Wednesday, March 12, 2008

எங்கும் சுஜாதா, எதிலும் சுஜாதா...

வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சி எனக்கு சுஜாதாவை நினைவூட்டாமல் இருந்ததில்லை.

எங்காவது அரிசி சிந்தியிருப்பதைப் பார்த்தால் சுஜாதா!

குதிரைக்கு வெகு அருகே சென்றால், சுஜாதா! (டாக்டர் குதிரைக்கடியா என்று ஒரு பெரிய புத்தகத்தை எடுப்பார். மனைவி உடனே - அதில் குதிரைக்கடிக்கு இல்லை என்பாள்! போன டாக்டரின் அனுபவம்)

ரோட்டிலோ ட்ரெயினிலோ விற்கும் தின்பண்டங்களைப் பார்த்தால் சுஜாதா! (அந்த பண்டம் வேண்டாம் - இஞ்சினுக்கு போடும் ஆயிலில் பண்ணியிருப்பான்!)

டைம் மெஷின் பற்றி எங்கு படித்தாலும் சுஜாதா! (கடவுள் வந்திருந்தார்).

திருப்பதி பற்றி பேசினால் சுஜாதா - 'திமலா'.

சாடிலைட் என்றால் சுஜாதா! வானத்தில் ஒரு மௌனத் தாரகை. (கூட அவர் கிளாஸ்மேட்டும் நினைவில்)

சினிமாவிலோ விமான நிலையத்திலோ கழிப்பறையில் காத்திருந்தால் சுஜாதா! " என் ராசி - எனக்கு முன்னால் இருப்பவன்தான் குடம் குடமாக போவான்" - நிர்வாண நகரம் என்று நினைக்கிறேன்

சிறுவர்களுக்கு மகாபாரதம் கதை சொல்லும்போது தர்மன் - யட்சன் விவாதத்தில் சுஜாதா!

யாருக்காவது கலைமாமணி கிடைத்தால், சுஜாதா! - சென்ற வாரம் நானும் லூஸ்மோகனும் கலைமாமணி பெற்றுக்கொண்டோம்.

சிங்கப்பூரில் ட்ரெயின்கள் நிமிடம் தவறாமல் வருகிறது என்று நண்பன் புகழ்ந்தால் - சுஜாதா(சொர்க்கத்தீவு - don't ask me!)

சாய்பாபா கலைஞருக்கு மோதிரம் கொடுத்தார் என்றால் சுஜாதா!(கடவுள் வந்திருந்தார்)

சிப்பாய் கலகம் அல்லது  பைராகி என்றால் சுஜாதா! (ரத்தம் ஒரே நிறம்)

குடகு காபித்தோட்டம் என்றால் சுஜாதா! (கதைப் பெயர் மறந்துவிட்டது - ஒருவர் மனைவி காணவில்லை என்று கணேஷ்-வசந்திடம் கதை பண்ணுவார்)

ஸ்காட்லண்ட் யார்ட் என்றால் சுஜாதா! (ப்ரியா)

அழகான நாய்க்குட்டியைப் பார்த்தால் சுஜாதா!(மீண்டும் ஜீனோ)

நியூட்டன் விதிகள் என்றால் சுஜாதா! (ஒரு கதையில் அவ்விதிகளை வைத்து விபத்துக்கு காரணம் யார் என்று கணேஷ் கண்டுபிடிப்பான்)

சமீப காலமாக, யாருக்காவது இருதய சிகிச்சை என்றால் சுஜாதா - சிகிச்சைப்பிறகு எடுத்த என் போட்டோவைப் பார்த்து சின்ன பசங்கள் பயப்படுகிறார்களாம்.

உங்கள் பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மும்பையைச் சார்ந்த என் சக ஊழியரிடம் ஒருமுறை பெங்களூர் மற்றும் டெல்லி ஆட்டோக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் நாம் போகுமிடத்திற்கு வராமல் அவர்கள் போகுமிடத்தை சொல்லி அழைப்பார்கள் நினைவிருக்கிறதா? அவர் தனக்கு அந்த பிரச்சினை எப்போதுமே பெங்களூரில்
இருந்ததில்லை என்றார். ஆட்டோவை நிறுத்தி பனசங்கரி காவல்நிலையம் போகவேண்டும் என்பாராம். ஒரு மறுப்பும் வராதாம். அவர் வீடு காவல்நிலையத்திற்கு பக்கத்து வீடாம். "அப்படியா, என் அபிமான எழுத்தாளர் தமிழில் அப்படி காவல்நிலையத்து பக்கது வீட்டில் இருந்தவரை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார் என்றேன். தமிழ் சுத்தமாக தெரியாத அந்த மனிதரிடம் இருந்து வந்த கேள்வி - "யார் சுஜாதாவா?"

எனக்கு ஒரே ஆச்சரியம். சுஜாதா அந்த வீட்டில் அவருக்கு முன்னால் குடியிருந்தாராம்!

போன மாதம் மகனுடன் ஒரு வகுப்பிற்கு சென்றிருந்தேன். அந்த வகுப்பில் இன்னொரு இந்தியர் தன் மகளுடன் வந்திருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தபோது அவர் பெங்களுர் பி ஈ எல்'லில் பணிபுரிந்ததாகச் சொன்னார். உடனே நமக்கு வேறு என்ன தோன்றும்? - ரங்கராஜன் என்று ஒருவர் இருந்தாரே தெரியுமா? ஏதோ நமக்கு ரொம்ப தெரிந்தவர் மாதிரி! சுஜாதா அவருடைய மேலாளருக்கு மேலாளராம். எங்காவது வேலை நிமித்தமாக பயணம் செய்ய அனுமதி வாங்க சில சமயம் பேசியிருக்கிறாராம்.

நான் பெங்களூரில் பணிபுரிந்த சமயம் சதாசிவ நகரில் இருந்த எங்கள் அலுவலத்தின் வழியாக சிலமுறை சுஜாதா காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எம்ஜிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சிஆரெல்லிருந்து வெளியே வந்து பக்கத்தில் நடந்து வந்தார். அவ்வளவு அருகில் சுஜாதா! எனக்கு ஸ்தம்பித்து விட்டேன். சுதாரித்து, பேசலாம் என்று பார்த்தால் சட்டென்று காரில் ஏறி சென்று விட்டார்.

அப்போது பெங்களூர் அலுவலகத்தில் CASE Tools எழுதிக்கொண்டிருந்தோம். சரியாக ப்ரோக்ராம் எழுத வராதவர்கள் போய் மற்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்று ட்ரெய்னிங் கொடுக்க செல்வார்கள். அப்படி செல்பவர்களில் ஒருவர் ஒரு நாள் - that Rangarajan should be shot dead என்று கூவிக் கொண்டிருந்தார். என்னய்யா விஷயம் என்றேன். பிஈஎல்லில் ட்ரெய்னிங் போயிருந்தாராம். அப்போது அங்கே ஒரு ரங்கராஜனிடம் வாக்குவாதம். ப்ரோக்ராமர்கள் தாங்கள் எழுதுவதை அவர்களே டாக்குமெண்ட் செய்யவேண்டுமா வேண்டாமா என்று. நமக்கு நம்மை சொன்னால் கூட கோபம் வராது. சுஜாதாவைச் சொல்லிவிட்டால்? எனக்கு அதில் முரணான கருத்து இருந்தாலும் அந்த ஆளிடம் சுஜாதா சார்பாக அரைதினம் சண்டை போட்டேன். சுஜாதா பற்றி ஏதாவது சொல்லிவிட்டு யார் தப்பித்தார் நம்மிடமிருந்து. சதங்காவிடம் கேட்டுப் பாருங்கள். நம் பதிவில் சதங்காவிடம் பின்னூட்டத்தில் நடந்த சண்டை பற்றி தெரியுமா உங்களுக்கு?


சிறு வயதில் என் சகோதரர்களுக்குள்ளே கடும்சண்டை வர ஒரு காரணம் சுஜாதா புத்தகம் - யார் முதலில் படிப்பது என்று. முதலில் படிப்பவன் சத்தமாக சிரித்து சிரித்து மற்றவர்கள் வயத்தெரிச்சலை கொட்டிக் கொள்வான். சுஜாதா பற்றி நிறைய வாக்குவாதம் சகோதரர்களுக்குள் நடந்திருக்கிறது. என் சகோதரர்கள் அறிமுகப்படுத்தியதால் என் வகுப்பில் எல்லோரும் அம்புலிமாமா படிக்கும் வயதிலேயே  நான் சுஜாதாவுக்கு தாவிவிட்டேன்.

உயர்நிலைப்பள்ளியில் கலைக்கழகப் போட்டி நடக்கும். தமிழ்க் கட்டுரையில் - உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் - இந்த தலைப்பை விட அதிகமாக அரைத்த புளி ஏதாவது இருக்கிறதா? அதிலும் வழக்கம்போல திருவள்ளுவர் அல்லது பாரதி பற்றிதான் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஒருமுறை பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து சுஜாதா பற்றி எழுதிவிட்டு வந்தேன். என் அண்ணன்மார் எல்லாம் சிரி சிரி என்று சிரித்தார்கள். மறுநாள் போய் பார்த்தால் எனக்கு இரண்டாம் இடம்! உமாபதி வாத்தியார் சொன்னார் - "உயிரோடு இருக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியதற்காகவே உனக்கு இரண்டாம் இடம்". அப்படியும் முதலிடத்தை பாரதியே தக்கவைத்துக் கொண்டார். இப்போது அந்த வரிசையில் அநியாயமாக சேர்ந்து விட்டார் இந்த மனுஷனும்!


கல்லூரியில் ஆங்கில வகுப்பில் உனக்கு பிடித்த விஞ்ஞானக் கதையைப் பற்றி எழுது என்று ஒரு அஸைன்மென்ட். மக்களெல்லாம் அஸிமோவ் அது இது என்று பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார்கள். லைப்ரரியில் இருக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களும் போய்விட்டன. நமக்கு என்ன கவலை? மீரா பேனர்ஜி எல்லா தலைப்புகளையும் புரட்டி விட்டு திடீரென வாய்விட்டு படித்தார்கள்: A Silent Star in space - by Sujatha! நினைவில் இருந்த கதையை ஆங்கிலத்தில் சிறிதாக மொழி பெயர்த்து சேர்த்து ஒரு விமர்சனமும் எழுதி முடித்துவிட்டேன். மீரா பேனர்ஜிக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் சயன்ஸ் பிக்ஷன் கூட எழுதுகிறார்களா என்று? மீரா பேனர்ஜி மேடம் கூட சென்ற மாதம்தான் காலமானார்கள்.

இதில் வருத்தமான விஷயம் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். மனுஷன் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டார் என்று ரவி திருவேங்கடத்தான் கூட மின்னஞ்சலில் புலம்பியிருந்தார். அடுத்த ஜென்மத்தில் சொல்வாரா என்று பார்த்தால் மனுஷன் எங்கே திரும்பி வரப் போகிறார், அரங்கன் காலில் போய் ஐக்கியமான பிறகு? குட் பை, சுஜாதா! உங்களாலான சின்ன உதவி - சமயம் கிடைக்கும்போது அரங்கன் செவியில் ராஜேஷ் பற்றி கொஞ்சம் போட்டு வையுங்கள்.

9 comments:

 1. நாகு,

  மிக அருமையான பதிவு. நிர்வாண நகரம் தொடர் கதையில் ஜீவராசி என்ற பெயரை அவர் பின்னர் விளக்கும் விதம் மிக அருமையாக இருக்கும். அவருடைய அப்ஸரா, தேடாதே போன்ற குறுநாவல்கள் அபூர்வமான படைப்புகள். எனக்குத் தெரிந்து தமிழில் 'sequel' வகை நாவல்களை எழுதியவர் இவர்தான் என நினைக்கிறேன். உ-ம். சிவந்த கரங்கள், கலைந்த பொய்கள். பிரிவோம் சந்திப்போம், பிரிவோம் சந்திப்போம் 2. பாகம் இரண்டை அமெரிக்கா வந்து பார்த்து விட்டு எழுதியதாகத் தகவல். ஒரு கால கட்டத்தில் அவருடைய வீட்டு வண்ணான் லிஸ்டுகூட ப்ரபலம்.

  அவரோடு நான் பேசிய ஒரு முறை எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. அவருடைய அந்த மென்மையான குரல், துரு துரு பார்வை, யார் பேசினாலும், முதல் முறை அந்த விஷயத்தை தெரிந்து கொள்வது போல கேட்கும் ஆர்வம், யாரையும் நீ தவறு என்று சொல்லாமல் விமர்சித்த பாங்கு என்று சொல்லிக் கொண்டே போகலாம், அவரோடு கலந்துரையாடியது 30 நிமிடங்கள்தான் என்றாலும், அது இன்னும் பசுமரத்தாணி போல என் நினைவில் இருக்கிறது.

  உங்கள் பதிவின் முத்தாய்ப்பாக, ராஜேஷை பற்றிய செய்தி அற்புதம். அரங்கனின் அருள் ராஜேஷுக்கு கிடைத்து அவர் சீக்கிரம் குணமடையவும், (சுஜாதா)ரங்கராஜனின் ஆன்மா சாந்தியடையவும் மீண்டும் ஒரு முறை ப்ரார்த்திப்போம்.

  பித்தன்.

  ReplyDelete
 2. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க, நாகு! எழுதின விதத்துல இருந்தே உங்க (சுஜாதா) ரசிகத் தன்மை பளிச்சுன்னு தெரியுது...

  நானும் சமீப கால சுஜாதா கதைகள் படிச்சதில்லை. கற்றதும் பெற்றதும் மாதிரியான சிலவற்றைப் படிச்சிருக்கேன். எனக்கு அவர் எழுத்தில் பிடிச்சது அவர் நடைதான். எளிமையாவும் வளவள கொழகொழ இல்லாமலும் இருக்கும்.

  //உமாபதி வாத்தியார் சொன்னார் - "உயிரோடு இருக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியதற்காகவே உனக்கு இரண்டாம் இடம்". அப்படியும் முதலிடத்தை பாரதியே தக்கவைத்துக் கொண்டார். இப்போது அந்த வரிசையில் அநியாயமாக சேர்ந்து விட்டார் இந்த மனுஷனும்!//

  உங்க நடையும்தான் நாகு! :)

  ஒரு முறை 9/11 பற்றின சுஜாதாவோட கட்டுரையப் படிச்சிட்டு அதைப் பத்தி அவருக்கு ஒரு மின்மடல் அனுப்பி இருந்தேன். உடனே பதில் எழுதிட்டார்! ஒரே வரிதான்னாலும் எனக்கு ஒரே ஆச்சர்யம், இவ்ளோ பெரிய மனுஷன் நம்மையும் மதிச்சு பதில் எழுதிட்டாரேன்னு. உண்மையான பெரிய மனுஷங்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க போல.

  //உங்களாலான சின்ன உதவி - சமயம் கிடைக்கும்போது அரங்கன் செவியில் ராஜேஷ் பற்றி கொஞ்சம் போட்டு வையுங்கள்.//

  அவர் போய்ச் சொல்றதுக்கு முந்தியே அரங்கன் காதுக்குப் போயிருக்கணும் இந்நேரம்...

  இருவருக்கான வேண்டுதல்களுடனும்...

  ReplyDelete
 3. //இதில் வருத்தமான விஷயம் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். மனுஷன் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டார் //
  அந்த ஜோக்கை கற்பனை செய்து எழுதி அனுப்ப வேண்டி ஒரு போட்டி வைக்கலாமே !
  :))

  ReplyDelete
 4. பித்தரே - அந்தக் கதையின் பெயர் சிவந்த கைகள் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று. அதுவும் விக்ரமின் மேனேஜராக வரும் பெங்காலி(பெயர் மறந்துவிட்டது) எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. கொடுத்து வைத்தவரய்யா நீர் - சுஜாதாவுடன் முப்பது நிமிடங்கள் பேசியிருக்கிறீர்கள்.


  கவிநயா - நான் சுஜாதாவின் சமீப கால எழுத்துக்கள் எதையும் படித்ததில்லை. நான் எழுதிய பட்டியலில் தெரிந்திருக்குமே :-) அவரது எளிமையும் நல்ல எழுத்தில் அவரது ஞாபகசக்தியும் தெரிந்ததுதானே. நீங்கள் சொல்வது சரிதான் - உண்மையான பெரிய மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.  ரவியா -
  மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் சொல்ல அவர் ஒருவருக்குத்தான் முடியும். வேறு ஒருத்தரிடம் இருந்து கேட்க எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. :-(

  ReplyDelete
 5. கவிநயா/நாகு,

  எனக்கு அவருடன் இருக்கத்தான் 30 நிமிடங்கள் கிடைத்தது. அவருடன் நான் பேசியது ஒரு 4 அல்லது 5 நிமிடங்கள்தான் இருக்கும். மற்ற நேரமெல்லாம் வெறும அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  எனது நண்பர் ஒருவர் அவரது அலுவலகத்தின் ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்க சுஜாதாவை அழைக்க அவருடைய வீட்டிற்கு என்னையும் கூட்டிக் கொண்டு போனார். இது நடந்தது 1992-93-ல். அவர் அப்போது தேனாம்பேட்டையில் ஒரு குடியிருப்பில் இருந்ததாக ஞாபகம். விழாவிற்கு வருவதாக ஒப்புக் கொண்டார். பிறகு எனது நண்பரின் வங்கியைப் பற்றி பல தகவல்களைத் கேட்டார். ஒரு சிரிப்பு அவரிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்தது. நான் வழக்கம் போல் எனது அறியாமையை அவ்வபோது வெளிப் படுத்திக் கொண்டிருந்தேன். என்னை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றார், நான் சென்னையில் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் கணிப்பொறியிலும், நிர்வாகத்திலுமாக வேலை செய்வதை சொன்னேன். "நிஜமாகவா, எனக்கு தெரிந்து அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் இப்படி பதட்டப் பட மாட்டார்களே, ஏன்னா அவங்களுக்கு அவ்வளவா டென்ஷனே இல்லையே" என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிறகு என் ப்ளாட்பார்ம்-ல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார், நான் சற்று எனது பணி, நான் அப்போது செய்து கொண்டிருக்கும் முயற்சி பற்றி சொன்னதும், சில குறிப்புகள் சொன்னார். பிறகு கிளம்பி விட்டோம். விழா அன்று அழையா விருந்தாளியாக நானும் கலந்து கொண்டேன். அது ஒரு இனிய விருந்து.
  சுஜாதா, எல்லோரையும் பார்த்து மையமாக சிரித்த படியே வந்தார், அவர் பேச ஆரம்பித்ததும்தான் களை கட்டியது. அவர் பேச்சு ஒரு கேள்வி பதில் மாதிரி இருந்தது. அவருடைய கேள்விகளுக்கு, அந்த வங்கியின் கிளையின் மேலாளர் பதிலலித்தார்.

  "நான் வரும்போது நிறைய கட்டு கட்டாக பேப்பர்கள், லெட்ஜர்கள் இருந்ததே அதெல்லாம் என்ன?"
  "அதேல்லாம் பணம் கட்டிய சலான்கள், எழுதி முடித்த லெட்ஜர்கள்"
  "அதெல்லாம் ஏன் அங்கே இருக்கு?"
  "அதெல்லாம், ரெக்கார்ட்ஸ், வேற எங்க இருக்கும்?"
  "நிறைய கம்ப்யூட்டர்கள் இருக்கே, எல்லாம் வேலை செய்யரதா?"
  "எல்லாம் நல்லா வேலை செய்யரது?"
  "ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் முன்னாடி ஒரு பலகை வெச்சு ஏதோ நம்பர் எழுதியிருக்கீங்களே, அது என்ன நம்பர்?"
  "அக்கவுண்ட் நம்பர்கள், உங்கள் Account No. எந்த Board-ல் உள்ள நம்பர்களுக்குள் இருக்கிறதோ, அந்த பலகைக்கு பின் உள்ள கம்ப்யூட்டரில் உங்க அக்கவுண்ட் டீட்டெயில் இருக்கிறது, அந்த Staff கிட்ட போய் உங்கள் வங்கி வேலைகளை செய்துக்கலாம்."
  "ஏன், இருக்கிறது 10 Computer அதை ஏன் network-ல போட்டுட்டா யார் எந்த Counter-க்கு வேணும்னாலும் போய் அவங்க work-அ பார்த்துக்கலமே. அப்பறம், அந்த லெட்ஜர்ஸ் அதையெல்லாம் இப்படி எத்தன வருஷம் பாதுகாக்கப் போறீங்க, அதையெல்லாம் Mirofilm-ல போட்டுட்டா ஒரு சின்ன டப்பாலதான் வரும் இங்க இருக்கர அத்தனை லெட்ஜர்ஸ், சலான் எல்லாம். Computer வாங்கி போட்டு office நடத்தரது முக்கியம் இல்லை, Technology என்ன மாதிரி வளர்ந்து வருதுன்னு பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி நம்பள மாத்திக்கரது முக்கியம். அப்படி இல்லைன்னா Technology வந்தும் வராதது மாதிரிதான். Technology-ன்னதும் ஒரு சின்ன விஷயம் ஞாபகம் வருது, சில வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு வேலையா மெட்ராஸ் வந்துட்டேன், என் மனைவி வீட்டு சாமான் வாங்க பணம் இல்லைன்னு பக்கத்தில இருக்கர வங்கிக்கு போயிருக்காங்க, அங்க இருக்கர அத்தனை பேருக்கும், அவங்க என் மனைவின்னும் தெரியும், நான் எழுத்தாளர் சுஜாதான்னும் தெரியும், அவங்க எடுக்கப் போனது ஒரு 450 ரூபாய். ஒரு செக் எழுதி கொடுத்திருக்காங்க, அவங்க கையெழுத்து, வங்கி இருப்பில இருக்கர பழைய form-ல இருக்கர கையெழுத்தோட பொருந்தல, ஒரு officer அவங்க கிட்ட உங்க கையெழுத்து மாத்திட்டீங்களான்னு கேட்டிருக்கார், அவங்க நான் கடந்த 6-7 வருஷமா இப்படித்தான் கையெழுத்து போடறேன். அவர்தான் எப்பவும் இங்க பணம் எடுக்க வருவார், நீங்க அந்த பழைய form-அ காட்டுங்க நான் அதுமாதிரி கையெழுத்து போட்டுத் தரேன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கு அவர், அது தப்பும்மா, எங்க பாலிஸிபடி நீங்க முதல்ல அதே மாதிரி கையெழுத்து போட்டுக் காமிங்க அப்பரம் அந்த form-அ காமிக்கிறேன்னு சொல்லியிருக்கார். வங்கி மேலாளர், தமிழர், எனது நண்பர் அவர் என் மனைவிக்கிட்ட எவ்வளவு பணம் வேணும்னு கேட்டுட்டு அவர் பர்ஸ்ல இருந்து 500 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பிட்டார். நான் எதுக்கு சொல்றேன், கமலஹாசன் உங்க கண்ணெதிரே இருக்கார், அவர் யாருன்னு உங்களுக்கு நல்லா தெரியும், அவருடைய அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கரார், அவரோட கையெழுத்து மாறினா என்ன, அவரோட அக்கவுண்ட்ங்கரது எல்லாருக்கும் தெரியாதா, அப்பறம் என்ன பாலிஸி, புடலங்காய். இதை சரி பாத்து பணம் தராதேன்னு ஒரு Computer சொன்னா அப்படி பட்ட Computer இருந்து என்ன ப்ரயோஜனம். ஆமா, நான் தெரியாமதான் கேக்கரேன், ஹர்ஷாத் மேத்தான்னு ஒருத்தர், பங்கு சந்தைல பணத்தை மோசடி பண்ணிட்டார்ன்னு சொல்றீங்களே, அது எத்தனை பணம், ஒருத்தர் 18,000 கோடின்னு சொல்றார், ஒருத்தர் 30,000 கோடின்னு சொல்றார், நிஜமாவே அத்தனை கோடி ரூபாயை பார்த்த ஒருத்தர் இருந்தா சொல்லுங்களேன், ஒரு தடவை தொட்டு கும்பிட்டுக்கறேன்." என்றார். இன்னும் நிறைய பேசினார், அவை அனைத்தும் சற்று கோர்வையாக நினைவு இல்லை.

  எனது பொங்கல் விழா பின்னூட்டத்தில் நான் நாகுவிடம் சுஜாதா என்ன பெரிய ஆளான்னு கேட்டது கூட ஒரு விளம்பர உத்திதான், அவருக்கு சுஜாதா பிடிக்கும் என்பது தெரியும், அவர் வாயை கிண்டலாமே என்ற ஆவல் தான்.


  பித்தன்.

  ReplyDelete
 6. Very interesting to read the post and comments;
  Irony is i couldnt type in tamil;
  I met Sujatha twice; first time i couldnt speak; avarai parthu 'besthu' adhichipoi nindren... (as Nagu wrote)
  This jan, i took his autographs at Chennai Book Fair and spoke.
  Wished him for his project ROBO film; he looked at me, just 5 seconds, that silence carried different meaning....
  That day, i gave those books to my mother and proudly told, ...amma, i met sujatha and shown the autographs... (my mother learned reading tamil along with us from Anil, Ambulimama and graduated to Sujatha books..)

  ReplyDelete
 7. கிறுக்கன்,

  நாங்களும் அப்படியே. தெலுங்கு மட்டுமே தெரிந்த என் தாயாரும் அப்படியே. நாங்கள் படிப்பதைப் பார்த்தே தமிழ் கற்றுக் கொண்டு சுஜாதாவின் பெரிய நாவல்களையும் படிக்க ஆரம்பித்தார். என் அப்பா அந்த அளவுக்கு போகவில்லை. குமுதம் ஜோக்ஸுடன் நிறுத்திக் கொண்டார். (இது என்னடா piraa இந்த ஜோக்கில் - புரியவில்லையே)

  தமிழில் தட்டச்சிட இந்த பக்கத்தைப் பயன்படுத்துங்கள்
  http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

  check thaminglish first and type away in the top window! You owe it to Sujatha :-) அதில் பழகி இங்கே ஒரு காமெண்ட் போடுங்கள் பார்ப்போம்.

  ReplyDelete
 8. //எல்லோரையும் பார்த்து மையமாக சிரித்த படியே வந்தார்//

  ஹை! அவரை மாதிரியே எழுதியிருக்கீங்களே :) அவர் பேசினதும் அப்படியே அவர் தொனிலயே எழுதினது நல்லாருக்கு. பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி, பித்தரே!

  ReplyDelete
 9. பாசக்கார நாகு, அருமையான பதிவு. ஒரு மன நினைவுடன் எழுதியிருப்பதாய்த் தெரிகிறது. ஏனய்யா, நான் தான் ஆள வுடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேனே, திரும்ப எதற்கு வம்புக்கு இழுக்கிறீர் !!! ஆஹா, சுஜாதாவைப் பற்றி பித்தன் உங்களிடம் போட்டு வாங்கப் பார்த்தாரா ? நீங்க அசருகிற ஆளா என்ன :))

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!