Friday, March 14, 2008

என் தமிழ்!

என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!


--கவிநயா

8 comments:

  1. வாழ்க உங்கள் தமிழ்ப்பற்று :-) நம்மை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியதே அதுதானே!!

    ReplyDelete
  2. கவி,

    எப்படி இருக்கீங்க??

    ரொம்ம்ம்ப நாளைக்கு பிறகு உங்க கவிதை...அதுவும் தமிழைப்பற்றி...:)

    நான் வேறென்ன சொல்ல போறேன்...ஜஸ்ட் வாவ்வாவ்!!!!

    ReplyDelete
  3. இன்றுதான் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" பாட்டை டி ஆர் மகாலிங்கத்தின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் அருமையாக இதை எழுதியிருக்கிறீர்கள்.

    கள்வன்போலே - நிறைந்தாள் - இடிக்கிறது. சரி கொஞ்சம் நகர்ந்துக்கறேன். கடைசியில் நானோவுக்கு பதில் நான் என்று முடித்திருந்தால்(இன்னும் கொஞ்சம் நவுருய்யா).

    ReplyDelete
  4. மல்லிகை - சென்னையா உங்களுக்கு. தமிழ்க் கவிதையை அழகாக சென்னையின் தூயத்தமிழில் வியந்திருக்கிறீர்களே அதுதான் கேட்டேன். :-)

    ReplyDelete
  5. நன்றி சேது, வாவ் வாணி! :) நீங்களெல்லாம் இணைய வலம் வரதால எனக்கு இங்கிருந்தபடியே உங்க தரிசனம் கிடைச்சிடுது :) நன்றி, நன்றி!

    நாகு, இடிக்கிறப்பல்லாம் நகர்றதுக்குப் பழகிக்கிட்டீங்க; ஒரே ஒரு விஷயம் -உங்களுக்கு இடிக்கிற இடத்துல எல்லாம் எனக்கு இடிக்கல. வேணுன்னா உங்களுக்கு நேரம் கிடைக்கிறப்ப வாசிச்சுக் காண்பிக்கிறேன் (இப்படிச் சொன்னதைக் கேட்டு நீங்க இன்னும் ரொம்ப தூ.........ரமா நகர்றது தெரியுது :)

    ReplyDelete
  6. கவிநயா,

    தமிழைப் பற்றின‌ கவிதை அருமை !

    //உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
    உயிருக்குத் தாலாட்டும் அவளே
    என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
    என்தமிழை மறப்பேனோநானே!//

    ஈற்றடியில் "அவளே" என்று முடிந்ததால், அடுத்த ஈற்றடி "நானே" என்று முடிந்தது நல்லாத் தானே இருக்கிறது நாகு ?!!

    ReplyDelete
  7. நாகு, இந்த மல்லிகை கோவைக்காரங்க. நம்மளை மாதிரி அமெரிக்காலதான் அவங்களும் குப்பை கொட்டிக்கிட்டு இருக்காங்க.

    //நீங்களெல்லாம் இணைய வலம் வரதால எனக்கு இங்கிருந்தபடியே உங்க தரிசனம் கிடைச்சிடுது :)//

    இது ரொம்ப ஓவர்!!

    ReplyDelete
  8. நன்றி சதங்கா! கவிதை ப/பிடிச்சதுக்கும் விளக்கத்துக்கும்!

    'கள்வன் போலே' க்கும் விளக்கம் சொல்லிடறேன், நாகு. நான் பெண்பால்ங்கிறதால "உள்ளம் கவர் கள்வன்"னு சொன்னென்; தமிழை பெண்பாலாச் சொன்னதால, நிறைந்தாள்னு முடிச்சேன். கள்வன் உதாரணம்தான்கிறதால சரியாதான் வருதுங்கிறது என் கருத்து. ரொம்ம்ம்பக் குழப்பிட்டேனா? :)

    //நீங்களெல்லாம் இணைய வலம் வரதால எனக்கு இங்கிருந்தபடியே உங்க தரிசனம் கிடைச்சிடுது :)//

    //இது ரொம்ப ஓவர்!!//

    அரசியெல்லாம் (நகர்)வலம் வந்தாத்தானே சாதாரணர்கள் அவங்களைப் பார்க்க முடியும்? :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!