Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!



Wednesday, August 27, 2014

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்று கணியன் பூங்குன்றன் சொல்லிச் சென்றதைப் போல பல யோகிகள், மகான்கள், பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டு வந்திருக்கிறோம்.  இது எத்துணை சத்தியம் என்று நம்மை நாம் அறிந்தால் மட்டுமே சாத்தியம்!!

'தன்னை உணர்வது' என்றால் என்ன என்று அறிய முதலில், நம்மை நாம் அறிய வேண்டும்!  நான் அறிந்த‌ வ‌ரையில் திருமூல‌ரின் இர‌ண்டு பாட‌ல்க‌ள் இவ‌ற்றை அழுத்த‌மாக‌ உண‌ர்த்துகின்ற‌ன‌.  அவ‌ற்றிலிருந்து தான் க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் தம‌து 'தீதும் ந‌ன்றும்'ஐ எளிமைப்ப‌டுத்தியிருக்க‌க்கூடும்.

கீழே உள்ள திருமூல‌ரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதார‌ண‌ வ‌ரிக‌ள் போல‌த் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பய‌ணிக்க‌ ஒரு பேருண்மை புல‌னாகும் என்ப‌து திண்ண‌ம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

மனித இனத்தில் இரண்டே ஜாதி தான்.  ஒன்று, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போதும் என்ற மனம்.  மற்றொன்று, எவ்வளவு தான் கிடைத்தாலும் போதாதென்ற மனம்.

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  த‌ந்தையின் ம‌ன‌ம் ... சொல்ல‌வே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது ... நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து ... மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிக‌ நாட்டம் செலுத்துகிறோம்.  பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்.  மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர் ப‌ல‌ பாட‌ல்க‌ளில்.  அவ‌ற்றைப் பிரிதொரு ப‌திவினில் பார்க்க‌லாம்.

***

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது சங்ககால‌ புறநானூற்றுப் பாடல்.   திருமந்திரம், திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வருகிறது.  இது ஐந்தாம் நூற்றாண்டு படைப்பு என்கின்றனர் பலர்.  ஆனால், திருமுறைகள் காலத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நாமறிய வேண்டும்.  தென்நாட்டில் வாழும் தலைச்சங்கத்தின் தலைவராக இருந்த அகத்தியரை சந்திக்க வடக்கில் இருந்து வந்ததாக திருமூலரின் வரலாறு சொல்கிறது.  அதுவுமன்றி  ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல்கள் பாடியாதாகவும் நாம் படிக்கின்றோம்.  இது 'எந்த ஆண்டு' என்றும் ஆராய வேண்டும்.  கண்டிப்பாக சூரியனைச் சுற்றும் பூமி சுழற்சி ஆண்டாக இருக்கமுடியாது.

Monday, August 25, 2014

வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்

என்னமோ ஏதோ தெரியலை, தமிழ் சங்கத்து ப்ளாகுக்கு வாஸ்து சரியில்லைன்னு நினைக்கிறேன்.  நாகு, கொஞ்சம் செட்டிங்க்ஸ் ஏதாவது மாத்துங்க.

திடீர்னு வேதாந்தி கதை கதையா எழுதராரு. VGR-ன்னு ஒருத்தர் நம்பர் போட்டு பதிவு எழுதராங்க.  நடுவுல கொஞ்சம் சண்டை, செண்டிமெண்ட், பாட்டு டான்ஸ் எல்லாம் இருக்கு ஆனா காமெடி இல்லை.  கவலைப்படாதீங்க நான் காமெடியெல்லாம் எழுதப் போரதில்லை.  அதுக்குன்னு ஒருத்தர் இருக்கார், ஆனா,  அவரோட ப்ளாகுல இருந்து எடுத்து இங்க போட்டா தப்பு இல்லையா அதனால, அந்த பதிவுக்கு இங்க ஒரு லிங்க் கொடுத்துட்டா போச்சு.

http://dubukku.blogspot.com/2014/08/blog-post_14.html.  மாற்றான் நு தலைப்பு, படிச்சுட்டு சிரிக்கலைன்னா, நான் காமெடி எழுதுவேன் சொல்லிட்டேன்.

முரளி இராமச்சந்திரன்.


Saturday, August 23, 2014

யாரிடம் கற்றோம் ?



மனிதன் யாரிடம் கற்றான் இந்த பேசும் மொழி தனை
என்று சதங்கன் யாரிடமோ கேட்டு விட்டார்

வாசித்த அனைவரும் வாழ்த்தியதோடு
யோசித்த பதிலை  சொல்லாமல் சென்று விட்டார்

நானும் அவ்வழி செல்லாது ஒரு பதிலை
சதங்கனுக்கு கொடுக்க வேண்டும் என்ற
திண்ணம் மனதில் ஒழிக்க இதோ எனது மொழி

மனிதன் விட்டு சென்ற குகை சித்திரம் தான்
இன்று மொழியாய் கண்ணுக்கு தெரிகிறது
நாம் என்றும் சூத்திரதாரி தான்
சுயநலத்தை தவிர நமக்கு என்ன தெரியும்
இதனால் தான் நம் காலடியை மட்டுமே தேடுகிறோம்
பின்னாளில் வரலாறு ஆகும் என்று

இயற்கை விட்டு சென்ற சுவடுகள் தான் எத்தனை
ஏன் அதனில் உங்கள் தேடல் இல்லை?

மனிதன் மொழி வெறும் ஒலி மட்டுமே.
இதனால் தான் ஊமைகளும் பேச முடிகிறது
யார் சொல்லியது பறவையும் விலங்கும் பேசவில்லை என்று
அவை பேசும் மொழி நமக்கு புரிய வில்லை

இயற்கையும் பேசுகிறது, இதனை புரிந்தவர்கள்
மனிதர்கள் அல்ல, தேவர்கள்

அனால் உங்களின் தேடல் அது அல்ல
விதண்டமாய், வினயமாய், நய வஞ்சகமாய்
பேச மனிதனுக்கு யார் தான் கற்று தந்தார்கள்?
அது கற்றதல்ல, விட்டு சென்றது
ஆம் கடவுளின் பகைவன் மனிதனுக்காக விட்டு சென்றது.

அதை பேசுபவர் எவரும் மனிதரும்  அல்ல .
ஐயா, நாத்திகர் ஆத்திகர் விவாதம் வேண்டாம்
இது வெறும் அரசியல் மட்டுமே.

வேதாந்தி


relax please




படம் பாரு கடி கேளு மாதிரியே ஒரு பதிவு
மிக அருமையாக இருந்தது



 "அதிக பிரசங்கி"   வேதாந்தி 


Friday, August 22, 2014

Blogs updates on Twitter

நாகு,
நம் தமிழ் சங்கத்தின் பெருந்தகை ஒருவரின் சிறிய வேண்டுகோள்.
நம் வலைதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ஏன் "TWITTER" பண்ணக் கூடாது என்று கேட்கிறார். அவர் இதனை சோதனை செய்து வெற்றியும் கண்டு விட்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எந்த வகையில் சாத்தியம் என்று நீங்கள் கூறுவீர்கள் என எதிர் பார்க்கும்
உங்களின்
வேதாந்தி

Tuesday, August 12, 2014

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?



எனக்கு ஒன்று தெரிந்து விட்டது. மாற்றத்தை விரும்பாதவனே மறத் தமிழன்.
ரஜனி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்.
அடுத்தவரைப் பற்றி யோசிக்க கூட மாட்டோம் என்று பிடிவாதமாக இருகிறார்கள்.

ஒரு வேளை நடிகர்கள் வந்து கூடாரம் போட்டால் தான் நாம் முடிவு செய்வோமோ?

சென்ற மாதம் இங்கு நடிகை ஸ்ரேயா வந்து போனது யாருக்கும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.
ஆனால் கூட்டம் தான் இல்லை. நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்ததே காரணம்.
இறுதியில் ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் , இலவசமாக ஆட்களை கையை, காலை பிடித்து வந்து உட்கார வைத்தார்கள்.

அது போல நாமும் ஒரு கட்டத்தில் யாரையோ ஒருவரை  அவர் உறவினர் என்று சூப்பர் ஸ்டார் ஆக
தேர்ந்து எடுத்து விடலாம்.

நமக்கு தான் பரம்பரை ஆளுமை ரொம்ப பழக்கம் ஆகி  விட்டதே. இது ஒன்றும் புதிது இல்லை,

வேதாந்தி 

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.

நான்காம் பதிவு

இவருக்கு Patio doors'அ திறந்து வச்சா பிடிக்காது
அந்த அம்மாவுக்கு Balcony கதவ மூடினா suffocating'அ இருக்கும்

இவருக்கு 75 degree ஆனா வேர்த்து கொட்டும்
அந்த அம்மாவுக்கு AC'அ on செஞ்சாலே குளிரும்

இவருக்கு நெனச்சத சாப்பிடனம்'னு ஆசை
அந்த அம்மாவுக்கு ஆரோக்யமா சாப்பிடனம்'னு குறிக்கோள்

இவருக்கு NFL'லும், Cricket'டும், Baseball'லும் ESPN'ல பாத்தா போதும்
அந்த அம்மாவுக்கு என் பிரியமுள்ள சினேகிதி நாடகம் பாக்கலேன்னா தூக்கமே வராது

இவருக்கு பொருள எடுத்த இடத்துல வக்க வராது
அந்த அம்மாவுக்கு அது அது அதோட இடத்துல இல்லேனா இருப்பு கொள்ளாது

இவருக்கு பிடிச்சது லெப்ரான்
அந்த அம்மாவுக்கு பிடிச்சது சல்மான்கான்

இவருக்கு விழுந்து விழுந்து படிக்கறதுனா அது அகிலத்தின் செய்திகள்
அந்த அம்மாவுக்கு அகிலமே இவரின் பார்வைகள்

இவருக்கு இஷ்டம் சப்பாத்தி சாவல்
அந்த அம்மாவுக்கு இஷ்டம் வெண்டைக்காய் வறுவல்

இவருக்கு அதிகம் பேசறதுங்கறதுனா 10 வார்த்தைகள்
அந்த அம்மாவுக்கு வாயில விளையாடும் கணக்கில்லா சொற்கள்

இவருக்கு பிடிச்சதெல்லம் டார்க் கலர்
அந்த அம்மாவுக்கு பிடிச்சதோ light rose மலர்

இவருக்கு gift'னா அகராதில அதிக பணம்
அந்த அம்மாவுக்கு gift'னா artistic மனம்

இப்படி எந்த விஷயத்திலுமே ஒரு சேர இருக்க முடியாத இரண்டு பேர ஒரு பெரிய Institution'னுக்குள்ள போட்டு சண்டை போட்டுக்கற இரண்டு பசங்கள ஒரே ரூமுக்குள்ள தள்ளற Teacher மாதிரி 4 சுவருக்குள்ள அடைக்கறது கல்யாணம்.

இந்த எல்லா odds'அயும் மீறி கால் சதமும், அரை சதமும் அடித்து ஆண்டுக்கொரு ஆளை கூட்டி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்'னு காமிக்கற அகிலம் முழுக்க இருக்கற அத்தனை அப்பாவி ஆண்களையும் அழகு பெண்களையும் தெய்வ பிறவிகள்'னு தான் சொல்லனம்.

வேறு எந்த விஷயத்துல ஒத்துக்காவிட்டாலும் 'அஹம் பிரம்மாஸ்மி'யை இந்த இடத்தில் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

-இப்படிக்கு
ரிச்மண்டில் வாழும் மணம் ஆகாத கன்னியர் மற்றும் காளைகளின் சார்பாக உங்கள்
vgr

மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

This article on RTS is sponsored to you by writer/author Thiru. vedaanthi.

Thursday, August 07, 2014

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்

அருமை சகோதரிகளே,

முறத்தால் புலியை துரத்திய காலம் போய்  இப்பொழுது முரடர்களை துரத்தும் நிலையாக உள்ளது.
இது உங்களின் களம். நமக்கு நாமே தீர்வு காணும் உலகம்.

இன்றைய கால கட்டத்தில், செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது. வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன. இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.

பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு  பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன? எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும்.

உங்களின் தீர்வை  இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வேதாந்தி