தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் முற்போக்குக் கூட்டணிகள்
அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது "வழக்கத்தில் நைந்து போன்ற சொற்றொடர்" (cliche). இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் எத்தனையோ முறை கூட்டணிகள் மாறி இருக்கின்றன. அரசியல்வாதிகள் கட்சி மாறி இருக்கிறார்கள். சந்தர்ப்பாதக் கூட்டணிக்கு ஒரு கௌரவமான பெயர்தான் முற்போக்குக் கூட்டணி. அவற்றில் சிலவற்றை சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். கூட்டணிக்கு முன்பும் பின்பும் உள்ள சில சம்பவங்களையும் முழுமைக்காக விவரித்துள்ளேன். என்னுடைய அனுபவங்கள் 1985 -க்கு அப்புறமே. எனவே அதற்கு முன்புள்ள சம்பவங்கள் அதிகம் விவரிக்க முடியவில்லை. (இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்)
அண்ணா மறைவிற்குப் பின் கருணாநிதி பல சாணக்யத்தனங்களுக்குப் பின் முதல்வரானார். அப்போது கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டால் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள் என்று சொன்ன அன்பழகன், இன்னும் திமுகவில் உள்ளார். பரம விரோதிகளாய் இருந்த காமராஜரும், இராஜாஜியும் 1971 -ல் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதியின் கூட்டணியை எதிர்க்க அணி சேர்ந்தனர். அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். பின்பு அவசர நிலை பிரயோகத்தின் பொது எம்ஜியாரின் தூண்டுதலோடு இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார்.
எம்ஜியார் கட்சியை விட்டு வெளியேறிய போது நெடுஞ்செழியன் பெருந்தன்மையாக (??) திமுகவில் அமைச்சராகத் தொடர்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப் பட்ட பின், அவர் தனிக் கட்சி தொடங்கி அதில் தோற்ற பின் கட்சியைக் கலைத்து விட்டு உடனே அதிமுகவிற்குத் தாவினார். அமைச்சர் பதவி தரும் கட்சியில் இருப்பது என்பது இவரது கொள்கை.
1977 -ல் எம்ஜியார் தனித்து நின்று வென்ற பிறகு, கருணாநிதியும் இந்திரா காந்தியும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். அந்த நட்பின் புளகாங்கிதத்தில் தமிழ் மக்கள் அவர்களை 37 மக்கள் சபைத் தொகுதிகளில் வெல்ல வைத்தார்கள். அந்த வெற்றிக் களிப்பில் கருணாநிதி 1975 -ல் தன ஆட்சி கலைக்கப் பட்டதிற்க்குப் பழி வாங்கும் விதமாக அதிமுக ஆட்சியில் கலைக்க வைத்தார். உடனே நடந்த சட்ட சபைதேர்தலில் தலா 110 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி தோல்வி அடைந்தது.
அப்போது இந்திரா காந்தி இனி திமுக கூட்டணியால் பலன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதிமுக கூட்டணிக்குத் தாவினார். 1984 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோடு அதிமுக வெற்றி பெற்றது. (இந்திராவின் மரணத்திற்குப் பின்)
எம்ஜியாரின் மரணத்திற்குப் பின் மிகப் பெரிய நகைச்சுவைகள் அரங்கேறின. நெடுஞ்செழியன் எம்ஜியாரின் மனைவி ஜானகி அம்மாளோடு முதல்வர் பதவிக்குப் போட்டி போட்டு அது கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஜெயலலிதாவின் பிரிவுக்குத் தாவினார். திருநாவுக்கரசு, KKSSR , பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் ஜெயலலிதாவின் பிரிவில் இருந்தனர். அப்போது சட்டசபையில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடை பெற்று மக்களை மகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்த்தின. KKSSR கொஞ்சம் MLA -களை ஒளித்து வைத்து விளையாட்டுக் காட்டினார். தாமரைக்கனி பண்ருட்டியாரை ஒரு கை பார்த்து உடம்பில் கட்டு போட வைத்தார். பின்பு ஆட்சி கலைக்கப்பட்டது.
1989 தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் ஜானகி மற்றும் ஜெயலலிதா பிரிவுகள் என்று நான்கு முனைப்போட்டி நடந்தது. அதிமுகவின் இரு பிரிவுகளும் சக்தி வாய்ந்த இரட்டை இலைச் சின்னத்திற்கு சண்டை போட்டு இரண்டு பேருக்குமே வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா நெடுஞ்செழியன், பண்ருட்டி, திருநாவுக்கரசு மற்றும் அரங்கநாயகத்தைக் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களை "உதிர்ந்த முடிகள்" என்று கௌரவமாக அழைத்தார். அவர்கள் நால்வர் அணி என்ற பிரிவை ஆரம்பித்தனர். அந்த அணி திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளுக்கு நல்ல கருக்களைக் கொடுத்தது. நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில் நின்று SV சேகரை விடக் குறைவாக ஓட்டுக்கள் வாங்கியது இன்னும் சிறந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தப் பிளவில் பெரும் பயன் அடைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைக்கப்பட்டது. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த காளிமுத்து, RM வீரப்பன் போன்றவர்கள் "காலத்தின் கட்டளை" என்று கூறிக்கொண்டு ஒன்று பட்ட அதிமுகவில் இணைந்தனர். இதில் காளிமுத்து இடைப்பட்ட காலத்தில் திமுகவில் இணைந்து தோல்வி அடைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட்டதால்தான் தோற்க நேரிட்டது என்று காரணம் காட்டி வாழப்பாடி ராமமூர்த்தி மூப்பனாருக்கு எதிராகப் போர்க்கொடி தொடுத்து காங்கிரஸ் தலைவர் ஆகி அதிமுக கூட்டணி அமைத்தார்.
ஒன்றுபட்ட அதிமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து மக்கள் சபை தேர்தலில் போட்டி இட்டதில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. VP சிங் பிரதமர் ஆனதால் திமுக கொஞ்ச நாள் தப்பித்தது.
அதன் பின், எப்படியாவது சாகும் முன் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர் காங்கிரஸ் உதவியுடன் பிரதமர் ஆனார். அப்போது ஜெயலலிதா காங்கிரஸ் உதவியுடன் விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி திமுக ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தார்.
பின்பு நடை பெற்ற 1991 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது. இடைத் தேர்தலில் பிரசார வேனில் தொங்கிக்கொண்டு சென்ற அமைச்சர் SD சோமசுந்தரம் சரித்திரத்தில் இடம் பிடித்து, சில திரைப்படக் காட்சிகளுக்கு மூலமாக அமைந்தார்.
இதன் இடையில் திமுகவில் வைகோவை ஒதுக்க ஆரம்பித்து அதன் உச்சக் கட்டமாக கருணாநிதி வைகோவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இதை அடுத்து தன்மானச் சிங்கம் வைகோ திமுகவை விட்டு வெளியேறி மதிமுக-வைத் தொடங்கினார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாகத் தன்னை அறிவித்தார்.
அளவுக்கதிகமான பெரும்பான்மையில் இருந்த அதிமுக, ஊழலில் அதிருப்தியைப் பெற்றது. சசிகலாவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்திலும், 300 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ப்பு மகன் திருமணத்திலும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தனக்குப் பிடிக்காதவர்கள் மேலே ஜெயலலிதா கடும் ஆத்திரம் அடைந்தார். TN சேஷனை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அதிமுக தொண்டர்களை விட்டுத் தாக்கினார். சுப்ரமணிய சாமியைக் கைது செய்ய முயன்ற தோல்வியில் ஆத்திரம் அடைந்து சேரிப் பெண்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்து நீதி மன்ற வளாகத்தில் தமிழக கௌரவத்தை நடுத் தெருவில் நிறுத்தினார். தனக்குத் தொல்லையாகக் கருதிய IAS அதிகாரி சந்திர லேகாவின் முகத்தில் ரௌடிகள் மூலம் அமிலம் வீசினார் என்பது பரவலான ஊகம். இதன் உச்சக்கட்டமாகத் தனக்கும் பெரும் தலைவலியாக இருந்த தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றம் சாட்டி நாட்டையே அதிர வைத்தார். மக்களும், மற்ற அரசியல் வல்லுனர்களும் இத நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதால் பெரிய அளவுக்கு அரசியல் சாசனப் பிரச்சனைகள் வரவில்லை. எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசை ஜெயலலிதா ஒரு பொருட்டாக மதிக்காமல் அதன் தலைவர்களை உதாசீனப் படுத்தினார்.
1996 தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, காங்கிரஸ் மூப்பனார், சிதம்பரம் போன்ற தலைவர்கள் தலைவர்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட வேண்டும் என்று மேலிடத்தை வலியுறுத்தினர். அது வரை தலையை ஆட்டி வந்த மேலிடம்(!), அதிமுகவுடன் கூட்டணி என்று திடீரென்று முடிவு செய்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தன் கடைசி நிமிடம் வரை மூப்பனாரோடு இருந்து விட்டு, திடீரென்று டெல்லி சென்று தலைமை(?)க்குக் கட்டுப் படுவதாக அறிக்கை விட்டார். (காங்கிரசை எதிர்த்துக் கட்சியை விட்டு விலகி இந்திரா காந்தி படத்தை எரித்து விட்டு கா.கா.தே.கா என்ற கட்சியைத் தொடங்கிப் பின்பு அதைக் கலைத்து விட்டு காங்கிரசிலேயே மீண்டும் சேர்ந்தவர் குமரியார் என்பது குறிப்பிடத் தக்கது.) தொண்டர்கள் ஆத்திரம் அடைந்து குமரி அனந்தன் மற்றும் நரசம்மராவின் படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொதித்தெழுந்த மூப்பனார் த.மா.கா கட்சியைத் தொடங்கினார். எழுத்தாளர் சோ-வின் முயற்சியோடு த.மா.கா திமுக-வோடு கூட்டணி சேர்ந்தது. பாட்ஷா படப் பரபரப்பிற்குப் பின் அரசியலில் குதிப்பார்(?) என்று எதிர்பார்க்கப் பட்ட ரஜினியும் இதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு சலசலப்பு உண்டாக்கினார். தேர்தல் பிரசாரத்தில் ஆளே இல்லாத பொதுக் கூட்டங்களில் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்த புகைப்படச் செய்திகள், மக்களை மகிழ வைத்தன.
இடைப்பட்ட சூழ்நிலையில் ஜாதியை முன்னிலை வைத்து டாக்டர் ராமதாஸ் பாமக கட்சியை வளர்த்து 70 சீட்டு கேட்டு திமுகவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். தமாகா வந்தவுடன் திமுக ராமதாசைக் கை கழுவியது. வைகோவும் ராமதாசும் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியதில் கூட்டணிக்கு யார் தலைவர்(?) என்பதில் உடன்பாடு வராத காரணத்தால் அந்தக் கூட்டணி முறிந்தது.
காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. தனித்துப் போட்டி இட்ட மதிமுக ஒரு இடம் கூட வெல்லவில்லை. பாமக நான்கு இடங்களில் வென்று, ஜாதி ஓட்டிற்கு மதிப்பு உள்ளதை வெளிப்படுத்தியது.
பாபர் மசூதி இடிக்கப்பட சூழ்நிலையில் BJP மதச் சார்புள்ள கட்சியாகப் பறை சாற்றப்பட்டு எல்லோருடைய எண்ணமும் யார் வந்தாலும் பரவாயில்லை, பிஜேபி வரக்கூடாது என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்தன. 13 நாள் பிஜேபி ஆட்சிக்குப் பிறகு மக்களவையில் தேவ கௌடா பிரதமராகிப் பத்திரிகைக்காரர்களுக்கு எப்போதும் சுவாரஸ்யமான செய்திகளைத் தந்தார். காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை தினமும் நமஸ்காரம் செய்து காலத்தைக் கழித்தார். கடுமையான உழைப்பின் காரணம், இவருக்குப் பொதுக்கூட்டங்களில் மாத்திரமே தூங்க வாய்ப்பு கிடைத்தது.
திமுக அரசு ஜெயலலிதா உட்பட அனைத்து அதிமுக அமைச்சகள் மேலும் ஊழல் வழக்குகள் தொடர்வதிலேயே கவனம் செலுத்தியது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தேவகௌடா தொக்கப்பட்டு IK குஜ்ரால் கொஞ்ச நாள் பிரதமராக இருந்தார். பின்பு ஆட்சி கவிழ்ந்தது. 1998 -ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், ஜெயலலிதா ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அது வரை தமிழ் நாட்டில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பிஜேபி-யுடன் கூட்டணி அமைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை வசை பாடி வந்த வைகோ இந்த முற்போக்குக் கூட்டணியில் சேர்ந்தார். ரஜினி மீண்டும் திமுக/தமாகா கூட்டணியை ஆதரித்தார். ஆனால் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்று பிஜேபி ஆட்சி அமைத்தது. இந்த முறை பிஜேபி 13 மாதங்கள் தாக்குப் பிடித்தது. ஜெயலலிதாவின் பரம விரோதியாக இருந்த சுப்ரமணிய சாமி சோனியா காந்தியோடு ஜெயலலிதாவை அழைத்து ஒரு தேநீர் விருந்து வைத்து நாரதர் கலகம் உருவாக்கினார். அதில் கடுப்பாய திமுக, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அந்தர் பல்டி அடித்து, எங்களது முதல் எதிரி ஊழல்தான் என்று கூறி, பிஜேபி-யை ஆதரித்தது. அப்படியும் தீர்மானம் தோற்று பிஜேபி ஆட்சியை இழந்தது.
பின்னர் வந்த 1999 மக்களவைத் தேர்தலில், வைகோ காலத்தின் கட்டாயத்தில் திமுகவோடு கூட்டணி சேர்ந்தார். ராமதாசும் திமுகவோடு இருந்தார். பிஜேபி-யின் வரவால் தமாக திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் தனியாக நின்று பூஜ்யம் பெற்றார்கள். திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. பிஜேபி கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.
இதன் பிறகு நடந்த 2001 மாநில தேர்தலில் பல திருப்பங்கள். கூட்டணி மாற வேண்டும் என்றால் தலைவர்கள் பொதுவாகத் தயங்குவார்கள். பத்திரிகையாளர்களைச் சந்திக்க பயப்படுவார்கள். டாக்டர் ராமதாஸ் இதில் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். கூட்டணி மாறக் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இருப்பதில் இவர் வல்லவர். கூட்டணி மாற இவருக்குத் தேவை பல்லிளுப்பும் ஒரு பூங்கொத்தும் மட்டுமே. திமுக கூட்டணியில் மத்திய ஆட்சியில் அமைச்சர்கள் பதவியில் இருந்து கொண்டே இவர் ஜெயலலிதாவைச் சந்தித்து மலர்க்கொத்தைக் கொடுத்துக் கூட்டணி அமைத்தார். என் குடும்பத்தில் யாரவது பதவி கேட்டால் என்னைச் செருப்பால் அடியுங்கள் என்று முழங்கிய இவர், கூச்சமே இல்லாமல் தன் மகனுக்கு மருத்துவத் துறையைக் கேட்டு வாங்கி அழகு பார்த்தார்.
1996 -ல் அதிமுக கூட்டணியை எதிர்த்து மாத்திரமே ஆரம்பிக்கப்பட தமாகா, இந்த முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. இதில் மூப்பனார் கடும் அதிருப்தியைச் சம்பாதித்தார். ப.சிதம்பரம் இந்த முடிவை எதிர்த்துத் தனிக் கட்சி ஆரம்பித்தார்.
வைகோ திமுக கூட்டணியில் சேர்ந்த போது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். சமாளித்து முன்பு செல்லும்போது, கூட்டணிப் பங்கீடில் உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் தனியாக நின்றார். திமுக ஸ்டாலினின் பிடிவாதத்தில் கூட்டணிகளின் அதிருப்தியைப் பெற்றது. தேர்தலில் படு தோல்வி அடைந்தது. வைகோ பல தொகுதிகளில் ஓட்டைப் பிரித்துத் திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தார். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பழி வாங்கும் விதமாக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோரைக் கைது செய்து புளகாங்கிதம் அடைந்தார். இதனிடையே மூப்பனாரின் மறைவிற்குப் பின் தமாகா காங்கிரசோடு இணைக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்தது. அதிமுக பிஜேபி-க்குத் தாவியது. (இதன் பின்னணி அதிகம் தெரியவில்லை, அயோத்யா பிரச்சினை என்று google கூறுகிறது). இதில் ரஜினிகாந்த் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ரஜினி இதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும் அல்லாது, அணி அவர் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற சூழ்நிலை உருவானது. இந்த சமயம் டாக்டர் ராமதாஸ் மீண்டும் திமுக கூட்டணிக்குத் தாவி ஐந்து தொகுதிகள் வென்றார். வைகோவும் திமுகவோடு சமரசம் ஆகி நான்கு தொகுதிகள் வென்றார். அப்போது அவர் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தார். கருணாநிதி அவரை வெளியே கொண்டு வர முயற்சிகள் செய்தார்(?).
இதன் பின்பு 2006 சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடில் அதிருப்தி அடைந்த வைகோ மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து கேலிக்கு ஆளானது மட்டும் அல்லது, அவரது எதிர் காலத்தையே கேள்விக்குறி ஆக்கினார். கொஞ்சம் நகைச்சுவை தர வேண்டி , திமுகவில் வெகு நாள் இருந்த சரத்குமாரும் விலகி அதிமுகவில் சேர்ந்தார். இருவரும் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தனர்.
திமுக தனிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சி அமைத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர மறுத்து விட்டது. அதே சமயம் மத்திய அரசில் பங்கு பெறத் தயங்கவில்லை.
இந்த தருணத்தில் திமுகவில் குடும்பச் சண்டைகளில் தயாநிதி மாறன் தொலை தொடர்புத் துறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு வந்த ராஜா மூலம் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.
பின்பு 2009 -ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் அதிமுகவிற்குத் தாவினார். வைகோ அதிமுகவில் தொடர்ந்தார். திமுக கூட்டணி தோல்வி அடையும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனாலும் வெற்றி பெற்றது. பண பலம் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்தது. பாமக எல்லாத் தொகுதிகளிலும் தோற்று பெரும்பாலான மக்களின் வரவேற்பைப் பெற்றது.
பின்பு சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் திமுக அணிக்கு ஓடி வந்தார். 2006 -ல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு எதிராகப் புரட்சி தொடங்கிய விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தானும் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதைத் தெளிவு படுத்தினார். ஜெயலலிதா ஓரிலக்க எண்ணிக்கையில் இடம் தருவதாகக் கூறி வைகோவைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வெளியற்றி அவர் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்யும் அளவுக்கு விரக்தியில் தள்ளினார். காங்கிரஸ் 2G ஊழலை வைத்து திமுகவை மிரட்டி 60 சீட்டுகள் வாங்கியது.
திமுக குடும்ப அரசியல் மற்றும் 2G ஊழலின் பிரதிபலிப்பில் படு தோல்வியைச் சந்தித்தது. ராமதாசுக்கு மீண்டும் பட்டை நாமம். காங்கிரஸ் சட்டியில் இல்லாமலேயே அகப்பையில் எடுக்க முயன்று உண்மை நிலையை இப்போது உணர்ந்திருக்கலாம்.
முடிவு
அரசியலில் சந்தர்ப்ப வாதம் என்பது இன்றி அமையாதது. (இதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வைகோ. இவர் மழை பெய்யும் போது உப்பு விற்கக் கிளம்புவார். காற்றடிக்கும்போது உமி விற்கக் கிளம்புவார்)
சத்யா,
ReplyDeleteநல்ல ஒரு அலசல். நடு நிலைமையோடு அரசியல் நடப்பை ஒரு Fast forward பார்த்த மாதிரி இருந்தது. நச்சு பன்ச் வசனங்களோட உன் நக்கலும் சேர்ந்து இருந்தது.
இன்னும் நிறைய விஷயங்களை விரிவாக எழுதவும்.
மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்:
ReplyDeleteபிரமாதமான வரலாற்றுச் சுருக்கம். இதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன். கொள்கைப் பிடிப்பு என்பதன் முன்னுதாரங்கள் நம் தமிழ் நாட்டுக் கட்சிகள் என்பதில் ஐயம் இல்லை.
- நரசிம்மன்
நால்ரோடு சொன்னதற்கும், திரு.நரசிம்மன் சொன்னதற்கும் ஒரு ரிப்பீட்டேய்...
ReplyDeleteநான் எங்களூர்க்காரர் எப்பொழுதும் அம்மா காலடியில் வீழ்ந்ததில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த கால அரசியல் நடப்புகள் சரியாக பின்பற்றவில்லை. கட்டுப்போட்ட கதை கூட எனக்குத் தெரியாது.
இந்தக் கூத்துகளில் இருந்து தமிழகத்திற்கு விடிவில்லை என்பதை நினைத்துத்தான் நெஞ்சு தளர்ந்து போகிறது.
முண்டாசுக்காரர் பாடிய 'நெஞ்சு பொறுக்குதில்லையே...'தான் நினைவுக்கு வருகிறது.
மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்:
ReplyDeleteதமிழ்நாட்டின் கடந்த இருபது ஆண்டு கால அரசியல் பற்றிய துல்லியமான விவரங்கள்
கொண்ட விமர்சனம் மிகச்சிறப்பாக இருந்தது. தேர்ந்த அரசியல் விமர்சகரின் கைவண்ணத்தை காண முடிகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது பற்றிய கேள்வி மட்டும் எழுப்பப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை பெரியார் காலம் தொடங்கி வளர்ந்த தனிநபர் துதிபாடல்தான் இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணம். மற்ற எந்த மாநிலத்திலும் இந்த அளவிலான தனிநபர் துதிபாடலை காணமுடியாது. மாநில சூழலில் சாதி அடிப்படையில் மக்களை அணி திரட்டச் செய்யப்படும் முயற்சியும் அடுத்த காரணம்.
சென்னையில் சில ஆண்டுகளாக அரசியல் பேனர்களை பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இந்த உண்மை தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சார பேனர்களில் ராமதாசு படத்தோடு சந்தன கடத்தல் வீரப்பன் படத்தையும் சேர்த்து போடப்படுவதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. .இரன்டு பேருடைய படத்தையும் சேர்த்து போடுவது ஒரு வகையில் சரிதான் .அது வேறு விஷயம். .வீரப்பனும் வன்னியர் என்பதுதான் முக்கிய காரணம் .
வீரப்பனை தியாகியாக சித்தரித்து ஒரு சீரியலையும் ராமதாசுடைய குடும்ப சானலான மக்கள்
தொலைக்காட்சி ஒளி பரப்பியது.
நாட்டின் அரசியல், பிரச்னைகளின் அடிப்படையில் இல்லாமல் தனிநபர் வழி பாட்டில் இயங்கும் வரை சந்தர்ப்பவாதம் தொடரும். அகில இந்திய கட்சிகளும் இந்த சாக்கடையில் விழுந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த பெரிய துரதிருஷ்டம்.
சுருக்கமான ஆனால் விவரங்கள் செறிந்த பதிவுக்கு என் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
- மு.கோபாலகிருஷ்ணன்
சத்யா,
ReplyDeleteமிக அருமையான பதிவு. நல்லதொரு முயற்சி.
சமீப சொந்த வேலைப் பளுவினால் அதிகம் நம் சங்க வலைப்பூவை படிக்க இயலவில்லை எனவே காலதாமதமாக இந்த பின்னூட்டம்.
சில செய்திகள் தங்களின் மன ஓட்டத்தை ஒட்டி எழுதப் பட்டிருந்தாலும்
உதாரணம்:
//அதன் பின், எப்படியாவது சாகும் முன் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர் காங்கிரஸ் உதவியுடன் பிரதமர் ஆனார். அப்போது ஜெயலலிதா காங்கிரஸ் உதவியுடன் விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி திமுக ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தார்.//
நன்கு பதிந்திருக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.
பித்தன்.
சத்யா,
ReplyDeleteமித அருமையான தொகுப்பு. இருந்தாலும் நீங்கள் காங்கிரஸ் அபிமானியோ என்று எண்ண தோன்றுகிறது.
திராவிட கட்சிகளையும், ஜாதி வாரி கட்சிகளையும் மட்டுமே சாடி உள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில்
காங்கிரஸ் தலைவர்களின் கதைகளை நினைவூட்டி இருக்கலாம்.
சிவாஜி ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி. அவர் சேர்ந்தால் கூட்டணி உருப்படாது என்ற கொள்கை.
வாழப்பாடி ஆரம்பித்த தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ். ப. சிதம்பரம் ஆரம்பித்த ஜன நாயக பேரவை.
நெடுமாறன், இலங்கை பிரச்சினை வைத்து கட்சி ஆரம்பித்தவர்கள்.
இதை எல்லாம் சொல்லாமல் சரத்குமார் வரை சொல்லி விட்டீர்கள்.
என்னவோ இருக்குது உங்கள் மனசுக்குள்ளே.
நீங்கள் சோனியா கட்சி தானே ?
இப்படிக்கு
வேதாந்தி
//நீங்கள் சோனியா கட்சி தானே ? //
ReplyDeleteஆஹா, கெளம்பிட்டாரய்யா, கெளம்பிட்டாரு நம்ப வேதாந்தி...
என்னடா இன்னும் சிண்டு முடியலையேன்னு பாத்தேன்.
அவர் என்னமோ பொதுவாக அரசியலில் கொஞ்சமேனும் தாக்கம் ஏற்படுத்தும் கட்சிகளைப் பத்தி சொல்லியிருக்காருன்னு நினைக்கிறேன். இருக்கற/இருந்த கட்சிகளையெல்லாம் சேத்து எழுதனா, ஒரு ஆயுசு போதாது. எவ்வளவு நேரம்தான் மூக்க பிடிச்சிக்கிட்டு எழுதறது...
ஆமாம் திராவிடக் கட்சிங்கள சொன்னதும் பொத்துக்கிட்டு வந்திடுச்சே. உங்க கருப்பு,சிவப்பு சாயம் வெளுத்திடுச்சே? :-)
//நீங்கள் சோனியா கட்சி தானே ? //
ReplyDeleteஉண்மையா சொல்லப் போனா நானும் திராவிடக் கட்சிகளின் அபிமானிதான், ஆனால் காங்கிரசைக் கடுமையாகத் தாக்காததற்க்கு நாகு சொன்னது போல அவர்கள் பெரிய அளவுக்கு தாக்கம் உண்டு பண்ணவில்லை. யாரிடம் போனால் அதிகம் மக்களவை தொகுதிகள் கிடைக்குமோ அவர்களிடமே போக முயற்சி செய்தார்கள். மற்றபடி வெறும் பொதி மாடுகள் தான். 1991 சட்டசபையில் அவர்கள் எதிர்க் கட்சியாக இருந்த பொது உண்மையான எதிர்க் கட்சியாக நடக்க சிலர் முயற்சி செய்தனர். அதனால் JJ -வின் கடும் கோபத்திற்கு உள்ளாகி பல அவமானத்தைச் சந்தித்தனர். அப்போது பீட்டர் அல்போன்ஸ் "நாங்கள் குங்குமம் சுமந்த கழுதைகள்" என்று விரக்தியோடு கூறியிருந்தார்.
காங்கிரஸ் சந்தர்ப்ப வாதத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகவும், திருவனந்தபுரத்தில் அவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் நடக்கும். குமரி அனந்தன், தங்க பாலு போன்ற சொந்த முடிவெடுக்கத் தகுதியில்லாத தலைவர்கள் காங்கிரசின் சாபக்கேடு. மூப்பனார் அதிமுக கூட்டணி கட்சி மாறினாலும், திமுகவின் பிஜேபி கூட்டணி அவரை அந்த முடிவுக்கு விரட்டியது என்பது மறுக்க முடியாது. அவர் 1999 மக்களவை தேர்தலில் தனியே நின்று சூடு பட்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்தார். இல்லா விட்டால் வைகோ போல நடுத் தெருவில் நின்றிருப்பார்.
//மு.கோபாலகிருஷ்ணன்// அவர்களுக்கு நன்றி. தனி நபர் துதி பாடலில் உங்கள் கூற்றுக்கள் முழுவதும் உண்மை. திமுக, அதிமுக, பாமக, தேதிமுக, மற்றும் பல ஜாதிக் கட்சிகள் எல்லாருமே தனி நபர் வலிமையைக் கொண்டே காலத்தை ஒட்டுகின்றன. தலைவரை இழந்தால் திமுக குடும்பச் சண்டையில் முடியும், அதிமுக இரட்டை இலைக்கு சண்டை போட்டு துண்டு துண்டாக உடையும். பாமக சண்டை போடும் மகன்கள் இல்லாததால் கொஞ்ச நாள் அன்பு மணி தலைமையில் நொண்டும், தேதிமுக மற்றும் பல்வேறு ஜாதி மற்றும் நடிகர் கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும். தமிழ் நாட்டில் தலைவரை மாற்றினால் சண்டை வராத கட்சிகள் கம்யுனிஸ்ட்கள் மாத்திரமே.
ReplyDeleteநாகு,
ReplyDeleteநான் சிவப்பு பச்சை அபிமானியாக இருந்தேன் (மொரார்ஜி தேசாய்) ஜனதா சாப்பாடு, ஜனதா சேலை, ஜனதா தான் எங்கு பார்த்தாலும்.
அதற்கு பிறகு அது எங்கே என்று தேடும் அளவுக்கு சுக்கு சுக்காகி விட்டது. அதனால் இப்ப எல்லாம் கலர் பார்த்து அரசியல் செய்யும் அளவுக்கு இல்லை.
யார் அதிக இலவசம் தருகிறார்களோ அவர்களை கலாய்ப்பது தான் நம் பழக்கம்.
இப்பொழுது அண்ணா ஹசாரே கட்சி தான். நம்ம முன்னாள் ஜனாதிபதி கலாம் அவர்களுடன் இணைவார் என்று பார்த்தால்
எல்லோரும் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். எனவே நான் "Richmond காங்கிரஸ்" அல்லது "Richmond தி மு க " என்று ஆரம்பிக்க போகிறேன்.
இதன் தலைவர் சத்யா தான். அவர் தான் அரசியலை அலசுகிறார். நான் வெறும் செயலாளர் தான். எல்லா கட்சிகளிலும் தலைவர் ஒன்றும்
முடிவெடுப்பதில்லை. சு. சுவாமி தான் எங்கள் கொ.ப.செ. நாகுவிற்கு பதவி தருவது பற்றி யோசிக்க வேண்டும்.
எப்படி நம் ஆரம்பம் ?
வேதாந்தி
சத்யா,
ReplyDeleteஉங்கள் பதில் (மு. கோ விற்கு) பார்த்தவுடன், என் நெஞ்சில் எச்சில் ஊறியது. அது தான் உங்களை தலைவர் ஆக்கி விட்டேன். நீங்கள் தீர்க்கதரிசி. அடுத்த ஆட்சி நம் ஆட்சி தான். விரைவில் கோடி, தவறு கொடியை அறிவியுங்கள் தலைவா.
உங்களிடம் இருந்து ஒரு எதிர் பார்ப்பு. நடிப்பு அரசியலின் நுழை வாயில் என்று நடிகர்கள் நினைக்கிறார்கள்.
அது பற்றி நீங்கள் ஒரு அலசல் கொடுங்களேன். இதனை படித்து நெப்போலியன், ராமராஜன், எஸ் வீ சேகர், சரத்குமார், விஜயகாந்த் போன்றோர் எல்லோரும் அரசியலை விட்டு விலக வேண்டும்.
ஆனால் யார் மீதும் நம்பிக்கை வர மாட்டேங்குது. யாரையும் ஆதரிக்க முடிய வில்லை. எனவே அடுத்தது நம் ஆட்சி.
மக்கள் காட்டும் வழியே நம் வழி.
வேதாந்தி
ஜனதாவுக்கு ஆன கதிய பாத்தா நம்ம ஊருக்கு தனிநபர் துதிதான் சரிவரும் போல இருக்கு :(
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். யார் மீதும் நம்பிக்கை வரமாட்டென்கிறது.
//மக்கள் காட்டும் வழியே நம் வழி.// - வேதாந்தியாரே - இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா நிச்சயம் அடுத்த ஆட்சி உங்களுக்குத்தான். நான் இந்த கட்சியில் சேரவில்லை. சில்லறை பார்ப்பதுதான் எங்க குறிக்கோள்னு எந்த கட்சி தெளிவா அறிவிக்குதோ அந்த கட்சியில்தான் சேருவேன்.
எனக்கு ஒரு யோசனை. தமிழகத்தில் ஒரு உருப்படியான ஒரு மாற்றம் வேண்டுமானால் இப்படி செய்யலாம். திமுக ஸ்டாலினுக்கும் வேண்டாம், அழகிரிக்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வைகோவைக் கூப்பிட்டு தலைவராக்க வேண்டும்.
ReplyDeleteஉடனே வைகோ வேண்டாமென்றால், கலைஞர் உடனடியாக ஒதுங்கிக் கொண்டு அன்பழகனைத் தலைவராக்கி விட்டு, வைகோவை அடுத்த தலைவராக்குவதற்கு வழி செய்யவேண்டும். கட்சி பற்றி கொஞ்சமேனும் கவலைப் பட்டால் இதை செய்யலாம். புத்திர பாசம் விடவேண்டுமே? அன்பழகனும் எவ்வளவு காலம்தாம் இரண்டாம் ஸ்தானத்தில் இருப்பார், பாவம். ஆனால் என்ன, அப்படி செய்தால் சென்னையிலும் மதுரையிலும் ஒரு கட்சிகாரப் பயல் வாக் போக முடியாது. போனால் தா.கி. மாதிரி மாரடைப்புத்தான். :-)