Thursday, April 19, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 5
அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமாஇப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் பிர‌ச‌விக்க‌, ச‌மூக‌த்தின் மீது எவ்வ‌ள‌வு கூர்ந்த நோக்கும் அக்கறையும் இருக்க வேண்டும். சமூக நிலை, சொல்லாட‌ல், மொழித்திற‌ன், ஆளுமை எனக் க‌ல‌ந்து க‌ட்டிய‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

...

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு

...

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

(திரைப்படம்: பதிபக்தி, 1958)

மேலே, 'கவைக்குதவாத வெறும் பேச்சு' என்ற வரிகளில் சில நேரம் பயணித்தேன். அதென்னது 'கவை', எழுத்துப் பிழையாக இருக்கலாம் எனத் தேடியதில், 'கதை' என்றும், 'சபை' என்றும் பலர் பலவிதமாகத் தங்கள் தளங்களில் பதிந்துள்ளார்கள். எல்லா வரிகளும் 'க'வில் இருக்க 'சபை' சரியானதாக இருக்க முடியாது. ஆனால், 'க'வில் ஆரம்பிப்பதால், 'கதை' ஒத்துப்போகிறது. இருப்பினும் அதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சமூகத்தின் அவலத்தைப் பாடுகையில், அவன் எங்கே 'கதை' கேட்டுக் கொண்டிருக்க முடியும். 'கவை' கொண்டு ஏதாவது அடிப்பானானால், உணவுக்கு வழி கிடைக்கலாம் அவனுக்கு.

வாழ்வின் மித‌வேகப் பயணத்தின் ஆரம்ப கால மாட்டு வண்டியிலிருந்து மாறி, கைவண்டி ரிச்சாவுக்கு மாறியிருந்தது காலம். யாரெல்லாம் இந்த வண்டியில் பயணிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் இருக்கிறது உலகம், என்றெல்லாம் சொல்லி, மாட்டை மாற்றி, மனிதனாக மாறி, சக மனிதனைச் சுமந்து, வண்டி இழுத்து, ஊரெல்லாம் சுற்றினாலும், தன் வாழ்வு சாலையின் ஓரமாகக் கிடக்கிறதென்று சொல்லும் வரிகள் உண்மையிலே சுடுகின்றது இன்றும்!

***

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையின் பேரில் வ‌ந்தாலும், ப‌ல‌ரும் தாயத்தைப் எப்ப‌டிப் பார்க்கின்ற‌ன‌ர் என்று க‌விஞ‌ரின் எண்ண‌த்தில் உதித்த‌ க‌ன‌ல் வ‌ரிக‌ள். உட்கார்ந்த‌ இட‌த்தில் இருந்து சாதிக்க‌ முடியுமா என்ற‌ நோக்கில் தான் ம‌னித‌னின் சிந்த‌னை இருந்திருக்கிற‌து/இருக்கிற‌து. போகிற போக்கில், க‌டைத்தேங்காயை எடுத்து வ‌ழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அப்ப‌டியே போய்க்கிட்டே இருக்கிறோம். இந்த‌ப் பாட‌லில், மனித எண்ணங்களான இரண்டு கேள்விகளுக்கு என்ன‌ அற்புதமாகப் ப‌தில் த‌ருகிறார் க‌விஞ‌ர்.

ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து ...

ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து ...


(திரைப்படம்: மகாதேவி, 1957)

***

'ஒன்னிலிருந்து இருப‌து வ‌ரைக்கும் கொண்டாட்ட‌ம், கொண்டாட்டம்' என்ற என்.எஸ்.கே அவ‌ர்க‌ளின் பிர‌ப‌லான‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிறது, ப‌ட்டுக்கோட்டையாரின் கீழ்வ‌ரும் பாட‌லைப் ப‌டிக்கையிலே. அன்றைய‌ சூழ‌லுக்கு முற்றிலும் ஒத்துப் போயிருந்தாலும், இன்று இவ்வ‌ரிக‌ள் பொருத்த‌மாக‌ இருக்க‌ முடியுமா ? யாரு கிட்ட‌ காசு இல்ல‌ இன்று ?!

க‌ருத்து அதுவ‌ன்று ! அன்று, வ‌ரவும் செலவும் சில பல ரூபாய்கள். இன்று, வ‌ர‌வும் செல‌வும் ப‌ல‌ ல‌ட்ச‌ ரூபாய்க‌ள். இது தானே வித்தியாசம்! ஒருவ‌ர் ச‌ம்பாதிக்கும் வீடுக‌ளில் இது தான் இன்றைய‌ நிலை. இதில் 'ஏழை' என‌ வ‌ரும் இட‌ங்க‌ளில் 'ப‌ண‌க்கார‌ ஏழை' என்றும், 'க‌ட‌ன்கார‌ன்' என்கிற‌ இட‌ங்க‌ளில் 'வ‌ரி, வீட்டுக் க‌ட‌ன், வாக‌ன‌க் க‌ட‌ன், மின்சார‌ம், பாலு, சோறு, த‌ண்ணீ, லொட்டு, லொசுக்கு...' என்று போட்டுக் கொள்வோம்.

கையில‌ வாங்கினேன் பையில‌ போட‌ல‌ காசு போன
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

சொட்டு சொட்ட வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகைய நகைகள் இருக்கு
மடியை பாத்த மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
என்னமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
வேலைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

(திரைப்படம்: இரும்புத் திரை, 1960)

எல்லாத்தையும் படைச்சு, என்னையும் படைச்சு, எல்லாத்துக்கும் ஏங்க வைக்கிறாயே என்ற பாட‌லின் இறுதி வ‌ரிக‌ள், பிறைகீற்றுப் புன்ன‌கை வ‌ர‌வ‌ழைக்கிற‌து.

***

'காயமே இது பொய்யடா' என்று க‌ண்ண‌தாச‌னும், அவ‌ருக்கு முன் சில சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்க‌, ந‌ம் க‌விஞ‌ரின் 'காய‌மே இது மெய்ய‌டா' என்ற‌ வ‌ரிக‌ள் சிந்த‌னையில் ஆழ்த்துகிற‌து ந‌ம்மை. விய‌ப்போடு தேடினால், இதைச் சில‌ சித்த‌ர்க‌ளும் சொல்லிச் சென்றிருக்கிறார்க‌ள். திருமூல‌ர் திரும‌ந்திர‌த்தில், 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன். உட‌ம்பை வ‌ள‌ர்த்தேன், உயிர் வ‌ள‌ர்த்தேனே' என்றார். இங்கே 'காய‌ம்' என்ப‌து 'தேக‌ம்' அல்லது 'உடம்பு' என்று பொருள் கொள்ள வேண்டும்.

காய‌மே இது மெய்ய‌டா இதில்
க‌ண்ணும் க‌ருத்துமே வையடா
நோயும் நொடியும் வ‌ராம‌ல் காத்து
நுட்ப‌மாக‌ உய்ய‌டா !

ஆயுள் கால‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு
அமைப்பிலே யொரு நூற‌டா
அரையும் குறையுமாய் போவ‌த‌வ‌ன‌வ‌ன்
அறிவும் செயலும் ஆம‌டா

மாய‌மெனும் குய‌வ‌ன் செய்த‌
ம‌ண்ணுபாண்ட‌ம் தான‌டா இது
ம‌த்தியில் உடையாத‌ப‌டி நீ
ம‌ருந்து மாயம் தின்ன‌டா

(திரைப்படம்: கற்புக்கரசி, 1957)

அதென்னது, மத்தியில் உடையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?! க‌விஞ‌ரே சொல்கிறார்...

வாய‌க்கெடுத்த‌து ப‌சிய‌டா
அந்த‌ப் ப‌சியைக் கொடுத்த‌து குட‌லடா !
இந்த‌க் குட‌லைச் சுத்த‌ம் செய்திடாவிடில்
உட‌லுக்கே சுக‌ம் ஏத‌டா ?

***

டூ மினிட்ஸ் நூடுல்ஸ், இன்ஸ்ட‌ன்ட் காஃபி, ஒன் லைன் ஃபேஸ்புக் அப்டேட், ஃப்யூ மினிட்ஸ் லஞ்ச், குயிக் நாப் என‌ எல்லாமே ட‌க் ட‌க் என்று வேக‌மா செஞ்சு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றோம். எல்லாம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா செய்யும் நிலையில் இன்றிருக்கின்றோம். ஆனால், கவிஞர் வேறொரு ஷார்ட்க‌ட் ப‌த்தி சொல்றாரு. ந‌ம்மைப் ப‌ற்றியே நாம் யோசித்துக் கொண்டிருக்க‌, ச‌மூக‌த்தைப் ப‌ற்றியே சிந்திக்கும் க‌விஞ‌ரின் க‌ன‌ல் வ‌ரிக‌ள்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…

(திரைப்படம்: மகாதேவி, 1957)

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Saturday, April 07, 2012

படம் பாரு கடி கேளு - 56


ம்... "Ray ban " கண்ணாடியும் "Hilfiger " ஜீன்ஸும் நமக்கு போடுவான்னு பார்த்தா அவனுடைய பழைய ஜட்டியையும் கிழிஞ்ச சொக்காயையும் மாட்டி விட்டானே படுபாவி.
நாம பரவாயில்ல - அவனுக்கு ஒரு சொக்கா கூட இல்ல!

Sunday, April 01, 2012

படம் பரு கடி கேளு - 55


மணியடிச்சு திறந்து வைக்கணும்னு சொன்னாங்க. நான் என்னவோ நம்ம பூசை மணி மாதிரி சின்னதா இருக்கும்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். இது கிண்டாமணியா இருக்கே. நாலு ஆளை கூப்பிடுய்யா.... யப்பப்பா.......

Saturday, March 31, 2012

அயோக்கியப் பெண்மணியின் தொடரும் பித்தலாட்டங்கள்

அயோக்கியப் பெண்மணியின் தொடரும் பித்தலாட்டங்கள்

கரண்ட் கட், பால், பஸ் கட்டண உயர்வு, இடைத் தேர்தல் வருகை. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து இருந்து பைத்தியக்கார மக்களை எப்படி திசை திருப்புவது? எளிது. உடன் பிறவா சகோதரியைக் கட்சியில் இருந்து துரத்துவது.

இது முதல் முறை கூட அல்ல, முன்பே இது போல இந்த அம்மையார் இது போல நாடகங்களை நடத்தி மாங்கா மடையர்களான மக்களை உற்சாகப் படுத்தி இருக்கிறார். பத்திரிகைகளுக்கும், தொல்லைக் காட்சிகளுக்கும் ஏக போக கொண்டாட்டம். நடராசன், திவாகரன் ஆகியோர் எப்போது கைது செய்யப்படுவர் என்று தொடர்ந்த ப்ளாஷ் செய்திகள்.

இடைத் தேர்தல் முன்பு வரை கூடங்குளம் மின் நிலைய எதிர்ப்புக் கும்பல் செய்த போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, இடைத் தேர்தலில் வெற்றி வந்தவுடன் , மின் நிலையம் திறக்கப் படும் என்ற அறிவிப்பு, உதய குமாரைக் கைது செய்ய போலிஸ் படை குவிப்பு, இப்போது மின் கட்டண உயர்வு என்ற ஒரு பழைய மூன்றாந்தர வழக்கம்.

பொதுத் தேர்தலையும் பஞ்சாயத்து தேர்தலையும் இரண்டு மாத இடைவெளியில் வைக்க அனுமதிக்கும் இந்தக் கிறுக்குத் தனமான அரசியல் சட்டங்கள் இருக்கும் வரை, ஐந்து வருட ஆட்சியில் இவர்களது அயோக்கியத் தனங்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ ஒரு வழியும் இல்லை. இடைத் தேர்தல்கள் கேலிக் கூத்தாகி, சில கோடிகள் போய், ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து, அங்குள்ள மக்களை தற்காலிக VIP களாக்கி விடும் கோமாளித் தனம் தொடர்கிறது. தொகுதி நன்றாக வேண்டுமா? உங்கள் MLA சாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அங்கு பாலாரும், தேனாறும் ஓடும்.

இந்தத் தரங்கெட்ட பெண்மணியின் ஆட்சி இன்னும் நான்கு வருடங்கள் தொடரட்டும். ஐந்தாவது வருடம், மீண்டும் சலுகைகள், நாடகங்கள் அரங்கேறும்.

Tuesday, March 27, 2012

படம் பாரு கடி கேளு - 54


நம்ம "நொண்டி கால்" ட்ரிக் வொர்க் அவுட் ஆயிடுச்சு. நாளைக்கு வேறு ஏதாவது யோசிக்கணும்.
அந்த சின்ன பொண்ண நெனச்சா தான் பாவமா இருக்கு. அறியா பருவம். என்ன இருந்தாலும் நம்ம லெவலுக்கு வர இன்னும் கொஞ்ச நாளாகும். ம்....

Wednesday, March 21, 2012

தலபுராணங்கள் வளர்ந்த கதை


பெங்களூரில் இருந்த போது என் கர்நாடக நண்பர் ஒருவர் திருச்சிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் போய்விட்டு வந்ததாகச் சொன்னார். உங்கள் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டேன்.  அருமையான ஊர், காவிரி நதி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், மலைக்கோட்டை எல்லாம் பார்க்க அற்புதமாக இருந்தது, எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகள் என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. சொந்த ஊரை ஒருவர் புகழ்ந்து பேசுவதைக் கேட்டால் யாருக்குதான் மகிழ்ச்சியாக இருக்காது?

 அடுத்து அவர் திருச்சி நகரம் பற்றி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன்.தாயுமானவர் கோயிலைப் பற்றி கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமாக ஒரு கதையைச் சொன்னேன்..

 திருச்சியில் வணிக சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், குடும்பத்தில் அனைவரும் சிவபக்தர்கள்.இளைய தலைமுறையைச் சேர்ந்த பெண் ஆழ்ந்த பக்தி கொண்டவள். திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண் கருத் தரித்திருக்கிறாள். பெண் கரு தரித்திருக்கும் செய்தி அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் திருச்சிக்கு வந்து பெண்ணைப் பார்த்து நலம் விசாரித்தார்கள். திரும்பவும் பிரசவ சமயத்தில் முன்பாகவே வந்திருந்து எல்லா உதவிகளையும் செய்வேன் என்று பெண்ணிடம் கூறிவிட்டு காவிரியின் வட கரையில் உள்ள சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

 பிரசவ காலம் நெருங்கிவிட்டது. காவிரி நதியில் பெரும் வெள்ளம், கரை புரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் நதியில் படகுப் போக்குவரத்து நின்று போய்விட்டது, பெண்ணின் தாயார் வெள்ளம் சீக்கிரமே வடிந்து சரியான நேரத்தில் திருச்சி போய் பெண்ணுக்கு அருகில் இருக்க கருணை புரியும்படி சிவபெருமானை வேண்டுகிறாள்.

 பெண்ணுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிவிட்டது. சரியான நேரத்தில் உதவிக்கு வந்து சேராத தாயை நினைத்து வருந்தினாள் சற்று நேரத்தில் தாயார் வந்து சேர்ந்தாள்.சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறேன் என்று கூறியபடியே உள்ளே நுழைந்தாள். வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அம்மா மேல் கோபம். தாயிடம் சரியாக பேசவே இல்லை. நல்ல வேளையாக சற்று நேரத்தில் குழந்தை பிறந்தது. குலம் தழைக்க ஒரு ஆண்மகவை பெற்று எடுத்தாள்.

ஒரு பெண்ணுக்கு பிரசவ காலத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் தாயார் செய்து முடித்தாள். இரண்டு, மூன்று நாள் ஓடியது.

காவிரியில் வெள்ளம் வடிந்த பிறகு தொடங்கிய முதல் படகில் புறப்பட்டு தாய் திருச்சிக்கு வருகிறாள். வீட்டில் குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு உள்ளே நுழைகிறாள் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என்று கேட்கிறாள்.கையில் குழந்தையுடன் இருந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை. சரியான நேரத்தில் வந்து சேராததால் பெண் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று நினைத்து தாய் கேட்டாள்.

 நான் என்ன செய்யமுடியும் காவிரியில் சில நாட்களாக நல்ல வெள்ளம். படகு போக்குவரத்து அறவே இல்லை, வெள்ளம் வடிந்தவுடன் புறப்பட்டு இப்பொழுது தான் வர முடிந்தது, இதற்காக என்மேல் கோபப் படலாமா என்று கேட்டாள்.

 பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை. திகைத்துப் போனவளாக, நீதான் ரெண்டு நாட்களாக இங்கேதானே இருக்கிறாய்? பிரசவ நேரத்தில் நீதான் பக்கத்தில் இருந்தாயே, ஏன் திடீரென்று இப்படி பேசுகிறாய்? என்று கேட்டாள்.

 ஊரிலிருந்து வந்த தாயாருக்கு எதுவும் புரியவில்லை. நான் இப்பொழுதுதானே உள்ளே நுழைகிறேன். வேறு யார் இங்கே வந்தார்கள் என்றாள். சிறிது நேர குழப்பத்துக்குப் பிறகு இரண்டு நாளாக இருந்து பணிவிடை செய்த தாயாரை தேடினார்கள், காணவில்லை.

 தாய்க்கும் மகளுக்கும் உண்மை விளங்கியது. தாயும் மகளும் வேண்டியபடியே இறைவன் கருணையோடு அந்த பெண்ணுக்கு தாயாக வந்திருந்து பிரசவம் பார்த்திருக்கிறான் என்ற உண்மை விளங்கியது.

 அதனால் சிவபெருமான் திருச்சியில் தாயுமானவராக பக்தர்களுக்கு அருள் செய்கிறார். ஆண்டுதோறும் திருச்சி தாயுமானவர் கோயிலில் செட்டிப் பெண்ணுக்கு இறைவன் மருத்துவம் பார்த்த திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

 இந்த கதையை நான் நண்பரிடம் விரிவாக சொன்னதும் அவர் மனம் நெகிழ்ந்து போனார். இது காலம்,காலமாக திருச்சியில் வழங்கி வருகிறது. இந்த கதை எந்த புராணத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

 இது போன்று பல ஊர்களில் அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தன் பக்தனுக்கு நெருக்கடி காலத்தில் அருள் செய்து காப்பாற்றிய கதை வழங்கப் படுகிறது. இது போன்ற கதைகளைக் கொண்ட பல தலபுராணங்கள் தமிழ் மொழியில் நிறைய உண்டு.

 மதுரையில் சோமசுந்தரக் கடவுள், தன் பக்தர்களை காத்து அருளிய பெருமையை விரிவாகப் பாடுவதுதான் திருவிளையாடல் புராணம். இந்த திருவிளையாடல்களை ஐந்து புலவர்கள் பல்வேறு தலைப்புகளில் பாடியிருக்கிறார்கள். ஆனால் இலக்கிய நயத்திலும் கதை சொல்லும் திறனிலும் சிறந்து விளங்கி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற நூல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்தான்.

 இறைவன் புட்டுக்கு மண் சுமந்த கதை, ஏமநாதன் கதை இவையெல்லாம் இந்த திருவிளையாடல் புராணத்தில்தான் வருகிறது. திருவாரூரில் உள்ள சிவபெருமான் தியாகராஜருடைய பெருமையைப் பேசும் தியாகராஜ லீலை என்ற நூலும் உண்டு. இது போன்று பல ஊர்களில் உள்ள இறைவனைப் பற்றி பாடும் நூல்களை தலபுராணம் என்று குறிப்பிடுகிறோம்.

 17, 18, 19 ம் நூற்றாண்டுகளில் மட்டும் ஏறக்குறைய இருநூறு தல புராணங்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்கள். எல்லா புராணங்களும் அந்த ஊரின் சிறப்பு, நிலவளம், அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெருமை அவர் பக்தனை காக்க நிகழ்த்திய அற்புதம் இவை பற்றி பேசும். அந்த புராணங்களிலிருந்து சில வரலாற்றுச் செய்திகளையும் அறிய முடியும்.

 பொதுவாக முஸ்லீம் படையெடுப்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிறகுதான் இத்தகைய தல புராணங்கள் தோன்றின என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்து சரியானதல்ல என்பது வேறு சிலர் கருத்து. பதினான்காம் நூற்றாண்டில்தான் முஸ்லீம்கள் படையெடுத்து வந்து மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்களைக் கொள்ளையடித்தார்கள் ஆனால் 10,11-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தல புராணங்களும் உண்டு. ஸ்ரீரங்க மகாத்மியம் என்ற நூலை உதாரணமாகக் கூறலாம். மேலும் பல நூல்கள் உண்டு.

16,17-ம் நூற்றாண்டுகளில் சிற்றிலக்கியங்கள் என்று கூறப்படும் பல நூல்கள் தோன்றின. அந்த வகையில் குறவஞ்சி, பிள்ளைத்தமிழ்,பரணி, தூது, இப்படி பல வகைகளில் புலவர்கள் தமிழ் மொழியில் எழுதினார்கள். இவையனைத்தும் 96 வகைப் பிரபந்தங்கள் என்று குறிப்பிடப்படும். இவற்றில் நல்ல சுவை உள்ள நூல்களும், இலக்கிய வளம் சற்று குறைநத நூல்களும் உண்டு. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் கற்பனை வளம் மிக்க படைப்பு. குற்றாலக் குறவஞ்சி உழவர் வாழ்வைப் பற்றி சொல்லும் நாட்டிலக்கியம்,

 சிற்றரசர்கள் தன்ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊருக்கு தல புராணம் எழுதப்பட வேண்டும் என்று போட்டி, போட்டுக் கொண்டு புலவர்களை ஆதரித்தார்கள். அதனால்தான் எராளமான தல புராணங்கள் தோன்றின. 19ம நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்ந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆறு தலபுராணங்கள் எழுதியிருக்கிறார்.

 பிற்காலத்தில் தல புராணங்கள் தோன்றின என்றாலும் அதற்கான கருப் பொருள் நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத்தில் உண்டு என்று சொல்ல வேண்டும். பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் ஆகிய நூல்களில் தல புராணக் கூறுகளைக் காணமுடியும். ஒரு பாடலில் முதல் இரு அடிகளில் இறைவன் எழுந்தருளியிருக்கும் ஊரின் வளத்தையும், பெருமையையும் பாடி விட்டு அடுத்த இரு அடிகளில் இறைவன் பெருமையைப் பாடும் பாடல்களை தேவாரத்தில் பார்க்கலாம். வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்திலும் பார்க்கலாம்.


"கங்கையிர்ப்புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்குநீர்பரந்துபாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள்மால்,இறைவன் ஈசன், கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே" 

 உதாரணத்துக்கு மேலேகண்ட ஆழ்வார் பாடல் ஒன்று போதும். இது போன்ற பாசுரங்களின் கருப்பொருள் பிற்காலத்தில் தல புராணமாக வளர்ந்தது.

இன்னும் சற்று பின் நோக்கிப் பார்த்தால் சங்க இலக்கியங்களிலும் ஊர்ப் பெருமையை பாடும் பாடல்களை பார்க்கலாம். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும் ஒரு வகயில் தல புராணக் கருத்துகளைக் கொண்டது என்று சொல்லலாம். ஆனால் இந்த இரு நூல்களும் இறைவன் பற்றி பாடாமல் ஊரின் வளத்தையும், பெருமையும் பற்றி மட்டும் பாடும்.

இந்த கருப்பொருள்தான் பிற்காலத்தில் பக்தி இலக்கியத்தில் விரித்து தல புராணமாக இறைவன் பெருமை பேச பயன் படுத்தப்பட்டது.

எங்கோ கைலாயத்திலும் வைகுந்தத்திலும் இருக்கும் இறைவனை தனக்கு பக்கத்தில் இருப்பதாக பக்தனை உணரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தலபுராணங்கள் எழுதப்பட்டதாக கூறலாம். தமிழ்நாடு மாறி மாறி பல சிற்றரசர்களிடம் சிக்கி, அமைதியும் ஒழுங்கும் இல்லாமல் தவித்துக் கொடிருந்த காலத்தில் இறைவன் அவர்களுக்கு அருகில் இருப்பதாக நினைப்பது ஒரு வகையான ஆறுதலாக இருந்திருக்கும். ஆகையால் அன்றைய மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய தலபுராணங்கள் தேவைப் பட்டிருக்கலாம்.  இதுப்போல கணக்கில்லாத தல புராணங்கள் தோன்றின.

இலக்கிய உரைகல்லில் உரைத்துப் பார்த்தால் திருவிளையாடல் புராணம் மட்டும் சிறந்து நிற்கிறது என்று கூறவேண்டும்.


மு.கோபாலகிருஷ்ணன்Monday, March 19, 2012

படம் பாரு கடி கேளு - 53என்னவோ "நோ பல்" "நோ பல்" ன்னு சொன்னாங்க. அந்த பல் டாக்டர் கிட்ட நம்ம கண்டுபிடிப்பை காட்டி எப்படியாவது செமையா கறந்து விடணும்

Wednesday, March 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...இத்தொடரை ஆரம்பிக்கும் போதே, அதிகமா வழவழாவென்று இழுக்காமல், சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன். இன்னும் ஓரிரண்டு பாகத்தில் முடித்திட வேண்டும் என்ற 'நல்லெண்ணத்துடன்', பாகம் நான்கை ஆரம்பித்தால், மனம் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது ப‌ல‌ நினைவுக‌ளுக்கு இடையில்.

இரண்டு காரணங்கள். ஒன்று, பாகம் இரண்டில்
பித்தனின், பட்டுக்கோட்டையாரிடம் பாரதியின் தாக்கம் குறித்த பின்னூட்டம். இன்னுமொன்று, நம்ம ரிச்மண்ட் மாஜி பிரசிடென்ட் ஐயா நாகு அவர்கள் தந்த புராண‌ ஒலிப்பேழைகள்.

***

ஒருவன் தன் வாழ்நாளில் நல் அறங்களைச் செய்து வாழ‌ வேண்டும் என வெகுவாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள்.

ஔவை தன் மூதுரையில்:
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.


திருவள்ளுவர் தன் குறளில்:
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பட்டினத்தார் தம் பாடலில்:
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


பட்டினத்தடிகளின் மேற்கண்ட பாடல் வரிகளில் நமக்கொன்று புலனாகிறது. 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே !' எனப் புருவச்சுழிப்பில் ஆச்சரியப்படுகிறோம். உண்மை தான். இவ்வரிகளை கண்ணதாசன், தனது 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி'யில் பயன்படுத்தி பலரின் பாராட்டுக்கும் உள்ளானார். பட்டினத்தடிகள் பதிலையும் சொல்லிவிட்டார். கண்ணதாசன் கேள்வியைக் கேட்டு, பதிலை நம்மிடம் விட்டுவிட்டார் !

***

எல்லாம் தானாக, 'க‌ல்லைத்தான் ம‌ண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்க‌த்தான்' என்றார் இராமச்சந்திரக் கவிராயர். இவ்வரிகள் பின்னாளில் கவியரசரின், 'பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர ...' என்று தேனாக வந்து பலரின் மனம் கவர்ந்திருக்கலாமோ!

உலக நீதியில், 'ம‌தியாதார் த‌லை வாச‌ல் மிதிக்க வேண்டாம்' என்று ஔவை சொன்ன அவ்வரிகளை அப்படியே பயன்படுத்தி, அதில் அர்த்த‌ம் உள்ள‌து என்று மேலும் அழுந்தச் சொன்னார் க‌ண்ண‌தாச‌ன்.

***

வாரியாரின் பிரசங்கம் ஒன்றில், அருணகிரியார் வில்லிபுத்தூராரைச் சந்திக்கும் இடம் பற்றி, இவ்வாறு விவரிக்கிறார்
வாரியார்.

வில்லிபுத்தூரார்: தாங்க‌ள் யார்?
அருணகிரியார்: ம‌னிதன்
வி: பிற‌ந்த‌ ஊர்?
அ:இந்த‌ உட‌ல் பிற‌ந்த‌து திருவ‌ண்ணாமலை
வி:ஓஹோ. த‌ங்க‌ள் பேர்?
அ:ஒரு பேரும் கிடையாது. குழ‌ந்தை பிற‌ந்த‌துனு சொன்னார்க‌ள். என் தாயார் என்னை அருண‌கிரி என்று அழைத்தாள். த‌ந்தையார் ம‌க‌னே என்றார். பாட்ட‌னார் பேர‌ப்பிள்ளை என்றார். த‌மைய‌னார் த‌ம்பி என்றார். த‌ம்பி பிற‌ந்து அண்ணா என்றான். ம‌னைவி வ‌ந்தா என்னாங்க‌ என்பாள். மாம‌னார் மாப்பிள்ள‌ என்பார். ம‌க‌ன் அப்பா என்பான். பேர‌ன் தாத்தா என்பான். வ‌ய‌சாச்சா என்றால் கிழ‌வா என்பார்க‌ள். உயிர்போச்சு என்றால் பிண‌ம் என்பார்க‌ள். சுட்டெரிச்சா சாம்ப‌ல். எத்தனையோ பேர்க‌ள் வ‌ந்து வ‌ந்து போகின்றன.

இந்தப் பேர் தாக்க‌த்திலேயே 'எந்த‌ ஊர் என்ற‌வ‌னே, இருந்த‌ ஊரைச் சொல்ல‌வா...' என‌ ஊர் பற்றி பாடியிருக்கலாம் கவியரசர்.

நான் அறிந்த கண்ணதாசன் பாடல்களில் சில‌ இங்கு உதாரணங்களாக‌............/; இவர் போன்றே பல கவிஞர்களும், பல இலக்கியப் பாடல்கலைக் கற்று, நம்போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் நிச்சயம் தந்திருப்பார்கள். க‌ண்ண‌தாச‌னுக்கு முன் சில‌ நூறு ஆண்டுக‌ள் முன் சென்றால்,

'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை !' என்றார் வள்ளலார். வள்ளலாரின் இவ்வரிகளுக்கும் ஒருவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரியபுராண சொற்பொழிவில் இதற்கு அருமையாக விளக்கம் அளிக்கிறார் கீரன். க‌ட‌வுளுக்கு உரு(வ‌ம்)த் த‌ர‌ எண்ணி அந்த‌ கால‌த்தில் பலவற்றையும் விவாதித்திருப்பார்கள் போல! பேதமில்லா உருவம் தர பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பின் மகிமையை போற்றி, அனைத்து சமயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், இறைவன் ஜோதி வடிவானவன் எனச் சொன்னாராம் மாணிக்கவாசகர். இதையே, 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்றார் அவர் தம் திருவாச‌க‌த்தில்.

இவ்வாறு ப‌ல‌ புக‌ழ் பெற்ற‌ புல‌வ‌ர்க‌ளுக்கும் முன்னோடிக‌ள் பலர் இருந்து, பல கருத்துக்களை எழுதியும், ஒரே க‌ருத்தைப் ப‌ல‌வாறு பல பேர் எழுதியும், இம்மானுட‌ம் திருந்த‌வில்லையே என்ப‌தைத் தான் ப‌ட்டுக்கோட்டையார் கோபம் கொண்டு கேட்டார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


ஏதோ கொஞ்ச‌ம் ப‌டித்த‌தனால் தான் இன்னும் மானுட‌ம் த‌ழைக்கிற‌தோ என்ன‌வோ ? புராண‌ங்க‌ளும், அற‌நெறிக‌ளும் இல்லாம‌ல் இருந்திருந்தால் இன்றைய‌ உல‌க‌ம் எவ்வாறு இருந்திருக்கும்? ச‌மீப‌த்தில் ஒரு ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு, த‌மிழ‌க‌த்தையே உலுக்கிய‌தை வெகு சாதார‌ண‌மாக‌ எடுத்துச் சென்றிருக்கும் !!!

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Saturday, March 10, 2012

படம் பாரு கடி கேளு - 52


பேச்சாளர்: இங்கு கூடியிருக்கும் கோடானுகோடி பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே - இங்கு திரளாக வந்து நம் கட்சியை ஆதரிப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப்பின் பேச பல கழக கண்மணிகள் காத்திருப்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு நமது தலைவரை பேச மேடைக்கு அழைக்கிறேன். நன்றி வணக்கம்.

Friday, March 02, 2012

போலிச் சீர்த்திருத்தங்கள்

       தன்னை பணக்காரனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஏழைகள் என்று மத்திய தர வர்க்கத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்தது சரியானதுதான் என்று பல சமயங்களில் நினைப்பதுண்டு. சில மத்தியதர் வர்க்க குடும்பத் திருமணங்களுக்கு போன சமயங்களில் நான் அந்த விளக்கத்தை பற்றி நினைத்துக் கொள்வேன் தேவையில்லாத ஆடம்பரங்களைச் செய்துவிட்டு திருமணத்துக்காக கடன்பட்டு வாழ்க்கையைச்சுமையாக்கி கொண்ட பலரை எனக்குத் தெரியும்.
 
          காஞ்சி பெரியவர் கூட ஒரு சமயம் தேவையில்லாமல் அதிக படாடோபத்துடன் நடக்கும் திருமணங்களைப் பற்றி பேசியிருக்கிறார். ஒரு சமயம் சலிப்படைந்து போய் திருமணப் பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்று போடுவதைக் கூட தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்காக எந்த சங்கர மடத்துச் சீடனும் தான் மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்வதை தவிர்த்ததில்லை. குறைத்துக் கொண்டதுமில்லை. கடன் படுவது பெண் வீட்டுக் காரனாக இருப்பதுதான் இதற்கான காரணம். மதம் தோன்றிய காலத்திலிருந்தே போலித்தனமும் பிறந்துவிட்டது.
 
ஆடம்பரமான திருமணம் தன்னுடைய சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு முறை. மதத் தலைவர்களுக்கு பக்கத்தில் பயபக்தியுடன் நிற்பதும் அந்தஸ்து தேடிக் கொள்ளும் ஒரு வழிதான்.
 
         திருமணத்தில் பல வகையான சீர்திருத்தங்கள் தேவை என்ற கருத்துள்ளவன் நான். சில சமயங்களில் திருமணங்களுக்கு போவதையே  தவிர்த்து வந்தேன் ஆனால் அப்படி செய்வது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை.
 
           பெரியார் ஈ .வே. ரா   இரு சாதிகளைச் சேர்ந்த மணமக்களுக்கு நடக்கும் திருமணத்தை சீர்திருத்த திருமணம் என்றார். அவருடைய தொண்டர்கள் நடத்தும் திருமண விழாவில் ஆடம்பரம் கிடையாது. புரோகிதர்கள் கிடையாது. தாலி கட்டும் வழக்கமும் கிடையாது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் வாக்குறுதியை மணமக்கள் படிக்கும் விழா தான் அங்கே திருமணமாகிறது.
 
         இந்த வகை திருமணங்களும் இப்பொழுது பெயரளவுக்குத் தான் சீர்திருத்த திருமணம். ஒரே சாதியைச் சேர்ந்த மணமக்களுடைய திருமணத்தையும் சீர்திருத்த திருமணம்  என்று முத்திரை குத்தி விட்டார்கள். ஒரே மாற்றம் அங்கே பிராமண புரோகிதர் கிடையாது. தீ வளர்ப்பதில்லை.  சில திருமணங்களில் தாலி கட்டுகிறார்கள் . சில திருமணங்களில் அது இல்லை.
 
                  ஆனால் எல்லா சீர்திருத்த திருமணங்களிலும் ஒன்று ந மட்டும் நிச்சயமாக உண்டு. அதுதான் மேடைப் பேச்சு.
 
                  என்னுடைய அலுவலகத்துக்கு ஒரு பெண் புதிதாக வேலையில்சேர்ந்தாள். தினமும் தஞ்சாவூரிலிருந்து ரயிலில் அலுவலகத்துக்கு வருவாள். செல்வி என்று பெயர். நல்ல பெண் சுறுசுறுப்பான பெண் வந்த சில நாட்களிலேயே வேலையைக் கற்றுக் கொண்டாள். எல்லோரிடமும் இனிமையாகப் பேசினாள். பழகினாள் அந்த பெண்ணின் தந்தையும் ரயில்வேயில் வேறு ஒரு பிரிவில் வேலை  செய்பவர். அவரை நான் முன்பே பார்த்திருக்கிறேன், ஆனால் பழக்கமில்லை அவர் வந்து என்னிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். 
 
              அவர் பெரியாருடைய பக்தர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் ஆவேசமாக அரசியல் பேசுவார் என்றும் எனக்குத் தெரியும்.
 
          ஒரு ஆண்டு கழித்து அந்த பெண் தன்  திருமணப் பத்திரிகையை கொண்டுவந்தாள் நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்றாள் .மறுநாள் பெண்ணின் தந்தையும் வந்து அழைத்தார்.
 
         பத்திரிகையில் வாழ்க்கை ஒப்பந்த விழா என்று அச்சடித்திருந்தார்கள் .வாழ்த்திப் பேசுவதற்காக பல கட்சித் தலைவர்களுடைய பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. அநேகமாக தஞ்சாவூரில் உள்ள எல்லா கட்சிப் பிரமுகர்கள் பெயர்களும் அந்த பேச்சாளர் பட்டியலில் இருந்தது.
 
          திருமணத்துக்கு சரியான நேரத்தில் போய்ச்  சேர்ந்தேன். தஞ்சாவூரில் ஒரு பிரபல திருமண மண்டபத்தில் நடந்தது. நாதஸ்வர இசை முழங்கிக் கொண்டிருந்தது. மேடையில் அலங்கரிக்கப் பட்ட இரண்டு  நாற்காலிகள் மேலும் பேச்சாளர்களுக்காக மேலும் பல நாற்காலிகள் போடப் பட்டிருந்தன.
மேடையின் வலது புறத்தில் பெண்ணுக்கு சீராகக் கொடுக்கவிருக்கும் பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள், வகைவகையான இதர பொருட்கள் ஸ்கூட்டர், பீரோ,கட்டில், மெத்தை,
தலையணை, மற்ற  துணி வகைகள் இப்படி ஏராளம். 
 
       இதையெல்லாம் பார்த்து நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். இதில் எங்கே சீர்திருத்தம் இருக்கிறது என்று தேடித் பார்க்க வேண்டியிருந்தது.  சில நிமிடங்களுக்குப்ம்பிறகு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. பெண்ணினுடைய தந்தை மேடைக்கு வந்து விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மணப் பெண்ணும் மணமகனும் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.
 
       பிறகு பேச்சாளர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க ,தி.மு.க இப்படி எல்லா கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் மாறி மாறி பேசினார்கள். தமிழர்களுக்கு தாலி அணியும் பழக்கம் கிடையாது அது ஆரியம் புகுத்திய அடிமைச் சங்கிலி என்றார் ஒருவர். இன்னொருவர் வேட்டைக்குச் சென்று வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தை தன் காதலிக்கு அணிவித்தான் தமிழன். அதுதான் பிறகு தாலியானது என்று தன் ஆராய்ச்சி உண்மைகளை போட்டு வெளுத்துக் கட்டினார். பேசிய
பெரும்பாலான கருத்துகள் திருமண நிகழ்ச்சிக்கு எந்த தொடர்பும் இல்லாத வெற்றுப் பேச்சுகள் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு சலிப்பு ஏற்பட்டது.
 
    சுமார் இரண்டு மணி நேரமாக பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது நான் மேடைக்கு சற்று அருகில்தான் உட்கார்ந்திருந்தேன். புறப்பட்டு போகலாம் என்று கூட நினைத்தேன். பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் என் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு நகரலாம் என்று பொறுமையாக காத்திருந்தேன்.
 
         மேடையில் இருந்த பெண்ணைப் பார்த்தேன். மணப்பெண் செல்வி மேடையில் தூங்கி தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள். எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள்  எனக்கு புரிந்துவிட்டது .ஐயோ அந்த பெண்
பாவம் என்றுதான் எனக்கு தோன்றியது.தொடர்ந்து இரண்டு மணி நேரம் யார்தான் இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியும்?
 
         ஒரு வழியாக எல்லா பேச்சாளர்களும் பேசி முடித்தார்கள் ஒருவர் உறுதிமொழி பத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு படித்தார்.அதைத் தொடர்ந்து மணமகனும் ,மணமகளும் அந்த ஒப்பந்தத்தை படித்தார்கள் விழா முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏதோ அரசியல் கூட்டத்துக்கு போன உணர்வோடு நாற்காலியை விட்டு எழுந்தேன் . பிறகு விருந்து தொடங்கியது தஞ்சாவூர் பாணியில் அருமையான அறுசுவை  விருந்து.
 
         திருமணத்தை தொடர்ந்து பதினைந்து நாள் விடுமுறை யில் சென்ற செல்வி ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தாள். புதியதாக திருமணமான அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
 
என்னம்மா ஹனிமூனுக்கு எங்கே போயிருந்தாய்?என்று கேட்டேன் பெங்களூர் ,மைசூர் போயிருந்ததாகச் சொன்னாள்அடுத்து திருமண விருந்தை பற்றி பேசினேன். மற்ற பேச்சுக்கு இடையில் சிரித்துக் கொண்டே கேட்டேன் என்னம்மா செல்வி கல்யாண மேடையிலேயே உனக்கு தூக்கம் தள்ளியதே.அந்த பேச்செல்லாம் உனக்கு பிடிக்கவில்லையா?என்று கேட்டேன். 
 
மாறி மாறி ஒவ்வொருவராக அறுத்தால் தூக்கம் வராதா என்றாள் . சிறிது தாமதித்து மேலும் சொன்னாள். எல்லாம் டிராமா சார் என்றாள்.
 
        எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் என்று கேட்டேன். அந்த பெண் சொன்னாள் எங்க அப்பா செய்ததெல்லாம் வெறும் டிராமா தான் சார் .காலையிலேயே எனக்கு மாரியம்மன் கோயிலில் என் கணவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்றாள். 
 
நான் சிரித்துக் கொண்டே உண்மையாகவா? என்றேன்.  ஆமாம் என்று தலையாட்டிவிட்டு திரும்பவும் உறுதியாக சொன்னாள்.
 
       நீங்கள் மட்டும் போனீர்களா ?என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்னாள். நான், என் கணவர் என் அப்பா என் அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் கோயிலுக்கு போனோம் ஆனால் என் அப்பா கோயிலுக்குள் வர வில்லை வெளியே நின்று கொண்டு விட்டார். என்றாள்.
 
             இந்த வகை சீர்திருத்தங்களை கண்டு சிரிப்பதா, வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த மணப்பெண்ணே இப்பொழுது மாமியார் ஆகிவிட்டாள்.
 
 
                                                                                                                                மு.கோபாலகிருஷ்ணன்