Wednesday, October 14, 2009

மீனாவுடன் மிக்சர் - 13 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

-----------------

இது போல் நிஜமாவே வருங்காலத்தில் நடக்குமா? நீங்க என்ன நினைக்கறீங்க?

-மீனா சங்கரன்

7 comments:

 1. இப்பவே எங்களுக்கு தெரிஞ்ச ரெண்டு ( டாக்டர்/வியாபாரிகள் ) குடும்பங்களுக்கு இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகளை கேட்டால் வேலை ஆள் அமைவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். அவங்களை தக்க வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு! அதிலும் சிலரை நம்ம பாடி ஷாப்பிங் கம்பனிகள் மாதிரி அதிக பணம் தர்றதாக சொல்லி தங்களோட வீட்டுக்கு இழுத்தராங்கலாம். அதனால இப்ப எல்லாம் வேலை ஆட்களை மத்தவங்களுக்கு அறிமுகபடுதுவதே இல்லையாம்! ஹ்ம் கொடுத்து வச்சவங்க. நல்ல கற்பனை! இந்த ஜோக் தான் நியாபகத்துக்கு வருது: "எங்க வீட்டுல எல்லா வேலையும் வீட்டுகாரம்மா தான் பாப்பாங்க. அதாவது, நான் சமைப்பேன் - அவங்க பாப்பாங்க, நான் பாத்திரம் கழுவுவேன், அவங்க ...."..
  சரி, சரி.. எல்லா வீட்டுலையும் இதுதானே கதை..

  ReplyDelete
 2. //'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.//

  ஹாஹா :))) எப்படி மீனா இப்படில்லாம்! :)))

  இப்பதான் அம்பியுடைய 'புடவை' பதிவு படிச்சேன். அதனோட தாக்கம் மாதிரி தெரியுது! :)

  ReplyDelete
 3. நல்ல கற்பனை, மீனா. சிங்கப்பூரில் இந்திய வேலைக்காரர்கள் நிலமையைப் பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது.

  இதேமாதிரி பரதேசியோ சதங்காவோ அமெரிக்கர்கள் இந்தியாவுக்குப் போய் எச் ஒன்னில் வேலை செய்வது மாதிரி ஒரு கதை எழுதியிருந்தார்கள்.

  ReplyDelete
 4. "நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. "

  நியாயமா நடகிரதைதான் சொல்லியிருக்க! மதுரையிலே மரியம்மாவுக்கு இன்னோவா ரைட் குடுக்கும்போது குபெர்திநொவில் குஞ்சம்மாவுக்கு கண்டிப்பாக பென்ஸ் தேவை

  வெல் டன் மீனா. கதா'குடும்பம்' செலக்ட் ஆகுமா ஆகாதா என்று ஒரே நக கடி ...

  ReplyDelete
 5. @ ஜெயகாந்தன் - இந்த ஜோக் நான் இது வரை கேள்விப்பட்டதில்லைங்க. LOL.

  @ கவிநயா - எப்படீன்னேல்லாம் கேட்டா சொல்ல தெரியலை. :-)) சும்மா தமாஷுக்கு தான். உங்க பின்னூட்டம் பார்த்தப்பரம் தான் போய் அம்பியோட 'புடவை' படிச்சேன். எப்பவும் போல அவர் அசத்தியிருக்காரு.

  @ நாகு - நன்றி நாகு. //இதேமாதிரி பரதேசியோ சதங்காவோ அமெரிக்கர்கள் இந்தியாவுக்குப் போய் எச் ஒன்னில் வேலை செய்வது மாதிரி ஒரு கதை எழுதியிருந்தார்கள்.// உங்க கிட்ட லிங்க் இருந்தா அனுப்ப முடியுமா?

  @ கவிக்கிழவன் - முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  @ பிரஷாந்தி - அச்சச்சோ நகச்சேதத்தை தடுக்கவே நான் சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதணும் போல இருக்கே!

  ReplyDelete
 6. மீனா, கூப்பர்டினோ குஞ்சம்மா கதை பலே! அடுத்த பாகங்களும் விறுவிறுப்பாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள். நான் 2006ல் நமது இதே வலைதளத்தில்எழுதிய ஒரு சிறுகதையின் லிங்க் இதோ: http://blog.richmondtamilsangam.org/2006/08/blog-post_29.html

  ReplyDelete
 7. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க பரதேசி. உங்க கதையை படிச்சேன். வித்தியாசமான கற்பனை. ரொம்ப நல்லா இருந்தது.

  ஏன் இப்பல்லாம் நம்ம சங்க ப்ளாக்ல இது மாதிரி அருமையான கதையெல்லாம் எழுத மாட்டேங்கறீங்க? நேரம் கிடைச்சால் நிச்சயம் எழுதுங்க. :-))

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!