Thursday, August 25, 2011

ஊழலை ஒழிக்க விரும்பும் உத்தமன்


சார், என் பேரு உத்தமன். நல்லா படிச்சு இன்ஜினியரிங் காலேஜில படிச்சிட்டு சாப்ட்வேர்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கிறேன். தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்த ஊழல். ஆங்கிலத்துல corruption. இந்த அரசியல்வாதிகளும், போலீஸ்காரங்களும், அதிகாரிங்களும் ஊழல்ல எவ்வளவு தூரம் மோசமா இருக்காங்கன்னு நினச்சா என் ரத்தம் கொதிக்கும் சார். உங்களுக்கும் அப்படித்தானே?

காலையில வேலைக்குக் கிளம்பிகிட்டு இருக்கிறேன். முக்கியமான ஒரு onsite call இருக்கு. இன்னும் அரை மணி நேரத்துல போயாகணும். பைக்க எடுத்துட்டுக் கிளம்பினேன். இந்த எளவெடுத்த டிராபிக்ல சரியான நேரத்துக்குப் போக முடியுமா? சிக்னல்ல நின்னுகிட்டே இருக்கிறேன். தூரத்தில பார்த்தா, ஒரு டிராபிக் போலீஸ்காரன் ஒரு லாரி டிரைவர்கிட்ட ஓவர் லோடு கொண்டு வந்ததுக்காக வாதாடிகிட்டு இருக்கிறான். லாரி டிரைவர் ஒரு சின்ன புத்தகத்துல ரூபா நோட்டு வச்சு நைசா கையில குடுக்கிறான். அத வாங்கிட்டு அவன அந்த போலீஸ்காரன் சும்மா விட்டுருறான். பார்த்து இந்தியன் சினிமால வர்ற மாதிரி அவன் நரம்பிலேயே போடணும்னு தோணிச்சு. ஆத்திரத்த அடக்கிட்டு போயிகிட்டே இருந்தேன். அப்போதான் டைம் பார்த்தா இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்குது. ராயப்பேட்டை ஹை ரோடு பக்கத்துல ஒரு one way ரோடு இருக்கு, எதிர் பக்கம் தான், ஆனா போலீஸ் எப்பவாவதுதான் வருவான், அப்படியே பிடிச்சாலும் ஒரு 50 ரூபா விட்டெறிஞ்சா விட்டுருவான். ஒரு ரிஸ்க் எடுத்து போயிட்டேன். நல்ல வேளைக்கு, ஒருத்தனும் பாக்கல. ஒரு வழியா மீட்டிங் கரெக்ட் டயத்துக்குப் போயிட்டேன்.

ஒரு வழியா மீடிங்க முடிச்சுட்டு, லஞ்ச் பொன்னுசாமிக்கு ரெண்டு மூணு பேரோட கிளம்பினோம். ஒரு onsite ட்ரிப்புக்கு வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சதும் பசங்க ட்ரீட் கேட்டானுங்க. சரின்னு கண்டபடி ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். சாப்பிடும்போது அரசியல் ஊழல்தான் ஹாட் டாபிக். நேர்மைங்கிறது அரசியல்லயும், அரசாங்க உத்யோகத்திலையும், காவல் துறையிலயும் இல்லாம போனதுனாலதான் நம்ம நாடே குட்டிச் சுவராச்சுன்னு பேசிக்கிட்டோம். கடைசியில பில்லப் பார்த்தா, ரெண்டு சைடு ஐட்டத்தோட பில் மிஸ்ஸிங். நாங்க தீவிரமா யோசிச்சோம். நமக்கு எப்படியும் எம்பது ரூபா லாபம், அதனால சர்வருக்கு பத்து ரூபா எக்ஸ்ட்ரா டிப் குடுக்கலாம்னு தீர்மானிச்சோம். டிப்ப வாங்கும்போது சர்வரோட முகத்தில என்ன ஒரு சந்தோஷம்? எங்களுகெல்லாம் ரொம்ப திருப்தி சார்.

திரும்ப ஆபீஸ் போயிட்டு மத்தியானம் கொஞ்சம் வேல செஞ்சேன். பிறகு sanjose - ல இருக்கிற என் friend கிட்ட அமெரிக்கா போற விஷயமா பேசணும். onsite -ல மீட்டிங்குக்காக ஆபீஸ் போன்-ல ISD call ப்ரீ. அதனால அதில இருந்தே கூப்பிட்டுட்டேன். அனாவசியமா ஏன் செல் போன் பில்ல நிமிஷத்துக்கு 7 ரூபா 20 பைசா ஏத்தணும்?

வெள்ளிக் கிழமை வந்தாச்சு. கொண்டாட்டந்தான். முதல்ல படம். அப்புறம் ஒரு தண்ணி பார்ட்டி. சத்யம்ல பாக்கலாம்னு பிளான். நெட்ல டிக்கெட் புல். நேர தேட்டர்லயே வாங்கிரலாம்னு பிளானு. அம்பது ரூபா டிக்கெட் வெறும் முன்னூறு ரூபாக்கி கிடச்சுது. லபக்குனு நாலு டிக்கெட் ஆயிரம் ரூபான்னு பேரம் பேசி எரநூறு ரூபா மிச்சம் பண்ணிட்டோம். அடுத்து நண்பர்களோட பார்ட்டி. ஸ்காட்ச் விஸ்கி பப்ளிக்கா வாங்க முடியாது. பார்சன் காம்ப்ளக்ஸ்ல ஒரு இடத்துல ரகசியமா கிடக்கும். வாங்கிட்டு வந்து ஒரே கூத்து.

சனிக்கிழம காலையில எந்திச்சு இன்னிக்கு நகக்கட போகலாம்னு ஒரு ஐடியா. ஒரு நண்பனோட கல்யாணம் அடுத்த வாரம். மோதிரம் வாங்கணும். பாண்டி பஜார் போனேன். ஒரு பக்க ரோடு முழுவதும் பிளாக் பண்ணி கார் பார்க்கிங் ஏரியா செட் அப்பு பண்ணி இருக்கானுங்க இந்த ஏரியா பெருந்தலங்க. பணம் கொழுத்த பசங்க. ஆளுங்கட்சிக்கு லஞ்சம் குடுத்து ஒன்வே அனுமதி வாங்கிட்டானுங்க. இதனால பஸ்செல்லாம் சுத்திப் போகணும். கடையில நுழைஞ்சி ஒரு நல்ல ஐட்டம் செலக்ட் பண்ணினேன். கடைசியில estimate -ன்னு சொல்லி ஒரு சீட்டு காட்டுனானுங்க. வருமான வரி கட்டாம இருக்க என்னல்லாம் அயோக்கியத்தனம் பண்றானுங்க? மோதிரம் 15 ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்ட் நீட்டினேன். அப்ப அந்த ஆளு சொன்னான், சார், கிரெடிட் கார்டு குடுத்தா நாங்க சேல்ஸ் டாக்ஸ் 750 ரூபா சார்ஜ் பண்ணுவோம்னு, அது வேண்டாம்னா கேஷ் குடுங்கன்னு சொன்னான். நானும் பாத்தேன். 750 ரூபா சும்மா குடுக்க நான் என்ன இளிச்ச வாயனா? உள்ளயே வசதியா ATM வச்சிருக்கானுங்க. எடுத்துக் குடுத்து ஒரு வழியா வெளிய வந்தேன்.

கலிபோர்னியா நண்பன் மூலம் ஒரு H1 பண்ணி, அமெரிக்கா போறதுக்கு ஏற்பாடு பண்ணனும். டக்குனு போகணும்னா இப்ப இருக்கிற கம்பனில விட மாட்டனுங்க. ஏதாவது பொய் மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்துதான் ரிலீவிங் லெட்டர் வாங்கணும். முதல்ல பாஸ்போர்ட் வாங்கணும். அவசரமா போறதுனால தக்கல்லதான் வாங்கணும். அதுவும் தெரிஞ்சவங்க மூலம் போயி காசு கீசு குடுத்தாதான் உடனே வேலை நடக்கும். அங்க இருக்கிற ஆபீசர் எல்லாருமே பெரிய லஞ்சப் பேர்வழிங்க, நடுத் தெருல வச்சு சுடணும் சார். என் கூட வேலை பாக்கிற ஒருத்தனோட அப்பாவோட நண்பர் மூலமா கொஞ்ச காசு குடுத்து ஏற்ப்பாடு பண்ணியாச்சு. 2 வாரத்துல கிடச்சுரும்னு சொன்னாங்க.

வெளிநாடு போனா இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. என்கிட்டே லோக்கல் லைசென்சே கிடையாது. அத முதல்ல வாங்கணும். RTO ஆபீஸ் பக்கம் போனேன். உலக மகா திருட்டுப் பசங்க சார். எத எடுத்தாலும் ஒரு புரோக்கர் மூலம் லஞ்சம் குடுத்தாதான் காரியம் நடக்கும்னு சொன்னாங்க. சௌதி மாதிரி இவங்கள நாடு ரோட்டுல கட்டி வச்சு கல்லால அடிச்சாதான் சார் நாடு உருப்படும். அப்புறம் விசாரிச்சப்ப, பாரம் வாங்கி நாமளே பண்ணுனா மாசக் கணக்குல ஆகும், சில சமயம் கெடக்காமயே போயிடும்னு கேள்விப்பட்டேன். ஒரு ஆளப் புடிச்சேன். அப்பதான் தெரிஞ்சுது, நம்ம பேரு ரேஷன் கார்டு, சொந்த ஊருல இருக்குது, மெட்ராசுல வாங்க முடியாதுன்னு. அந்த புரோக்கர் கொஞ்சம் காசு கூட குடுத்தா போதும், எல்லாம் சமாளிச்சு டெஸ்டே பண்ணாம வாங்கிரலாம்னு சொன்னான். நானும் பாத்தேன், நமக்கு இருக்கிற அவசரத்துல உடனே கிடைச்சாதான் உபயோகம்னு. அவன் கேட்ட 5000 ரூபாயக் குடுத்து ஒரே வாரத்துல லைசென்ஸ் வாங்கியாச்சு, உண்மையிலயே பயங்கர ஆச்சரியம் சார்,.

வெளி நாட்டுக் கனவுகளோட ராத்திரி வெளியில சாப்பிடப் போனேன். அப்போ இந்த கையேந்தி பவன் வண்டிகள் பக்கத்துல போலீஸ் பாட்ரோல் வண்டி நிப்பாட்டி மாமூல் வாங்கிட்டுப் போறதா பாத்தேன். வெக்கங் கேட்ட பொழப்பு சார் இது, இப்படி கண் முன்னாடி கூசாம லஞ்சம் வாங்குறானுங்க.

மறுநாள் திடீர்னு ஊர்ல இருந்து போனு. பாஸ்போர்டுக்கு verification பண்ண வீட்டுக்குப் போலீஸ்காரர் வந்திருக்கார். நான் இல்லன்ன உடனே அவர வந்து பாக்கச் சொல்லிட்டுப் போயிட்டார். டக்குனு எப்படி ஊருக்குப் போகுறது? அப்ப பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு, போலீஸ்காரர பாத்து 250 ரூபா கொடுத்தா போதும், verification ரிப்போர்ட் குடுத்துருவாருன்னு. நானும் அப்பாக்கு போன் பண்ணி, நான் ஊருக்கு வந்தா ஆயிரம் ரூபா கிட்ட செலவாகும். பேசாம 250 ரூபா குடுத்து மேட்டர செட்டில் பண்ணிருங்கன்னு. ஒரு வழியா பாஸ்போர்ட் ரெண்டே வாரத்துல வந்துருச்சு. ஒரு பெரிய தலைவலி தீந்துது.

மெட்ராஸ்ல எங்க பாத்தாலும் ரியல் எஸ்டேட் டிமாண்ட் சார், எங்க பாத்தாலும் அரசியல் வாதிகளும் ரௌடிகளும் எடத்த வாங்கிப் போட்டுட்டு வேலைய ஏத்திட்டானுங்க. பல இடங்கள்ள இவனுங்களுக்குக் கமிஷன் குடுக்காம எடமே வாங்க முடியாது. கலி முத்திப் போச்சு, இவனுங்கள மாதிரி திருட்டுப் பசங்களால ஒலகமே கொஞ்ச நாள்ல அழிஞ்சாலும் ஆச்சரியப் படரதுக்கில்ல. மெட்ராஸ்ல மதுர வாயல் தாண்டி ஒரு ப்ளாட்டு வாங்கலாம்னு பிரெண்டு ஆலோசன சொன்னான். நானும் போய் பார்த்தேன். 2 கிரௌண்டு நிலம், எட்டு லட்ச ரூபாக்கி தரதா புரோக்கர் சொன்னான். ஓரளவுக்கு நல்லா ரேட்டுன்னு பட்டுச்சி. registrar ஆபீஸ்ல ஸ்டாம்பு பத்திரம் வாங்கும்போது வெறும் ரெண்டு லட்சத்துகே முடிச்சிட்டோம், இல்லாட்டி ஸ்டாம்பு செலவே இன்னும் 60000 ரூபா ஆயிருக்கும், அந்த புரோக்கர் ரொம்ப வெவரம் தெரிஞ்சவன் சார், எல்லாம் கரெக்டா பண்ணி நல்லா காசு மிச்சம் பண்ணிக் குடுத்தான், நானே அவனுக்குக் கமிஷன் மேல 5000 ரூபா போட்டுக் குடுத்தேன்னா பாத்துக்கோங்களேன்.

பேப்பர்ல எங்க பாத்தாலும் ஊழல் நியூஸ். 2G ஊழல்ல ஒரு லட்சம் கோடின்றாங்க, சுரங்கதுல 1500 கோடின்றாங்க. கோடிக்கேல்லாம் ஒரு மரியாதையே போச்சு. இந்த அரசியல் வாதிங்கள எதிர்க்க நாதியே இல்லையா சார்? டிவி பாக்கவே வெறுப்பா இருக்கு.

ஒரு வழியா அமெரிக்கா ப்ராஜெக்ட் confirm ஆயிடுச்சு. ஊருக்குப் போய் எல்லாம் ஏற்பாடு பண்ணனும். கிரெடிட் கார்டுல கண்ணா பின்னான்னு துணி பற்றும் பொருட்கள் வாங்குனேன். வெளி நாடு போயிட்டு மெதுவா அடச்சிக்கலாம். அப்படியே குடுக்காட்டி குடியா முழுகிரும்? திருட்டுப் பசங்க எவ்வளவு வட்டி வசூல் பண்ணி இருப்பானுங்க?

ஊருக்கு ட்ரைன்ல போகணும், தக்கல்ல கூட டிக்கெட் கிடக்கல. நேரா ரயில்வே ஸ்டேஷன் போய் என் நண்பனோட மாமா அங்க இருக்கார், போய் பார்த்தேன். emergency quota - ல உடனே வாங்கிக் குடுத்தார். தங்கமான மனுஷன். பணம் முன்ன பின்ன ஆனா என்ன சார், அவசரத்துக்கு ஊருக்குப் போக முடியறது எவ்வளவு பெரிய விஷயம். இந்த ரயில்வேஸ் ஆனா ரொம்ப மோசம் சார், இவ்வளவு பெரிய ஒரு நிர்வாகத்துல எவ்வளவு ஊழல்? இத்தன வருஷத்துல மெட்ராஸ் to மதுரை ரெண்டு வழிப் பாதை இன்னும் போடல. காச எல்லாம் என்னதான் பண்றானுங்க?

ஊருக்குப் போகறதுக்கு முன்னால இன்கோமே டாக்ஸ் file பண்ணனும். ஒரு Auditor - ஐப் பார்த்தேன். அவர் சொன்னாரு, நீங்க கவலை படாதீங்க தம்பி, deduction எல்லாம் ஏதாவது போட்டு டாக்ஸ் வராம பாத்துகிடுரேன்னு. பயங்கர புத்தி சாலி சார், என் நண்பர்கள் எல்லாருமே இவர் கிட்டதான் போவோம்.

ஊருக்குப் போக இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்போ ஒரே பரபரப்பு, அன்னா ஹசாரே - ன்னு ஒரு பெரியவர் ஊழலுக்கு எதிராகப் போராடிகிட்டு இருக்கிறாருன்னு. கேட்ட உடனே எனக்குள்ள ஒரு உத்வேகம். இந்த அரசியல்வாதிகள் நாட எப்படியெல்லாம் ஊழல் பண்ணி சீரழிச்சு வச்சிருக்காங்கன்னு. ஜன லோக் பால ஆதரிச்சு, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்த என் நண்பர்கள் எல்லாரும் ஒரு ஊர்வலமா போறாங்க சார், நானும் போறேன் சார். நீங்க?





9 comments:

  1. :-)

    தலைவர் சத்யா வாழ்க!

    முதல்ல அவன நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்தறேன். :)

    ஒரு நாள் கழிந்தது நடை உங்களுக்கு பிரமாதமாக வருகிறது.

    ReplyDelete
  2. நன்றி நாகு, சுஜாதாவோட தூண்டில் கதைகள படிச்சிருப்பீங்கன்னு நெனக்கிறேன், (வீட்டுக்கு பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் போன்ற கதைகள்), அவற்றில சில கதைகள்ல சுஜாதா தன்மை இடத்துல இருந்து (first person style ) கதைய விவரிச்சிருப்பாரு. அவர் அளவுக்கு பிரமாதமா அந்த ஸ்டைல் யாரும் பண்ணினதாத் தெரியவில்ல. பாலகுமாரன் முயற்சி பண்ணியிருக்காரு. (கதை பேரு ஸ்திரீ லோலன் - னு நினைக்கிறேன்). சுஜாதா ஞாபகமா சும்மா ஒரு முயற்சி. ஊழலுக்கு எதிராவும் அர்ப்பணிச்சிக்கலாம்.

    ReplyDelete
  3. சத்யா,

    அருமை.

    நானும் உத்தமன் ஜாதி தான்.
    ஆனாலும் "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் "
    என்று பாடவேண்டும் என விரும்புகிறேன்.

    இதெல்லாம் தெரிந்தால் நீங்கள் பிளைக்க தெரிந்தவர். இல்லை என்றால் நீங்க ஒரு அம்மாஞ்சி.
    எல்லோரும் புத்திசாலி ஆகவே இருக்க விரும்புகிறார்கள். என்ன செய்வது.
    நாமும் சமுதாயத்தில் எப்படி பேர் வாங்குவது?

    என்ன சார் இவ்வளவு அனாவசியமா சொல்லிட்டீங்க. இல்லேன்னா நாம எல்லாம் இங்கு வந்து இருக்க முடியுமா. என்னை விட எத்தனை பேர் தப்பான பயோ டேட்டா கொடுத்து அங்க இங்க லஞ்சம் கொடுத்து வந்திருக்காங்க. அவங்களை விட நான் பரவாயில்லை சார்.

    வேதாந்தி

    ReplyDelete
  4. சத்யா,

    அருமையான பதிவு. சூப்பரா எழுதியிருக்கீங்க. அந்த உத்தமனோட ப்ரதாபங்கள கொஞ்சம் கொரச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்ங்கரது என் கருத்து. கலக்குங்க.

    நான் கோவில்ல உங்ககிட்டயும், வெங்கட் செட்டியார்கிட்டயும் (அவர எங்க இந்த ப்ளாக் பக்கமே காணல, நாகு ஒரு காணவில்லை விளம்பரம் போடலாமா) சொன்ன மாதிரியே துக்ளக்ல சோ எழுதியிருக்கார். அதுக்கு பெருமைப் படரதா இல்லை என்னை மாதிரி தக்ளூண்டு ஆளூக்கும் தெரியர மாதிரி அன்னா ஹசாரேயும் இந்திய மத்திய அரசும் இருக்கரதுக்கு வெக்கப் படரதான்னு தெரியலை.

    ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல பதிவு, ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் அதுக்கு தாங்ஸ்.

    முர ளி

    ReplyDelete
  5. நன்றி முரளி, துக்ளக் எப்படி படிக்கறீங்க? இணைய தளப் பதிவுக்கு சந்தா உண்டா?

    ReplyDelete
  6. சத்யா,

    துக்ளக் இணைய தள இரு வருட சந்தா $39.00.

    முரளி

    ReplyDelete
  7. நன்றி முரளி, உத்தமன் ஸ்டைல்ல password பகிர்ந்துக்கிறது தப்பு, என்னோட சந்தா செலுத்திப் படிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

    ReplyDelete
  8. uththamarkalin ulagam vaazhga!(engalaiyum serthuthaan!

    ReplyDelete
  9. அருமை சத்யா. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!