Thursday, February 02, 2012

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

சில வித்தியாசமான பழமொழிகளை கிராமங்களில் கேட்கலாம், அல்லது பழைய பாரதிராஜா படங்களைப் பார்க்கும்போது கேட்கலாம். கேட்ட பலரும் இவற்றை விரும்பியதுண்டு, அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

"என் ராசிக்கு ஆயிரங்கால் மண்டபம் கட்டி ஆண்டாலும் வெயிலுதானே அடிக்கும்" - தொடர்ந்து வரும் ஏமாற்றங்களில் சலித்துக்கொள்ள உதவும். அலுவலகத்தில் உத்தியோக உயர்வு கிடைக்காத பொது, இதைக் கூறி சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

"அங்கயும் இருப்பான் இங்கயும் இருப்பான், திங்கிற சொத்துல பங்கும் கேட்பான்" - ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாக இருக்கும் நபர்களைக் கரித்துக் கொட்ட உபயோகிக்கும் சொல். நமது ஒய்வு பெற மறுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பழமொழி.

"அரிசின்னு அள்ள விட மாட்டேங்கிற, உமின்னு ஊத விட மாட்டேங்கிற" - எது கேட்டாலும் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். நமது அலுவலக மேலாளர்களுக்கு சிறந்த பழமொழி.

"எமனுக்கு வாக்கப் பட்டா எரும மாட்ட மேச்சு தானே ஆகணும்" - வழியில்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது அலுத்துக் கொள்ளளலாம். (உதாரணம் - பயிற்சி - நீங்களே சொல்லுங்கள்?)

"நெல்லுக்குப் போறது புல்லுக்கும் போகட்டும்" - ஒரு இடத்தில நடக்கும் விஷயம் திட்டம் இடாமல் இன்னொரு விஷயத்திற்கும் உதவும்போது சொல்லல்லாம். அடுத்தவரின் வெற்றியில் குளிர் காணும் நபர்களுக்கு நல்ல உதாரணம்.

"கூரையில சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா" - ஒன்ன நம்பி நா இல்லன்னு சவால் விடறதுக்கு உபயோகிக்கும் பழமொழி. நம் கிரிக்கெட் வீரர்கள் டீம்ல இருந்து தூக்கிட்டாலும் IPL இருக்குனு ஒரு தெனாவட்டுல இருக்கிறது ஒரு உதாரணம். இன்னொரு வேலை வாங்கி விட்டு மேலாளரிடம் இதைச் சொல்லி சவாலும் விடலாம்.

"நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வாரேன், கலந்து ரெண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்" - ஒரு முதலீடும் செய்யாமல் அடுத்தவரின் முதலீட்டில் சுகம் காணும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். கூட்டணிக் கட்சிகளின் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்காமல் நாமம் சாத்தும் அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும் சொல். (இதயத்தில் இடம் இருக்கிறது?)

"மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்" - எனக்கு ரெண்டு கண் போனாலும், பரவாயில்ல, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணுங்கிற ஒரு ஆவேசம்

4 comments:

 1. பழமொழிகள் அபூர்வமாக இருக்கின்றன. நான் 'அரிசி,உமி கலந்து ஊதி சாப்பிடற' பழமொழி தவிர மற்றவைகளைக் கேட்டதில்லை.

  பழமொழி சொல்ற சாக்குல கொஞ்சம் வேலை, கிரிக்கெட், உங்கள் அபிமான 'ஜெ' பத்தி விளையாடியிருக்கீங்க. பித்தன் என்ன சொல்றாருன்னு பாக்கலாம். :)

  //"மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்"//
  ஒய் திஸ் கொலவெறி... இது கொஞ்சம் அதிகமா இருக்கு...

  ReplyDelete
 2. நல்ல பழமொழிகள்..நன்றி

  ReplyDelete
 3. "அங்கயும் இருப்பான் இங்கயும் இருப்பான், திங்கிற சொத்துல பங்கும் கேட்பான்" இதை நான் கேட்டதில்லை நல்லா இருக்கு.

  "அரிசின்னு அள்ள விட மாட்டேங்கிற, உமின்னு ஊத விட மாட்டேங்கிற" – நான் கேட்ட வர்ஷன் பாம்புன்னு தாண்ட முடியலை, பழுதுன்னு மிதிக்க முடியலை.

  "எமனுக்கு வாக்கப் பட்டா எரும மாட்ட மேச்சு தானே ஆகணும்" – நான் கேட்ட வர்ஷன் பேய்க்கு வாக்கப் பட்டா புளிய மரத்துல ஏறித்தானே ஆகனும். வேற யார் நம்ம வீட்டு ஹோம் மினிஸ்டர் தெனம் சொல்றதுதான்.

  //பழமொழி சொல்ற சாக்குல கொஞ்சம் வேலை, கிரிக்கெட், உங்கள் அபிமான 'ஜெ' பத்தி விளையாடியிருக்கீங்க. பித்தன் என்ன சொல்றாருன்னு பாக்கலாம். :)//

  நாகு எதுக்கு எப்ப பார்த்தாலும் சிண்டு முடிஞ்சுகிட்டு. இதயத்துல எடம் குடுக்கரது எப்பவும் கருணாநிதிதான். ஆமாம், அம்மா ரெண்டு நாள் முன்னாடி சட்ட சபைல ஒரு ருத்திர தாண்டவம் ஆடினாங்க்களே பார்த்தீங்களா? அதுக்கு முன்னாடி விஜயகாந்த் சும்மா ஒரு ரவுண்டு கட்டி பேசினாரே அதையும் பார்த்தீங்களா? இனிமே சினிமா பார்க்கனும்னா, சட்ட சபைக்கு போனா போதும் போல இருக்கு.

  முரளி

  ReplyDelete
 4. my dad used to say this

  Koorai eari kozhi pudikka theriyathavan vanam eari vaikundam ponnanam - those who boast themselves- like people who dont know how to ride a bike claims he could win F1 race.

  pagalla pasumadu pakka theriyathavan irrutula erumada pathanam -

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!