Sunday, July 12, 2009

மீனாவுடன் மிக்சர் - 8 {அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?}

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது நான் என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

-மீனா சங்கரன்

Wednesday, July 08, 2009

ரிச்மண்டில் பூகம்பம்!

ஆறாம் தேதி நள்ளிரவில் வீட்டுப் பின்னால் ஏதோ மரம் விழுந்தது மாதிரி ஒரு சத்தம். தரையும் அதிர்ந்தது. பின்னால் எட்டிப் பார்த்தால் எந்த மரமும் விழுந்திருக்கவில்லை. இடியாய் இருக்கவும் வாய்ப்பில்லை. யோசனையுடன் தூங்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் வேலையில் பிரயாணம் செய்யவேண்டியிருந்ததால், தோட்டத்தை நன்றாகப் பார்த்துவிட்டு, கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் நாராயணன் சென்னையில் இருந்து ஃபேஸ்புக்கில் விஷயம் அனுப்பியிருந்தார் நம்ம ஊரில் சின்ன்ன்னன நிலநடுக்கம் என்று. உள்ளூர் செய்தித்தாளில் விஷயத்தை நுனிப்புல் மேய்ந்து விட்டு அலுவலகம் செல்லும்போது இன்னொரு நண்பனின் வாய்ஸ்மெய்ல் வந்தது. உங்க தெருவில் பூகம்பமாமே - எல்லோரும் நலமா என்று...

பார்த்தால் என் வீட்டுக்கு நேர் பின்னால் பூகம்பம்! நல்லவேளை - ரிச்டர் கணக்கில் 2.3 அளவே ஆன நிலநடுக்கம். தப்பித்தோம்!
செய்தி விரிவாக இங்கே...  குல்லாவை கழட்டிவிட்டு பேட்டிக்கு வாங்கய்யா.. மூஞ்சே தெரியல... இந்த ஆளு எங்க தெருவான்னு சந்தேகமா இருக்கு.

இது தொடர்பான பக்கங்கள் இங்கே பார்க்கலாம்.... பிங் தேவர் இன்னும் நம் ஆண்டவர் கிட்ட கூட வரவில்லை இந்த விஷயத்தில்.

Monday, July 06, 2009

வாத்து


வெள்ளை நிற வாத்து
பனிமழையின் நிறம் கொண்ட வாத்து
அமைதியின் வண்ணம் கொண்ட வாத்து
அழகோ அழகு இந்த அற்புதமான வாத்து

கண்டேனே போன வருடம் ஒன்று
இன்று கரைக்கு வந்ததோ ஐந்து
மனம் மகிழ்ச்சி கொண்டது அதைப் பார்த்து!

பாலின் நிறம் கொண்ட வாத்து
புத்துணர்ச்சி தருகின்ற வாத்து
இறைவனின் படைப்பில் ஒன்று
தூய்மையான தும்பைப்பூ நிறம் கொண்ட இந்த வாத்து !

கிராமத்து வீடு

தாத்தா பாட்டி கட்டின வீடு
அத்தை மாமா ஆண்ட வீடு
பேரன் பேத்தி விளையாடிய வீடு
கொள்ளு பேரன் பேத்தி தவழ்ந்த வீடு
அன்று மூன்று தலைமுறை பார்த்த வீடு
இன்று பதிமூன்று லட்சத்திற்கு விற்ற வீடு
மலரும் நினைவுகளை பதித்த வீடு !!!

வலை வலம்

உங்க வீட்டில் மீன் அல்லது பூண்டு குழம்பு வைத்த பாத்திரம் ஒரு வாரம் கழுவிய பின்னும் அந்த வாசம் போகவில்லையா? உங்கள் காலனிகளில் தார் பட்ட கறையை எடுக்க வேண்டுமா? இதுபோல பல கேள்விகளுக்கு நல்ல உபயோகமுள்ள டிப்ஸ் இந்த வலை தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். மேலும் இந்த தளத்திற்கு நீங்கள் டிப்ஸ் வழங்கி அது பதிவானால், Clean Water Fund என்ற பயனுள்ள அமைப்பிற்கு இவர்கள் இருபத்தி ஐந்து சென்ட் (கால் டாலர்) டோனஷனாக வழங்குகிறார்கள். இந்த தளத்தை பாவிக்க எந்த கட்டணமும் இல்லை, உங்கள் ஈமெயில்-ஐ-டி-யும் கொடுக்க வேண்டியதில்லை. இதுபோல மற்றொரு தளம் http://www.ehow.com . இது போல உங்களுக்கு தெரிந்த உபயோகமுள்ள தளங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நம்மில் பலரும் அமெரிக்க நிறுவனங்களின் தொலைபேசிவழி செவகர்களுக்காக பல

மணி நேரங்கள் காத்திருந்து நேரத்தை வீணடித்திருப்போம். பல சமயம் இணைய வழி நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தகவல்களையெல்லாம் http://gethuman.com/ என்ற தளத்தில் விரிவாக தொகுத்து வழங்குவதுடன், விரைவாக மனித செவகர்களை அடைய வழிகளையும் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஐ-போன் வைதிருப்பவரானால், அதில் பாவிக்கவும் இவர்கள் ஒரு மென்பொருளை கொடுக்கின்றனர்! என்னோட ஐ-போனில் இதை ஏற்றி வைத்துள்ளேன், சமயத்திற்கு உதுவும் நண்பன்!

உங்க வீட்டில் திருடன் கதவு/சன்னல் உடைத்து நுழைய முற்பட்டால் என்ன செய்வீர்கள்?

சில வீடுகளில் ஹோம் அலாரம் போன்ற சந்தா கட்டிய செக்யூரிட்டி அமைப்புகள் வைத்திருந்தால் அது உடனே அந்த நிறுவனத்தை அலர்ட் செய்யும். நம்மில் பலருக்கு இந்த வசதி வீட்டில் இருக்காது. திருடன் நுழைய முற்படுவதை நீங்கள் பார்த்துவிட்டால் உடனே 911 அழைத்தால் போலீஸ் வந்துவிடும். ஆனால் வரும் வரை திருடனை சமாளிக்க வேண்டுமே! சரி

உங்கள் தொலைபேசி வேலை செய்யாவிட்டால் இதுவும் சாத்தியமில்லை (எங்க வீட்டினுள் செல்லிடை தொலைபேசி சில சமயம் வேலை செய்வதில்லை). உங்க வீட்டில் காரில் பொதுவாக "keyless entry /alarm" சாவி வைத்திருந்தால் அதை வைத்து திருடனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம். அதிலுள்ள "Panic" சிவப்பு பொத்தானை அமுக்கினால் உடனே உங்கள் காரில் இருக்கும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். இது காரின் பேட்டரி சாகும் வரை சத்தம் கொடுக்கும். இதை காணும் திருடன் உடனே இடத்தை காலி செய்து ஓட வாய்ப்புகள் அதிகம். அதற்குள் போலீஸ் வந்துவிடும் சாத்தியம் உள்ளது. அது தவிர உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடரும் பெரும் சத்தத்தை கேட்டு போலீஸ்சை அழைத்துவிடுவார்கள். திரும்ப "Panic" பொத்தானை அமுக்கி சத்தத்தை நிறுத்திவிடலாம். ஒரு சின்ன விஷயம், உங்களுக்கு அருகில் காரின் சாவியை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்! இது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதைபோல பல நல்ல சேமிப்பு ஐடியாக்களை http://www.wisebread.com/ என்ற தளத்தில் காணலாம்.

Sunday, July 05, 2009

மீனாவுடன் மிக்சர் - 7 { கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்)

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

குறுகிய சந்நிதி தெருவில் நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , எப்படியோ நாலு கார்கள், அஞ்சு ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் ஒரு பத்து மாடுகளோடு போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.

---------------------------------

-மீனா சங்கரன்

படம் பாரு கடி கேளு - 33



இடமிருந்து இரண்டாம் மீர் காட் (Meer cat):சே! சே! சே! சே! இன்னாடா இது இவ்வளவு நேரம் ஆக்குறே ஒரு படம் பிடிக்க. ம்ம்ம். அது தான்... அந்த பட்டன் தான். சீக்கிறம் அழுத்து. ஐயோ! அந்த பக்கம் ஒரு சிங்கம் வர்றா மாதிரி இருக்கு. சீக்கிறம் படம் எடுடா சாவுகிராக்கி.

Saturday, July 04, 2009

பரதேசிக்கு பட்டாம்பூச்சியா?

பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி கௌரவித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னடா விருது் வாங்கியவுடன் மேடைப்பேச்சு பேசி பெனாத்தறேன்னு கேட்கறீங்களா? விருது/பட்டத்தின் மகிமை அது!! யார் விருது் வாங்கினாலும் உடனே இது மாதிரி ஆரம்பிப்பது தான் வழக்கம்.
நான் ஏதோ முடிந்தவரை கடித்துக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு விருதைக்கொடுத்து என்னை மேலும் ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி. ஜெயகாந்தன் பற்றி சொல்லத்தேவையில்லை. அவர் படம் எடுப்பதிலும் வல்லவர். பாடம் கற்பிப்பதிலும் வல்லவர்.

நான் வழங்கும் முதல் விருது மீனா சங்கரன் அவர்களுக்கு. சமீபத்தில் தமிழ்சங்க வலையில் ப்ளாக ஆரம்பித்த மீனா, தனது அலாதியான எழுத்தின் மூலம் பலரைக்கவர்ந்தவர். தேங்காய் மட்டையில் ஆரம்பித்து, மிக்சரை கலக்கி, கட்டி (காது) யை ஆராய்ந்து, வடை வரை சென்ற மீனா சங்கரன் அவர்களின் எழுத்தாற்றல் அபாரம்.

எனது அடுத்த விருது ஸ்ரீலதா அவர்களுக்கு. கவிதை புனைவதில் இவர் வல்லவர். இவர் பட்டாம்பூச்சியைப்பற்றி இயற்றிய கவிதையைப்படியுங்கள் இங்கே. ப்ரெஞ்சு மொழியிலும் வல்லவர். ஆரம்பத்தில் அவ்வப்போது தமிழ்சங்க வலைதளத்தில் ப்ளாகிய இவரக்காணாவில்லை. இந்த விருதைக்கொடுத்து அவரை மீண்டும் ப்ளாக அழைக்கிறேன்.

எனது அடுத்த விருது பித்தன் பெருமானுக்கு. இவரின் அரசியல் அலசல்களும், திரைப்பட விமர்சனங்களும் அபாரம். முதலில் தமிழ்சங்க வலைத்தளத்தில் ப்ளாகிய இவர் தனிக்கட்சி ஆரம்பித்து ப்ளாகிக்கொண்டிருக்கிறார். உதாரணம் இங்கே. அவ்வப்போது சுவாசியமான பின்னூட்டங்களும் எழுதுவார். மேலும் ப்ளாக வாழ்த்துக்கள்.

சரி, மூன்று பேருக்கு விருது கொடுத்தாகிவிட்டது. மூவருக்கும் வாழ்த்துக்கள்!



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Thursday, July 02, 2009

மைலாப்பூரில் திருமணம்.


ரிச்மண்டில் வளர்ந்த தீபக், ஜனனிக்கு நேற்று சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடந்தது. ரிச்மண்டில் இருந்து ஓரிரு குடும்பங்கள் தவிர மற்ற அனைவரும் இந்தத் திருமணத்திற்கு போயிருக்கிறார்கள். ரிச்மண்ட் தமிழர்கள் தவிர வேறு ஒரு சில உள்ளூர் பிரபலங்களும் இந்தத் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தார்களாம். :-)

மணமக்கள் தீபக் - ஜனனி, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

தினமலர் தளத்தில் இருந்து...

சென்னை : சென்னையில் நேற்று நடந்த "தினமலர்' இல்லத் திருமண நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.



"தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதியின் மகள் வழி பேரன் தீபக்கின் திருமணம், மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மல்லிகா-நடராஜமூர்த்தி தம்பதியினரின் மகன் தீபக் என்ற சுப்ரமணியனுக்கும், சுபா-சுந்தர் தம்பதியினரின் மகள் ஜனனிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இவர்கள் அமெரிக்கா, வெர்ஜினியாவில் வசித்து வருகின்றனர். அமெரிக்க ராணுவத்தில் தீபக் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். அமெரிக்க கப்பல் படை புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, இரண்டாண்டுகள் ஈராக் போரின் போது, அங்கு பணியாற்றியுள்ளார். தீபக், அமெரிக்க குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகன் தீபக் அமெரிக்க "பாஸ்டான் பல்கலைக் கழகத்தில் மாஸ்டர்ஸ் படித்து வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் மணமகள் ஜனனி சட்டம் பயின்று வருகிறார்.



ஜூலை 1ம் தேதி மாலை 6.30 மணியளவில் தீபக்-ஜனனி திருமண நிச்சயதார்த்தம் மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. கலைமாமணி லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது. தீபக்-ஜனனியின் திருமணம் நேற்று காலை 9.15ல் இருந்து 11 மணிக்குள் பெரியவர்கள் வாழ்த்துக்களோடு இனிதாக நடந்தது. மாலை 6.30 மணி முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கலைமாமணி அருணா சாய்ராம் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது.



முதல்வர் வாழ்த்து: தமிழக முதல்வர் கருணாநிதி நேற்றிரவு 8 மணிக்கு நேரில் வந்து, மணமக்களை வாழ்த்தினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், "மாத்ருபூமி' வீரேந்திரகுமார், "தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன், நாடக நடிகர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, லால்குடி ஜெயராமன், கிருஷ்ணா சுவீட்ஸ் கிருஷ்ணன் மற்றும் முரளி, டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.



வரவேற்பில் கலந்து கொண்டவர்கள்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலர் சுலோச்சனா சம்பத், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். தீயணைப்புத்துறை இயக்குனர் நட்ராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஏ.வி.எம்.சரவணன், சிவாஜி புரொடக்ஷன் ராம்குமார், நடிகர்கள் டி.ராஜேந்தர், சரத்குமார், சிவகுமார், சூர்யா, பிரசாந்த், நடிகைகள் மனோரமா, சச்சு, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.



தே.மு.தி.க., இளைஞரணி அமைப்பாளர் சுதீஷ், தமிழக காங்., தலைவர் தங்கபாலு, அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், காங்., சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தொழிலதிபர் கிருஷ்ணராஜ வானவராயர், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், பா.ஜ., தலைவர் இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.



பத்திரிகை அதிபர்கள் மற்றும் ஐ.என்.எஸ்., நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திலக்குமார், ரவீந்திரகுமார், அதுல் மகேஸ்வரி, விலாஸ் மாரத்தே, நரேஷ் மோகன், மகேஷ்லர்பேரி, சோமேஷ் சர்மா, கிரண் தாக்கூர், பிஜி வர்கீஸ், விவேக் குப்தா, சங்கர், மன்மோகன், எச்.என்.காமா, பரிஷ்நாத், வெங்கட்ராம ரெட்டி, பிரதாப் பவார், வீரேந்திரகுமார், ஆதித்தன், கிரஷ் அகர்வால், சம்ஹித் பால், சந்திரன், தேவேந்திர தர்தா, ஜெஸ் தர்தி, ரவீந்திர தாரிலால், பிரதீப் குப்தா, சஞ்சய் அஜாரி, மொகித் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மணமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. "தினமலர்' பங்குதாரர் டாக்டர் இரா.வெங்கடபதி, ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி மற்றும் பங்குதாரர்கள் இரா.ராகவன், இரா. சத்தியமூர்த்தி மற்றும் எல்.ராமசுப்பு, கி.ராமசுப்பு, எல்.ஆதிமூலம், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தினமலர் குடும்பத்தினர், அனைவரையும் வரவேற்றனர்.




Wednesday, July 01, 2009

மீண்டும் ஒரு பட்டாம்பூச்சி

எனக்கா! எனக்கே எனக்கா! நிஜமா! என்ன இப்படி ஒரு கட்டு கட்றான்னு யோசிக்காதீங்க. ஒன்னும் இல்லை, நண்பர் ஜெயகாந்தன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்தவுடன் கொஞ்சம் படம் காமிக்கலாமேன்னு நினைச்சேன். இவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு விஷயம் பத்தி கேட்டா, பட்டுன்னு ஒரு பத்து நிமிஷத்தில நமக்கு பதிலையும், கேட்ட விஷயம் பத்தி ஒரு 100 தகவல், இணையதள முகவரி எல்லாம் கொடுத்து நம்மை அசர அடிச்சுடுவார். புகைப்படம் எடுப்பதில் மன்னன். எனக்கும் பரதேசி மற்றும் வசந்தம் அவர்களுக்கும் பட்டாம்பூச்சி விருதினைத் தந்ததற்கு நன்றி.

பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு முன்பு, இந்த பட்டமளிப்பு தத்துவம் பதிவிட சோம்பி இருப்பவர்களை பதிவிட செய்ய ஒரு மிகச்சரியான உத்தி. பட்டம் கொடுத்தாச்சுன்னா வேற வழியே இல்லை எழுதித்தான் ஆக வேண்டும். இதை கொண்டு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி.


முதலில் நான் பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் வேதாந்தி. இவர் அடுத்தவர் கதையிலும் கதை பண்ணுவதில் கெட்டிக்காரர். ஒரு புறம் அப்பாக்களை சிலாகித்து எழுதுவார் மறுபுறம் அரசியல்வாதி அப்பாக்களைத் தாக்கியும் எழுதுவார். இவரால் பல விஷங்களை பல கோணங்களில் பார்க்கவும் முடியும் அதை எழுதவும் முடியும். வாங்க விருதைப் பிடிங்க.


இரண்டாவதாக அஜாதசத்ரு. கல்கியின் எழுத்து சாயல் இவரிடத்தில் உண்டு. நிறைய யோசிப்பவர் என்பதும், அதை எழுத்தில் கொண்டுவர முயல்பவர் என்பதும் இவரது ஆரம்பகால எழுத்தில் தெரிந்தது. இரண்டு பதிவிற்குப் பிறகு இவரைக் காணவில்லை. தனிக் கட்சி ஏதும் துவங்கி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. இந்த விருதின் மூலம் இவரை மீண்டும் நமது வளைப்பூவில் எழுதத்தூண்டலாம் என்று இவருக்கு இந்த விருது.


மூன்றாவதாக விருதினைப் பெற அழைப்பது நாராயணன். இவரது சங்கீத பற்றும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நமக்கெல்லாம் தெரியும். சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுதி கலக்கும் இவரது பின்னூட்டமும் மிகப் ப்ரபலம். ஒவ்வொரு முறை நாம் இந்தியா செல்லும் போதும் நாம் படும் பாட்டை நறுக்கென சொல்லி நம்மை கவர்ந்தவர். ஐயா வாங்க பிடிங்க உங்க விருதை.
எனக்கு இந்த விருதை வழங்கிய ஜெயகாந்தனுக்கு மிக்க நன்றி. விருது பெரும் வேதாந்தி, அஜாதசத்ரு, நாராயணன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.







நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளுக்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

முரளி இராமச்சந்திரன்