Tuesday, September 16, 2014

ஊருக்கு உபதேசம்


இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தின் அடுத்த கலாச்சார நிகழ்ச்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த சாதனையில், என்னுடைய அனுபவங்கள் மற்றும், சக தமிழ் நண்பர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

சில குறைபாடுகள், இவை ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அல்ல, நமக்குத் தெரிந்தவை, மற்றும் நாமே பலமுறை(?) கடைபிடித்தவை , நான் தொகுக்க  மட்டுமே செய்திருக்கிறேன்.

தாமத வருகை

நிகழ்ச்சி நிரல் அறிவித்த பின், கலாச்சார இயக்குனர்கள் தொலைபேசியை அணைத்து விடுவது உசிதம். முதல் ஐந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பங்கு பெரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அழைத்து, நாங்க என்னங்க உங்களுக்கு பாவம் செய்தோம், இப்படிக் கவுத்திடீங்களே என்று அலறுவார்கள். ஆறு மணி நிகழ்சிக்கு 7:30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் நம் பாரம்பரியம். அதில் நமக்குப் பெருமை உண்டு. நிகழ்ச்சி தொடங்கி சற்று நேரம் வரை தன்னார்வலர்களும் சங்கப் பொதுக்குழு உறுப்பினர்களும் மாத்திரம் அங்கே இருப்பார்கள். தன்னார்வலர்கள்  அரங்கத்திற்கு வெளியேவும், மற்ற உறுப்பினர்கள் உள்ளே பல வேலைகளாகவும் இருப்பார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சியை பல கோணங்களில் பதிவு செய்வதில் தீவிரமாக இருப்பார்கள். எனவே முதல் சில நிகழ்சிகள் குடும்பங்களுக்கு உட்பட்ட சிறப்புக் காட்சியாகவே அமையும்.

ஒரு கண்ணில்  வெண்ணை , இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு 

அனைத்து பெற்றோர்களுக்கும் தம் குழந்தைகளின் நிகழ்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் புளகாங்கிதம் அடைய வேண்டும், ஆனால் நாம் நம்முடைய நிகழ்ச்சி முடிந்த உடன், இடத்தைக் காலி செய்ய வேண்டும். நிகழ்சி நிரல் அறிவிக்கும் முன், நம்முடைய நிகழ்ச்சி இடைவேளைக்கு முன்பா அல்லது பின்பா என்று அறிய ஆவல், தெரிந்து கொண்டால் சௌகர்யமான நேரத்துக்கு வரலாம். நீச்சல் வகுப்பு இருக்கிறது, என் பையன் நிகழ்ச்சியை 3 மணிக்கு அப்புறம் போடுங்க என்று வேண்டுகோள் விடுத்த நண்பர் ஒருவர் உண்டு. இவர்களுக்கு பயந்து நிகழ்ச்சி நிரலை, நிகழ்ச்சி தொடங்கும் வரை பதுக்கி வைக்கும் கட்டாயம் உண்டாகி இருக்கிறது. இரண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதித்தால், அதை இப்போ போடுங்க, இதை அப்போ போடுங்க என்ற தொல்லை தாங்க முடியாமல் அதை ரத்தே செய்து விட வேண்டிய சூழ்நிலை.

காணொளிப் பதிவு 
 
உங்கள் குழந்தையின் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய மறந்து விட்டு, மற்றொரு பெற்றோரின் பதிவில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். இருபது குழந்தைகள் நடனம் ஆடினாலும், ஐந்து நிமிடமும் தம் குழந்தையை மாத்திரமே திரை முழுவதும் தெரியுமாறு பதிவு செய்வதில் பெற்றோர்கள் வல்லவர்கள். தம் பதிவை கூச்சம் காரணம் மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் நழுவுபர்கள் அதிகம்.


தலைமறைவு

குழந்தைகள் பெரிதானவுடன், அவர்களைத்  தமிழ்ப் பாட்டுகளுக்கு நடனம் ஆடச் சொல்லிப் பாருங்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள். இதன் காரணம், நமக்கு இனி கலாசார நிகழ்சிகளைக் காணத் தேவை இல்லை, ஏனென்றால் நம் குழந்தைகள் இனி பங்கு பெறப் போவதில்லை. நம் ஊரில், கடைசிக் குழந்தைக்குத் திருமணம் ஆகி விட்டால், அதன் பின்பு மற்ற திருமணங்களுக்குப் போவதை நிறுத்தி விடுவார்கள். காரணம் இனி எழுதும் மொய் திரும்ப வராது. பல சமுதாயத்தின் மூத்த ஆர்வலர்கள் இதன் காரணமாகவும் வருவதில்லை. அது போக அடுத்த தலைமுறையின் மீதுள்ள அதிருப்தி 2000 வருடங்களுக்கு மேலாகவே உள்ளது, அதன் காரணமாகவும் பல பேர் வருவதில்லை.

ஊருக்கு உபதேசம் செய்யும் முன், நான் இதையெல்லாம் தவிர்க்க முடியுமா என்று யோசிக்கிறேன். நீங்களும் யோசிங்க....

7 comments:

 1. சத்யா - நச்சுன்னு இருக்கு.

  ஒரு கண்ணுக்கு வெண்ணை...
  தம் குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்புவது ஒரு வகை. இன்னொரு வகை இருக்கிறது. அண்மையில் ஒரு நண்பர் விவரித்த விதம் இப்படி.

  ஒரு தாயார் நண்பிகளுடன் உட்கார்ந்து 360 டிகிரி சுற்று வா(ள்)ய்வீச்சு வீசிக்கொண்டிருந்தாராம். அவரது குழந்தைகள் கலைநிகழ்ச்சியின் போது அம்மையாரிடம் இருந்து ஒரு சத்தம் வரவில்லை. முழு கவனம் மேடையில். குழந்தைகள் மேடையில் இருந்து நகர்ந்ததும் வாள் சண்டை தொடங்கி விட்டதாம். இந்த மாதிரி ஆட்கள்தான் முதலில் அரங்கில் சத்தம் குறித்து புகார் செய்வார்கள் - அவர்கள் குழந்தைகள் பங்கேற்கும்போது :-)

  //இருபது குழந்தைகள் நடனம் ஆடினாலும், ஐந்து நிமிடமும் தம் குழந்தையை மாத்திரமே திரை முழுவதும் தெரியுமாறு பதிவு செய்வதில் பெற்றோர்கள் வல்லவர்கள்.//
  :-)

  என் போன்ற மிகவும் மூத்த ஆர்வலர்கள் வந்து கொண்டுதானே இருக்கிறோம். :-)  ReplyDelete
 2. //குழந்தைகள் பெரிதானவுடன், அவர்களைத் தமிழ்ப் பாட்டுகளுக்கு நடனம் ஆடச் சொல்லிப் பாருங்கள்//
  பெண்குழந்தைகள் நடுநிலைப்பள்ளி தாண்டியதும் ஹிந்திப் படங்கள் பார்க்கத் துவங்கிவிடுவார்களாம். அதில்தான் ஹீரோக்கள் மீசையில்லாமல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார்களாம். ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி சொன்னது. ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் போன்ற முகங்களை யார் பார்ப்பது என்று கேள்வி வேறு...

  உங்களுக்கு இது இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அதனால் இப்போதே கொஞ்சம் ஹிந்தி பழகிக்கொள்ளுங்கள். :-)

  ReplyDelete
 3. நன்றி நாகு, மற்றவர் நிகழ்ச்சியில் வாய் வீசி விட்டுத் தன் நிகழ்ச்சியில் அமைதி எதிர் பார்க்கும் நண்பர்களை எப்படி விவரிக்கலாம்? (Hypocrisy / Double standards)

  ReplyDelete
 4. //நன்றி நாகு, மற்றவர் நிகழ்ச்சியில் வாய் வீசி விட்டுத் தன் நிகழ்ச்சியில் அமைதி எதிர் பார்க்கும் நண்பர்களை எப்படி விவரிக்கலாம்? (Hypocrisy / Double standards)//

  கலைஞர் கருணாநிதி என்று அழைக்கலாமா?

  ReplyDelete
 5. முரளி, தமிழ் சங்கம் என்கிற தென்னை மரத்துல மிதி வண்டி இடைவெளியில் கருணாநிதிங்கிற பசுவைக் கட்ட வரீங்க, அடுத்து என்ன சொல்லுவீங்க, அந்தாளு பசு இல்ல, பசுத்தோல் போர்த்திய புலிம்பீங்க, இல்ல புலின்னு சொல்றது கூட புலிக்கு அவமானம்னு சொல்வீங்க, நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 6. இய்யோ. என் தலை சிந்துபைரவி ஜனகராஜ் போல் சுழல்கின்றதே. என் செய்வேன். மரியாதையாக வாசூவை மூடிக்கொள்வதே உச்சிதம்.

  ஏம்பா வாய கிண்டறீங்க?

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!