Thursday, February 03, 2011

மீனாவுடன் மிக்சர் 23 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம்}

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!


கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

-- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

-மீனா சங்கரன்

5 comments:

  1. அமெரிக்காவிலும் இந்தியவாசனையா?
    பேஷ்!பேஷ்!!

    ReplyDelete
  2. எம்மா கோமளவல்லி,

    நான் உங்களை பார்த்து என்னைக்காவது இந்த கேள்வியை கேட்டிருக்கேனா?
    அதனால உங்களை கோமளவல்லின்னு தான் கூப்பிட போறேன்.
    ஆமா சும்மா தான் கேட்குறேன் எதுக்கு இந்த சிடிசன் ஷிப் எல்லாம்?
    இது ரொம்ப அவசியமா. அப்ப நீங்க இந்தியன் இல்லையா?

    பாட்டு எல்லாம் இனிமேல் இங்கிலிஷ்ல தானா?
    ஓகே ஓகே இனிமேல் திருப்புகழ் கிடையாதா ? RAAP தாணா?
    congratulations போர் யுவர் சிடிசன்ஷிப்.
    வேதாந்தி

    ReplyDelete
  3. எம்மா கோமளவல்லி,

    !!! congratulations போர் யுவர் சிடிசன்ஷிப்.
    சாரி, for என்பது தான் போர் ஆயிடுச்சு

    வேதாந்தி

    ReplyDelete
  4. வாங்க வேதாந்தி! அழகழகான புனைப்பெயர்கள் பின்னாடி ஒளிஞ்சிண்டு இருக்கற நம்ம ஊர் மக்கள் யார்னு நானே மனசை ரொம்ப குழப்பிகிட்டு இருந்தேன். நல்ல காலம் ஒருத்தரை இப்போ கண்டு பிடிச்சுட்டேன். 'அந்த' கேள்வியை இது வரை என்கிட்டே கேக்காதவங்க இந்த ஊர்ல ஒரு ரெண்டு பேர் தான் அதனால நீங்க யார்ன்னு ஒரு வழியா இப்ப புரிஞ்சு போச்சு. :-)

    உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி. :-)

    இப்படிக்கு ரிச்மண்டின்,
    கோமளவல்லி

    ReplyDelete
  5. //அமெரிக்காவிலும் இந்தியவாசனையா?
    பேஷ்!பேஷ்!!//

    உங்க வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி.:-) இவ்வளவு தாமதமா வந்து பதில் கொடுக்கும் என்னை நீங்க மன்னிக்கணும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!