Thursday, December 03, 2009

மீனாவுடன் மிக்சர் - 14 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

---------------------------------------------------------------------------


-மீனா சங்கரன்

5 comments:

 1. //சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்//

  சான்ஸே இல்ல...

  கண்ணாபின்னான்னு கலக்கறீங்க...

  ReplyDelete
 2. //நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா//

  இதை இப்படி மாற்றியிருக்கணும் -- *** நீங்க தான் "இனிமேலும்" நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மாவா இருக்க போறீங்க.***

  சமைக்கறது, பெறுக்குறது, கழுவுறதுன்னு எல்லா வீட்டுலயும் பெரும்பாலும் ஆம்பளைங்க தான் செய்யறாங்க.. இப்பவே ஆம்பளைங்க முக்கால் வாசி முனியம்மா தான்! இந்த திட்டம் வந்தா ஆண் வர்க்கம் ரொம்ப சந்தோசப்படும்.. மீனா.. :-) !

  ReplyDelete
 3. ////சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்//

  ஸ்வர்ணரேக்கா சொன்னதை ரிப்பீட்டே...

  ஆஸ்தான முனியம்மாவும் சூப்பர். நான் வீட்டை பெருக்கி மெழுகிட்டு வரதுக்குள்ள அடுத்த பார்ட் ரெடியா இருக்கனும். என்ன?

  ReplyDelete
 4. //இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?//

  என்ன செய்வார்? "பார்க்க பார்க்க வேறு சாமி பார்க்க" என்று அண்ணன் கணபதியிடம் கேஸை தள்ளிவிடுவார்.

  மீனா, இரண்டாம் பாகம் பிரமாதம்!!!

  ReplyDelete
 5. உங்க ரசிப்புக்கும் 'ஊக்கு'வித்தலுக்கும் ரொம்ப நன்றி ஸ்வரணரேகா! :-))

  ஜெயகாந்தன்,
  //** நீங்க தான் "இனிமேலும்" நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மாவா இருக்க போறீங்க.***//
  //சமைக்கறது, பெறுக்குறது, கழுவுறதுன்னு எல்லா வீட்டுலயும் பெரும்பாலும் ஆம்பளைங்க தான் செய்யறாங்க..//
  ஹை, உங்க வீட்டை போலவே எல்லோர் வீடும் இருக்கும்னு நினைக்கிறீங்களே, அது எப்படி? இருந்தாலும் 'முனியம்மா' திட்டம் வெளிவந்தா எல்லோருக்கும் சந்தோஷம் தான். அதுல சந்தேகமில்லை.

  நன்றி நாகு. ரெண்டாவது பாகம் எழுதி முடிச்ச கையோடு அடுத்த பாகமும் எழுதிட்டேன். உடனுக்குடன் வெளியிட வேணாமேன்னு பாக்கறேன்.

  முருகர் dialogue சூப்பர் பரதேசி. உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!