Saturday, August 27, 2011

ரிச்மண்ட் மகாத்மியம் - 1

ரிச்மண்டா? எங்கேயிருக்கிறது அது??

தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.

மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?

அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன்  என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:

"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"

கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"

ரிச்மண்ட்,வர்ஜினியா!

இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர்.  வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.

நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.

என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?

என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?

அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?

ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?

உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?

இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.

சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?

நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும்,  சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.

அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார்.  வெட்கமாகப் போய்விட்டது.

மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)

சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.  அதற்கான எனது ஆரம்பம் இது.  நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.  வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.



2 comments:

  1. நல்லா இருக்கு தொடக்கம் :) நீங்க சொன்ன முதியவர் போலத்தான் என் உறவினர் ஒருவரும். அவருக்கு வரலாறு, பூகோளம், எல்லாமே அத்துப்படி. எனக்கு அதெல்லாம் எட்டாப்படி. அதுக்கென்ன செய்யறது? :)

    ReplyDelete
  2. பண்ருட்டி முதல்ல வரும்னு நெனச்சோம், ஆனா ரிச்மண்ட் வந்திருக்கு, கலக்குங்க.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!