Wednesday, June 10, 2009

தோட்டக்கலை - சில கேள்விகள் - 1

ரிச்மண்ட் பட்டினத்தார் அல்லது கிராமத்தான் வசந்தம் அவர்களுக்கு,

உங்களுடைய தோட்டக்கலை பற்றிய பதிவில், ஆர்வம் இருப்பவர்களுக்கு உத்திகள் கற்றுத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். நாகு கூட உங்க தோட்டம் பற்றி சிலாகித்து, பதிவிலும் எழுதி, தொலைபேசியிலும் புகழ்ந்து தள்ளிவிட்டார். உங்கள் உதவி எங்களுக்கு, இல்லை இல்லை நாட்டுக்குத் தேவை.

தோட்டக்கலை பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், யு.எஸ். மண்ணுக்கு ஏற்ற‌ சில பொதுவான கேள்விகளை இப்போதைக்கு முன் வைக்கிறேன்.

நம்ம ஊரு ரேடியோ அதிகாலையில் ஆன் செய்திருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள். அப்பதான் ஒரு எஃபெக்டிவ்வா இருக்கும் :))

1. நிலத்து மண் களிமண் ஆகையால், எங்கள் ஊரில் ஒரு அரை அடிக்குத் தோண்டி, மண் நிறப்பி தான் நண்பர்கள் தோட்டம் போடுகிறார்கள். கடைகளில் ஏராள மண்வகைகள் கிடைக்கின்றன. எந்த நிறுவன மண் சிறந்ததென நீங்கள் நினைக்கிறீர்கள் ?

2. கடையில் இருக்கும் வரை செடிகளில் இருந்த பசுமை, வீட்டில் நட்டவுடன் சிலநாட்களில் மஞ்சளாகி விடுகிறதே ! பசுமையைக் காக்க என்ன செய்ய வேண்டும் ?

3. இரண்டு இலை விட்ட கத்தரிக்காய் செடி, பூச்சிகளின் புண்ணியத்தால், இலைகள் சல்லடையாக ... பூச்சிக்கொள்ளி மருந்துக்குப் பின் வாடவும் இல்லை, வளரவும் இல்லை. என்ன செய்ய வேண்டும் ?

4. செடிகளுக்கு பூச்சிக் கொள்ளி, தாவர உணவு, தண்ணீர் விட‌ காலை நேரம் சிறந்ததா, மாலை நேரம் சிறந்ததா ?

5. இயற்கை உரம் தயாரித்திருக்கிறீர்களா ? இங்கு சாத்தியமா ?

ம‌ண்வெட்டிய‌ அப்டீக்கா க‌டாசீட்டு, எங்க‌ளுக்கு ப‌தில‌ விளாசீட்டு போங்க‌ வ‌ச‌ந்த‌மே !!!

உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி !!!

9 comments:

 1. 3. வேப்ப எண்ணெய் உபயோகித்துப் பாருங்கள். கிண்டலுக்கு சொல்லவில்லை. neem oil என்று கூகுளாண்டவரிடமோ பிங் தேவரிடமோ முறையிட்டுப் பாருங்கள்.

  //5. இயற்கை உரம் தயாரித்திருக்கிறீர்களா ? இங்கு சாத்தியமா ?//

  வசந்தத்த வச்சி காமெடி கீமெடி பண்றீங்களோன்னு ஒரு சம்சயம்....

  ReplyDelete
 2. சதங்கா அவர்களே!

  நல்ல கேள்விகள். ஆர்வத்துக்கு நன்றி. இப்ப தான் ஏதோ நாகுவின் தயவால் கொஞ்ச கொஞ்சமா தட்டுத் தடுமாறி தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். . எல்லாத்துக்கும் தமிழில் எழுதி பதில் சொல்லனும்னா எனக்கு 1 நாள் ஆகும்.
  உங்கள் உண்மை பெயர் எனக்கு தெரியாது. எங்க உங்க வீடுன்னு சொல்லுங்க. நானே வந்து உங்க தோட்டத்தை பார்த்து எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

  நன்றி


  வசந்தம்

  ReplyDelete
 3. //கடையில் இருக்கும் வரை செடிகளில் இருந்த பசுமை, வீட்டில் நட்டவுடன் சிலநாட்களில் மஞ்சளாகி விடுகிறதே ! பசுமையைக் காக்க என்ன செய்ய வேண்டும் ?
  //
  பொதுவாக இலை மஞ்சளாக இருப்பதற்கு காரணம் மண்ணில் தழை சத்து குறைவு. அதற்கு நைட்ரஜன் சார்ந்த உரங்கள் அளிக்க வேண்டும். அனால் நைட்ரஜன் சார்ந்த உரங்கள் அதிகம் அளிப்பதனால் இலை தழைகள் அதிகம் வளர்ந்து காய்ப்பு குறைய வாய்ப்புள்ளது. மேலும் சில நுண்ணூட்ட சத்து குறைவாலும் பயிர் மஞ்சலாகளாம். Miaracle spary என்ற பெயரில் அனைத்து உரங்களும் கலந்த கலவை கடைகளில் கிடைக்கும்.அதை வாங்கி உபயோகித்து பாருங்கள்.பயிருக்கு தேவையான சத்துகள் பற்றி அறிய இங்கு பாருங்கள்

  http://marutam.blogspot.com/2009/04/blog-post.html

  //இயற்கை உரம் தயாரித்திருக்கிறீர்களா ? இங்கு சாத்தியமா ?
  //
  நிச்சயம் சாத்தியம். மண்புழு மக்குரம் தயாரிக்க முயற்சி செய்யலாம்


  //இரண்டு இலை விட்ட கத்தரிக்காய் செடி, பூச்சிகளின் புண்ணியத்தால், இலைகள் சல்லடையாக ... பூச்சிக்கொள்ளி மருந்துக்குப் பின் வாடவும் இல்லை, வளரவும் இல்லை. என்ன செய்ய வேண்டும் ?
  //
  செடியை பார்த்தால் தான் தெரியும். உரம் இட்டு பாருங்கள்

  ReplyDelete
 4. ரிச்மண்ட் குசும்பரே, ஏதாவது செஞ்சு ஆட்டைய களைச்சிராதீங்க.

  ***

  வசந்தமே,

  நீங்க ஒரு எட்டு எங்க வீட்டுக்கு வரணும் என்றால், தமிழ்சங்கத்தில் சொல்லி ஒரு டிக்கட் போட்டு ஆர்கன்ஸா மாஹானம் பென்டன்வில் வாங்க :)) நாங்க இங்க குடிபெயர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆச்சு.

  தமிழில் தட்டச்சிடுவது பற்றி சொல்லியிருந்தீர்கள். ரொம்ப விலாவாரியாக எல்லாம் சொல்ல வேண்டாம். ஒரு சில வரிகள் போதும். (எல்லாம் ஈ.ஸி.யா போச்சுடா உங்களுக்குனு நீங்க முணுமுணுக்கறது கேக்குது :)))

  ***

  சதுக்கபூதம்,

  வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் வேளாண் தளம் பார்த்தேன். நல்ல சேவை. தொடருங்கள். உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. மண் வாங்குவது பற்றி : மண் - தோட்டக் கலையின் மிக மிக மிக மிக முக்கியமான அம்சம். எந்த மண் வாங்குவது எனபது நீங்கள் எவ்வளவு இடத்தில் பயிரிடபோகிறீர்கள் என்பதை பொருத்தது. மிக சிறிய தோட்டம் நோக்கமாக இருந்தால் - வழக்கமான கடைகளில் கிடைக்கும் மண் எதுவானாலும் பரவாயில்லை. MiracleGrow பொதுவாக சிறந்தது. நான் விலை கச்சிதமாக இருப்பவற்றை விரும்புவேன். மேலும், ஒரே மண்ணை மட்டும் போடாமல், மண்ணுடன் Peat moss மற்றும் இயற்கை உரங்களை கலந்து பாவித்தால் வெற்றி நிச்சயம். நிறைய இடத்தில் பயிரிட வேண்டுமாயின் மிக அதிக அளவில் (5 to 10 cubic yard!!) நல்ல மண் மிக குறைந்த விலைக்கு தரும் நிறுவனங்கள் உள்ளன. நான் அதை தான் பயன் படுத்தினேன். அப்படி மண் வாங்கும் முன் அந்த மண்ணை மண் பரிசோதனை செய்த பின் வாங்குவது நல்லது. நாமே ண் பரிசோதனை செய்யும் கருவி, கடைகளில் கிடைக்கிறது. மேலும் விபரம் தேவையெனின் தொடர்பு கொள்ளவும்

  மண்ணுக்கு அடுத்த முக்கியமான அம்சம் = உரம். தழை சத்து, மணி சத்து, சாம்பல் சத்து (நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ்). நம்ப ஊர் ரேடியோவிலே காலைல வயலும் வாழ்வும் நிகழ்ச்சி கேட்ட ஞாபகம் வருதா? செடி நன்கு பசுமையாக வளர சரியான அளவு தழை சத்து அவசியம். செடி நன்கு காய் காய்க்க சரியான அளவு சரியான நேரத்தில் மணி சத்து அவசியம். இந்த சத்துக்கள் சமமாக இருக்கும் பொது உபயோக உரங்கள் கிடைக்கின்றன. பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு.. அதிகம் தண்ணீர் விடுவது, அதிகம் உரம் இடுவது. ஒவொரு செடிக்கும் ஒவொரு அளவான சத்து ஒவொரு நேரத்தில் தேவை. இது போன்ற விஷயங்கள் நிறைய இணையத்தில் உள்ளன. மேலும், செடி வளர்வத்தின் பருவங்களை நீங்கள் அடிக்கடி உற்று கவனித்து வந்தால், பார்வையிலேயே ஒவொரு செடிக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று சில வாரங்களில் அறிந்து கொள்வீர்கள்.

  கத்தரிக்காய் செடி : கத்தரிக்காய், வெண்டை, தக்காளி இவைகள் செடி மிக சிறியதாக இருக்கும் போது பல வகையான நோய்க்கு ஆளாக வாய்ப்பு உண்டு. மேலும் செடிகளின் முதல் ஒரு இரு இலைகள் பல கிருமிகளுக்கு பிடிக்கும். அதனால் முடிந்தவரை கத்தரி மற்றும் தக்காளி செடிகளை ஒரு 1 அடி வளரும் வரை தொட்டியில் வளர்த்து பின் தரையில் நடுவது நல்லது. மருந்து இட்டும் செடி வளராமல் இருப்பதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். நிறைய பூச்சி பிடித்த சிறிய செடிகள் மருந்து இட்டும், நோயில் இருந்து விடுபட்டு திரும்பவும் வளர ஆரம்பிக்க பல வாரங்கள் பிடிக்கலாம். இன்னொரு வழி.. நோய் பிடித்த இலைகளைய் வெட்டி விடுவது. ஓரளவு தண்டு சக்தியாக இருந்தால் செடி திரும்பவும் பிழைக்கும். பொதுவாக கத்தரிக்காய்க்கு நல்ல சூரிய வெள்ளிச்சம் தேவை. தண்ணீர் விடும் போது இலையில் படாமல் வேருக்கு மட்டும் விட்டால் பூச்சி வராமல் தடுக்கலாம்.

  தண்ணீர் விட தகுந்த நேரம் : முதலில், அவசியமில்லாமல் நிறைய தண்ணீர் விடுவதை தவிர்க்க வேண்டும். பெரும்பலோர் தினமும் தண்ணீர் விடுவதை பழக்க தோஷத்தில் செய்வார்கள். பெரும்பாலான செடிகளுக்கு ஒரு வாரத்திற்கு இரு முறைக்கு தண்ணீர் விட்டால் போதும். உச்ச வெயில் காலங்களில் அதிகம் தேவைபடலாம். நிறைய தண்ணீர் விடுவதால் நோய் வரும், குறைந்த விளைச்சல்.. காய் காய்ப்பது குறைந்து நிறைய இலை வளரும். தண்ணீர் விட காலை நேரம் சிறந்தது. வெயில் வருவதற்கு முன் தண்ணீர் விடுவது இன்னும் சிறந்தது. தண்ணீர் மிச்சமாகும். மேலும் பகல் நேரத்தில் வெயில்லில் செடி உணவு தயாரிக்க ஏதுவாக இருக்கும். இரவுக்கு முன் இலைகளெல்லாம் உலர்ந்து பூச்சி வராமல் இருக்கும். கண்டிப்பாக மாலை வேளைகளில் தண்ணீர் விடுவதை தவிர்ப்பது நல்லது.

  இயற்கை உரம் தயாரிப்பது பற்றி : எளிது. பல வழிகள் உள்ளன. நீங்கள் எந்த அளவு செய்யப் போகிறீர்கள் என்பதை பொருத்தது. நான் வீட்டில் வீணாகும் மண்ணுடன் மக்கும் எல்லா வற்றையும் தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு பெரிய அட்டை பெட்டி வைத்து போட்டு வைப்பேன் புல் துகள்கள், காய்கறி வெட்டிய மிச்சங்கள், காகிதங்கள் போன்று பலவற்றை இதற்கு உபயோகப் படுத்தலாம். இலையுதிர் காலத்தில் விழும் காய்ந்த இலைகளை புல் வெட்டி இயந்திரத்தில் இரண்டு முறை வெட்டி துகள்களாக்கி. மேலும் மக்கியன வற்றை சேர்த்து கலக்கி ஏற்கனவே இருக்கின்ற மண்ணில் சேர்த்து கலக்கி விட்டு விட்டால், வசந்த காலத்தில் நல்ல சக்தன தோட்டம் தயார்.

  ReplyDelete
 6. வசந்தம்,

  அருமை, அருமை. நான் என்றில்லை, மற்றவருக்கும் உதவும் வண்ணம் தங்களின் பதில்கள் அருமை. பொறுமையா வந்து விரிவாக மறுமொழி இடுகிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 7. // நாமே ண் பரிசோதனை செய்யும் கருவி, கடைகளில் கிடைக்கிறது. மேலும் விபரம் தேவையெனின் தொடர்பு கொள்ளவும்//

  கடையில் ண்PK பரிசோதனை செய்ய சில குப்பிகளை வைத்து விற்பதை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு தெரிந்து குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் மண் பரிசோதனை செய்யும் கருவி எதுவும் தெரியுமா? நான் இந்தியாவில் விவசாயிகள் எளிய முறையில் approximate ஆக மண் பரிசோதனை செய்யும் கருவி பற்றி தேடி வருகிறேன்

  ReplyDelete
 8. //தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு பெரிய அட்டை பெட்டி வைத்து போட்டு வைப்பேன்//

  மழைத் தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ளணுமா ?

  ReplyDelete
 9. //மிக சிறிய தோட்டம் நோக்கமாக இருந்தால் - வழக்கமான கடைகளில் கிடைக்கும் மண் எதுவானாலும் பரவாயில்லை. MiracleGrow பொதுவாக சிறந்தது.//

  சின்ன தோட்டம் தான். முதலில் ஒரு மண் போட்டு சரியாக வராமல், பிறகு மிராகல்க்ரோ போட்டிருக்கிறோம். இப்போது பரவாயில்லை.

  //மேலும் செடிகளின் முதல் ஒரு இரு இலைகள் பல கிருமிகளுக்கு பிடிக்கும். அதனால் முடிந்தவரை கத்தரி மற்றும் தக்காளி செடிகளை ஒரு 1 அடி வளரும் வரை தொட்டியில் வளர்த்து பின் தரையில் நடுவது நல்லது.//

  டூ லேட் :)) அடுத்த முறை தான் உங்கள் வழிமுறைகளை கையாளணும்.

  //பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு.. அதிகம் தண்ணீர் விடுவது, அதிகம் உரம் இடுவது.//

  குறைச்சாச்சு :))

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!