Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, February 03, 2011

மீனாவுடன் மிக்சர் 23 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம்}

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!


கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

-- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

-மீனா சங்கரன்

Thursday, April 08, 2010

மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே}

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா?

சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

-மீனா சங்கரன்

Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்

Monday, February 22, 2010

மீனாவுடன் மிக்சர் - 17 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - ஐந்தாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கூப்பர்டினோவில் உள்ள செந்தில், மைதிலி தம்பதியினரின் வீடு

மைதிலி: வலது கால் எடுத்து வச்சு உள்ள வா குஞ்சம்மா.

செந்தில்: ஏன் ஆர்த்தி கரைச்சு உள்ள கூப்பிடலையா? அந்த குறை எதுக்கு உனக்கு? அதையும் பண்ணிடேன். நான் வேணும்னா 'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடவா?

குஞ்சம்மா: யக்கா, வூட்டு வாசல்ல வச்சு அய்யாவ பாட்டெல்லாம் பாட சொல்லாதே. அவரு பேசினாவே செங்கலை சொரண்டரா மாதிரி இருக்கு. பாடினா நான் ரொம்ப டென்சன் ஆயிருவேன்.

மைதிலி: சும்மாவா உங்க பிரெண்ட்ஸ் உங்கள 'லொள்ளாதிபதி' ன்னு கூப்பிடறாங்க? இப்போ அனாவசியமா லொள்ளு பண்ணி குஞ்சம்மாவை டென்சன் பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீ வா உள்ள போகலாம் குஞ்சம்மா.

செந்தில்: வீட்டுக்கு அதிபதி தான் கனவாப் போச்சு. சரி தான் ஒரு இத்துனூண்டு அவுட் அவுசுக்காவது அதிபதியாகலாம்னா அதுக்கும் வழியில்லை. லொள்ளாதிபதியா நான் இருக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? சரி சரி உள்ள போவோம் வாங்க.
--------------

(பத்து நாட்களுக்கு பின்)

செந்தில்: மைதிலி, நான் சொல்றேனேன்னு நீ தப்பா நெனைக்காதே. பத்து வருஷமா ஜிம்முக்கு போயும் இளைக்காதவள் என் மனைவின்னு நான் கூப்பர்டிநோவுக்கே உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன். நம்ம ஊரு படத்துல கிராமத்து தேவதைன்னு உக்கிரமான ஒரு அம்மன் சிலையை காமிப்பாங்களே, அது மாதிரி எப்படி கம்பீரமா இருப்ப நீ! இப்ப என்னடான்னா காதும் கண்ணும் பஞ்சடைச்சு போய் இப்படி ஆயிட்டியேம்மா!

மைதிலி: நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. இந்த குஞ்சம்மாவுக்கு என்னிக்கு ஜெட் லாக் போய் என்னிக்கு வேலை செய்ய போறாளோ தெரியலையே? கல்யாணமாகி இந்த பதினஞ்சு வருஷத்துல உங்களுக்கு கூட நான் இவ்வளவு சிசுரிஷை செஞ்ச நியாபகமில்லைங்க.

செந்தில்: (மெதுவாக) செஞ்சிருந்தாத்தானே நியாபகம் வர்றதுக்கு.

மைதிலி: என்னது?

செந்தில்: அது ஒண்ணுமில்லை. குஞ்சம்மா எள்ளுன்னா நீ எண்ணையா நிக்கறையே அதை நினைச்சு நான் பெருமைப்படறேன்.

மைதிலி: (கோபமாக) கிண்டலா உங்களுக்கு?

செந்தில்: சரி சரி கோவிச்சுக்காதே. இவளுக்கு நீ வேலை செய்யவா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கான்கார்ட் கோவில் முருகனை அப்படி வேரோடு பிடுங்கின? இது சரி வராது மைதிலி. நேத்து என்ன ஆச்சுன்னு சொன்னேனா? ஆபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தா நீ இல்லை, கடைக்கு போயிட்ட. எனக்கு ஒரே தலை வலி. சரி தான் குஞ்சம்மாவை கெஞ்சி ஒரு கப் காப்பி போட்டு தர சொல்லுவோம்னு தேடினா எங்க இருந்தா சொல்லு பார்ப்போம்?

மைதிலி: எங்க?

செந்தில்: பக்கத்து வீட்டுல Mars லேந்து புதுசா போன வாரம் குடி வந்திருக்காங்களே MRS8462 குடும்பம் அவங்க வீட்டு பிள்ளைக்கு தலை முடி வெட்ட உதவி பண்ண இவ போயிட்டா.

மைதிலி: இவளுக்கு தலை முடியெல்லாம் வெட்ட தெரியுமா?

செந்தில்: இவகிட்ட கத்தரிய குடுத்தால் கதை கந்தல் தான். இவ ஒண்ணும் முடியெல்லாம் வெட்டலை. அந்த வீட்டு பிள்ளைக்கு ரெண்டு தலை இருக்கே. ஒரு தலையை யாராவது அசைக்காம பிடிச்சா தான் இன்னொரு தலையில் முடி வெட்ட முடியுமாம். நம்ம வீட்டு மதர் தெரிஸா தன் பிடி உடும்பு பிடின்னு பெருமையா சொல்லிட்டு அங்க போய் உக்காந்து அரட்டை அரங்கம் நடத்திகிட்டு இருந்தா. நான் போய் அவங்க கதவை தட்டி 'குஞ்சம்மா எனக்கு காப்பி போட்டு தரியா'ன்னு கேட்டதுக்கு அவங்க பிரிஜ்ஜை தொறந்து ஒரு தம்ளர் ஜூஸ் விட்டு கொடுத்து 'காப்பியெல்லாம் வேணாம், ஒடம்புக்கு இது தான் குளிர்ச்சி' ன்னு கூசாம சொல்லறா.

மைதிலி: இவளை எப்படி வேலை செய்ய வெக்கறதுன்னு எனக்கு தெரியலையே! ராத்திரி சமையலுக்கு இவ கொஞ்சம் காய் வெட்டி தந்து பாத்திரம் அலம்பி போட்டா நல்லா இருக்கும் ஆனா இந்த பூனைக்கு யார் மணி கட்டறது?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 1
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 2
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 3
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 4

Tuesday, December 15, 2009

மீனாவுடன் மிக்சர் - 16 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Thursday, December 03, 2009

மீனாவுடன் மிக்சர் - 14 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

---------------------------------------------------------------------------


-மீனா சங்கரன்

Wednesday, November 18, 2009

சந்தைக்கு போவணும், ஆத்தா வையும், எஸ்.எம்.எஸ்ஸ நிப்பாட்டு....

ஏர்-டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் சில மாதிரிகள்....

உண்மையான சம்பவங்களா, இல்லை நக்கலடிக்கும் அழைப்புகளா என்று தெரியவில்லை.....

இங்கே கேட்கலாம்....

Wednesday, October 14, 2009

மீனாவுடன் மிக்சர் - 13 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

-----------------

இது போல் நிஜமாவே வருங்காலத்தில் நடக்குமா? நீங்க என்ன நினைக்கறீங்க?

-மீனா சங்கரன்

Thursday, September 17, 2009

கன்னி ராசி, என் ராசி

எச்சரிக்கை

2008ம் ஆண்டில் பஞ்சமா பாதகங்கள் அல்லது, ஐந்து அநியாயங்கள் அல்லது குற்றமே செய்யாதவர்கள் மட்டும் படிப்பது நல்லது.

மேஷ ராசி ரசிகர்களே… !

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி ரசிகர்களே… !

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது


மிதுன ராசி ரசிகர்களே… !

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு
சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி ரசிகர்களே… !

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

சிம்ம ராசி ரசிகர்களே… !

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து !

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

கன்னி ராசி ரசிகர்களே… !

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.

பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி ரசிகர்களே… !

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

விருச்சிக ராசி ரசிகர்களே… !

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி ரசிகர்களே… !

நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு
வித்துருங்க.

பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

மகர ராசி ரசிகர்களே… !

வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி ரசிகர்களே… !

இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி ரசிகர்களே… !

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க

----
இது நானே எழுதியது அல்ல. (மின்)அம்பலத்தில் யாரோ எழுதி என் அண்ணன் அனுப்பியது... எழுதியது யார் என்று தெரிந்தால் சொல்லவும். கூகுளாருக்கும் சரியாக தெரியவில்லை...


Saturday, June 20, 2009

மீனாவுடன் மிக்சர் - 5 {வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா)

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

-மீனா சங்கரன்

Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நாகு அவர்களின் ஒரு மின்னஞ்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அப்படியே சுட்டு ஒரு பதிவா போட்டாச்சு. வந்து ரசிச்சிட்டுப் போங்க.

http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html

Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

எனது சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி படிக்க இங்கே க்ளிக்கவும் அல்லது கீழ்கண்ட இணைப்பில் க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html

இதுவும் 2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலேயே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்த போது அப்போதைக்கும் இப்போதைக்கும் சன் டிவியின் தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிந்தது, அதனால் வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
முரளி.