்பறேன். நாலு பேரை சிரிக்க வைக்கனும்னு நான் சற்று exaggerate பண்ணி எழுதிட்டேன். சரவண பவன் ஒரு மிக சிறந்த உணவகம். அவங்க தயாரிக்கற உணவின் தரம் ரொம்ப உசத்தி அப்படீங்கறதை நான் கண்டிப்பா நம்பறேன். என் உடல் குறைவுக்கு அவங்களோட உணவு காரணமில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்து வெளியில் சாப்பிட்டதால் வந்த வினை இது. என் amateur நகைச்சுவை முயற்சியில் ஒரு நல்ல உணவகத்தின் பெயரை ரிப்பேர் செய்து விட்டோமோ என்று வருத்தமாக இருக்கு.

  ReplyDelete
 18. ஜெயகாந்தன் மற்றும் UM Krish,

  உங்க வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 19. மீனா,

  உங்கள் சோகக் கதை தூறல் நின்னு போச்சு பாட்டு மாதிரி இருந்தது. இப்ப சௌகரியமா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். இது எல்லாம் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மாதிரி. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் சபதம் போட்டு எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் எல்லாம் கொடுக்காதீங்க.

  பிரியா

  ReplyDelete
 20. மீனா,

  உங்கள் சோகக் கதை தூறல் நின்னு போச்சு பாட்டு மாதிரி இருந்தது. இப்ப சௌகரியமா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். இது எல்லாம் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மாதிரி. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் சபதம் போட்டு எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் எல்லாம் கொடுக்காதீங்க.

  பிரியா

  ReplyDelete
 21. வாங்க பிரியா. இப்ப நல்லா ஆயிடுச்சு எனக்கு. நீங்க சொல்லற மாதிரி இது நோய் எதிர்ப்பு சக்தி உடம்புல குறைவா இருக்கறதால வந்த வினை. இனி யோசனை பண்ணி தான் சபதம் எடுக்கணும். உங்க வருகைக்கும், பதிவுக்கும் ரொம்ப நன்றி . :-)

  ReplyDelete
 22. உங்களது நகைச்சுவை கருத்துகள் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!