Monday, August 01, 2011

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ் - திரும்பிப் பார்ப்போம்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் திரு பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை நிரந்தரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. நான் சிறு வயதில் இருந்தே - சுமார் 1980 இருக்கும், பாக்யராஜின் ரசிகன். அப்போது என்னை மிகவும் கவர்ந்தது அவரது பெரிய கண்ணாடியும், நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகள்தான்.. எனக்கு நண்பர்கள் அனுப்பும் பொங்கல் வாழ்த்துக்களில் பாக்யராஜ் படம் இடம் பெற்றிருக்கும். அது போக அந்த கால கட்டத்தில் கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு மிகப்பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாகச் செய்தவர்கள் இவர் மற்றும் T .ராஜேந்தர் மட்டுமே. திரைக் கதையின் பிரம்மா மற்றும் ஜனரஞ்சக இயக்குனர் என்று அழைக்கப் பட்ட இவர், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற அடைமொழியையும் பெற்றார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகத் தொடங்கி, அவர் படங்களிலேயே கதை, வசனம் எழுதி நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். சிகப்பு ரோஜாக்களில் சர்வராக ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், பதினாறு வயதிலே படத்தில் மஞ்ச குளிச்சு என்ற பாடலில் தலை காட்டி இருக்கிறார். புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தில் சொந்த குரலில் பேசாததால் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கும். புதிய வார்ப்புகளில் இவர் கையைத் தட்டிப் பாடும் வான் மேகங்களே பாட்டு, இன்றும் இனிமை. ராஜேஷ் மற்றும் வடிவுக்கரசி நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில், இவர் கதை வசனம் எழுதி வில்லனாக நடித்தார்.

சிறிய முடிச்சுக்களை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பிரதானமாக்கிப் படங்கள் எடுப்பதில் வல்லவர் இவர். நகைச்சுவையைப் படம் முழுவதும் இழைய விட்டிருப்பார். பெரும்பாலும் திரைக்கதை மற்றும் வசனங்களைப் படப்பிடிப்பு அன்று மாத்திரமே முடிவு செய்து காட்சிகளை எடுப்பார். உதாரணமாக அந்த ஏழு நாட்கள் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் தாழ்ப்பாள் இல்லாத குளியல் அறையில் வெளியே காஜா செரிப்பைக் காவலுக்கு நிறுத்தி விட்டு உள்ளே செல்வார். பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்திருப்பார். அதற்குரிய சாவு மேளங்கள் அப்போது தொடங்கும். இசையில் ஆர்வம் கொண்ட காஜா ஷெரிப் மேளம் கேட்டவுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே இழவு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது அம்பிகா கதவைத் திறந்து பெரும் களேபரமாகி, பாக்யராஜ் கடுப்பின் உச்சக்கட்டத்தில் காஜா ஷெரிப்பை நடு ரோட்டில் வைத்துக் கும்முவார். இந்தக் காட்சி அமைத்த நாள் அன்று பாக்யராஜ் படபிடிப்புக்குப் போகும் வழியில் ஒரு சாவு மேளத்தைப் பார்த்திருக்கிறார். அந்த சூழ்நிலையில் உதித்த காட்சி இது.

தன்னுடைய படங்களில் தானே கதாநாயகனாக நடித்து அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதை இவரது வலிமையாக மாற்றினார் . சுமதி, சுலக்க்ஷனா, பிரவீணா, பூர்ணிமா ஜெயராம், ஊர்வசி, அம்பிகா போன்ற பல்வேறு நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குடும்ப சூழ்நிலைகளை அனுசரித்து உண்டாக்கிய, நகைச்சுவை கலந்த காதல் கதைகள் இவரது பெரும் பலமாக இருந்தது. பொய் சாட்சி, விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் சற்று மாறுபட்டிருந்தன. திரைக்கதை மற்றும் நகைச்சுவையை மாத்திரமே கொண்டு "இன்று போய் நாளை வா" திரைப்படத்தை வெளியிட்டார். மௌன கீதங்கள் மற்றும் முந்தானை முடிச்சு படங்களில் வந்த இரட்டை அர்த்த வசனம் மற்றும் முருங்கைக்காய் சமாசாரங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இவரது படங்களில் அவை தொடர்ந்து, தனி முத்திரை பெற்றார். (அதனால் இவர் படங்கள் பார்க்க வீட்டில் தடை விதிக்கப் பட்டது என்பது வேறு விஷயம். முந்தானை முடிச்சு படம் நாளை கடைசி என்று போஸ்டரில் ஒட்டிய பின், வீட்டில் அழுது புரண்டு படம் பார்க்க சம்மதம் வாங்கியது ஒரு பெரிய சாதனை)

முந்தானை முடிச்சின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, அந்த அளவுக்கு எதிர்பார்ப்பைச் சமாளிப்பது பாக்யராஜ்க்குப் பெரும் சவாலாக அமைந்தது. அடுத்து வந்த தாவணிக்கனவுகள் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. சின்ன வீடு படம் நகைச்சுவை இருந்தாலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் பின் இந்தியில் சில முயற்சிகள் செய்தார். பின்பு 1987 -ல் வந்த எங்க சின்ன ராசா நன்றாக ஓடியது. இந்த சமயத்தில் MGR அபிமானியான இவர் சிறிது அரசியல் சாயம் பூசினார். அடுத்து வந்த இது நம்ம ஆளு படத்தில் ஜாதி வேறுபாட்டை மையமாக்கினார். இதன் பின்பு வந்த எந்தப் படமும் பரபரப்பாக பேசப்படவோ ஓடவோ இல்லை. இவரது வலிமை இவர் கதா நாயகனாக நடிக்கும் படங்களாகவே இருந்ததால், மற்ற நடிகர்களை வைத்து இவர் முயற்சி செய்யவே இல்லை. இவர் கதாநாயகனாக நடிப்பது சிரமம் மற்றும் மாறி வரும் ரசனை ஆகிய சூழ்நிலைகளில் இவரது திரைப்பட எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.

விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தை நடிக்காமல் இயக்க மட்டும் செய்தார். படம் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றாலும், மாறி விட்ட ரசிகர்களின் மனதில் இது பழைய திரைப்படம் போல் நடிகர்/நடிகையர், திரைக்கதை, காட்சி அமைப்புகள் இருந்ததால் சரியாக ஓடவில்லை. தன் மகளை நாயகியாக வைத்து இயக்கிய "பாரி ஜாதம்" சுமாராக ஓடியது. பின்பு மகனைக் கதாநாயகனாக வைத்து வந்த சித்து+2 ஓடவில்லை.

இவரது படங்களில் காட்சிகளில் உள்ள நகைச்சுவை போக, இவரது நடனம் கூடுதல் நகைச்சுவையைத் தரும். இவரது நடன அசைவுகள் உடற் பயிற்சி ஆசிரியர்களை வெட்கப்பட வைக்கும். அழகிய விழிகளில், அந்தி வரும் நேரம் போன்ற பல பாடல்கள் இவரது நடனத் திறமைக்குச் சாட்சி.

பாக்யராஜின் திரைக்கதை எழுதும் திறமையும், அவரது நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகளும் அவருக்குத் தமிழ் திரை உலக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை அளித்துள்ளன. இவரது உதவி இயக்குர்கள் பலர் திறமை வாய்ந்தவர்கள். பார்த்திபன், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் இவரது பள்ளியில் பயின்றவர்கள். இனி, அவர் இயக்கிய படங்களை வேகமாக ஒரு பார்வை பார்ப்போம். பாடல்களின் youtube இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளது..

இவர் முதலாவதாக இயக்கிய சுவரில்லாச் சித்திரங்கள் படத்தில் காஜா ஷெரிப் காஜா போடும் தையல் கடைச் சிறுவனாக வந்து காஜா என்ற அடை மொழியைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கவுண்டமணி மற்றும் கல்லா பெட்டி சிங்காரத்தின் நகைச் சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. காதல் வைபோகமே என்ற பாட்டு மலேசியா வாசுதேவனின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாக்யராஜ் சுதாகருடன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சுமதி அறிமுகமானார். பாமா ருக்மணியில் இரண்டு பெண்டாட்டி கதையில் நடித்து இயக்கினார்.. இதில் இவருடன் நடித்த நடிகை ப்ரவீனாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பாமா ருக்மணியில் வந்த "நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்" பாட்டு கேட்க இப்போதும் சுவை.

ஒரு கை ஓசை திரைப் படத்தில் ஊமையாக நடித்திருந்தார். இந்தப் படம் நன்றாக ஓடியதா என்ற விபரம் தெரியவில்லை. இதற்கு அடுத்து வந்த "இன்று போய் நாளை வா" ஒரு மறக்க முடியாத படம். முழு நீள நகைச்சுவைப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு மட்டுமே சேரும். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே சில பக்கங்கள் எழுதலாம். இந்தப் படத்தில் இவரது நண்பர் வெங்கட்டாக நடித்த பழனிசாமி பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கல்லா பெட்டி சிங்காரம், இந்தி பண்டிட்டாக வரும் ஜான் அமிர்தராஜ், காந்திமதி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தில் வந்த சில காட்சிகள் இன்னும் நம் மனதை விட்டு அகலாது. இந்தி பண்டிட் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாதா" என்று சொல்லிக் கொடுக்கும் காட்சி அரங்கங்களை அதிர வைக்கும். வெங்கட் குஸ்தி கற்பது, பாக்யராஜ் கழுதையின் கயிறை விட்டு விட்டுத் துரத்துவது , ராஜேந்திரன் காந்திஜி உச்சரிக்க முடியாமல் தூணில் இடி வாங்குவது, கல்லா பெட்டி மற்றும் இந்தி பண்டிட் ராதிகா காதலை மறுத்தவுடன் அடி வாங்கி வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இன்றும் வயிற்றைப் புண்ணாகும். சற்று இழுத்தடித்த இறுதிக் காட்சி காரணம், இந்தப் படம் எதிர் பார்த்த அளவுக்கு பரபரப்பாக ஓடாவிட்டாலும், ஒரு சிறிய கதையை மட்டும் வைத்துக் கொண்டு முழுவதும் திரைக்கதையை மட்டும் வைத்து எடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

மௌன கீதங்கள் படம் வெளி வருவதற்கு முன்னால் குமுதத்தில் 1980 -ல் ஒரு தொடர் கதையாக வந்தது. இறுதிக் காட்சியை வெளியிடாமல் வெள்ளித் திரையில் காண்க என்று முடித்துத் தவிக்க வைத்து விட்டார். பின்பு நான் படம் பார்த்தது 2004 -ல் சன் டிவியில் ஒரு முறை வெளியிட்ட போதே. 24 வருடக் காத்திருந்தலுக்குப் பின் படத்தைப் பார்த்த போது கிடைத்த இன்பம் அளவிட முடியாதது. பழைய படம் என்ற எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம். மூக்குத்திப் பூ மேலே பாட்டு ஒரு என்றும் இனிமையான பாடல். சிறுவன் சுரேஷின் நடிப்பு மிகவும் அருமை.

பின்பு வந்த விடியும் வரை காத்திரு ஒரு திகில் படமாக இருந்தது. இதில் வந்த நீங்காத எண்ணம் ஒன்று பாடல் குறிப்பிடத் தக்கது. இதன் பின்பு வந்த அந்த ஏழு நாட்கள் தமிழ்த் திரையுலகின் மைல் கற்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. ஆனந்த விகடனில் 65 மதிப்பெண்கள் பெற்ற படம் இது. பாக்யராஜ் மலையாளம் கலந்த தமிழில் பேசிக் கலக்கினார். காஜா ஷெரிப்பின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. சென்னைக்கு வந்து பாக்யராஜ் வெகுளியாகப் பேசி வீடு தேடுவதும், கல்லா பெட்டியிடம் திட்டு வாங்குவதும், காஜா ஷெரிப் அடிக்கடி பாக்யராஜின் காலை வாரி விடுவதும் குபீர் சிரிப்புகள். இந்தப் படத்தில் MSV இசையில் வந்த எல்லாப் பாடல்களுமே இனிமை. எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில், சப்த ஸ்வர தேவி உனது, எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. படத்தின் இறுதிக் காட்சி எல்லாத் தரப்பினரையும் நெகிழ வைத்தது. ராஜேஷ் மற்றும் தமிழில் அறிமுகமான அம்பிகா மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

பொய் சாட்சி திரைப் படத்தில் தன்னுடைய தவறால் ஒரு குடும்பமே நசித்து விட்டதை உணர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். ஓட்டலில் நன்றாக சாப்பிட்டு விட்டு செந்திலை பில் செலுத்த மாட்டி விட்டு நழுவும் காட்சி வயிறைக் குலுங்க வைக்கும்.

டார்லிங் டார்லிங் டார்லிங்கில் குழந்தைப் பருவத்தில் பிரிந்து சென்ற தோழிக்காகக் காத்திருக்கும் அப்பாவி இளைஞனாக நடித்திருந்தார். அப்பா கல்லா பெட்டி மற்றும் தங்கை இந்திராவுடன் இவர் அடிக்கும் லூட்டி மறக்க முடியாதது. ஊட்டி பங்களா வாட்ச்மேனாக வரும் கல்லா பெட்டி முதல் காட்சியில் முதலாளி தோரணையில் வருவதில் ஆரம்பித்து, பின்னர் பாக்யராஜை நம்பிக் கடன் வாங்கி ஈட்டிக்காரனின் பைக்கின் பின்னால் கயிறால் கட்டப்பட்டுப் புலம்பும் காட்சிகளில் கலக்கி இருப்பார். பூர்ணிமா ஜெயராம் வருகையை அறிந்தவுடன் இவர் பரபரப்பில் செய்யும் காரியங்கள் எல்லாமே சுவை. சங்கர் கணேஷ் இசையில் "ஓ நெஞ்சே நீ தான்" நெஞ்சை உருக்கும். பூர்ணிமாவுடன் இவர் பாடும் அழகிய விழிகளில் டூயட் இன்றும் கேட்கலாம். பிரவீணாவின் மரணத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் நாயகி பூர்ணிமாவைத் திருமணம் செய்தி கொண்டார்.,

தூறல் நின்னு போச்சில் பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை என்று தவறாக நினைக்கப்பட்ட நண்பனின் முகத்தில், அடுத்த முறை போகும்போது கரியைப் பூசிக் கூட்டிக் கொண்டு போவது நல்ல நகைச்சுவை. சுலக்க்ஷனா இந்தப் படத்தில் அறிமுகம் ஆனார். செந்தாமரை மற்றும் நம்பியார் நல்ல கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அற்புதமானவை. பூபாளம் இசைக்கும், தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே ஆகியவை அருமையான மெல்லிசைப் பாட்டுக்கள். என் சோகக் கதைய கேளு தாய் குலமே பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது.

முந்தானை முடிச்சு 1983 ஜூலை 22 -ஆம் தேதி வெளியானது. இந்த படம் அளவுக்கு பரபரப்பாகத் தமிழ் நாட்டில் எந்தப் படமும் அது வரை பேசப்படவில்லை. தமிழ் திரை உலக வரலாற்றில் முதன் முதலாக வெளியிட்ட அனைத்து அரங்கங்களிலும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அரங்கங்களில் தாய்க்குலங்களின் கூட்டம் காரணம் கடும் நெரிசல் ஏற்ப்பட்டது. அறிமுகமான ஊர்வசி பரபரப்பை ஏற்படுத்தினார். நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என்று எல்லாத் தரப்பிலும் படம் கொடி கட்டிப் பறந்தது. தவக்களை மற்றும் மாஸ்டர் சுரேஷ் உட்பட சிறுவர்கள் படத்தில் கலகலப்பை ஏற்படுத்தினர். படத்தில் முருங்கைக்காய் சம்பந்தமான காட்சிகளும் வசனங்களும் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும் பரபரப்போடு மக்களின் வரவேற்பைப் பெற்றன. இவை பாக்யராஜின் பிற்காலப் படங்களைப் பெரிதும் பாதித்தன என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. துவக்கப் பாட்டான "விளக்கு வைக்கும் நேரத்துல", ஊர்வசி தன் எதிர்காலக் கணவனை நகைச்சுவையுடன் விவரிக்கும் "நான் புடிக்கும் மாப்பிளதான்", பாக்யராஜ், ஊர்வசியின் டூயட்டான "அந்தி வரும் நேரம்", தீபாவுடன் பாக்யராஜ் பாடும் டப்பாங்குத்தான "வா வா வாத்தியாரே வா", ஊர்வசியின் தவம் கலைக்கும் பாடான "கண்ண தொறக்கணும் சாமி" மற்றும் சென்டிமென்ட் பாட்டான "சின்னஞ்சிறு கிளியே" என்று அனைத்துப் பாடல்களும் பிரபலம் ஆயின.

முந்தானை முடிச்சின் பாதிப்பில் அவரது அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் ஆனதாகக் கருதப் படுகிறது. முந்தானை முடிச்சின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியாமல் திணறினாலும், இது ஓரளவுக்கு ஓடியது. சிவாஜி ஒரு அருமையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். செங்கமலம் சிரிக்குது என்ற அருமையான பாடல் இதில் உண்டு.

சின்னவீடு படத்தில் நகைச்சுவை படம் முழுவதும் இருந்தாலும் அதன் கரு மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்பைப் பெற்றது. "சிட்டுக்குருவி வெட்கப்படுது" என்ற பாடல் பிரபலமானது. நான் சிகப்பு மனிதன் என்ற ரஜினி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் துப்புத் துலக்கும் அதிகாரியாக நடித்தார்.

எங்க சின்ன ராசா படத்தில் அதிமுக கொடி நிறத்தில் துண்டு அணிந்து "எடுடா மேளம்" அன்று பாடுவார். எம்ஜியார் மறைவிற்குப் பின் பாக்யராஜும் அரசியலில் ஈடுபட முயன்ற போது வந்த படம் இது. பாக்யராஜ் எமமுக என்ற கட்சியை ஆரம்பித்த நேரம். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர் எமமுக கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது வாரமலர் துணுக்கு மூட்டையில் எமமுக செய்திகள் அன்று கிண்டலடித்து ஒரு தனிப் பகுதியே வந்தது. ராதாவுடன் இணைந்து முதன் முறையாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசை அமைத்த இந்தப் படத்தில் பாடல்கள் பிரபலமாயின. கொண்ட சேவல் கூவும் நேரம், மாமா உனக்கு ஒரு தூது விட்டேன், தென் பாண்டி சீம ஓரமா ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தன. இரட்டை வசனக் காட்சிகள் சற்றே தூக்கல்.

அடுத்து வந்த "இது நம்ம ஆளு" ஷோபனாவிற்குத் தமிழில் மறு வாழ்வு கொடுத்தது. பிழைப்பிற்காக ஐயர் வேடம் போடும் பாக்யராஜ், சோமராஜுலுவின் ஐயர் குடும்பத்தின் நன் மதிப்பை பெற்று ஷோபனாவின் காதலை வழியில்லாமல் ஏற்றுப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து அன்றே மாட்டிக்கொள்கிறார். பின்பு பல போராட்டங்களுக்கிடையில் சோமராஜுலு அவர்களை அங்கீகரிக்கிறார். ஜாதி வேறுபாட்டை எதிர்க்கும் கரு வெற்றியைக் கொடுத்தது. இசையும் இவரே. பாடல்கள் ஓரளவுக்குப் பிரபலமாயின. தலைப்புப் பாடலான பச்ச மலை சாமி ஒண்ணு இவரே பாடி இருக்கிறார். அம்மாடி இதுதான் காதலா நல்ல ஒரு மெல்லிசைப் பாடல். சர்ச்சைக்குரிய நான் ஆளான தாமரை, மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு இன்றும் பிரபலம். பத்து லட்சம் வாசகர்களுக்கு மேலே இதைப் பார்த்திருப்பது இதன் பிரசித்தி(?)க்கு சாட்சி.

பின்பு எடுக்கப்பட்ட அவசர போலீஸ் 100 பாதியில் நின்று போன MGR -இன் அண்ணா என் தெய்வம் என்ற படத்தின் தொடர்ச்சி. சிலுக்கு சுமிதா நாயகியாக நடித்த இந்த படம் ஓடவில்லை(?). அடுத்து வந்த ஆராரோ ஆரிராரோ சுமாராக ஓடியது. மன நிலை சரியில்லாதவர்களை மையமாக வைத்து வந்த படம். பானுப்ரியா நாயகி. கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. அதிர்ச்சிப் பைத்தியம் நல்ல நகைச்சுவை. பின்பு வந்த பவுனு பவுனுதான் ஒரு படு தோல்வி. ரோகினி கதாநாயகியாக நடித்திருந்தார். அளவுக்கதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் தோல்விக்கு வழி வகுத்தன.

பின்பு வந்த சுந்தரகாண்டம் நல்ல நகைச்சுவைப் படம். மீண்டும் பானுப்ரியா. அறிமுக நடிகை சிந்துஜா நல்ல துறுதுறுப்பு. அதுவும் பள்ளியில் நடக்கும் ஆரம்ப காட்சிகள் குபீர் சிரிப்பு. பாடகி என்று நம்பி மணந்த பானுப்ரியா முதலிரவில் பள்ளியின் காலை வணக்கப் பாடலான "தேவனே தேவனே" என்று பாடும்போது அரங்கமே அதிரும்.

குஷ்பூ முதலிடத்தில் இருக்கும்போது வந்த படம் அம்மா வந்தாச்சு. குழந்தை செண்டிமெண்டை வைத்து எடுத்த படம். நந்தினி ஓ நந்தினி பாடல் சுமாராகப் பேசப்பட்டது. பின்பு வந்த ராசுக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு மறு வாழ்வு தந்தது. ஹோலி ஹோலி என்ற பாடல் சுமார். வீட்ல விசேஷங்க நல்ல ஒரு நகைச்சுவைப் படம். காணாமல் போயிருந்த சுரேஷ் நடித்திருந்தார். பிரகதி/மோகனா என்ற புதுமுக நடிகைகள். பாடல்கள் சுவை. இந்த பஸ்ஸுதான் PTC ஒரு அதிரடி. கொஞ்சம் சங்கீதம் , மலரே தென்றல், பூங்குயில் ரெண்டு ஆகிய பாடல்களும் அருமை. கோழி கூவுது புகழ் விஜி ஒரு கவர்ச்சிப் பாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை உணர்வுள்ள மருத்துவராக ஜனகராஜ் கலக்கி இருப்பார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படம் பாடல்களுக்காகவே பார்க்கலாம். வந்தாள் வந்தாள் ராஜ குமாரி, பாக்யராஜின் பிறந்த நாளைக் கொண்டாட மீனா ஏற்பாடு செய்யும் ராஜா ராஜாதான் ஆகிய பாடல்கள் இன்றும் கேட்கலாம். மீனா மற்றும் சார்லி அருமையாக நடித்திருந்தனர். இவரது பாட்டியாக வரும் அம்மையார் நன்றாக நடித்திருப்பார்.

பின்பு வந்த ஞானப் பழம் பற்றும் வேட்டிய மடிச்சுக்கட்டு ஆகியவை ஒன்றும் சொல்லும்படி இல்லை. சொக்கத் தங்கம் வெறும் இயக்கம் மட்டும். பாரிஜாதம் சுமாராக ஓடியது. சித்து பிளஸ் டூ ஓடவில்லை.

சமீப காலத்தில் சில படங்களில் மூத்த கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். (நினைத்தாலே இனிக்கும், சம்திங் சம்திங் போன்றவை)

நன்றி :)

6 comments:

 1. அருமையான பதிவு! எங்க ஊர்க்காரரை படத்தில் பார்ப்பதர்கே (ஊரில்( தியேட்டரில் கூட்டம் கூடும்! பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த போதே கதை மற்றும் காட்சி அமைப்புகளில் கருத்து வேறுபாடுகளை எடுத்து சொல்லும் தைரியம் கொண்ட வர் !
  பதிவின் ஊடே பாடல்களின் சுட்டியை கொடுத்தது அருமை, நன்றி!

  ReplyDelete
 2. வந்துட்டாரய்யா, வந்துட்டாரு பாக்யராஜ் பக்கம். எதிர்பார்த்ததைவிட பிரமாதமான பதிவு. பாக்யராஜே படித்தால் அசந்து விடுவார் அவரின் சாதனைப் பட்டியலை.

  எனக்கு பாக்யராஜின் படங்கள் மு.மு. வரைதான் நன்றாகத் தெரியும். பாக்யராஜின் படங்களில் வசனமும், பாடல்களும் இரட்டை அர்த்தமுள்ளவை என்பதை நான் எப்போதும் ஏற்றதில்லை. ஒரே ஒரு அர்த்தம்தான் ;-)

  அவரின் அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா - இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். பள்ளி நாட்களின் என் வீட்டுப் பின்வீட்டில் அ.ஏ.நா. திரைக்கதை ஒலித்தட்டில் தினமும் ஓடி ஓடி தேய்ந்தது. ஆனாலும் அலுக்கவில்லை.

  காஜா ஷெரிப் பெயர்க்காரணம் புதிதாக் இருக்கிறது எனக்கு. தமிழில் ஹாஜாவைத் தான் காஜா என்கிறார்கள் என நினைத்திருந்தேன்.

  முருங்கைகாய் சற்று தவறாக படத்தில் காண்பிக்கப்பட்டது. முருங்கைக்காய் சாப்பிட்டால் பெண்களுக்குத்தான் நல்லது என்றும் அதை சாப்பிட்டுவிட்டுதான் ஊர்வசி அப்படி பாடி பாக்யராஜை உசுப்பேத்தின மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம் என்று சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார்.

  மூத்த நடிகர் ஒருவர்(தங்கவேலு என நினைக்கிறேன்) தூறல் நின்னுப் போச்சு தலைப்பை பற்றி இவ்வாறு கூறியிருந்தார். மக்களின் வாயில் நல்ல வார்த்தைகள் வரவேண்டும். லட்சக்கணக்கான மக்கள் வாயில் தூறல் நின்னுப் போச்சுன்னு வந்தா நாட்டில் எப்படி மழை பெய்யும் என்று குறைப்பட்டிருந்தார். Talk about positive thinking!

  கல்லூரிக்கு வடக்கே சென்றதில் இருந்து தமிழ்ப் படங்களின் பரிச்சயம் குறைந்ததால் அவரின் மு.மு. பிறகு வந்த படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. சின்ன வீடு படத்தில் முழுக் கல்யாணக் கோலத்தில் ராணுவத்தில் சேர முயல்வது நினைவில் நிற்கிறது.

  பாக்யராஜின் நகைச்சுவை நடிப்பு அந்தக்கால சிவாஜி நடிப்பை நினைவூட்டுவது. அந்தக் காலத்தில் சிவாஜி நிறைய காமெடி செய்திருக்கிறார். அரையடி ஆழ நீரில் தற்கொலை (பலே பாண்டியா?)..

  ஒரு படத்தில் சிவாஜி நாடகம் எழுதுவார். கல்யாணமாகி முதலிரவு முழுக்க மனைவியிடம் தான் எழுதிய நாடகங்களை படித்துக் காண்பிப்பார். அவர் நாடகம் மேடையேறும்நாள் அவர் நிறைய சன்மானம் வாங்கி வருவார் என தாய் தந்தையர் நிறைய ஜவுளி எல்லாம் வாங்கி, அனைவருக்கும் லட்டு விநியோகித்து இவர் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். இவர் வந்தவுடன் தாய் தரையில் இவர் முன் உட்கார்ந்து தன் முந்தானையை விரித்து கொட்டு, கொட்டு என்பார். அதில் விழும் ஒரு பேனா! இல்லற ஜோதி என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் :-)

  ReplyDelete
 3. good analysis..but you left out the most important ..probably when he peaked with the "Aaakri Raasta"- the hindi remake of "Oru Kaidhiyin dairy"..he made the whole India to raise eye brows on the southern talent with his script..even it was said that he was "guruvai minjiya sishyan"(guru:bharathiraja)...!

  ReplyDelete
 4. @Thinker: Even though Akri Rastaa was a decent hit film in Hindi, it was still a remake. Not much work needed to re-make a hit movie (Jayam Ravi's brother survived/surviving because of his remakes! Need more Original work to determine if he is good). Bhagyaraj changed the movie climax in Hindi & made his mark. Bhagyaraj surely has original good talent that got his fame 'Guruvai Minjina Sishyan'.

  ReplyDelete
 5. Thanks Thinker/Jay for chiming in. I was not aware of his remake at that time. Only knew from Wiki recently. I also left out Rudhra, which I am drawing a blank. He tried Kavadi Sindhu and dropped it for whatever reason. Also not sure why he did not remake Mundhanai Mudichu. I believe Pandiayarajan tried remaking it? Or just Aaanpavam?

  ReplyDelete
 6. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்க விபரங்கள்.
  ஒன்றிரண்டு தகவல் பிழைகள். அம்பிகா ஒன்றிரண்டு வருடம் முன்பே அறிமுகமாகி விட்டார் (சக்களத்தி) வாடை வாட்டுது பாட்டு வருமே அந்தப் படம். அதேபோல் பூர்ணிமா ஜெயராம். கிளிஞ்சல்கள் (விழிகள் மேடையாம்), பயணங்கள் முடிவதில்லை எல்லாம் டார்லிங் டார்லிங்க்கு முந்தயவை.

  அன்புடன்
  ரவி திருவேங்கடத்தான்

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!