Saturday, April 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 10

காலம் கலிகாலம்
நீதித்துறை எல்லை தாண்டக் கூடாது
நாடாளுமன்றம், அரசின் நிர்வாக செயல்பாடுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது. தனது எல்லையிலிருந்து நீதித்துறை விலகக் கூடாது என ஒருவர் எச்சரித்துள்ளார். டெல்லியில், மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர் - அரசியல் சட்டத்தின் முக்கியத் தூண்களாக நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை உள்ளன. இதில் ஒரு அமைப்பு இன்னொன்றின் செயல்பாடுகளில் தலையிடுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு அமைப்புக்கும் சில எல்லைகள் உள்ளன, கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றிலிருந்து மீறி நடக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் குறுக்கிட நீதித்துறை முயலக் கூடாது. நீதித்துறை தனது எல்லையைத் தாண்டி போகக் கூடாது. அரசியல் சட்டத்தை மதித்து அதை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமை நீதித்துறைக்கு உள்ளது. மூன்று அமைப்புகளும் தங்களது எல்லையை மீறி நடந்து கொண்டால் அது மக்களுக்கு விரோதமானதாக மாறி விடும். ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன், தங்களது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி சொன்னது தமிழ்நாட்டில் நீதிபதிகளை மிரட்டும் மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ, அவருடைய கருத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வரோ இல்லை. இப்படி பேசியிருப்பது இந்தியாவில் அதிகம் படிததவர், இந்திய வங்கிகளுக்கெல்லாம் தாயகமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான டாக்டர். மன்மோகன் சிங்.'
இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜின் படத்தில் சங்கீதம் நன்கு தெரிந்த!!! ஷோபனாவிற்கும், அது சிகப்பா கருப்பா என்றுகூடத் தெரியாத பாக்யராஜுக்கும் நடக்கும் போட்டியில் பாக்யராஜ் வெற்றி பெற்றவுடன், போட்டியின் தலைவர் (ஷோபனாவின் தாத்தா) சொல்லும் ஒரு வசனம்:
'பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் எனறு சொல்வார்கள், இங்கு நாரோடு சேர்ந்த பூவும் நாறிவிட்டது' என்று. பிரதமர் இப்படி பேசியதை சூர்ய தொலைக்காடசியில் பார்த்தவுடன், அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதே மேடையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் உண்டு என்று வலியுறுத்திப் பேசி, நீதித்துறைக்கு சுந்திரமாக செயல்படும் அதிகாரம் உள்ளது. அதேபோல நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யும் அதிகாரமும் நீதித்துறைக்கு உண்டு. நீதித்துறை எடுக்கும் சில நடவடிக்கைகள், நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது இயற்கையானது என்று சரியான பதிலடி தந்துள்ளார், ஆனால், மன்மோகன் சிங் போன்றவர்களே இப்படி பேச ஆரம்பித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
எளியோரை வலியோர் வாட்டப் போகின்றனர்
இதை எப்படி இந்திய குடி மக்களாகிய நாம் தாங்கிக் கொள்ளப் போகிறோம்? இதை தவிர்க்க இந்திய அரசு ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை. நம் நாடு இன்று இருக்கும் நிலையில் இது தேவையா? இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நம் நாடு தாங்குமா?
திருவள்ளுவர் நட்பியல் - பகைமாட்சியில் இப்படி பாடுகிறார்.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மெலியோரை விடுத்து வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். இப்படி சொன்ன வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் இப்படி பாடுகிறார்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாரருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபடவேண்டும். தோல்வி நிச்சயம், இழப்பு நிச்சயம் என்று கண்கூடாக தெரிந்த பிறகு இப்படி ஒரு பெரிய தற்கொலைக்கு இந்திய அரசு எப்படி ஒப்புக் கொண்டது? இதன் காரணமாக நம் நாட்டு வெட்டி ஆபீசர்களுக்கு அடுத்த வேலை வந்து விட்டது. மாரியம்மன் கோயில் தீ மிதிக்க வேண்டும், மண் சோறு சாப்பிட வேண்டும், அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அப்புறம் நாம் தோற்று விட்டால், தோற்ற வீரர்கள்(?) வீட்டை இடிக்க மண் வெட்டி, கடப்பாறை வாங்க வேண்டும், எவ்வளவு பணச்செலவு, கால விரயம்.
அட போங்கப்பா இவன் இப்படி ஒரு விஷயமும் சொல்லாம ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கரானேன்னு திட்டரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இந்திய கிரிகெட் அணி நம்மை விட பலம் வாய்ந்த, தென் ஆப்ரிக்காவையே தோற்கடித்த வங்கதேச அணியுடன் 3 ஒரு நாள் ஆட்டங்களும், 2 - 5 நாட்கள் ஆட்டங்களும் ஆட அடுத்த மாதம் அவர்கள் நாட்டிற்கு போகிறார்கள். அதைப் பற்றிதான் கவலைப் பட்டு எழுதி விட்டேன். தயவு செய்து கோபிக்காமல் எல்லோரும் உங்கள் வீட்டில், நீங்கள் வணங்கும் சாமிக்கு ஒரு ரூபாய் (அ) டாலர் முடிந்து வைக்கவும். எந்த சாமி அருள் தரும் என்று தெரியாததால், எந்த சாமியையும் விட்டுடாதீங்க.
இந்த வள்ளுவரை நினைத்தால் ரொம்ப கோபம் கோபமா வருது, நட்பியல் - பகைமாட்சியில் இப்படியும் பாடியுள்ளார்.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
போர்முறை கற்றறியாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
இது இந்திய அணிக்குன்னு அவர் பாடினதா நீங்க நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. அது சரி, நாம அதெல்லாம் எங்க படிக்கப் போறோம், அப்படி படிச்சாலும், அதை சீரியசா எடுத்துக்க போறோமான்னு நீங்க கேக்கரது காதுல விழுது, என்ன, இன்னும் ஒரு 10-15 தலைமுறைக்கு இந்தியா, பெர்மூடாவை உலகக் கோப்பை 2007-ல பின்னி, பெடலெடுத்து, பிரிச்சு மேஞ்சதையே சொல்லிட்டிருப்போமில்ல.
கடைசீயா இந்திய நன் மக்களுக்கு ஒரு சின்ன அறிவுரை, கடப்பாறை நல்லதா வாங்குங்க, டோனி வீடு நல்லா ஸ்ட்ராங்கா இருக்காம், அவரு இந்தத் தொடர்ல எல்லா நாளும் விளையாடப் போறாராம்.
-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்

1 comment:

  1. லாராவின் கடைசி ஆட்டம் படித்து நெஞ்சு கனத்து போனது. கடைசி ஆட்டம் ஆட மறுக்கும் இந்திய வீரர்களை நினைத்தால் இன்னும் கொஞ்சம் கனம் ஏறிப்போகிறது.

    இங்கே பாருங்கள். கிரிக்கெட் ஆடும் மன்மோகன் சிங்(http://oosi.blogspot.com/)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!