Wednesday, March 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...



இத்தொடரை ஆரம்பிக்கும் போதே, அதிகமா வழவழாவென்று இழுக்காமல், சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன். இன்னும் ஓரிரண்டு பாகத்தில் முடித்திட வேண்டும் என்ற 'நல்லெண்ணத்துடன்', பாகம் நான்கை ஆரம்பித்தால், மனம் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது ப‌ல‌ நினைவுக‌ளுக்கு இடையில்.

இரண்டு காரணங்கள். ஒன்று, பாகம் இரண்டில்
பித்தனின், பட்டுக்கோட்டையாரிடம் பாரதியின் தாக்கம் குறித்த பின்னூட்டம். இன்னுமொன்று, நம்ம ரிச்மண்ட் மாஜி பிரசிடென்ட் ஐயா நாகு அவர்கள் தந்த புராண‌ ஒலிப்பேழைகள்.

***

ஒருவன் தன் வாழ்நாளில் நல் அறங்களைச் செய்து வாழ‌ வேண்டும் என வெகுவாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள்.

ஔவை தன் மூதுரையில்:
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.


திருவள்ளுவர் தன் குறளில்:
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பட்டினத்தார் தம் பாடலில்:
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


பட்டினத்தடிகளின் மேற்கண்ட பாடல் வரிகளில் நமக்கொன்று புலனாகிறது. 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே !' எனப் புருவச்சுழிப்பில் ஆச்சரியப்படுகிறோம். உண்மை தான். இவ்வரிகளை கண்ணதாசன், தனது 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி'யில் பயன்படுத்தி பலரின் பாராட்டுக்கும் உள்ளானார். பட்டினத்தடிகள் பதிலையும் சொல்லிவிட்டார். கண்ணதாசன் கேள்வியைக் கேட்டு, பதிலை நம்மிடம் விட்டுவிட்டார் !

***

எல்லாம் தானாக, 'க‌ல்லைத்தான் ம‌ண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்க‌த்தான்' என்றார் இராமச்சந்திரக் கவிராயர். இவ்வரிகள் பின்னாளில் கவியரசரின், 'பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர ...' என்று தேனாக வந்து பலரின் மனம் கவர்ந்திருக்கலாமோ!

உலக நீதியில், 'ம‌தியாதார் த‌லை வாச‌ல் மிதிக்க வேண்டாம்' என்று ஔவை சொன்ன அவ்வரிகளை அப்படியே பயன்படுத்தி, அதில் அர்த்த‌ம் உள்ள‌து என்று மேலும் அழுந்தச் சொன்னார் க‌ண்ண‌தாச‌ன்.

***

வாரியாரின் பிரசங்கம் ஒன்றில், அருணகிரியார் வில்லிபுத்தூராரைச் சந்திக்கும் இடம் பற்றி, இவ்வாறு விவரிக்கிறார்
வாரியார்.

வில்லிபுத்தூரார்: தாங்க‌ள் யார்?
அருணகிரியார்: ம‌னிதன்
வி: பிற‌ந்த‌ ஊர்?
அ:இந்த‌ உட‌ல் பிற‌ந்த‌து திருவ‌ண்ணாமலை
வி:ஓஹோ. த‌ங்க‌ள் பேர்?
அ:ஒரு பேரும் கிடையாது. குழ‌ந்தை பிற‌ந்த‌துனு சொன்னார்க‌ள். என் தாயார் என்னை அருண‌கிரி என்று அழைத்தாள். த‌ந்தையார் ம‌க‌னே என்றார். பாட்ட‌னார் பேர‌ப்பிள்ளை என்றார். த‌மைய‌னார் த‌ம்பி என்றார். த‌ம்பி பிற‌ந்து அண்ணா என்றான். ம‌னைவி வ‌ந்தா என்னாங்க‌ என்பாள். மாம‌னார் மாப்பிள்ள‌ என்பார். ம‌க‌ன் அப்பா என்பான். பேர‌ன் தாத்தா என்பான். வ‌ய‌சாச்சா என்றால் கிழ‌வா என்பார்க‌ள். உயிர்போச்சு என்றால் பிண‌ம் என்பார்க‌ள். சுட்டெரிச்சா சாம்ப‌ல். எத்தனையோ பேர்க‌ள் வ‌ந்து வ‌ந்து போகின்றன.

இந்தப் பேர் தாக்க‌த்திலேயே 'எந்த‌ ஊர் என்ற‌வ‌னே, இருந்த‌ ஊரைச் சொல்ல‌வா...' என‌ ஊர் பற்றி பாடியிருக்கலாம் கவியரசர்.

நான் அறிந்த கண்ணதாசன் பாடல்களில் சில‌ இங்கு உதாரணங்களாக‌............/; இவர் போன்றே பல கவிஞர்களும், பல இலக்கியப் பாடல்கலைக் கற்று, நம்போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் நிச்சயம் தந்திருப்பார்கள். க‌ண்ண‌தாச‌னுக்கு முன் சில‌ நூறு ஆண்டுக‌ள் முன் சென்றால்,

'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை !' என்றார் வள்ளலார். வள்ளலாரின் இவ்வரிகளுக்கும் ஒருவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரியபுராண சொற்பொழிவில் இதற்கு அருமையாக விளக்கம் அளிக்கிறார் கீரன். க‌ட‌வுளுக்கு உரு(வ‌ம்)த் த‌ர‌ எண்ணி அந்த‌ கால‌த்தில் பலவற்றையும் விவாதித்திருப்பார்கள் போல! பேதமில்லா உருவம் தர பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பின் மகிமையை போற்றி, அனைத்து சமயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், இறைவன் ஜோதி வடிவானவன் எனச் சொன்னாராம் மாணிக்கவாசகர். இதையே, 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்றார் அவர் தம் திருவாச‌க‌த்தில்.

இவ்வாறு ப‌ல‌ புக‌ழ் பெற்ற‌ புல‌வ‌ர்க‌ளுக்கும் முன்னோடிக‌ள் பலர் இருந்து, பல கருத்துக்களை எழுதியும், ஒரே க‌ருத்தைப் ப‌ல‌வாறு பல பேர் எழுதியும், இம்மானுட‌ம் திருந்த‌வில்லையே என்ப‌தைத் தான் ப‌ட்டுக்கோட்டையார் கோபம் கொண்டு கேட்டார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


ஏதோ கொஞ்ச‌ம் ப‌டித்த‌தனால் தான் இன்னும் மானுட‌ம் த‌ழைக்கிற‌தோ என்ன‌வோ ? புராண‌ங்க‌ளும், அற‌நெறிக‌ளும் இல்லாம‌ல் இருந்திருந்தால் இன்றைய‌ உல‌க‌ம் எவ்வாறு இருந்திருக்கும்? ச‌மீப‌த்தில் ஒரு ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு, த‌மிழ‌க‌த்தையே உலுக்கிய‌தை வெகு சாதார‌ண‌மாக‌ எடுத்துச் சென்றிருக்கும் !!!

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

3 comments:

  1. ஔவை, அருணகிரிநாதர், வள்ளலார், கவியரசர் என்று அனைத்து திக்கிலும் விளாசியிருக்கிறீர்கள். அருமையான பதிவு. அவ்வப்போது நமக்குள் ஓடும் 'நான் யார்' கேள்வியையும் அழகாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    நீங்கள் பள்ளி நிகழ்ச்சியை குறிப்பிட்டது எனக்கு மற்றொரு விஷயத்தை நினைவூட்டியது. காந்தி குறித்து ஐன்ஸ்டின் சொன்னது: "Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth."

    ReplyDelete
  2. சதங்கா,

    ஊர் என்றும் கவிஞனின் அறிவை மெச்சாது. கண்ணதாசன் புராணங்களின் கருத்தையே சொன்னார்.
    வைரமுத்து கண்ணதாசனை சொன்னார். இப்படியே தான் சொல்லும்.
    கவிஞன் சொல்லுவதை தனது தாக்கத்தில் எழுதுவது தான் அவனது திறமை.
    மழையை வர்ணிக்காத கவிஞன் இல்லை.ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்லி உள்ளனர்.
    கொட்டும் மழை , மேகத்தின் அழுகை, விண்ணையும் மண்ணையும் இணைக்கும் கம்பி, காதலியின் கோபம் என்றெல்லாம் வித விதமாக
    வர்ணித்துள்ளனர். இருப்பதை அனுபவிக்காமல் இழந்ததையும் வருவதையும் மட்டும் என்னும் நாம் ஒன்றும் விதி விலக்கல்ல.
    உங்களின் பட்டுக்கோட்டை பயணம் தொடரட்டும். மிக அருமையான நினைவு பதிவு.
    முடிக்கும் முன்பு, பட்டுக்கோட்டையின் "ஆரம்பமாவது மண்ணுக்குள்ளே மனிதன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே "
    என்ற பாட்டை உங்கள் வரிகளில் எழுதவும்.

    நன்றி
    வேதாந்தி

    ReplyDelete
  3. வாசிப்புக்கும், கருத்திற்கும் நன்றி நாகு & வேதாந்தி

    @நாகு: எல்லாம் தங்கள் புண்ணியம். ஒலிப்பேழைகளை என் தலையில் கட்டிவிட்டு, நீர் சொகுசாக ஊர் சுற்றுகிறீர். உங்களிடம் இருந்தும் இலக்கியப் பதிவுகள் எதிர்பார்க்கிறேன் விரைவில், செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

    @வேதாந்தி: வழி வழி வரும் இலக்கியக் கருத்துக்கள் பற்றி தங்கள் கருத்து தான் எனதும். இருப்பினும், மழை என்ற அனைவரும் அறிந்த ஒன்றைப் பலரும் தங்கள் திறனில் எழுதினால், முன்னவரின் தாக்கத்தில் பின்னவர் எழுதினார் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. நாம் அறியாத ஒன்றை, ஆனால், அனுதினம் நாம் செய்யும், அதனால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய கருத்தை, இலக்கியத்தில் தேடிப் பிடித்து இக்காலத்திற்குத் தகுந்தவாறு எழுதும் இக்காலக் கவிஞனின் திறமையும் திறமையே. இதற்கு கவியரசர் கண்ணதாசனே மிகச் சிறந்த உதாரணம் மற்றும் வழிகாட்டி. பட்டுக்கோட்டையார் பற்றிய தொடர் பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வேண்டுகள் மனதில் இருத்தி, இறுதி பாகத்தில், 'ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே' பற்றி பதிகிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!