ஆசியக் கண்டத்தின் ஆச்சரியக் குறிப்புள்ளி
தேசிய மிதுவெனவே போற்றி வசிக்குமாந்தர்
அளவிற் சிறிதாயினும் அனைவரையும் ஆனந்தத்
திலார்த்து மற்புதச் சிங்கை (1)
வானுயர்ந்த வண்ணக் கட்டிடங்கள் வரிசையில்
வனப்புமிக பச்சைமரங் களெங்கும் -- வானம்
முழுதும் பெய்யும் வெய்யிலு மிருக்கும்
பொழுதில் நீர்வடிந்து விடும் (2)
சிவ லயன்சித்தித் தண்டபாணி சீனிவாசன்
ஸ்ரீவடபத்ர வைராவிமடவீ ரகாளிமாரி யவள்
யாவருடன் இன்னும்பலர் வீற்றிருக்கு மழகில்த்
தவக்கோலம் காணும் சிங்கை (3)
தீபத் திருநாள் திருக்கோலம் ஆண்டோறும்
தைப் பொங்கல் மறந்தாலும் தைப்பூசத்
திருவிழாவில் பலவிதக் காவடி தாங்கித்
தெருவெலாம் பக்தர் மயம் (4)
அரசுப் பேருந்தோ வாடகைச் சிற்றுந்தோ
விரைவுரயிலு மதோவெதிலும் சுற்றுகையில் ஊரழகு
வியக்கவைக்கும் நம்மனதை அதற்குழைக்கப் பாடுபடும்
தயக்கம் சிறிதுமிலாச் சிங்கை (5)
ஆடை அணிகலன்கள் அணிவகுக்கும் தொழில்நுட்பக்
கடைத் தெருக்கள் ஏராளம் -- கூட்டம்
அலைமோதி வாங்கத்துடிக் குமுயர்தரப் பொருட்கள்
விலைமலிவில்க் கிடைக்கும் சிங்கை (6)
ஆட்சி மொழி நான்கிலும் சமத்துவமே
வீட்சி யுறுமெனக் கூறும் காட்சி
இங்கில்லை அரசியலாக்க வில்லை இருந்தும்
எங்கிலும் தெரியும் தமிழ் (7)
உடுக்க உடை உண்ண உணவு
படுக்க இடம் எல்லாமும் கிடைத்திட
உண்டிங்கு வேலை என்று நம்மைச்
சுண்டி யிழுக்கும் சிங்கை (8)
கட்டுமானத் தொழிலாளர் ஓய்வான அந்நாளில்
திட்டுத் திட்டாய்க் குவிதலில்க் கூட்டம்
எட்டுத் திக்கும் பரவிநிற்க படபடக்கும்
சிட்டாய்ச் சிராங்கூன் சாலை (9)
குறைவிலா வசதி நிறைவான வளமுடன்
முறையான வாழ்வு தனில் உறையும்
ஊர்முழுக்கத் தூசிலாச் சுத்தத்திற்கு மாசற்ற
பேர்பெற்ற மனங்கவர் சிங்கை (10)
-----
ஐந்து பாடல்களில் முடிக்க எண்ணி பத்து பாடல்களாகிவிட்டன. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. நெல் விதைத்து நெல் அறுக்க, நிறையையே சொல்ல முயற்சித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டமிடுங்கள்.
என்றும் அன்புடன்
சதங்கா