Thursday, March 27, 2014

ஒரு கொழாப்பரேட்டிவ் முயற்சி

முன்னொரு காலத்தில் ஒரு கூட்டு முயற்சியாக கதை கவிதை எழுதினோம் நம்ம ஊர் பிளாகிகள் எல்லாம் சேர்ந்து. இப்போது இந்தப் பதிவு ஒரே நாலாம் உயிரெழுத்து ஓட்டுவதால், அந்த கூட்டு முயற்சியை மறுபடியும் துவங்கலாமே...  முகப்புத்தகத்தில் சிலர் பின்னி பெடலெடுக்கிறார்கள். இந்தப் பதிவுப் பக்கம் வாருங்களய்யா என்றால் ஜகா வாங்குகிறார்கள். அதனால் இரண்டுக்கும் மத்தியில் கூகுளார் வீட்டில் எழுதலாமே?

முன் எழுதிய கதை கவிதைகளை இங்கே படிக்கலாம்...

கூட்டாங்கதை 1
கூட்டாங்கதை 2
கூட்டாங்கவிதை 1
கூட்டாங்கவிதை 2

இனி  கூட்டாங்கதை 3 - இங்கே நீங்கள் போய் படிக்கலாம். அதுக்கு முதல்ல எழுதனும்....

கவிதைதான் எழுதுவேன் என்கிறவர்கள் இக்கட சூடண்டி... கூட்டாங்கவிதை - 3.

அப்பாடா. அவுட்சோர்ஸ் பண்ணியாச்சு.

Saturday, February 22, 2014

நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஆ ஆ ஆ .....


அப்பாடக்கர் என்றால் என்ன? உங்கள் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது)

""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.


அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)""
 
உங்கள் கற்பனையில் வேறு விளக்கம் இருந்தால் அதையும்தான் சொல்லுங்களேன்!

Wednesday, February 19, 2014

அம்மா வாழ்க

இராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக மரண தண்டனைக்  கைதிகளாய் இருந்தவர்களை உச்சநீதி மன்றம் ஆயுள் தண்டனைக் கைதிகளாய் மாற்றவும், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய அறிவித்துள்ள செயல் நமக்குப் பல சுவாரஸ்யம், அதிர்ச்சி  மற்றும் அரசியல்வாதிகளின் சுயநலம் மற்றும் கையாலாகத்தனத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

இதில் பல பரிமாணங்கள்

1. இராஜீவ் கொலையாளிகள் - இது ஒரு முட்டாள்தனமான கருத்து.  கொலை செய்யத் திட்டம் போட்டது ஒரு கும்பல், செய்தது ஒரு கும்பல், அதற்கு உதவியாய் இருந்த சில குப்பன் சுப்பன்மார்களைப் பிடித்து கொலையாளிகள் என்று பிரயோகப் படுத்தி குளிர் காய்ந்தாகி விட்டார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை தேவை, ஆனால் மரண தண்டனை? கல்யாண  வீட்டில் புகுந்து 17 பேரைக் கொலை செய்தவனின்  கருணை மனுவை அங்கீகரிக்கும் இந்த நாட்டில் இவர்களுக்கு ஏன் மரண தண்டனை? ஏன் இந்த பாரபட்சம்? நிர்பயா வழக்கில் கண் முன் உள்ள குற்றவளிகளைத் தண்டிக்க வக்கில்லாத அரசமைப்பிற்கு இந்த 3 பேரின் மரண தண்டனையில் என்ன ஒரு ஆர்வம்?


2. கருணை மனுவைப் பதினோரு வருடங்களாகக் கிடப்பில் போட்டு விட்டு இப்போது புலம்பும் காங்கிரஸ் ஒரு இத்துப் போன கட்சி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

3. குற்றவாளிகளை விடுதலை செய்ய அம்மா காண்பிக்கும் அவசரம் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது. ஆனாலும் மதிய அரசின் கையாலகாத்தனத்தை அம்மா இதன் மூலம் வெளிப்படுத்தி மேலும் அவமானத்தையும் தர்ம சங்கடங்களையும் உச்ச நீதி மன்றமும் அம்மாவும் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் . அதே சமயம் இது ஒரு தவறான முன் உதாரணத்தைக் கொண்டு வரலாம்

4. குற்றவாளிகளின் சமூக வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையலாம், அல்லது மதிமுக கட்சியின் மூலம் சீட்டு வாங்கி அவர்கள் MP ஆகலாம்


Monday, February 17, 2014

பனி

வெள்ளை மேக துகள்கள் எங்கும் விழுந்து படர்ந்த பனி
வேற்று கிரகமாய் பூமியை கண்ணுக்கு விருந்து படைத்த பனி
வேகம் நீக்கி சாந்தமாய் நம்மை வீட்டில் வைத்த பனி
வேலை ஒதுக்கி மனைவி மக்களுடன் வீற்றிருக்க செய்த பனி

- சீனிவாசன்
 

இலை மறை கனி 
நம்மவர் சீனி 
கவிரகம் மினி 
சுட்டிற்றாம் பனி 
வாழ்த்துக்கள் மெனி (many)
மேல் வளர இனி !
- மார்சலின் 

இங்கு வந்து பதியாமல், முகப்புத்தகத்தில் கவிதை பொழியும் அனைவருக்கும் எச்சரிக்கை. அங்கிருந்து இங்கே சுட்டுப் போடப்படும்... :-)

Saturday, January 18, 2014

மொழிகள்

ஆங்கிலத்தை நாம் வெறுக்கவில்லை...அது நமது வியாபார மொழி...
ஹிந்தியை நாம் வெறுக்கவில்லை...அது நமது தேச மொழி...
தமிழை நாம் காதலிக்கிறோம்...இது நமது தாய் மொழி...
 
- சேகர் வீரப்பன்

Friday, December 13, 2013

மார்கழித் திங்கள் மதி நிறைந்த...

பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். உஷத் காலம், இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்த காலமாகும். மார்கழி மாதம், தேவர்களின் உஷத் காலமாகும்.  இறைவழிபாட்டுக்கென்றே வைக்கப்பட்டிருப்பதால், இந்த மாதத்தில் வேறு விசேஷங்கள் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், மற்றும் திருப்பள்ளியெழுச்சியும், பாடுவர். திருப்பதி திருமலையிலும் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக திருப்பாவை பாடுவார்கள்.

அந்த நாட்களில் தமிழகத்தில் மார்கழித் திங்கள்...  மாலே மணிவண்ணா... கேட்காமல் இருந்திருக்க சாத்தியமில்லை.  அந்த அனுபவங்களை அனுபவிக்க இங்கும் ஒரு சந்தர்ப்பம்.

நம் ரிச்மண்ட் கோவிலிலும் மார்கழி மாதத்தில் (இந்த வருடம் டிசம்பர் 15 முதல்), வார நாட்களில் தினமும் காலை 7:00 மணிக்கும் (சனி, ஞாயிறு காலை 9:30 மணிக்கும்) திருவெம்பாவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடப் படுகிறது. 

நானும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளாவது இதை அனுபவிக்க செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டு போகவே முடியவில்லை. இந்த முறையாவது செய்ய வேண்டும்...Saturday, November 23, 2013

படம் பாரு கடி கேளு - 60


கீழே நிற்கும் மைக் செட் கடை தொழிலாளி: அண்ணே மன்னிச்சுக்குங்க. தெரியாம தப்பு பண்ணிட்டேன்

கீழே நிற்கும் மைக் செட் கடை முதலாளி: டேய், உன்னால எனக்கு 500 ரூபாய் நஷ்டம். அனியாயமா 10,000 வாட் ஸ்பீக்கரை 1,000 வாட் ஸ்பீக்கர்னு பெயிண்ட் பண்ணிட்டியே. உன் சம்பளத்தில ஒரு சைபரை கட் பண்ணிடறேன் பாரு.

Thursday, October 10, 2013

மழைஉயரம் வெறுத்த மேகம்
தவழ்ந்து தரையிறங்கி
தெளிவு மறைத்து எழில் கூட்ட
கதகதப்பான காரில்
கண்ணதாசன் தமிழ் கசிய
காப்பியின் மணம் நுகர்ந்து
இளங்கசப்பை சுவைத்தபடி
கண்டதையும் கேட்டதையும்
கொண்டாடும் மனம்

                                         - வாசு

சென்ற வருடம் எழுதியது, இன்று நன்கு பொருந்தும்

Wednesday, October 09, 2013

மழை

நாளை மதியம் முதல் மழையென
நேற்றே அறிவித்தது அறிவியல்,
அறிந்தவுடன் அவரவர் அறிவிற்கேற்ப
வழக்கத்தை வசதிக்கேற்ப மாற்றியும்
உடை கொண்டும் குடை கொண்டும்
மழை தவிர்த்தது மனிதரினம்
மரத்தின் கிளைகளில் பதுங்கின பறப்பன
மரத்தின் கீழ் ஒதுங்கின நடப்பன
மண்ணுக்குள் ஒளிந்தன ஊர்வன
விண்ணிலிருந்து ஆவலோடிறங்கி
தொட்டுத் தழுவி உடல் நனைக்க
நகரும் உயிர் தேடித் தேடி
அலைந்து அலுத்து ஏமாந்து
தனித்துத் தவித்து அழும் மழை
                                                         - வாசு  

Sunday, August 18, 2013

தகுதி

கோவிலைச் சார்ந்த உணவகத்தில்
அரைக்கால் சராய் அணிந்தவர்க்கு
அனுமதி மறுக்கும்
லுங்கி அணிந்த தடியன்.