Sunday, May 17, 2009

தமிழ் மணத்துக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழ் மணத்துக்கு வந்த சோதனை...

நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு வந்தபோது என்னால் நம்பமுடியவில்லை. இப்ப சின்னப் பசங்கள்ளாம் 'என்ன கொடுமைங்க இது சரவணன்'னு சொல்றீங்களே - நாங்க அந்த காலத்துல பாலையாவின் - என்னடா மதுரைக்கு வந்த சோதனை-யை பயன்படுத்துவாம். அதுதான் தலைப்பு. இதையெல்லாம் படித்துவிட்டு செல்வராஜ் இனி வர்ஜினியாவில ஒரு பயலும் தமிழ்மணத்துல ஒரு வார்த்தை எழுதக்கூடாதுன்னு சொல்லாம இருந்தா சரி! வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும், எங்கள் தமிழ்ச்சங்க பதிவுகளை படிக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன்.

இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு முயற்சி. ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினர்களை எழுத வைப்பதற்காக ஆரம்பித்தது. நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் விடாமல் எழுதியது ஒரு சிலர்தான். ரிச்மண்ட் தமிழ் சங்க பதிவில் விடாமல் எழுதுகிறார்கள் என்று யாரோ மௌஸ்(கண்) வைத்துவிட்டார்கள். அதுவும் போச்சு. அந்த ஒரு சிலரும் பல காரணங்களுக்காக தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். பலகட்சி ஜனநாயகத்திற்கு பழகிய மக்களாயிற்றே... நான் கொஞ்சம் அங்கே இங்கே திருடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது டுவிட்டர் வந்து அதையும் கெடுத்தது. பதிவு தேய்ந்து டுவிட் ஆன கதையாய் ஒரு வரி எழுதினால் களைப்பாகிவிடுகிறது.

தமிழ்ச் சங்கப் பதிவுகளை நாலுபேர் கூட படிப்பதில்லை என்று தலைவர் முரளி கலாய்ப்பார். மொத்தம் எழுதுவதே நாலு பேராம். ஒருவர் எழுதினால் அதை படிப்பது மற்ற மூனு பேர்தான் என்பது அவர் கணக்கு. தமிழ்மணத்தின் புண்ணியத்தால் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி நியுசிலாந்துவரை (வணக்கம் டீச்சர்) எங்கள் புகழ் பரவியிருக்கிறது. ஆனாலும் ரிச்மண்டில் படிப்பது இன்றும் அதே மூனுபேர்தான்!

நான் பார்ப்பவர்களையெல்லாம் எழுதச் சொல்லி படுத்தியதினால், சிலபேர் ஊரை விட்டும், நாட்டை விட்டும் ஓடிவிட்டார்கள். ஆம்வேயைக் கண்டால் தூர ஓடு என்ற புதுமொழியில் கிட்டத்தட்ட என்பேரை போடவிருந்தார்கள். பதிவுப் புராணம் போகட்டும். ரிச்மண்டைப் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்காவின் தலைநகரின் தெற்கே ஒரு பெரிய முக்கோண வடிவில் இருக்கும் மாநிலம் வர்ஜினியா. அந்த மாநிலத்தில் நடு சென்டரில் ஒரு புள்ளி வைத்தால், அதுதான் ரிச்மண்ட்! மைக்ரோசாஃப்ட் இருக்கிறதே அந்த ஊர்தானே என்பார்கள் சில மேதாவிகள். அது ரெட்மண்ட். ரிச்மண்ட் இந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் தெரியுமா? இந்தக் கதையைக் கேளுங்கள். நான் வாஷிங்டன் டிசி பகுதியில் இருந்தபோது ரிச்மண்ட் வேலைக்காக ஒரு தொலைபேசி தேர்வு நடந்தது. முடியும்போது அந்த மேலாளரிடம் என் கேள்வி: "ரிச்மண்ட் எங்கே இருக்கிறது?" அவர் கேட்டார் - வாஷிங்டனில் இருந்து தெற்கே எங்கேயாவது போயிருக்கிறாயா? ஆமாம் வடகரோலினா போயிருக்கிறேன் என்றேன். அப்படியானால் நீ ரிச்மண்டை பார்த்திருக்கிறாய்!

அமெரிக்க சரித்திரத்தில் ரிச்மண்டுக்கும், வர்ஜினியாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அமெரிக்கா ஆரம்பித்ததே வர்ஜினியாவில் ஆரம்பித்த ஒரு குடியேற்றத்தினால்தான். அமெரிக்க சுதந்திரத்திற்கு வித்திட்டதும் வர்ஜினியாவில்தான். ஜார்ஜ் வாஷிங்டன், சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸனில் ஆரம்பித்து பல அமெரிக்க ஜனாதிபதிகளை அளித்திருக்கிறது வர்ஜினியா. "கிவ் மீ லிபர்டி ஆர் கிவ் மி டெத்" என்ற வாசகம் அமெரிக்க வரலாற்றில் புகழ் பெற்றது. பேட்ரிக் ஹென்றி அந்த வாசகத்தை முழங்கியது ரிச்மண்டில்தான்.

நான் ரிச்மண்டுக்கு வந்த புதிதில் சக ஊழியனிடம் இந்த ஊரைப் பற்றிக் கேட்டேன். அவர் இரண்டு யுத்தங்களிலும் எரிக்க்ப்பட்ட ஒரே ஊர் ரிச்மண்ட்தான் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு முதல் உலகப்போர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இரண்டாம் போரில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டது ஹவாய் மட்டும்தானே என்று கேட்டேன். அவர் குழம்பிவிட்டார். நீ எந்தப்போரைப் பற்றி பேசுகிறாய் என்று இருவரும் கொஞ்சம் சண்டைப் போட்டோம். பிறகுதான் அவர் விளக்கினார். அவர் சொன்னது அமெரிக்க சுதந்திரப் போர், மற்றும் உள்நாட்டுப் போர் - American Revolutionary war and American Civil War. அமெரிக்கன் சிவில் வார்... யாரவர்? அமெரிக்கா இரண்டாக உடைந்தபோது உண்டான அல்பாய்சு இரண்டாம் நாட்டின் அல்பாய்சு தலைநகர் ரிச்மண்டாம்.

கான் வித் விண்ட் படித்ததில்லையா, பார்த்ததில்லையா என்றும் யாருக்கும் கொலைவெறி வரவேண்டாம். பார்த்திருக்கிறேன் - ஆனால் அது உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த படம் என்று சாணக்யாவில் இரவு முழு மப்பில் பார்த்தவனிடம் யாரும் சொல்லவில்லை.

ஒரு மணி தூரத்தில் கடலும், ஒரு மணி தூரத்தில் மலைத்தொடர்களுமாக அமைந்திருக்கிறது ரிச்மண்ட். வெயில் நாளில் சென்னையை நினைவுறுத்துமாறு புழுக்கமும் வேர்வையும்கூட உண்டு! வர்ஜினியா, ரிச்மண்ட் வரலாறு, புவியியல் பற்றி விரிவாக வேறு சமயம் எழுதப் போகிறேன்(அடப்பாவி இன்னுமா?). இப்போது சங்க காலம் பற்றிப் பார்ப்போம். ரிச்மண்டில் சங்க காலம் 1999ல் ஆரம்பித்து, பத்தாண்டுகள் கடந்து, இன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சங்க கால விளையாட்டுகளான டென்னிஸ், பௌலிங்ம் டேபிள் டென்னிஸ் எல்லாம் உண்டு. இந்த வரியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்தால் அதற்கு முன் இரண்டு வரிகளைத் திரும்ப படிக்கவும்.

ரிச்மண்ட் மாதிரியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் மாதிரியும் அமெரிக்காவில் பார்ப்பது கடினம். ஊர் அவ்வளவு பெரிய ஊரும் இல்லை, சிறிசும் இல்லை. எல்லா இடங்களுக்கும் பத்து நிமிடங்களில் போய்விடலாம். கால்பந்தாட்டமா, டென்னிஸா, நீச்சல் வகுப்பா, சங்கீத வகுப்பா, நாட்டிய வகுப்பா, கோவிலா, நாகு வீடா, தமிழ் சினிமாவா, டாஸ்மாக் கடையா, ஆபிஸா, ஆர்தர் ஆஷ் சிலையா - எல்லாம் பத்து நிமிடங்களில்!

தமிழர்கள் அன்புடன், மனதால் மிகவும் நெருங்கி வாழும் ஊர் ரிச்மண்ட். மக்கள் இந்த ஊரைவிட்டு போனாலும், திரும்ப வந்து விடுவார்கள். ரிச்மண்டில் வாழ்ந்துவிட்டு வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியே ஏன் அவர்கள் திரும்பவில்லை என்றும் கேளுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லையா, துணைவி/வன் ஊருக்குப் போயிருக்கிறார்களா - சாப்பாடு வந்து குவிந்துவிடும். எங்களூரில் நண்பர்களை அப்படி கவனித்துக் கொள்வோம். ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால் தன்கணவன் தொப்பை தானே வளரும் என்பதில் மிக்க நம்பிக்கை உள்ள ஊர் ரிச்மண்ட்! நியுயார்க், வாஷிங்டன் போன்ற ஊர்களில் இருந்தால் ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்களும் நிறைய 'அழையா விருந்தாளிகளும்' வந்து குவிவார்கள். ரிச்மண்டில்தான் உண்மையான அன்புள்ள விருந்தாளிகள் வருவார்கள்! இங்கே வருபவர்கள் எங்களைப் பார்ப்பதற்குத்தான் வரவேண்டும் :-)

15 comments:

  1. நாகு,

    தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    நட்சத்திரப் பதிவர் பணி என்ன என்றும் சற்று விளக்கவும். நம்ம நாலு பேரத் தாண்டி இனி நம்ம பதிவுகளை பலரும் படிப்பாங்களா!!! சூப்பர்.

    முரளி இராமச்சந்திரன்.

    ReplyDelete
  2. நன்றி திகழ்மிளிர்.

    நன்றி முரளி. நட்சத்திரப் பணி என்று தனியாக ஒன்றும் இல்லை. என் கடன் பதிந்து கிடப்பதே'தான். இந்த ஊரில் நாலுபேரைத் தாண்டுவது நம்மால் முடியும் என்று தோண்றவில்லை. :-)

    இந்த வாரமாவது நம்ம ஊரில் நான்கு பின்னூட்டங்கள் வருதான்னு பார்க்கலாம். வந்தால் அதுவே நமக்கு பெரிய வெற்றி!

    ReplyDelete
  3. நட்சத்திர வாழ்த்துகள்!!

    வெங்கடேஷ்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நாகு !!!

    பதிவை இன்னும் படிக்கவில்லை. இன்று மாலை படிக்கிறேன். இப்போதைக்கும் வாழ்த்துக்கள்.

    தொடர்க உங்கள் பதியும் பணி. கலக்குங்க இந்த வாரம் முழுதும்.

    ReplyDelete
  5. வெங்கடேஷ், தமிழன் - கறுப்பி, சதங்கா - வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நாகு,

    வாழ்த்துக்கள். உள்நாட்டுப் போரில் confederate படையினர் செயித்திருந்தால் ரிச்மண்ட் அமெரிக்காவிற்கே தலைநகரமாயிருக்கும். ஆனா நாமெல்லாம் இங்க வந்திருப்போமா தெரியாது :-)

    இன்னொரு தகவல்: Gone With The Wind - ஐ (சில காட்சிகள்) இங்க local Jefferson Hotel லதான் எடுத்தாங்க - அந்த red-carpet மாடிப்படி.

    - Ravi

    ReplyDelete
  7. நன்றி ஜெயகாந்தன், ரவி.

    //ஆனா நாமெல்லாம் இங்க வந்திருப்போமா தெரியாது :-)//

    வந்திருப்போம். ஆனா ஆணிக்கு பதில் புல்லு புடுங்க... :-)

    ReplyDelete
  8. நாகு,

    வாழ்த்துக்கள்! அசத்துங்க.....

    -மீனா சங்கரன்

    ReplyDelete
  9. நன்றி மீனா. நீங்க அசத்தறதோடவா இது? :-)
    (http://www.tinyurl.com/meenas)

    ReplyDelete
  10. ஒத்த வரி எழுதின உடனே களைச்சுப் போற ஆள் மாதிரி தெரீலயே :)

    கலக்குங்க! வாழ்த்துகள் நாகு.

    ReplyDelete
  11. நட்சத்திரப் பதிவராகவும் நல்லா கலக்கிக்கிட்டு இருக்கீங்க நாகு. அவ்வப்போது தான் பதிவுகள் பக்கமா வர்றதனால தாமதமா படிக்கிறேன்.

    நான் ஏன் உங்களை எழுத வேண்டாம்னு சொல்லப்போறேன். சின்னதா ஒரு பொறாமையோடு பார்த்தாலும், வர்ஜீனியா பேரக் காப்பாத்த நீங்களாவது தொடந்து எழுதுங்க. நிறைய விஷயங்கள் என்னைக் கவர்கிறது. குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்கள் வழியாகவே பேட்ரிக் ஹென்றி, வர்ஜீனிய வரலாறு புவியியல்னு எனக்கும் நிறைய அறிமுகமாகி அதைப் பத்தி எழுதணும்னு நெனச்சு, பிறகு வழக்கம் போல் எல்லாத்தையும் தள்ளிப் போட்டாச்சு, மறந்தாச்சு. நீங்களாச்சும் நெனச்சதச் செய்யுங்க.

    ஏழு மைல் நடைப்பயணம், கூடாரம், சாரணர்னும் இன்னொரு பக்கமா கலக்கிக்கிட்டு இருக்கீங்க. நடத்துங்க. ஒருநாள் சாவகாசமா உங்க கிட்ட பேசிக் கேட்டுக்கிறேன். ரிச்மண்ட் பத்தி நீங்க எல்லாரும் எழுதறதப் பாத்தா அங்க வந்துரலாம்னு இருக்கு! :-)

    ReplyDelete
  12. நன்றி கவிநயா. எப்போ வந்தீங்க ஊர்ல இருந்து. எப்படி இருக்கு ஆங்கிலம் கூறும் நல்லுலகம் :)

    வருகைக்கு நன்றி, செல்வராஜ். கூடாரம், முகாம் நல்லா இருந்தது. இந்திய சாரண அமைப்பு, அமெரிக்க சாரண அமைப்பு பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லலாம்னு ஒரு ஆசையும் இருக்கு. பார்ப்போம்.

    வாங்க ரிச்மண்டுக்கு. உங்க துறைல நிறைய வேலை இங்க சாதாரண நாள்ல இருக்கும். இப்ப தெரியல. பீடிக்கார கம்பெனி, தோட்டா துளைக்காத கவச கம்பெனின்னு நிறைய இருக்கவே இருக்கு :-) கண்டிப்பா வாங்க.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!