இந்த
வாரம் வேலை நிமித்தமாக வடகரோலினாவில் இருக்கும் கிரீன்ஸ்பரோ என்ற ஊருக்கு
சென்றிருந்தேன். வேலை முடிந்ததும் சக ஊழியர்களுடன் மாலையில் அந்த ஊரின்
உள்ளே ஒரு சுற்று போகலாம் என்று நடந்தோம். ஒரு தெருவுக்கு பெயர் பிப்ரவரி
1-ம் தெரு. இதில் ஏதோ கதை இருக்கலாம் என்று ரிச்மண்டில் இருந்து வந்திருந்த
சக ஊழியர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தெரிந்திருக்க வில்லை.
அந்தத் தெருவில் ஒரு சம உரிமைப் போராட்ட அருங்காட்சியகம்(civil rights
movement museum) இருந்தது.
நிச்சயமாய் ஏதோ கதை இருக்கவேண்டும் என்று நாம் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவரிடம் அலைபேசியில் முறையிட்டேன். கண் முன்னே விரிந்தது 1960 பிப்ரவரி ஒன்றாம் தேதி நடந்த
ஒரு சம்பவம். அந்தக் காலத்தில் வெள்ளையர்களுக்கான உணவகங்கள் இருந்தன.
அவற்றில் கருப்பின மக்களுக்கு அனுமதியில்லை. அவ்வாறான ஒரு உணவகம்
உல்வொர்த். உல்வொர்த்தில் நான்கு கருப்பின கல்லூரி மாணவர்கள் போய்
உட்கார்ந்து கொண்டு உணவு கொடுக்கும்வரை போகமாட்டோம் என்று போராடினார்கள்.
வன்முறையில்லை, ஒரு கோஷம் இல்லை. பதட்டமில்லாமல் ஆரம்பித்தது இந்தப்
போராட்டம். தினமும் போய் உட்கார்ந்து உணவு கேட்பது. கொடுக்கும்வரை
போகமாட்டேன் என்று உட்கார்ந்து இருப்பது. இப்படி ஆரம்பித்த போராட்டம்
விரைவில் வடகரோலினாவின் மற்ற ஊர்களுக்கு பரவியது. தொடர்ந்து பல தென்
மானிலங்களுக்கும் பரவியது - நம் ரிச்மண்ட் உட்பட.
அனைத்து
ஊர்களிலும் இதே கதைதான். போய் உட்கார்ந்து கொண்டு உணவு பரிமாறும்வரை
போகமாட்டேன் என்பது... இதனால் இந்த உணவகங்கள் நஷ்டத்தில் போக ஆரம்பித்தன.
அதனால் மெதுவாக உணவகங்கள் இந்த பிரிவினை பழக்கத்தை கைவிட ஆரம்பித்தன. இந்த
கிரீன்ஸ்பரோ நால்வர்களுக்கு உணவு பரிமாற மறுத்த அந்த மேசையை வாஷிங்டன்
ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்களாம்.
என்
சக ஊழியர்கள் மெத்தப் படித்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுக்கு இந்தக் கதை
தெரிந்திருக்கவில்லை. அனைவர்க்கும் அலபாமா மாண்ட்காமரியில் ரோஸா
பார்க்கின் பேருந்துப் பயணம் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கதை
தெரியவில்லை. இது மாதிரி எத்தனையோ கதைகள் பல ஊர்களில் இருக்கலாம். வெளியில்
தெரிவதில்லை.
இந்த
சம்பவத்தினால் எனக்கு நான் அமெரிக்கா வந்த புதிதில் நடந்த ஒன்று
நினைவுக்கு வந்தது. அப்போது என்னுடம் சில மராத்தியர்கள் வேலை செய்து
கொண்டிருந்தார்கள். அவர்களில் தீவிரமான சிவசேனை பக்தர்களும் இருந்தார்கள்.
ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு சுதந்திரப் போராட்டத்திற்கு
திரும்பியது. அவர்களில் ஒருவன் ஒரு போடு போட்டான். நீங்கள் தெற்கே அனைவரும்
ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், சுதந்திரத்திற்கு போராடவில்லை என்றான். இன்னொரு மேதாவி உங்கள் ராஜாஜி
ஆங்கிலேய ஆட்சி நீடிப்பதுதான் நல்லது என்று கருதினார் என்றான். நான்
ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தேன்.
சரி கொஞ்சம் இவர்களுடன் விளையாடலாம்
என்று ஆமாமய்யா உங்கள் மராத்திய, மும்பாய் மக்களால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. தெற்கே நாங்கள் எல்லாம் தொடைநடுங்கிகள். ஒன்றுமே செய்யவில்லை என்றேன். ஒருவன் கொஞ்சம் யோசித்தான். இல்லை இல்லை ஒருவர் இருந்தார் என்றான். யாரடா என்றேன். பா பா ர தியோ என்னவோ வரும் என்றான். சுப்ரமண்ய பாரதியா? ஆமாம் அவரேதான். முண்டாசு கட்டி பெரிய மீசை வைத்திருப்பான் என்றான். மனசுக்குள் மகாகவியை வணங்கிவிட்டு சொன்னேன். அந்த ஆள் இருப்பதிலேயே பெரிய தொடைநடுங்கி, அவரை கைது செய்ய வந்தபோது பயந்து பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டார் என்றேன். அனைவரும் சிரித்தார்கள்.
அப்போது ஒருவனுக்கு கொஞ்சம் பொறி தட்டியது. நான் கிண்டல் செய்கிறேன் என்று புரிந்து கொண்டான். உனக்கு இந்த பெயர் தெரியுமா அந்தப் பெயர் தெரியுமா என்று சில மராட்டிய சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள் சொல்லிக் கேட்டான். எனக்கு அவர்களில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. இவர்களெல்லாம் புகழ் பெற்ற மராத்திய வீரர்கள். இவனுக்கு இவர்களை தெரியாத மாதிரி அந்த ஊர் வீரர்கள் பற்றி நமக்கும் தெரியாமலிருக்கலாம் என்றான் மற்றத் தோழர்களிடம்.
அப்படி யார் யார் என்று கேட்டான். நான் வாஞ்சி நாதன், கொடி காத்த குமரன், வ.உ.சி போன்ற சில பெயர்களையும் அவர்களின் போராட்டங்களையும் கொஞ்சம் சொல்லிவிட்டு நீ பழித்த ராஜாஜியை காந்தியின் மனசாட்சியின் காவலர் என்பார்கள் தெரியுமா என்றேன். அவர்களை கேலி செய்தேன் - என்னவோ நீங்கள்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தது போல் அளக்கிறீர்களேடா!
சூப்பர் கட்டுரை!
ReplyDeleteஅந்த மராத்தியர்கள் என்னிடம் கேட்டிருந்தால், "என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் வந்திருச்சா, எப்போ, சொல்லவே இல்லை!!!!" என்று சொல்லியிருப்பேன்.
Nice. It is Maratti, with the second T, not the Tamilized 'thi'.Similarly, karatte, not karathe, kabaddi, not kabadhdhi, Tipu Sultan, not Thipu, Latti, not Lathi, Pattankot, not Pathankot
ReplyDelete