Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!15 comments:

 1. சதங்கா,

  நல்லவிதமாக எழுதப்பட்ட ஒரு பதிவு.

  குருவிற்கும் ஆசிரியருக்கும் பலப் பல வேறுபாடுகள் அன்றும் இன்றும் என்றும் உண்டு. அதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. குருவின் பணி என்பது ஒருவரை கடவுளிடம் கொண்டு சேர்ப்பது. அதே சமயம் எல்லோருக்கும் குரு கிடைப்பதில்லை. காரணம் குரு ஒருவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் என்பர் பெரியோர். ஆசிரியர் என்பவர் எல்லோருக்கும் எளிதில் கிட்டக் கூடியவர். அவர் ஏட்டில் இருப்பதை கற்பித்தோ, ஒப்பித்தோ ஒரு மாணவனை தேற்றினாலும் அவருடைய பணி ஒரு மாணவனின் அறிவுக் கன்ணைத் திறப்பது, அதன் மூலம்தான் அந்த மாணவன் குரு யார் என்ற தேடலிலும், தன் குரு யார் என்ற தவிப்பிலும் இறங்குகின்றான்.

  ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது குற்றம் என்பது போல சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஆசிரியர் இல்லை, நான் எனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது எப்படி சரியோ அதே போல் ஒரு ஆசிரியரும் அப்படி விரும்புவது சரியே. அவருடைய பொருளாதார வசதிக்கு ஏற்ப அவர்கள் அதைச் செய்கிறார்கள். ஒரு மாணவன் தன்னுடைய மாலைநேர வகுப்பிற்கு வந்தால்தான் அவனுடைய மதிப்பெண்கள் சரியாக தரப்படும் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஆசிரியர் செயல்படுவாரேயானால் அது தவறு, கண்டிக்கத்தக்கது, ஏன் தண்டிக்கத்தக்கதும். அப்படி இல்லாமல் ஒரு ஆசிரியர் தன்னுடைய பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப மாலை நேர வகுப்பு நடத்தினால் அதில் குறைகாணயியலாது.

  மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசைக்கு பலப் பல அர்த்தங்கள் பலர் கூற கேட்டிருப்பீர்கள். அதிலும் எல்லா குருவும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் ஆனால் எல்லா மிகச் சிறந்த ஆசிரியர்களும் குருவாக கிடையாது.

  நீங்கள் தொட்டுள்ள இந்த விஷயம் மிக நுணுக்கமானது, அதை வேறு ஒரு சமயம் கண்டிப்பாக அளவளாவுவோம்.

  முரளி இராமச்சந்திரன்.

  ReplyDelete
 2. குரு என்பவர் நம் அஞ்ஞானத்தை நீக்கி ஞான ஒளியை ஊட்டுபவர். அப்பேர்ப்பட்ட குருவை, "குரு என்பவர் யார்?" என்று மரியாதையுடன் விளித்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டாவதாக, நாம் ஆசிரியர், குரு, இரண்டு சொற்களையும் தவறுதலாக interchangeable ஆக பயன்படுத்துகிறோம் என்பது உண்மைதான். அதற்காக ஆசிரியர்களைக் குறைத்துப் பேச வேண்டாமே... அவர்களின் பணியும் இந்தச் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. மற்றபடி, குரு என்ற அருமையான பொருள் நிறைந்த சொல்லை நாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று எடுத்துக் காட்டியமைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 3. முரளி,

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

  விஜய் தொலைக்காட்சியில் வரும் 'நீயா நானா', சில மாதங்கள் முன்னர் ஆசிரியர்கள் பற்றிய விவாதம் ஒன்றை நடத்தியது. நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஒருபுறம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மறுபுறம் தனியார் பள்ளி ஆசிரியர்கள். நான் மேற்சொன்ன ஒரு குற்றச்சாட்டை, தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் எழுப்ப, 'யாரெல்லாம் உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்' என்று நடத்துனர் கேட்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் அநேகம் பேர் கையயை தூக்கியதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்? ஒரு ஆசிரியருக்கு ஏன் இந்தப் பாகுபாடு இருக்க வேண்டும்?! தன் பிள்ளையை அதே பள்ளியில் சேர்த்தால் நன்றாகப் படிக்க மாட்டார்களா ? அல்லது, அரசு பள்ளி சரியில்லை, அதனால் தனியார் பள்ளி என்றால், பின் அரசு பள்ளியில் பயிலும் மாணர்வர்களின் கதி?! எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்ற மனநிலையா?! அல்லது இவர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஏன் வேலைக்குப் போகக்கூடாது!!! இது ஒரு சில பள்ளிகள் அல்ல, பல பள்ளிகளில் இது தான் இன்றைய நிலை. இது என் தொழில், நான் இப்படித் தான் இருப்பேன் என்று இன்றிருக்கும் ஆசிரியர் மனநிலையை நாம் ஏற்றுக் கொண்டால், நல்லது, இருக்கட்டும். ஆனால், போற்றுதலுக்குரியவர்கள் என்ற அந்தஸ்தை அவர்கள் இழக்கிறார்கள் என்பதே என் கருத்து!

  நன்றி!!!

  ReplyDelete
 4. கவிநயா,

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

  தோடுடைய செவியன்
  ...
  என் உள்ளம் கவர் கள்வன்
  ...
  பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மான் இவன் அன்றே
  ‍‍‍‍‍‍‍
  எனற ஞானசம்பந்தரின் தேவாரத்திலும், மற்றும் பண்டை சமய நூல்களிலும் இறையை இவ்வாறு அவன்/இவன் என்று நெருக்கத்தின் பால் வழங்கி வருகையில், குருவையும் இவ்வாறு விளிக்கலாமே என்று தோன்றியது!

  ஆசிரியரை கண்டிப்பாக அவன்/இவன் சொல்ல முடியாது தான் :)

  ஒருசில காவலர்கள் நல்லவர்கள் என்பதற்காக நாம் காவலதுறையை நல்லவர்கள் என்கிறோமா ? ஒரு சில அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்பதற்காக, அரசியல்துறையே அழகானது என்று வியக்கிறோமா ?

  அது போல, பொதுவாக ஆசிரியர்களின் இன்றைய நிலை ... அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தொழில், என்ற அளவிலேயே இருப்பதால், நமது சமூகம் இவர்களை உயர்ந்த இடத்தில் வைக்கவில்லை என்பது என் எண்ணம். அன்றைக்குப் பிரம்பிலடித்து 'நல்வழி'யும், 'மூதுரை'யும் கற்பித்த அழுக்குடை ஆசிரியனுக்கு இருந்த அக்கறை, இன்றைக்குத் மேனாட்டு உடையணிந்து தோளில் கைபோட்டு E=MC2 என்று பாடம் சொல்லும் ஆசிரியருக்கு இருக்கிறதா ? அப்படியே ஆசிரியப் பெருந்தகைகள் மாணாக்கர்கள் பால் அக்கறை கொண்டிருப்பினும், தனித்துச் செல்லும் நம் சமூகத்தை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட செயல்கள் ஏதேனும் உள்ளனவா? நாம் படித்தது ஒன்றும் பணியிடம் ஒன்றுமாக இருக்க, இவற்றைப் பற்றி பேசினால், பேசிக் கொண்டே போகலாம். போற்றுதலுக்குரிய நிலையில் இருக்கும் ஒருவர் சமூக அக்கறையுடன் இருத்தல் மிக அவசியம். இன்றைய ஆசிரியர்களுக்கு இது இல்லை என்பது தான் என் வேதனையின் வெளிப்பாடு!

  நன்றி!!!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. சதங்கா,

  நான் எனது பின்னூட்டத்தில் பதிந்த படி, இது ஒரு நுணுக்கமான விஷயம் மற்றும் விவாதத்திற்குரிய விஷயம். நீயா நான நிகழ்ச்சி ஒரு வியாபார உத்திகள் அதிகம் திணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்பது என் தாழ்மையான கருத்து, அதில் விவாதிப்பவர்களோ அல்லது அதை நடத்துபவரோ ஒரு சமுதாயத்தையோ அல்லது தலைமுறையையோ மாற்றம் செய்யக் கூடிய தகுதி உள்ளவர்கள் இல்லை. அடுத்த முறை நீங்கள் ரிச்மண்ட் வரும் சமயத்தில் நேரம் கூடி வந்தால் இதைப் பற்றி விவாதிப்போம்.

  தோடுடைய செவியன் போன்ற உதாரணங்களுடன் ஏன் நிறுத்த வேண்டும், முருகன், விநாயகன், பிரமன், கன்னன், கிருஷ்ணன், இந்திரன் என்று உங்கள் உதாரணங்களை நீட்டியிருக்கலாம். இது என்னவோ கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதை போல இருக்கிறது. :)

  இனி நீங்கள் சொன்னது போல் (அல்லது) நீயா நானா வில் நீங்கள் கண்டது போல இல்லாமல் இருக்க இதோ என் பங்கிற்கான உபதேசம்.

  ஆட்டோ ஓட்டுனரின் குடும்பம் ஆட்டோவில் மட்டுமே பயணிக்க வேண்டும், இதே நிலைதான், பஸ், ரயில், விமானம் முதலிய தொழிலில் இருப்பவர்களுக்கும் மற்றும் அவரது குடுமபத்தினருக்கும்.

  முரளி  ReplyDelete
 8. எந்தத் தனிமனித‌ மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பதிவோ எனது பின்னூட்டங்களோ இல்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  முரளி,

  இது நுணுக்கந்தேன் ... ஒத்துக்கறேன். ஆசிரியர்களுக்கு இவ்வளவு ஆதரவு இருக்குனு தெரிஞ்சா நம்மூர்ல ஒரு ஆசிரியரா இருந்திருக்கலாம் போல :) இப்படிப் பல்லாயிரக்கணக்கான மைலகள் தள்ளி பொட்டி தட்டிகிட்டு இருக்க வேண்டாம்னு தோணுது! காலம் கடந்த ஞாலம் :)

  நன்றி!!!

  ReplyDelete
 9. நாகு, நல்லா கேட்டுக்கங்க (இல்லை பார்த்துக்குங்க), நான் பின்னூட்டம் போட்டு அதையும் ஒருத்தர் சீரியசா எடுத்துக்கரார். என்ன ஆச்சு நம்ம சதங்காவுக்குன்னு தெரியலை. நான் சொல்றதையெல்லாம் சீரியசா எடுத்துகிட்டு காமெடி பண்றாரு. ஹூம் இருக்கட்டும் இருக்கட்டும் நானும் ஒரு நாள் எதுகை மோனை எல்லாம் போட்டு, கவிநயா, சதங்காவுக்கு சவால் விடர மாதிரி ஒரு கவிதை எழுதி அதுக்கப்புறம் எப்படி சீரியசா இருக்கராங்கன்னு பார்ப்போம்.

  ஆனா சொல்லிட்டேன் சிரிச்சு வயிறு வலி வந்தா அதுக்கு என்னை குத்தம் சொல்லக்கூடாது.

  முரளி

  ReplyDelete
 10. சதங்கா,

  //ஒரு ஆசிரியருக்கு ஏன் இந்தப் பாகுபாடு இருக்க வேண்டும்?! தன் பிள்ளையை அதே பள்ளியில் சேர்த்தால் நன்றாகப் படிக்க மாட்டார்களா ? அல்லது, அரசு பள்ளி சரியில்லை, அதனால் தனியார் பள்ளி என்றால், பின் அரசு பள்ளியில் பயிலும் மாணர்வர்களின் கதி?! எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்ற மனநிலையா?! அல்லது இவர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஏன் வேலைக்குப் போகக்கூடாது!!! இது ஒரு சில பள்ளிகள் அல்ல, பல பள்ளிகளில் இது தான் இன்றைய நிலை.//

  இது சரியான வாதம் அல்ல.

  ஒரு ஆசிரியையின் மகனாக என் கருத்தை பதிய வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

  எனது தாயார் ஒரு குக்கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியையாக 28 வருடமும், 10 வருடம் சாதாரன ஆசிரியையாகவும் வேலை பார்த்தவர். காலை 7 மணிக்கு வீட்டை விட்டு சென்றால் மாலை 6:30 - 7 மணிக்கு திரும்ப வருவார்கள். இது தவிர நான், எனது அப்பா மற்றும் அண்ணன் இருவருக்கும் காலை, மதிய மற்றும் சிற்றுண்டி போன்றவை செய்து வைக்க தினமும் காலை 4:30 மணிக்கு எழுந்திட வேண்டும்! இத்தனை வேலைக்கிடையிலும் பள்ளிக்கும்/பணிக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதற்கு சான்று இந்த விடயம் - தன் ஓய்வு பெரும் காலத்தில் சுமார் 1.5 வருடம் (சம்பளத்துடன்) விடுமுறை எடுக்க சந்தர்ப்பம் இருந்தும் அதை எடுக்கவில்லை (அதற்கு ஈடாக ஓய்வு பெற்றவுடன் பணமும் வராது!) - நான் ஏன் என கேட்டதறக்கு, "தான் விடுப்பு எடுத்தால் மாற்று ஆசிரியை இல்லாமல் மற்ற சக ஆசிரியர்களையே வைத்து ஒப்பேற்றி விடுவார்கள், அதனால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்" என்றார். இது தவிற இன்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் என்னையும் அம்மாவையும் எங்கே பார்த்தாலும் தேடி வந்து பேசுவார்கள்.

  சரி, என்னையும், அண்ணனையும் ஏன் தான் படித்த பள்ளியில் படிக்க வைக்கவில்லை? தினமும் வெகு தொலைவு இருவரையும் கூட்டி செல்வது நடக்க இயலாது. மற்றும் என்னதான் நல்ல பாடம் எடுக்கும் வாத்தியார்கள் இருப்பினும் தமிழ் வழி கல்வி மட்டும் போதாது. பல அரசாங்க பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை. இது மறுக்க முடியாத உண்மை. பொருளாதாரம் நன்கு இருக்கும் ஒரு குடும்பத்தில் தம் குழந்ததைகளை "comfortable"ஆக வளர்ப்பதை யாரும் தவறு என சொல்லமுடியாது.

  இதை தவிற இந்த நாட்டிற்கு வந்து பார்த்த பின் தான் அரசாங்க பள்ளிகளின் தரம் தெரிகிறது. இது போல நம் நாட்டில் இருப்பின் யாரும் லட்சங்களை செலவிட்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கமாட்டார்கள்.

  சரி நீஙக ஏன் இந்தியாவை விட்டு அமெரிக்கவிற்கு வந்தீர்!

  ReplyDelete
 11. ஜெய்,

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

  தங்கள் தாயாரின் அன்புக்கும் உழைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.

  எண்ணில் கோடி ஆசிரியர்களுள் உங்கள் தாயார் போல வெகு சிலரே உலர். இது உலகறியும். உங்கள் தாயார் வேலை பார்த்த பள்ளியிலேயே, மற்றவரை வைத்து ஒப்பேற்றி விடுவார்கள் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். அவர்கள் போல மற்ற ஆசிரியர்கள் அதே பள்ளியிலேயே இல்லாதது ஏன்?

  எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு ஊர்களில் பல்வேறு காலகட்டங்களில் படித்த‌ சூழ்நிலை எனது. இன்று எந்த ஆசிரியரும் என் மனதில் இல்லை. ஏன், என்று யோசித்ததும், எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் அளவளாவியதும் ஏற்படுத்திய கனமே இந்தப் பதிவு!!!

  எனது வாதம் மொத்தமாகத்தானே அன்றி ஒரு சிலரைக் குறி வைத்தது அல்ல என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  உங்களது இறுதிக் கேள்வி 'பஞ்ச்' ... இது ஒரு பதிவாகக் கூட வரலாம் விரைவில் :)


  நன்றி!!!

  ReplyDelete
 12. சதங்கா! //மற்றவரை வைத்து ஒப்பேற்றி விடுவார்கள் // - நான் சொன்னது "அரசாங்கத்தை"!

  ஆசிரியர்களை பஞ்சாத்து பள்ளிகளில் வேலைக்கு அமர்த்தும் பணி மிக கடினம். மத்த பள்ளிகள் எப்படியோ எனக்கு தெரியாது, ஆனால் எட்டிமடை பஞ்சாயத்து உயர் நிலை பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் ஆர்வமுள்ளவரகள். சில நாட்கள் மழையினால் பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லை என்றாலும் சிறப்பு வகுப்பு வைத்தாவது மாணவர்களுக்கு பாடம் எடுப்பார்கள். (நான் சனிக்கிழமைகளில் அம்மாவுடன் சென்று சிறப்பு வகுப்புகள் நடப்பதை கண்டதுண்டு!)

  //எனது வாதம் மொத்தமாகத்தானே அன்றி// எல்லா இடத்திற்கும் இது பொருந்தும் - நாம் வேலை செய்யும் இடத்தில் கூட. அதனால் இந்த பதிவு எனக்கு உடன்பாடில்லை.

  குரு என்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எனது 3 வயது மகன்(கள்) சொல்லும்/கேட்கும் சில பதில்/கேள்விகளால் சில சமயம் எனக்கு குருவாக தெரிகிறார்கள்.

  என்னை பொறுத்தவரை எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் ஒரு வகையில் குரு தான்.


  அடுத்த பதிவில் "மனம்" திறந்து எழுதுங்க!

  ReplyDelete
 13. குருவைப் பற்றி அனைவரும் நன்றாக அலசி கொஞ்சம் சதங்காவையும் பிரித்து மேய்ந்திருப்பதால் நான் அதிகம் சொல்லவில்லை :-)

  குருவும் பள்ளி ஆசிரியரும் வேறாக இருக்கலாம். ஆனால் ஆசிரியர் என்ற வார்த்தை ஸ்கூல் வாத்தியார்/வாத்தியாரினி என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஜெய் வாண்டுகளிடம் பாடம் கற்பதில் இருந்தே தெரிகிறது - எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...

  ஆனால் குருகுலமோ சரியான மெய்வழி காண்பிக்கும் குருவோ கிடைக்காமல் இருக்கும் என்போன்றோர்க்கு குரு என்றால் பள்ளியிலோ கல்லூரியிலோ பாடம் கற்பித்தவர்தான் நினைவுக்கு வருகிறது. எனக்கு குரு என்றால் பண்ருட்டி முத்தையர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வாத்தியார்தான் நினைவுக்கு வருகிறார். பெயர்கூட சரியாக நினைவில்லை. தங்கராசு என்று நினைக்கிறேன். குள்ள குள்ளனே, குண்டு வயிறனே அவர்தான் சொல்லிக் கொடுத்தார். அதற்கப்புறம் மேல்நிலைப் பள்ளி இயற்பியல்/ஆங்கிலம்/தாவரவியல் ஆசிரியர்கள் கொஞ்சம் நினைவுக்கு வருவார்கள். கல்லூரியில் பாஸ்கல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் - ஆனால் வகுப்புக்கு வெளியே அவரை அண்டவே முடியாது.

  இவர்களை விட்டால் இன்றும் எனக்கு புது விஷயங்கள் சொல்லித் தரும், நல்ல புத்தகங்களை காண்பிக்கும் என் அண்ணன் ஒரு குரு.

  தீவிரமாக குருவைத் தேடாவிட்டாலும் எப்போதாவது எங்கேயாவது ஒரு குரு கிடைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நாட்களுக்கு முன் நண்பர் கார்த்திக்குடன் மலையேறிக் (நிஜமான மலை) கொண்டிருக்கும்போதுகூட இந்த தேடல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். சிலருக்கு குரு கிடைக்கிறார். குருவின் எந்த ஆணையைும் சிரமேற்கொண்டு சிரத்தையாக செய்கிறார்கள். சிலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்றோர் குரு திடீரென ஆகாயத்தில் இருந்து குதிப்பார் என்ற கனவில் இருக்கிறோம். :-)

  மொத்தத்தில் கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் பழைய ஞாபகம், கொஞ்சம் அதீத குரு பக்தி என்று பல விஷயங்களை கொணர்ந்த பதிவுக்கு நன்றி சதங்கா...

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகு,

  பால்யகால நினைவுகளோடு, பலரும் உங்களூக்கு குருவானார்கள் என்றது சிந்திக்கத்தக்கது.

  நிஜமான மலையேறி சீக்கிரமே ஒரு நல்ல குரு கிடைக்க ப்ராப்திரஸ்து.

  நன்றி1!!

  ReplyDelete
 15. நாகு,

  உங்களூக்கு பிரத்தியேகமாக குரு தேடியதில் கிடைத்த பழைய திரைப்படக்காட்சி ...

  https://www.youtube.com/watch?v=stvgqFrZYfM

  நன்றி!!!

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!