Friday, March 02, 2012

போலிச் சீர்த்திருத்தங்கள்

       தன்னை பணக்காரனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஏழைகள் என்று மத்திய தர வர்க்கத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்தது சரியானதுதான் என்று பல சமயங்களில் நினைப்பதுண்டு. சில மத்தியதர் வர்க்க குடும்பத் திருமணங்களுக்கு போன சமயங்களில் நான் அந்த விளக்கத்தை பற்றி நினைத்துக் கொள்வேன் தேவையில்லாத ஆடம்பரங்களைச் செய்துவிட்டு திருமணத்துக்காக கடன்பட்டு வாழ்க்கையைச்சுமையாக்கி கொண்ட பலரை எனக்குத் தெரியும்.
 
          காஞ்சி பெரியவர் கூட ஒரு சமயம் தேவையில்லாமல் அதிக படாடோபத்துடன் நடக்கும் திருமணங்களைப் பற்றி பேசியிருக்கிறார். ஒரு சமயம் சலிப்படைந்து போய் திருமணப் பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்று போடுவதைக் கூட தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்காக எந்த சங்கர மடத்துச் சீடனும் தான் மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்வதை தவிர்த்ததில்லை. குறைத்துக் கொண்டதுமில்லை. கடன் படுவது பெண் வீட்டுக் காரனாக இருப்பதுதான் இதற்கான காரணம். மதம் தோன்றிய காலத்திலிருந்தே போலித்தனமும் பிறந்துவிட்டது.
 
ஆடம்பரமான திருமணம் தன்னுடைய சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு முறை. மதத் தலைவர்களுக்கு பக்கத்தில் பயபக்தியுடன் நிற்பதும் அந்தஸ்து தேடிக் கொள்ளும் ஒரு வழிதான்.
 
         திருமணத்தில் பல வகையான சீர்திருத்தங்கள் தேவை என்ற கருத்துள்ளவன் நான். சில சமயங்களில் திருமணங்களுக்கு போவதையே  தவிர்த்து வந்தேன் ஆனால் அப்படி செய்வது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை.
 
           பெரியார் ஈ .வே. ரா   இரு சாதிகளைச் சேர்ந்த மணமக்களுக்கு நடக்கும் திருமணத்தை சீர்திருத்த திருமணம் என்றார். அவருடைய தொண்டர்கள் நடத்தும் திருமண விழாவில் ஆடம்பரம் கிடையாது. புரோகிதர்கள் கிடையாது. தாலி கட்டும் வழக்கமும் கிடையாது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் வாக்குறுதியை மணமக்கள் படிக்கும் விழா தான் அங்கே திருமணமாகிறது.
 
         இந்த வகை திருமணங்களும் இப்பொழுது பெயரளவுக்குத் தான் சீர்திருத்த திருமணம். ஒரே சாதியைச் சேர்ந்த மணமக்களுடைய திருமணத்தையும் சீர்திருத்த திருமணம்  என்று முத்திரை குத்தி விட்டார்கள். ஒரே மாற்றம் அங்கே பிராமண புரோகிதர் கிடையாது. தீ வளர்ப்பதில்லை.  சில திருமணங்களில் தாலி கட்டுகிறார்கள் . சில திருமணங்களில் அது இல்லை.
 
                  ஆனால் எல்லா சீர்திருத்த திருமணங்களிலும் ஒன்று ந மட்டும் நிச்சயமாக உண்டு. அதுதான் மேடைப் பேச்சு.
 
                  என்னுடைய அலுவலகத்துக்கு ஒரு பெண் புதிதாக வேலையில்சேர்ந்தாள். தினமும் தஞ்சாவூரிலிருந்து ரயிலில் அலுவலகத்துக்கு வருவாள். செல்வி என்று பெயர். நல்ல பெண் சுறுசுறுப்பான பெண் வந்த சில நாட்களிலேயே வேலையைக் கற்றுக் கொண்டாள். எல்லோரிடமும் இனிமையாகப் பேசினாள். பழகினாள் அந்த பெண்ணின் தந்தையும் ரயில்வேயில் வேறு ஒரு பிரிவில் வேலை  செய்பவர். அவரை நான் முன்பே பார்த்திருக்கிறேன், ஆனால் பழக்கமில்லை அவர் வந்து என்னிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். 
 
              அவர் பெரியாருடைய பக்தர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் ஆவேசமாக அரசியல் பேசுவார் என்றும் எனக்குத் தெரியும்.
 
          ஒரு ஆண்டு கழித்து அந்த பெண் தன்  திருமணப் பத்திரிகையை கொண்டுவந்தாள் நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்றாள் .மறுநாள் பெண்ணின் தந்தையும் வந்து அழைத்தார்.
 
         பத்திரிகையில் வாழ்க்கை ஒப்பந்த விழா என்று அச்சடித்திருந்தார்கள் .வாழ்த்திப் பேசுவதற்காக பல கட்சித் தலைவர்களுடைய பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. அநேகமாக தஞ்சாவூரில் உள்ள எல்லா கட்சிப் பிரமுகர்கள் பெயர்களும் அந்த பேச்சாளர் பட்டியலில் இருந்தது.
 
          திருமணத்துக்கு சரியான நேரத்தில் போய்ச்  சேர்ந்தேன். தஞ்சாவூரில் ஒரு பிரபல திருமண மண்டபத்தில் நடந்தது. நாதஸ்வர இசை முழங்கிக் கொண்டிருந்தது. மேடையில் அலங்கரிக்கப் பட்ட இரண்டு  நாற்காலிகள் மேலும் பேச்சாளர்களுக்காக மேலும் பல நாற்காலிகள் போடப் பட்டிருந்தன.
மேடையின் வலது புறத்தில் பெண்ணுக்கு சீராகக் கொடுக்கவிருக்கும் பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள், வகைவகையான இதர பொருட்கள் ஸ்கூட்டர், பீரோ,கட்டில், மெத்தை,
தலையணை, மற்ற  துணி வகைகள் இப்படி ஏராளம். 
 
       இதையெல்லாம் பார்த்து நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். இதில் எங்கே சீர்திருத்தம் இருக்கிறது என்று தேடித் பார்க்க வேண்டியிருந்தது.  சில நிமிடங்களுக்குப்ம்பிறகு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. பெண்ணினுடைய தந்தை மேடைக்கு வந்து விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மணப் பெண்ணும் மணமகனும் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.
 
       பிறகு பேச்சாளர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க ,தி.மு.க இப்படி எல்லா கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் மாறி மாறி பேசினார்கள். தமிழர்களுக்கு தாலி அணியும் பழக்கம் கிடையாது அது ஆரியம் புகுத்திய அடிமைச் சங்கிலி என்றார் ஒருவர். இன்னொருவர் வேட்டைக்குச் சென்று வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தை தன் காதலிக்கு அணிவித்தான் தமிழன். அதுதான் பிறகு தாலியானது என்று தன் ஆராய்ச்சி உண்மைகளை போட்டு வெளுத்துக் கட்டினார். பேசிய
பெரும்பாலான கருத்துகள் திருமண நிகழ்ச்சிக்கு எந்த தொடர்பும் இல்லாத வெற்றுப் பேச்சுகள் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு சலிப்பு ஏற்பட்டது.
 
    சுமார் இரண்டு மணி நேரமாக பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது நான் மேடைக்கு சற்று அருகில்தான் உட்கார்ந்திருந்தேன். புறப்பட்டு போகலாம் என்று கூட நினைத்தேன். பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் என் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு நகரலாம் என்று பொறுமையாக காத்திருந்தேன்.
 
         மேடையில் இருந்த பெண்ணைப் பார்த்தேன். மணப்பெண் செல்வி மேடையில் தூங்கி தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள். எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள்  எனக்கு புரிந்துவிட்டது .ஐயோ அந்த பெண்
பாவம் என்றுதான் எனக்கு தோன்றியது.தொடர்ந்து இரண்டு மணி நேரம் யார்தான் இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியும்?
 
         ஒரு வழியாக எல்லா பேச்சாளர்களும் பேசி முடித்தார்கள் ஒருவர் உறுதிமொழி பத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு படித்தார்.அதைத் தொடர்ந்து மணமகனும் ,மணமகளும் அந்த ஒப்பந்தத்தை படித்தார்கள் விழா முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏதோ அரசியல் கூட்டத்துக்கு போன உணர்வோடு நாற்காலியை விட்டு எழுந்தேன் . பிறகு விருந்து தொடங்கியது தஞ்சாவூர் பாணியில் அருமையான அறுசுவை  விருந்து.
 
         திருமணத்தை தொடர்ந்து பதினைந்து நாள் விடுமுறை யில் சென்ற செல்வி ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தாள். புதியதாக திருமணமான அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
 
என்னம்மா ஹனிமூனுக்கு எங்கே போயிருந்தாய்?என்று கேட்டேன் பெங்களூர் ,மைசூர் போயிருந்ததாகச் சொன்னாள்அடுத்து திருமண விருந்தை பற்றி பேசினேன். மற்ற பேச்சுக்கு இடையில் சிரித்துக் கொண்டே கேட்டேன் என்னம்மா செல்வி கல்யாண மேடையிலேயே உனக்கு தூக்கம் தள்ளியதே.அந்த பேச்செல்லாம் உனக்கு பிடிக்கவில்லையா?என்று கேட்டேன். 
 
மாறி மாறி ஒவ்வொருவராக அறுத்தால் தூக்கம் வராதா என்றாள் . சிறிது தாமதித்து மேலும் சொன்னாள். எல்லாம் டிராமா சார் என்றாள்.
 
        எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் என்று கேட்டேன். அந்த பெண் சொன்னாள் எங்க அப்பா செய்ததெல்லாம் வெறும் டிராமா தான் சார் .காலையிலேயே எனக்கு மாரியம்மன் கோயிலில் என் கணவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்றாள். 
 
நான் சிரித்துக் கொண்டே உண்மையாகவா? என்றேன்.  ஆமாம் என்று தலையாட்டிவிட்டு திரும்பவும் உறுதியாக சொன்னாள்.
 
       நீங்கள் மட்டும் போனீர்களா ?என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்னாள். நான், என் கணவர் என் அப்பா என் அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் கோயிலுக்கு போனோம் ஆனால் என் அப்பா கோயிலுக்குள் வர வில்லை வெளியே நின்று கொண்டு விட்டார். என்றாள்.
 
             இந்த வகை சீர்திருத்தங்களை கண்டு சிரிப்பதா, வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த மணப்பெண்ணே இப்பொழுது மாமியார் ஆகிவிட்டாள்.
 
 
                                                                                                                                மு.கோபாலகிருஷ்ணன்
 

5 comments:

 1. இந்த சீர்த்திருத்தக் கல்யாணங்கள் எனக்குத் தெரிந்தவரை எல்லாம் இந்தக் கோலம்தான். முதலில் ஐயரை வைத்து கோவிலிலோ மண்டபத்திலோ சம்பிரதாய கல்யாணம் செய்துவிடுவார்கள். பிறகு ஏதாவதொரு கழகக் கண்மணி தலைமையில் மற்ற கட்சிக்காரர்களை அர்ச்சனை செய்தவாறு ஒரு சீர்த்திருத்தக்கல்யாணம் நடக்கும்.

  பண்ருட்டியில் மாரியம்மன் கோவிலுக்கு தர்மகர்த்தா போல விளங்கி தாம்தூம் என்று பூஜை நடத்திய பக்த சிகாமணி ஒருவரின் கல்யாணமும் இப்படி நடந்த ஒரு கேலிக்கூத்துதான்.

  //பெரியார் பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்//
  இதில் உள்குத்து ஏதும் இல்லையே? ;-)

  ReplyDelete
 2. ஆஸ்ரமங்கள் மடங்களாகிப் போவதைப் போலத்தான்
  இந்த பகுத்தறிவு பிரச்சாரங்களும்
  தடம் மாறித்தான் போய்க்கொண்டிருக்கின்றன
  அருமையான அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. உங்கள் பதிவில் கண்டதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே.
  தம்மை முற்போக்கு வாதி என்றும் திருமணச்சடங்குகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று
  தம்பட்டம் அடிக்கவும் அந்த நேரத்தில் அரசியல் வாதிகள் மற்றும் ஆன்மீகத்தை விளாசித்தள்ளும்
  சமூக, இலக்கிய சீர்திருத்த வாதிகளும் படையெடுத்துகொண்டிருந்த காலம் 1960 முதல் 1980 வரை ஆகும்.
  அப்பொழுது எனது கிளை மானேஜர் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு மயிலாடுதுறை ஒரு திருமண்
  மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். மேடையில் திருப்பதி வெங்கடாசலபதி படம் மிகப்பெரிய அளவில்
  மாட்டப்பட்டிருந்தது. அதன் இரு பக்கங்களிலும் மிகப்பெரிய இரு வெங்கல குத்துவிளக்குகள் அழகென‌
  எரிந்துகொண்டிருந்தன.

  விழாவில் பேசவந்த பிரமுகர் ஒருவர், இது போன்று கடவுள் படங்கள் எதிரிலே பெரிய குத்துவிளக்குகளில் எண்ணை ஊற்றி எரிப்பதால் எந்த அளவுக்கு செலவு ஏற்படுகிறது, இது திருமணங்களுக்குத் தேவைதானா என்று சாடினார். அத்துடன் நிற்காமல், தமிழ்க்குடும்பங்களில், தினப்படி வீடூகளில் கடவுள் என்று சொல்லி படங்கள் முன்பே, விளக்கில் எண்ணை ஊற்றி எரிப்பதால், திரியும் எண்ணையும் சேர்ந்து ஒரு குடும்பம் எந்த அளவுக்கு செலவு செய்கிறது, அதை மிச்சப்படுத்தினால் எந்த அளவுக்கு தொகை இருக்கும் , ஒரு நாலே ஆண்டுகளில் நாற்பதாயிரம் ரூபாய் ஆகும்
  ( 1970 விலை வாசி நிலவரப்படி ) அதைத் தவிர்க்கவேண்டும், இம்மாதிரி மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழிக்க‌
  வேண்டும் என்றார். மற்றும் மண விழா முடிந்தபின் ம்ஞ்சள் அட்சதை மணமக்கள் தலையிலே போட்டு
  எந்த அளவிற்கு அரிசியை வீணாக்குகிறோம் என்று விளக்கினார்.

  ஒரு மணி நேரம் அவர் பேசி முடித்தபின், மணமகளும் மணமகனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
  அதற்குள்ளாகவே, மண்டபத்தில் அமர்ந்திருந்த எல்லோருக்கும் ரோஜா இதழ்களும், மஞ்சள் அட்சதை (அரிசி) யும்
  கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் அங்கிருந்தபடியே, சிலர் மேடைக்கும் வந்து, பூக்களையும் அட்சதையும்
  மணமக்களை நோக்கி போட்டு அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். அந்த மண்டபம் முழுவதுமே அட்சதையாலும்
  புஷ்பங்களினாலும் நிறைந்து காணப்பட்டது கண்டு பேச்சாளர் என்ன நினைத்திருப்பார் எனத் தெரியவில்லை.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 4. சீர்திருத்த திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சென்று பார்த்ததில்லை. அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. கட்டுரைக்கும் க்ளைமாக்ஸ் வைத்து எழுதியது அற்புதம்.

  ReplyDelete
 5. GK ஐயா

  நீங்கள் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மையே. ஏன் பெரியாரும் கருணாவும் பெரிய சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொண்டு
  எத்தனையோ தவறுகள் செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் தன் பக்கம் கவனத்தை திருப்புவதற்காக
  ஏதோ ஒன்றை செய்வது என்பது போலத் தான் இதுவும். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவில் ஒரு கல்யாணம், இந்தியாவில் அதே பொன்னுடன் இன்னொரு கல்யாணம் என்று மாறியுள்ள காலம். நமக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்வது தான் சால சிறந்தது.
  ஊருக்கு தான் உபதேசம் என்பது சகித்து கொள்ளும் அளவுக்கு மாறி விட்டது.

  உங்களின் பதிவும் பேச்சும் மிக்க அருமை.

  நன்றி

  வேதாந்தி

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!