சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய மன்றத்தில் பழம்பெரும் பெண் எழுத்தாளர் வை. மு. கோதைநாயகியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள். விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பங்கு கொண்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இன்றைய தலைமுறை நாவல் ரசிகர்களுக்கு வை. மு. கோதைநாயகி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் நாவல் தரம் அதிக வளர்ச்சி பெறாத நிலையில் நிறைய நாவல்களை எழுதிய நாவல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமையும் இவருக்கு உண்டு. மாதம் தோறும் ஒரு நாவலை வெளியிடுவதற்காக ஒரு மாதப் பத்திரிகையை நடத்திய துணிச்சல்காரப் பெண் இவர்.
அன்றைய காலகட்டத்தில் நாவல்களில் பல வகையான ரசனைக்கும் இடமளிக்கும் வகையில் நாவல் எழுதி வெளியிட்டனர். துப்பறியும் கதைகள் சமூக அவலங்களை விளக்கியும் பெண்கள் துயரத்தைப் பற்றியும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை குழப்பங்களை பற்றிய எழுத்துக்களை ஒரே நாவலில் படிக்கமுடியும்.
அன்றைய நாவல்களில் சமூகப் பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை என்ற சிலருடைய விமர்சனம்
சரியானதல்ல. அன்றைய தமிழ்ச்சமுகத்தில் குறிப்பாக குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதித்தது பெண்கள் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துயரமும்தான். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் பட்ட வேதனையை கோதைநாயகியினுடைய நாவல்களில் அதிகம் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெரும் அளவில் வழக்கத்திலிருந்த பாலிய விவாஹம், அதன் காரணமாக ஏற்பட்ட இளம் விதவைகள், தாய் வீட்டுக்கு விதவையாக திரும்பி வந்த பெண்கள் அங்கே சந்தித்த புறக்கணிப்பு இவையெல்லாம் அன்றைய நாவல்களில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 1921 ம ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பத்து வயதுக்குக்
குறைந்த விதவைப்பெண்கள் எண்ணிக்கை பத்து லக்ஷத்திற்கு மேல் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.
சிறு வயது பெண்கள் திருமண வாழ்க்கை தொடங்கியவுடன் கருத் தரிப்பதும் அதனால் ஏற்பட்ட பிரசவ கால சிக்கல்கள். அதிகமாக ஏற்பட்ட பிரசவகால மரணங்கள் அந்த நாட்களில் சகஜமான செய்திகளாக இருந்தன. மருத்துவ வசதி அதிகம் இல்லாத அந்த நாட்களில் கிராமப்புறங்களில் செய்யப்பட்ட அரைகுறை மருத்துவம் பல இளம் தாய்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலைப்பாட்டின் சமூக மற்றும் குடும்ப விளைவுகள் மிக மோசமாக இருந்தன.
பிரசவ பிற்கால நோய்களும் பெரிய அளவுக்கு பெண்களை பாதித்தன. பல பெண்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்களாக பலஹீனப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல ஆண்கள் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் தாரமாக வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். அன்று ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருந்தது. பிற்காலத்தில் பலதாரமண தடைச்சட்டம் வந்தது. இந்த சட்டமும் மதத்தலைவர்கள் உள்பட பல செல்வாக்குள்ள மனிதர்களுடைய எதிர்ப்புக்கு இடையில்தான் கொண்டுவர வேண்டியிருந்தது.
நோய்வாய்ப்பட்ட முதல்மனைவி ஒரு புறமும் வீட்டை ஆளும் இன்னொரு இளம் மனைவி மறுபுறமுமாக உள்ள குடும்பத்தில் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்பதை நாமே கற்பனை செய்து கொள்ளவேண்டியதுதான். முதல் மனைவிக்கு குழந்தைகள் இருக்க நேர்ந்தால் அந்த குழந்தைகளும் கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. மனைவி இறந்த பிறகு திருமணம் செய்து கொண்ட கணவர்கள் புதிய மனைவியின் மயக்கத்தில் முதல்தாரத்து பிள்ளைகளை கவனிக்காமல் உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளும் இளம் பிள்ளைகளின் மனபாதிப்புகளும் அதிகமாகவே இருந்தன.
ஆகையால் சென்ற நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வெளியான பெரும்பான குடும்ப நாவல்களின் கதைக்கான கரு சிற்றன்னை கொடுமையாகவே இருந்ததை பார்க்கலாம். ஆரம்ப கால திரைப்படங்களும் சமூகப்பிரச்னைகளை கொண்ட தாக அமைந்தால் அநேகமாக சிற்றன்னை கொடுமையை பின்னணியாகக் கொண்டிருக்கும். மற்ற படங்கள் அந்தநாட்களில் புராண படங்களாகவே அமைந்திருந்தன.
இரு மனைவிகளின் மத்தியில் அல்லல்பட்ட ஆண்கள் நெறி தவறி வாழ்க்கையில் தடம் புரண்ட சம்பவங்களும் உண்டு.
இரண்டாம் தாரமாக அமைந்த இளம் மனைவியின் வயது வித்தியாசம் காரணமாக கணவர்களின் மனதில் எழுந்த சந்தேகம் பல பெண்களின் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இருபது வயதுக்குள், உலக ஞானமும் அதிகமில்லாமல் கல்வி அறிவும் அதிகமில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கிய பெண்களின் வாழ்வு பரிதாபமாகவே அமைந்திருந்தது. மன உளைச்சலைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் பலர்.
இது போன்ற பிரச்னைகளும் அன்றைய நாவல்களில் நிறையவே கையாளப்பட்டிருக்கின்றன. நான் நாவல் படிக்கத் தொடங்கிய காலத்தில் வை. மு. கோதைநாயகியின் நாவல்கள் பிரபலமாக இருந்தன. அன்றைய நாளில் மற்ற பிரபல நாவலாசிரியர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார்,ஆரணி குப்புசாமி முதலியார், ஜெ. ஆர். ரெங்கராசு போன்றவர்கள்.
கருத்தரங்கத்தில் பேசுவதற்காக அன்றைய மக்களின் சமூக வாழ்க்கை யதார்த்தத்தை சற்று கூர்ந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அன்றைய நாவல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையத்தொடங்கிய நிலையை பல நாவலாசிரியர்கள் சித்தரிக்க முயன்றார்கள். பெண் கல்வி அதிகமில்லாத அன்றைய நாட்களில் மத்தியதரக் குடும்ப வாழ்க்கை, ஓரளவு வசதியோடு கிராமங்களில் வாழ்ந்த நிலப்பிர்புத்வ மக்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை ,நகரங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்க்கை இவைகளே நாவல்களில் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக மேல்சாதி மக்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றிய விவாதமாகவே அன்றைய நாவல்கள் அமைந்திருந்தன என்ற குற்றச்சாட்டை இன்று பல விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். . இந்த குறைபாடு ஓரளவு உண்மையே. ஆனால் இந்த விமர்சகர்கள் ஒரு பெரிய உண்மையை மறந்துவிடுகிறார்கள்.
அன்றைய நிலையில் நாவலை படிக்கும் வாசகர்களும் இந்த குறுகிய பகுதியிலிருந்துதான் வந்தார்கள். நாவல்களைப் படிக்க நேரத்தை ஒதுக்கவும் நாவல்களை வாங்க பணம் செலவு செய்யவும் அன்று இந்த குறுகிய சமூகப் பகுதியிலிருந்த மக்களால்தான் முடிந்தது. எழுத்தாளன் எப்பொழுதும் தன்னுடைய வாசகனுக்கு தக்க முறையில்தான் சொல்ல வந்த செய்திகளையும் சொல்லும் முறையையும் தேர்ந்து எடுக்கிறான்.
l அன்றைய படித்த மத்தியதர வர்க்கம் பத்திரிகைகளின் வழியாகவும் நாவல்களின் மூலமாகவே தன்னை சுற்றியுள்ள உலகியல் மற்றும் சமூக வாழ்க்கையை புரிந்து கொண்டனர்..
பேராசிரியர் ஏ. ஆர். வெங்கடாசலபதி என்ற அறிஞர் இந்த வாசகர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் வர்க்க
மற்றும் சாதி பின்னணி பற்றி ஒரு ஆய்வு செய்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். 1930 களில் வெளியாகிக்கொண்டிருந்த ஆனந்தவிகடன் வாசகர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய வாழ்க்கை முறை, கல்விநிலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
ஆகவே எந்த ஒரு காலத்திலும் வெளியான நாவல்கள் தோன்றிய காலத்தின் பிரச்னைகளை விவாதிக்கவே இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. விவாதித்துவிட்டு தவறான மாற்று காட்டிய எழுத்தாளர்கள் உண்டு. நடப்பதை சொல்லிவிட்டு எல்லாம் காலத்தின் கோலம் என்று அங்கலாய்ப்பை வெளியிட்ட எழுத்தாளர்கள் உண்டு. கதைப்போக்கில் பிரச்னைகளை விவாதித்து விட்டு மாற்றம் காண வேண்டும் என்று சொல்லாமல் வாசகர்களை உணர வைத்த எழுத்தாளர்கள் உண்டு.
வை.மு. கோதைநாயகி கடைசியாக குறிப்பிட்ட முறையை பின்பற்றி நாவல்கள் எழுதினர்.