Thursday, July 28, 2011

ரிச்மண்ட் தமிழ் சங்க வன போஜனம் (பிக்னிக்)

ஜூலை 24 , 2011 அன்று ரிச்மண்ட் தமிழ் சங்கம் உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு வன போஜனம் (பிக்னிக்) ஏற்பாடு செய்திருந்தது. ரிச்மண்டில் உள்ள ஆழ ஓட்டப் பூங்காவில் (deep run park) இது நடை பெற்றது.

காலை ஒன்பது மணிக்கு சற்று முன்னர் ஆரம்பித்து தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் களத்தில் இறங்கி அங்குள்ள ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எல்லாம் தயார் ஆனது. முதல் தமிழ் சங்க உறுப்பினருக்காகக் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் டென்னிஸ் மட்டை மற்றும் பந்துகளைக் கொண்டு ஒரு சிறிய கிரிக்கெட் ஆட்டம் தொடங்கினார்கள்.

ஒரு வழியாக உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தார் முதலாவதாக வந்த போது, ஆரவாரமான கை தட்டலோடு வரவேற்கப் பட்டனர். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். சிறுவர்களுக்கு பல்வேறு சிறு உணவுகள் மற்றும் பானங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிறு குழந்தைகள் பூங்காவில் இருந்த விளையாட்டுக் கருவிகளில் ஆடத் தொடங்கினர். ஊஞ்சல்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.

மற்ற உறுப்பினர்கள் வந்தவுடன் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெரியகருப்பன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வந்திருக்கும் உறுப்பினர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்றனர். வித்தியாசமான "musical chair " பந்தயம் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது. குழந்தைகளுக்கான தண்ணீர் நிரப்பும் போட்டி, மற்றும் வாயில் கரண்டி கொண்டு நடத்தல் ஆகியவை நடை பெற்றன. ஆண்கள் வாலிபால் ஆடினர். தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் நிர்மலா மகேஷ் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். தமிழ் சங்க முன் தலைவர் முரளி ராமச்சந்திரன் கௌபாய் தொப்பி அணிந்து நகைச்சுவைச் சூழ்நிலையை உருவாக்கினார்.

உச்சி வேளையின் போது பிட்சாக்கள் பாப்பா ஜான்ஸ் கடையில் இருந்து வந்து சேர்ந்தன. மூன்று வகையான பிட்சாக்கள் பரிமாறப்பட்டன. உணவு வேளை முடிந்த உடன் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களைக் கண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்த கட்ட விளையாட்டுகள் தொடங்கின.

சிறிது நேரத்தில் தமிழ் சங்க sponsor -களில் ஒன்றான இந்திய பேஸ்ட்ரி ஹவுஸ் -ல் இருந்து சமோசா, மற்றும் puffs வந்து சேர்ந்து உறுப்பினர்களுக்குப் பரிமாறப் பட்டன. லக்ஷ்மி ஸ்ரீதர் மூலம் சுவையான தேநீர் தயார் செய்யப் பட்டது.

அதன் பின்பு குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித் தனியாகக் கயிறு இழுக்கும் போட்டி நடை பெற்றது. உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். பலூனில் தண்ணீர் நிரப்பி உடையாமல் பிடிக்கும் போட்டி தம்பதியினருக்காக நடை பெற்றது. மலைசாமி /கவிதா தம்பதியினர் இதில் வெற்றி பெற்றார்கள். நாகு பரசு, வெங்கட் செட்டியார், சத்தியா, ஸ்ரீனி ஆகியோர் சிறிய இலக்கியக் கூட்டம் நடத்தினர்.

சுமார் இருபது உறுப்பினர்கள் கிரிக்கெட் ஆடக் கிளம்பினர். சிறுவர்கள் அதே நேரத்தில் கால்பந்து ஆடினார்கள். சத்தியவாகீசுவரன் மற்றும் ஆனந்த் அண்ணாமலை தலைமையில் இரு அணிகள் உருவாக்கப் பட்டன. பெண்களில் இருந்து கவிதா மட்டும் பங்கேற்றார்.

முதலில் மட்டை ஏந்திய சத்தியா அணி ஏழு ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பந்து நேரிடும் முன்பே ரன்-அவுட் ஆனா மகேஷ் எதிரணியின் பெருந்தன்மையில் மட்டை ஏந்த அனுமதிக்கப் பட்டார். முக்காவாசி ரன்களை அவர் மட்டுமே எடுத்து ஏகப்பட்ட சிக்ஸர்-களை விளாசி அதன் மூலம் எதிரணியினர் அவர்களின் பெருந்தன்மைக்கு மிகவும் வருந்தினார்கள். ஆனந்த் தலைவர் என்ற முறையில் சிறப்பாகப் பந்து வீசினார். கவிதா விஸ்வாவின் தலைக்கு மேலே பந்து வீசி அவரை போல்ட் செய்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

பின்பு ஆடிய ஆனந்த் அணியினர் மெதுவாகத் தொடங்கினர். கவிதா ஒரு சிக்ஸர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மட்டையாளர்கள் கூடியதால் ஆனந்த் அணியினருக்கு ஒரு ஓவர் கூடுதல் ஒதுக்கப் பட்டது. நடுவர் ஸ்ரீனிவாசன் தாறுமாறாக அகலப் பந்துகளை வழங்கி கடும் எதிர்ப்பைப் பெற்று பின்பு ஒவ்வொரு அகலப் பந்தையும் வழங்குவதற்கு முன் பீல்டிங் அணியினரின் சம்மதம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்ந் நன்றாக அடித்து கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையைக் கொண்டு வந்தார். செல்வாவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சத்தியா அணியினர் வெற்றி அடைந்தனர்.

35 குடும்பத்தினரைச் சிறந்த சுமார் 125 உறுப்பினர்கள் இந்த பிக்னிக்கில் பங்கு பெற்றனர். சில உறுப்பினர்களின் பெற்றோர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் கடைசி வரை இருந்தனர். சுமார் ஐந்து மணிக்கு இது நிறைவு பெற்றது.

தமிழ் சங்கத் தலைவர் முத்து ஜீவானந்தம் மற்றும் பொருளாளர் தியாகா பெரும்பாலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மார்செலின் மற்றும் செந்தில் பல்வேறு விளையாட்டுகளை நடத்தினர். சுகந்தி மற்றும் விஜி முன்னரே வந்திருந்து செயற்குழு உறுப்பினர்களை ஊக்குவித்தனர். மற்ற செயற்குழு உறுப்பினர்களும் பல்வேறு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு இந்த பிக்னிக்கை ஒரு சிறந்த முறையில் நடத்தினர். அவர்களுக்கு தமிழ் சங்க உறுப்பினர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை உபயோகப்படுத்தவும்.

3 comments:

 1. //ஆழ ஓட்டப் பூங்கா, வன போஜனம் // ஹி..ஹி இது கொஞ்சம் அதிகம் சாரே! ஒரு வழியாக கொளுத்தும் வெய்யிலில் வன போஜனத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு ரி.த.ச 'திற்கு பாராட்டுக்கள். இந்த முறை அருகில் இருந்தும் குடும்ப வேலைகளால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். படங்கள் நன்றாக இருந்தன. ஒரு வேண்டுகோள், படங்களை டாக் செய்திருந்தால் அனைவருக்கும் 'இவர் தான் அவர்' அன் தெரிந்திருக்கும். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 2. சத்தியா,

  உங்கள் தமிழ் மொழி பெயர்ப்பு மிக்க நகைச்சுவையாக இருந்தது.
  இதனை படிக்கும் பொழுது, மீண்டும் ஒரு பிக்னிக் அனுபவம் கிடைத்தது.
  லதா தியாகு, லதா முத்துவையும் நான் தேநீர் தயாரிக்கும் இடத்தில் பார்த்த ஞாபகம்.
  தண்ணீர் பந்துகள் எவ்வளவு எறிந்தாலும் உடையாமல் இருந்தது குழந்தைகளின் விஷமம்.

  இசை நாற்காலி இல்லை, அது பாம்ப் தி சிட்டி என்று சொன்னார்கள். கூண்டோடு கைலாசம் என்பது போல்
  இதில் கூண்டோடு அவுட் ஆக்கினார்கள். இதில் டெல்லி மட்டும் அதிக அளவு கைலாசம் போனது.
  மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

  எப்பொழுதும் முன்னாள் முதல்வர்களுக்கும் ஒரு வித்தியாசமான மரியாதை இருப்பது போல்
  அவரின் குல்லாயை கேலி ஆக்கி விட்டீர்கள்.
  கயிறு இழுக்கும் போட்டியில் நடந்த கூத்து தான் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

  மிக முக்கியமான ஒன்று "சவுண்ட் சிஸ்டம்" பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
  சவுண்ட் இல்லாத சவுண்ட் சிஸ்டம். அமைதியான சவுண்ட் சிஸ்டம்.

  நான் வடை, பொங்கல் கிடைக்கும் என்று நம்பி வந்தேன். ஆனால் அணியினரின் பெயர்களை
  வடை, பொங்கல், தோசை, இட்லி என்று வைத்து சமாளித்து விட்டீர்கள்.

  மிக அருமையான வன வாசம் தான். குழந்தைகளும் ரசித்து மகிழ்ந்தனர்.
  இது போல் நிறைய நிகழ்ச்சிகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கும் உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

  வேதாந்தி

  ReplyDelete
 3. வேதாந்தி: //உங்கள் தமிழ் மொழி பெயர்ப்பு மிக்க நகைச்சுவையாக இருந்தது//. ஒரு நகைச்சுவை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒரு சிறுவனிடம் "பிள்ளையார் கோயில் உப்புமா ஊசிப் போச்சு" என்ற வாக்கியத்தை மொழி பெயர்க்கச் சொன்னதற்கு அவன் கூறிய விடை இதோ. " Son who temple salt flour needle gone"

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!