சினிமாவின் பால் நாட்டம் கொண்டோரும், அல்லது திரைப்படப் பாடல் வரிகளில் காதல் கொண்டோரும், இவரை சட்டென மறக்க இயலாது. இவர் பற்றி அறியாதார் கூட, இவரது ஒரு பாட்டைக் கேட்டால் போதும், இவர் யாரென அறிந்து கொள்ள பிரியப்படுவார்கள். சினிமாவின் மூலமே நமக்கெல்லாம் அறிமுகம் என்றாலும், தான் கொண்ட கொள்கையிலிருந்து, அரசியல் ஆகட்டும், நாடகம் ஆகட்டும், சினிமாவாகட்டும், பொதுவுடமைச் சித்தாந்தம் ஆகட்டும், சற்றும் மாறாமல், ஆரம்பம் முதல் கடைசி வரை, தன் பாடல் வரிகளில் அதைக் கையாண்டவர். நம் மனதில் என்றும் எளிதில் நினைவில் கொள்ளும் பேராற்றல் கொண்டவர், அவர் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
'கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும்...' இங்ஙனம் தான் பட்டுக்கோட்டையாரைப் பற்றிச் சொல்கின்றன பல கட்டுரைகள். அநேக பிரபலங்களைப் போலவே பட்டுக்கோட்டையாரும் பள்ளிக்குச் சென்று அதிகம் படித்தவரில்லை. தந்தையின் வழியிலும், அண்ணனின் வழியிலும், சிறிது காலம் திண்ணைப் பள்ளியிலும் கற்றறிந்தார். அவ்வளவே. மிகச் சிறு வயதிலேயே, பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கையில் அவர் இயற்றிய பாடல்:
ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே ! ஒரு நாள், வயல் வேலை செய்து கொண்டு சிறிது ஓய்வெடுக்கையிலே, அருகில் இருக்கும் குளத்தில் பட்டுக்கோட்டையாரின் கவனம் செல்கிறது. அங்கே கெண்டைக் குஞ்சுகள் துள்ளி விளையாடும் அழகைக் கண்டு ரசிக்கிறது அவர் மனம். அடுத்த நிமிடம், சிந்தனை வயப்பட்டவரின் நெஞ்சினில் சித்தாந்த வரிகள் பிறக்கிறது. மேற்கண்ட வரிகளை, 'என்ன பிரமாதம்... சாதாரண வரிகள் தானே?' என்று எண்ணலாம். அப்படி எண்ணுவது மாபெரும் தவறு என்பது சற்று ஆழ்ந்து படித்தால் புரியும் நமக்கு. இதனுள்ளும் ஒரு சமூகக் கருத்தைத் திணித்து, எளிமையாய் (நமக்கெல்லாம் புரியனும்ல !) படைத்த வல்லமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
'மனம் ஒரு குரங்கு', ஒரு இடத்தில் நில்லாது தாவிக்கிட்டே இருக்கும். குணம்? ... நிற்கிறதோ, தாவுகிறதோ, ஆனால், பல வகைகளில் இன்றும் பரிணமிக்கிறது. 'மிருகத்திலிருந்து வந்து விலகி ஆனால் மிருகத்தை விடக் கேவலமாய் இருக்கிறாயே' என எப்படி இவ்வளவு எளிமையாய், வலிமையான வரிகளில் !!! சொல்ல வார்த்தைகள் இல்லை ...
உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா
பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)
இச்சுத்தா இச்சுத்தா ... மான் புலியை வேட்டையாடும் இடம் கட்டில், மே மாசம் தொன்னித்தெட்டில் மேஜர் ஆனேனே ... போன்ற கருத்துச் செரிவு மிக்க பாடல்களைத் தந்து, கவிஞர்கள் பலர் திரைப்படப் பாடல்களுக்குத் தனி மகுடம் சூட்டி எங்கேயோ கொண்டு சென்றுவிட்டனர். இவை எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாயில்லை? இவை போன்ற பாடல்களைப் பெண் பாடகர்களே பாடியிருப்பது தான் வேதனைக்குறியது. இவற்றிற்கு நேர்மாறாக, அந்தக் காலத்திலேயே (பெரிய விஷயமுங்க !) பெண்களை மதித்து, அவளுக்கும் ஒரு மதிப்பைத் தந்து மெருகேற்றிய பட்டுக்கோட்டையாரின் கனல் வரிகள்...
பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?
(படம்: கல்யாணப் பரிசு)
தமிழ் சினிமா மறபுப்படி வழக்கம் போல மரத்தைச் சுற்றி, காதலனும் காதலியும் ஓடி ஆடிப் பாடும் பாட்டு. சிற்சில இடைவெளி ஓட்டங்களுக்குப் பின் ஒரு மறைவில் நிற்கும் காதலியின் விரலை, லேசாகத் தொட்டு விடுவான் காதலன். அவ்வளவு தான், அந்த அம்மாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். 'அடே அறிவு கெட்டவனே, என்னை மானபங்கப் படுத்த நினைத்த மூடனே, உன்னைப் போய் காதலித்தேன் பார்' என்றெல்லாம் சீறவில்லை. பொறுமை இழந்து புரட்சியில் இறங்கிடாதே, எல்லாம் கல்யணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்ற இதமான சீற்றம் கொண்ட காதலியின் வரிகள் மேலே. இது அன்றைக்கு. இன்று நிலைமையோ வேறு. நேரா 'கட்டிப்புடி கட்டிப்புடி டா ... கண்ணாலா கண்டபடி கட்டிப்புடி டா...' தான்.
'தானத்தில் சிறந்த தானம் எது?' அப்படீன்னு எங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட கேட்டேன். அவங்க படக்குனு 'என்னது? கண்தானமா?'னு சீரியஸா கேக்க ... அதையினும் மிஞ்சியது ...'நிதானம்' என்றேன். நமக்கு எப்படி இந்த அறிவு ஞானம் என்று அவங்களுக்கு ஒரே சந்தேகம். முகத்திலேயே கேள்வி படர்ந்தது. மரியாதை (?!) நிமித்தம் அவங்க எதும் கேக்கல :)
எம்.ஜி.யாரும் கலைவாணரும் நடித்த 'சீர் மேவு குரு பாதம்' என்று தொடங்கும் கேள்வி பதில் பாடல். எளிமையான கேள்விகள் அழுத்தமான பதில்கள். காய்ந்தவன் வயிறு பற்றியும், நயவஞ்சகனின் நாக்கு பற்றியும் உறைக்கும் பதிலில் நம் உடல் சிலிர்ப்பது உறுதி. கலைவாணர் கேள்வி கேட்க, ஒத்தை வார்த்தையில் எம்.ஜி.ஆர். பதிலளிப்பார்.
எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
...
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
...
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
...
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)
இன்று, அதே ஒத்தை வார்த்தையில் பாடல் எழுதச் சொன்னால், நமது கவிஞர்கள் இப்படித் தான் எழுதுகிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு பாடல், நம்மை எல்லாம் கிறங்கடிக்கும் ... 'ஒத்த சொல்லால எ(ன்) உசிர் எடுத்து வச்சிகிட்டா ... ரெட்ட கண்ணால ... என்ன தின்னாடா'
மேற்கண்ட 'சீர் மேவு குரு பாதம்' பாடல் ஒருசில வலைத்தளங்களில் 'கிளௌன் சுந்தரம்' என்பவர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். தக்க சன்மானம் நாகு ஐயா வழங்குவார்.
கனல் பறக்கும் ...