Thursday, May 03, 2012

குறளா? குறளையா?
சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ஆண்டாளுடைய திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தின் பொருள் பற்றிய சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.

மார்கழி மாதம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நோன்பு பற்றி பாடுகிறாள். திருப்பாவையின் முதற் பாடலில் மார்கழி மாதம் பிறந்து விட்டதைப் பற்றியும் அந்த மாதத்தில் நோன்பு இருந்து திருமாலை வேண்டி பெற விருக்கும் செல்வங்கள் பற்றியும் பாடுகிறாள். இரண்டாவது பாடலில் நோன்பு இருக்கும் முறை பற்றி பாடுகிறாள்.


“பாற்கடலில் துயில் கொண்டுள்ள திருமாலின் பெருமையைப் பாடி
நெய்யுண்ணோம்பாலுண்ணோம்,   நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்."

(திருப்பாவை பாசுரம் எண். 2)

என்று பாடுகிறார். ஆண்டாள் இந்த பாசுரத்தில் திருக்குறளைத்தானே குறிப்பிடுகிறார் என்று கேட்டார்.

இதே கேள்வியை சில மாதங்களுக்கு முன் வேறொரு நண்பரும் கேட்டார். அவர்களுடைய ஐயம் நியாயமானதுதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பொறுப்புள்ள தமிழ் அறிஞர் ஆண்டாள் திருக்குறளைத்தான் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். அவர் எழுதியது அறியாமையில் அல்ல.தவறான நோக்கத்தோடு பாட்டின் பொருளை புரட்டி எழுதியிருக்கிறார். அவர்களைத் திருத்த முயற்சி செய்வது  நம்  நோக்கம் அல்ல. அந்த முயற்சி நம்முடைய நேரம் வீணாவதில்தான் முடியும்

நண்பர்களின் ஐயத்தை போக்க வேண்டிய கடமைக்கு திரும்புவோம்.ஆண்டாள் தீக்குறளை என்று இங்கே கூறுவதை புறங்கூறல் என்ற தீய குணத்தை என்று பொருள் கொள்ள வேண்டும். ஒருவர் இல்லாதபோது அவர் பற்றி ஒருவர் தெரிவித்த கருத்துகளை அவரிடமே போய் சொல்வதை குறளை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இங்கே குறள்- அல்ல. குறளை என்பது ஒரு தனிச் சொல்

கோள் என்று சாதாரண மக்கள் மத்தியில் வழக்கில் உள்ள சொல் இலக்கியத்தில் குறளை என்று  குறிப்பிடப்படுகிறது. தமிழில் கோள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்றும் ஒரு பொருள்   உண்டுசென்று ஓதோம் என்ற பாடல் அடியை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்.   அப்படியானால் இந்த குறளை என்ற சொல் இலக்கியத்தில் கோள் என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினால் சந்தேகம் முழுமையாக விலகும்.

மணிமேகலை சங்க காலத்துக்கு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். அந்த நூல் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். மணிமேகலை முழுவதும் பௌத்த மதப் பிரச்சாரம் மேலோங்கி நிற்கும். அந்த நூலில் ஆசிரியர், மனிதன் சொல், செயல், மனத்தால் செய்யும் பத்து குற்றங்களைப் பட்டியல் இடுகிறார்.

கொலை, களவு, காமத்தால் மனிதன் மூன்று குற்றங்களை உடலால் செய்கிறான். பொய்குறளை, (புறம் கூறல் ) கடுஞ்சொல்பயனில்லா சொல் பேசுதல் ஆகிய நான்கு குற்றங்களை சொல்லால் செய்கிறான். பொறாமை, கோபம்பிறருக்கு தீங்கு நினைத்தல், ஆகிய மூன்று குற்றங்களை மனத்தால் செய்கிறான் என்று பட்டியல் இடுகிறார்.

கொலையே, களவே, காமத்தீ விழைவு,
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்,
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்.
வெக்கல், வெகுளல், பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னில் உதிப்பான மூன்றும் பத்தும் குற்றம்

(மணிமேகலை)

ஆக ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர்கள் குறளை என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். காலப் போக்கில் குறளை என்ற சொல் வழக்கொழிந்து போய்விட்டிருக்கிறது. அதே பொருளை குறிக்கும் வேறு சொல் வழக்கில் இருக்கலாம். வைணவர்கள் மற்ற சமய இலக்கியங்களை பரந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்கள் என்று சொல்வதற்கில்லை. பல வைணவ சமயப் பிரச்சாரகர்கள் தவறிக் கூட பிற சமய இலக்கியங்களை மேற்கோளாகக் கூட சொல்ல மாட்டார்கள். சைவ சமயப் பிரச்சாரகர்களும் அப்படியே. சில தனித் தமிழ் இயக்கப் பேச்சாளர்கள் பாரதியின் பெயரைக் கூட சொல்லமாட்டர்கள். அது தமிழ்நாட்டை பிடித்த நோய்.

ஆனால் ஆண்டாள் அந்த குற்றத்தைச் செய்ததாக சொல்வது சரியல்ல. வைணவ உரை ஆசிரியர்கள் வள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பெருமையோடுகுறிப்பிட்டிருக்கிறார்கள்.என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சைவ சமயமும் இப்பொழுது வள்ளுவரை தன் பக்கம் ஏற்றுக் கொண்டு விட்டது. இடைக் காலத்தில் சில நூற்றாண்டுகள் நிலவிய சமயக் காழ்ப்பு உணர்ச்சி இந்த நூற்றாண்டில் இல்லை என்று சொல்ல வேண்டும். திருக்குறளை உரையுடன் மலிவுப் பதிப்பு வெளியிடும் நல்ல காரியத்தையும் சில சைவ மடங்கள் செய்து வருகின்றன.

நீண்ட வரலாறு கொண்ட எந்த மொழியிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். இந்த வகையில் வழக்கிழந்த சொற்கள் காலப் போக்கில் திரும்பவும்  மாறுபட்ட பொருளில் வழங்கப்படுவதும் உண்டுதமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும்பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில்பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி தமிழ்நாட்டில் வடபகுதியில் வழக்கில் இருக்கும் சில சொற்களுக்கு தென் மாவட்ட மக்களுக்கு பொருள் தெரியாமல் போகக் கூடும். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழக்கில் இருக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. எல்லைப் புற மாவட்டங்களில் வழக்கில் இருக்கும் சில சொற்களின் மீது மற்ற மொழிகளின் செல்வாக்கு இருக்கும்.

கிராமங்களில் வாழும் விவசாயிகள் தானியங்களை அளக்க பயன்படுத்தும் அளவைகள் கூட மாவட்டத்துக்குமாவட்டம் வேறுபாடும். சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.

"பைய்யவே சென்று பாண்டியர்க்கு ஆகவே"

என்று ஞானசம்பந்தருடைய தேவாரம் கூறும்.

தேவாரம் என்றவுடன் இங்கே இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும்தேவாரம் என்றவுடன் சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் நம் நினைவுக்கு வரும்ஆனால் கடந்த காலத்தில் இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. மன்னர்கள் அரண்மனையில் தங்களுடைய தினசரி வழிபாட்டுக்காக கட்டிக் கொள்ளும் சிறிய கோயிலை தேவாரம் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள்.

இந்த வகையில் ஒரு சொல் காலப் போக்கில் வழக்கொழிந்துபிறகு அதே சொல் வேறு பொருளைக் குறிப்பதாக அமைவதும் உண்டு. இன்று நாற்றம் என்ற சொல்லை துர்நாற்றத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்துகிறோம். ஆனால் சங்க காலத்திலும் பிற்காலத்திலும், அந்த சொல்லை பூவின் வாசனை உட்பட எல்லா நறுமணங்களையும் குறிப்பிட பயன்படுத்தியிருக்கிறார்கள் தூக்கி எறிய வேண்டிய பயனற்ற பொருள்களின் குவியலை குப்பை என்ற சொல்லால் இன்று நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் பழங்காலத்தில் முன்னோர்கள் குவித்து வைக்கப்பட்ட எல்லா செல்வத்தையும்தானியங்களையும் குப்பை என்றே குறிப்பிட்டார்கள். நெல் குவித்து வைக்கப்பட்டால் அது நெற்குப்பை. வளமான வயல்களைக் கொண்ட ஊர்களுக்கு நெற்குப்பை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இரண்டு பொருள் தரும் சொற்களும் தமிழில் அதிகம் உண்டு. இந்த வகை சொற்களைக் கொண்டு நகைச்சுவையோடு பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் உண்டு. அத்தகைய புலவர்களில் காளமேகப் புலவர் முக்கியமானவர். தமிழில் பல பொருள்களை குறிப்பிடும் சொற்களும் உண்டு. சொல்லை  பயன்படுத்தியிருக்கும் இடத்துக்கு தக்கபடி பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக வண்ணம் என்ற சொல்லை குறிப்பிடலாம்.அந்த சொல்லை பயன்படுத்தி ஒரு அற்புதமான கவிதையை கம்பர் கொடுத்திருக்கிறார். அந்த கவிதையை சற்று ரசிக்கலாம்.

கௌசிக முனிவருடைய மனைவி அகலிகை மீது இந்திரனுக்கு தீராத மோகம். ஒரு நள்ளிரவில் முனிவருடைய ஆசிரமத்துக்கு அருகில் வந்து சேவல் போல குரல் கொடுக்கிறான். இந்திரன். முனிவர் பொழுது விடிந்து விட்டதாக நினைத்து எழுந்து குளிப்பதற்காக நதிக்கரைக்கு போகிறார். அந்த நேரத்தில் இந்திரன் முனிவருடைய உருவத்தில் உள்ளே நுழைந்து அகலிகையை அடைந்து விடுகிறான். நதிக் கரையை நெருங்கிய பிறகு இன்னும் விடியவில்லை என்பதை உணர்ந்த கௌசிக முனிவர் ஆசிரமத்துக்கு திரும்புகிறார். உள்ளே நுழைந்தவர் இந்திரனையும் தன் மனைவி அகலிகையையும் அலங்கோலமான நிலையில் பார்த்து விடுகிறார். உடனே கோபத்தில் முனிவர் இந்திரனுக்கு சாபம் கொடுக்கிறார். அகலிகையை கல்லாகப் போகும்படி சாபம் கொடுக்கிறார். தன்னை அறியாமல் தவறு செய்து விட்ட அகலிகைக்கு சாப விமோசனமும் கொடுக்கிறார். பிற்காலத்தில் ஒரு மகாபுருஷனுடைய கால்பட்டு சாபம் நீங்கி மனித உருவம் பெறுவாள்  என்பதுதான் அந்த சாப விமோசனம்.

தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அயோத்தியிலிருந்து ராமனையும், இலக்குவனையும் அழைத்து வந்த விசுவாமித்திரர் அவர்களுடைய பாதுகாப்பில் யாகத்தை வெற்றிகரமாக முடிக்கிறார். தாடகையை வாதம் செய்து யாகத்தை பாதுகாத்த ராம இலக்குவனோடுவிசுவாமித்திரர் காட்டில் நடக்கிறார். வரும் வழியில் ராமனுடைய கால் பட்ட ஒரு கல்லிலிருந்து ஒரு பெண் உருவம் தோன்றுகிறது. எழுந்த அந்த பெண் ராமனை வணங்கி நிற்கிறாள். ராமன் திகைத்துப் போய் நிற்கிறான். கௌசிக முனிவரின் சாபத்தையும் முந்தைய விவரங்களையும் அறிந்த விசுவாமித்திரர் ராமனிடம் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறார்.

இதுதான் கம்பராமாயணத்தில் அகலிகைப் படலத்தின் சுருக்கம். தொடக்க காலத்திலிருந்து எல்லாவற்றையும் கூறிய பிறகு முத்தாய்ப்பாக விசுவாமித்திரர் கூறியதாக அமைந்த கடைசிப் பாடலை சற்று பார்ப்போம்.

"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணமன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில்மழை வண்ணத்து அண்ணலே, உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்கால் வண்ணம் இங்குக் கண்டேன்."

வண்ணம் என்றால் முறை, நிறம், திறமை என்று பலபொருள் உண்டு. இந்த பொருளை பொருத்தி கவிதையை திரும்பப் படியுங்கள். இதுதான் கம்பன் தமிழ். இப்படி எத்தனையோ பாடல்கள் உண்டு.


மு.கோபாலகிருஷ்ணன்.

Thursday, April 26, 2012

பித்தனின் கிறுக்கல்கள் - 48


உ.பி மற்றும் 4 மாநில தேர்தல்கள்
உ.பி. தேர்தல் பலப் பல கூத்துகளுக்குப் பிறகு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மையான வித்யாசத்தில் வெற்றியை அள்ளித் தந்து முடிந்திருக்கிறது.  இவரது மகன் அகிலேஷ் இந்தியாவில் குறைந்த வயதில் முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்று, சென்னையில் ஒரு கிழவர் இன்னமும் தனது தொண்டுகிழத் தந்தையார் பதவி விலகக் காத்துகொண்டு இளைஞர் அணித் தலைவர் என்ற பதவியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அவருடைய வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார். 

தமிழகத்தின் மின்வெட்டு
வெளியில் நாத்திகம் பேசிக் கொண்டு வீட்டில் சாமிகும்பிடும் திராவிட கட்சிகள் கூட கடவுளை பற்றிப் பேச வைத்திருக்கிறது தமிழகத்தின் மின்வெட்டு. 

தமிழக இடைத்தேர்தல்:
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவில் அ.இ.அ.தி.மு.க மற்ற கட்சிகளை அனைத்தையும் அடித்து நொறுக்கி டெபாசிட் இல்லாமல் செய்து பெற்றிருக்கிற வெற்றி பணம் கொடுத்து வந்ததா இல்லை ஜெ யின் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையால் வந்ததா என்று ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.  
இலங்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவில் இந்திய ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. இது செய்தி. 

அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபர் தயாராகி வரும் இந்த நேரத்தில் அவரை எதிர்க்கக் கூடிய தகுதியிருப்பதாக குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னனியில் இருக்கும் மிட் ராம்னி அதிபருக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டுவார் என்று நம்பும் பலரில் நாமும் ஒருவர்.  

திரைப்பட விமர்சனங்கள்
HUGO
HUNGER GAMES
WELCOME
ஹிந்திப் படம். 
வேட்டை
ஒரு கல் ஒரு கண்ணாடி.
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  

பதிவை முழுவதும் இங்கே படிக்கலாம்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Sunday, April 22, 2012

கொக்கு என்று நினைத்தீரோ கொங்கனரே ?


 இந்த கதை மிகப் பழைய கதைதான், கர்ண பரம்பரைக் கதை என்று சொல்வார்கள். அதாவது எந்த குறிப்பிட்ட இலக்கியத்திலும் இல்லாத கதை வாய்வழியாக பல தலைமுறைக் காலமாக சாதாரண மக்களிடையே வழங்கி வரும் கதை

 ஒரு துறவி காட்டின் அருகில் ஓடும் நதிக்கரையில் நீண்ட நேரம் தவ நிலையில் இருந்தார், சில மணி நேரம் கழித்து தவ நிலையிலிருந்து எழுந்தார். அந்த துறவி நல்ல உயரம், கம்பீரமான உருவம், தலையில் அடர்த்தியான முடி,முகத்தில் தவ யோகிகளுக்கு உரிய நீண்ட தாடி, காவி உடை, உலக வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்டதை அறிவிப்பது போன்ற பார்வை, அகன்ற கண்கள்.

நிஷ்டையிலிருந்து எழுந்த கொங்கன முனிவர் அருகே உள்ள நதியில் நீராடினார்தன் உடைகளை  உலரவைத்துவிட்டு நதிக் கரையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நல்ல பசி, குளித்த பிறகு பசி மேலும் அதிகமானது. உடையை அணிந்து கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு போய் உணவு  தேடலாம் என்று நினைத்தார்.

 அந்த நேரம்ஒரு கொக்கு ஒரு மீனை கொத்தி தன் அலகில்வைத்துக் கொண்டிருந்தது.  அது  பறக்கத் தொடங்கியதும் ஏற்பட்ட சலசலப்பை கேட்ட துறவி திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய தலைக்கு மேல் பறந்த கொக்கு  இட்ட  எச்சம் துறவியின் தோளில் விழுந்தது. கடுமையான கோபம் கொண்ட முனிவர் மேலேபறந்துகொண்டிருந்தகொக்கை தன் அகன்ற கண்களால் முறைத்துப் பார்த்தார்.

 திடீரென்று அந்த கொக்கு தீப்பிழம்பாக மாறி கருகி சாம்பலாகி ஓடும் நதியில் விழுந்தது.

முறைத்துப் பார்த்த மாத்திரத்தில் தன் கோபத்துக்கு உள்ளான கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனதைக் கண்ட முனிவருக்கு ஒரே ஆச்சரியம். என்னே என் தவ வலிமை என்று எண்ணிக்கொண்டு தனக்குள் பரவசப் பட்டார்.

 கொக்கு இட்ட எச்சத்தை துடைத்துவிட்டு திரும்பவும் நதியில்
நீராடினார். உலர்ந்தகாவி உடையை உடுத்திக்கொண்டு அருகில் இருந்த கிராமத்தை  நோக்கி நடந்தார் நடக்கும்போது முனிவருக்கு ஒரே சிந்தனை. தன்னுடைய  விடாமுயற்சியாலும் தொடர்ந்து வாழ்ந்த தவ வாழ்க்கையாலும் வளர்ந்துவிட்ட தன்  தவ வலிமையைப் பற்றி பெருமிதமான எண்ணத்துடன் நடந்தார்புராண காலத்து முனிவர்கள் வாய் விட்டு சாபம் கொடுத்தால்தான் கேடு நேரும் நான் கோபத்தில் முறைத்துப் பார்த்தாலே கேடு நேரும் என்று நினைத்தபோது முனிவருக்கு  உலகத்தையேவென்றுவிட்ட பெருமை.

 இப்படி பலவகையான சிந்தனையுடன் ஊரை அடைந்த துறவி ஒரு வீட்டின் முன்னால் நின்று  "அம்மா துறவி வந்திருக்கிறேன், ஏதாவது உணவு இருந்தால்கொடுங்கள்”, என்று குரல் கொடுத்தார்.

 பதில் இல்லை

 திரும்பவும்  "அம்மா  தாயே “, என்றார். பதில் இல்லை

அம்மா தாயே ".

 இப்பொழுதும் பதில் இல்லை

 சில  நேரத்துக்கு பிறகு, கதவை திறந்து கொண்டு தலையைக் காட்டிய ஒரு பெண்சற்று பொறுத்து இருங்கள் "என்று கூறிவிட்டு உள்ளே போனாள்.
 உள்ளே சென்ற பெண் உணவு அருந்திக் கொண்டிருந்த நோய்வாய்ப் பட்ட தன் முதிய கணவனை கை பிடித்துஅழைத்து வந்தாள். கை, கால்களை கழுவ அவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பவும் உள்ளே சென்றாள்.
 ஒரு பாத்திரத்தில் உணவுடன் வாசல் பக்கம் வந்தாள் பசியுடன் இருக்கும் அந்த துறவிக்கு நல்ல கோபம். காலதாமதமாக வந்த அந்த பெண்ணைப் முறைத்துப் பார்த்தார்.  அதே கோபம் நிறைந்த  பார்வை. கொக்கைப் பார்த்த அதே பார்வை

தன்னை முறைத்துப் பார்த்த துறவியின் கோபத்தைப் புரிந்து கொண்ட அந்த பெண் “கொக்கு என்று நினைத்தீரோ, கொங்கனரே”, என்றாள்.

 துறவிக்கு ஒரே அதிர்ச்சி.திகைத்துப் போய் ஒரு அடி பின்னால் நகர்ந்தார். அந்த பெண் கொண்டு வந்த உணவைவாங்கக் கூட தயங்கினார். அவருக்கு ஒரே குழப்பம்.

சற்று நேரத்துக்கு முன் காட்டில்,நதிக் கரையில் நடந்த சம்பவம் வீட்டில் இருக்கும் இந்த பெண்ணுக்கு எப்படி தெரிய வந்தது? இவளுக்கு ஞான திருஷ்டியா? தயக்கத்துடன் உணவை வங்கிக் கொண்ட துறவிக்கு இப்பொழுது பசி போய் விட்டது.

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க வாயைத் திறந்தார்அதற்கு முன் அந்த பெண் கேட்டாள் எனக்கு எப்படி தெரியும் என்று  கேட்கிறீர்களா ?என்றாள்.

 நான் கேட்க  நினைத்ததைக் கூட சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். இந்த பெண் யாராக இருக்க முடியும் ? உள்ளே இருக்கும் இவளுடைய கணவர் முனிவரா? முக்காலமும் அறிந்த ஞானிகளாக  இருப்பர்களோ? என்றெல்லாம் நினைத்து குழம்பிப் போனார். தணிந்த குரலில் ஆமாம் என்று முணுமுணுத்துக் கொண்டு தலையை ஆட்டினர்.

 அந்த பெண் சொன்னாள்  உள்ளே உடல் நலமில்லாத என் கணவருக்கு உதவி செய்ய வேண்டியிருப்பதால்உங்களோடு பேச நேரமில்லை. நான்காவது தெருவில் ராமன் இருக்கிறான், அவனிடத்தில் போய் கேளுங்கள், அவன் சொல்வான் என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

 பசிக் களைப்பும் எதிர்பாராத விதமாக ஒரு குடும்பப் பெண் ஞானதிருஷ்டியோடு  பேசுவதும் கேள்வி கேட்பதும் அவரை சோர்வடையச் செய்தது. ஊர் சிறியதுதான். நான்காவது தெரு எங்கே இருக்கிறது எப்படி போக வேண்டும் என்று விசாரித்துக் கொண்டு போகலாம் என்று  புறப்பட்டார். அவருக்கு இப்பொழுது பசி இல்லை. வருந்திப் பெற்ற தன்னுடைய தவ வலிமைக்கு ஏதோ சவால்வந்து விட்ட தாக நினைத்தார்.

 ராமனுடைய வீட்டைதேடிபோய் கண்டுபிடித்துவிட்டார். ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் ஒரு குடிசை தான் ராமனுடைய வீடு. வீட்டை நெருங்கிப் போனதும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு ஒரு கசாப்புக் கடை. விற்பனை செய்து முடித்த பிறகு மீதமிருந்த மாமிசத் துண்டங்களை வாங்க யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான்

 அங்கே போன துறவியைப் பார்த்து ராமன் வரவேற்றான். "வாங்க சாமி அம்மா அனுப்பி வைச்சாங்களா?" என்றான்.இப்பொழுது துறவிக்கு மயக்கம் வராத  குறைதான். அந்த பெண் அனுப்பித்தான் நான் வருகிறேன் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவனுக்கும் ஞானதிருஷ்டியோ?

ஒரே குழப்பம்.

 ராமன் அவருக்கு ஒரு இருக்கைகொடுத்து உட்காரச் சொன்னான். "சாமி ரொம்ப களைப்பாக இருக்கீங்க போலிருக்கு என் வீட்டில் ஏதாவது சாப்பிடுவீங்களாஎன்றான்.

" அந்த அம்மா கொடுத்த உணவு இருக்கிறது நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன்"என்று கூறிய துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார்.

 எனக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும். அந்த அம்மா யார்? அவருடைய கணவர் யார்? அவர்கள் மேதைகளா முனிவர்களா?என்று அடுக்கிக் கொண்டே போனார்.

 ராமன் சாவகாசமாக துறவிக்கு பதில் சொன்னான். அந்த அம்மா சாதாரண குடும்பப் பெண்தான் அதிகம் படித்தவர் கூட இல்லை. வயது முதிர்ந்த தன் நோயாளிக் கணவனை சரியாக, ஜாக்கிரதை யாக கவனித்துக் கொள்ளவே அந்த அம்மாவுக்கு நேரம் சரியாகப் போய்விடும் வேறு எதுவும் அவர்களைப் பற்றி சொல்லுவதற்கில்லை" என்றான்.

 துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. “நீங்கள் யார்" என்று ராமனிடம் கேட்டார்.  நான் பல வருடங்களாக இந்த கசாப்புக் கடைவைத்து வியாபாரம் செய்கிறேன். வரும் சொற்ப வருமானத்தை வைத்து என்னுடைய முதிய பெற்றோர்களையும் இரண்டு குழந்தைகளையும் கண் கலங்காமல் காப்பாற்றி வருகிறேன். நானும் அதிகம் படிக்கவில்லை நான் உண்டு என் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன் " என்றான் துறவி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தார்.

வீட்டில் இரு முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள், குழந்தைகளின் கூச்சலும் விளையாடும் குரலும் கேட்டது.

 துறவி திரும்பவும் கேட்டார். "நீங்கள்  வேறு எதுவும் செய்வதில்லையா? என்று. அவருடைய குரலில் ஒரு பரிதாபம் தெரிந்தது. ராமன் கொடுத்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை என்பதும் தெரிந்தது. "ஆமாம் சாமி எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றான் ராமன்

 அந்த தவசிரேஷ்டர் சோர்ந்த முகத்தோடு, குழம்பிய மனத்தோடு நடையைக் கட்டினார்.

 கதை இங்கே முடிந்து விடுகிறது. சில பல மாற்றங்களோடு இந்த கதை பல பகுதிகளில் வழங்கி வருகிறது. இந்த கதை என்ன செய்தியை சொல்லுகிறது.

 தவம் என்றுகாட்டில் போய் செய்வதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதன் தன் கடமையைச் செய்து சுற்றத்தாருக்கும், சமுதாயத்துக்கும், பயனுள்ள வாழ்க்கை நடத்துவதுதான் உண்மை தவம். என்று சொல்லாமல் சொல்லுகிறது. காட்டிற்கு போய் தவம் என்பது ஒரு வகையில் சமுதாயப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ்வதாகும். சக மனிதர்களிடம் அன்பு செலுத்தாத வாழ்க்கை, அந்த வாழ்க்கை. சராசரி மனிதனின் சாதாரணத்தை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்று இந்த கதை கூறுகிறது.

 துளி அளவு கூட அடக்கம்இல்லாமல் தன் தவ வலிமையைப் பற்றி பெருமைப் பட்டுக் கொண்டு அதை எல்லா இடத்திலும் தவறாகப் பயன்படுத்த முயன்ற கேவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது

 நாயை கல்லால் அடித்துவிட்டு, அந்த நாய் வலியில்குரைத்துக்கொண்டே ஓடுவதைப் பார்த்து, குறி தப்பாமல் அடித்த தன் திறமையைப் பற்றி நினைத்து சிரித்து மகிழும் சிறுவனுடைய சிறுபிள்ளைத் தனத்தை விட இந்த சாமியாரின் செயல் எந்த வகையிலும் உயர்ந்ததல்ல. அறியாச் சிறுவன் நாயை கல்லால் அடித்தான், அதன் உயிரைப் பறிக்கவில்லை. அவனை மன்னிக்கலாம்.

ஆனால் இந்த துறவி?

 புராணங்களில் வரம் சாபம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதெல்லாம் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் வரமே சாபமாக மாறிப் போவதைப் பார்க்கிறோம். தன்னை நோக்கி தவம் இருந்த பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமான் பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும். அவர் கொடுத்த வரம் அவருக்கே சாபமாக இருந்தது. நல்ல வேளை. கடவுளாக இருந்ததால் சிவன் தப்பினார். ஆனால் தசரதன் தப்ப முடியவில்லை. கைகேயிக்கு அவன் கொடுத்த இரண்டு வரங்கள் அவனுக்கே சாபமாகி அவனுடைய உயிரைக் குடித்தது. இதை எல்லாம் பார்க்கும்போது கொங்கன முனிவர் பாடு எவ்வளவோ தேவலாம் என்றுசொல்லத் தோன்றுகிறது. ஒரு குடும்பப் பெண்ணிடமும், ஒரு கசாப்புக் கடைக்காரனிடமும் தலை குனிந்து நின்றார். அவ்வளவுதான்.

 ஒரு துறவியின் கதையில் தொடங்கி இன்னொரு துறவியின் கதையோடு முடிக்கலாம்.

 ராமகிருஷ்ண பரமஹம்சர் அமைதியாக கங்கை நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு துறவி அந்த பக்கம் வந்தார் அதே காவி உடை.சடைமுடி,நீண்ட தாடி. கையில் கமண்டலம். ஒரு அலட்சியமான பார்வை

பரமஹம்சருக்கு அருகில் வந்த துறவி, அவருடைய கவனத்தைப் பெறுவதற்காக மெதுவாக கனைத்தார், பரமஹம்சர்திரும்பிப் பார்க்கவில்லை.
 துறவி சற்று பெரிய குரலில் கனைத்தார். இப்பொழுது பரமஹம்சர் அந்த துறவியை நிமிர்ந்து பார்த்தார். அவர்" நீர்தான் பரமஹம்சரோ" என்று மிடுக்காகக் கேட்டார்.

 அப்படித்தான் மக்கள் என்னை அழைக்கிறார்கள்.என்று பரமஹம்சர் அமைதியாக பதில் அளித்தார்.

 நான் யார் தெரியுமா?என்றார் துறவி. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன் என்றார் ராம கிருஷ்ணர். துறவி தொடர்ந்தார். நான் பெரிய தவயோகி.எல்லா யோகமும் எனக்குத் தெரியும் சகல சாஸ்திரங்களும் எனக்கு அத்துபடி. என்று கூறிக் கொண்டே போனார்.

 பரமஹம்சர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.

 நான் அறியாத வித்தை இல்லை இமயமலையில் முப்பது வருடங்கள் தங்கி எல்லா  யோகங்களையும் கற்றுக் கொண்டுவிட்டேன். நான் நினைத்தால் இந்த கங்கை நதி  வெள்ளத்தில் நடந்தே அந்த கரைக்கு போக என்னால் முடியும் என்றார் அந்த துறவி.

 அடாடா, வீணாக்கிவிட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.

துறவிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்கிறீர் என்றார்.

 ஒரு பைசா கொடுத்தால் அந்த பரிசல்காரன் உங்களை அந்த கரையில் கொண்டு சேர்த்து  விடுவானே. அதற்குப் போய் முப்பது வருடங்களை வீணாக்கி விட்டீரே சுவாமி என்றார் பரமஹம்சர்.
  
துறவி திகைத்துப் போய் நின்றார் யாரோ தலையில் சம்மட்டியால் அடித்த உணர்வு. இந்த சாமியார்கள் எந்த காலத்திலும் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.

 - மு. கோபாலகிருஷ்ணன்

அடையாளம்

அன்பான தமிழர்களே,

நானும் என் நண்பரும் பேசிக் கொண்டிருக்கையில், மிக சாதரணமாக அவர் "குளிர்" என்பது ஆங்கில வார்த்தை என்று சாடி விட்டார்.
"COOL AIR " என்பது தான் குளிர் என்று மாறி விட்டது. வட காற்று என்ற திசை சொல் தான் வாடைக் காற்று என்று மருவியது. கூதல் என்பது தான்
உண்மையான தமிழ் சொல் என்கிறார் . உங்களின் வாதத்தை இங்கே பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி.

இப்படியே போனால் நம்மின் அடையாளம் ஒவ்வொன்றும் வேறு ஒருவரின் அடையாளம் ஆக கருதப்படும்.
நாம் நம்முடைய அடையாளத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து இந்த வலைதள தொடர்பை பாருங்கள்.

மிக சரியான வரிகள்." http://www.youtube.com/watch?v=TnWbRFabSrg&feature=ரேலடேத்"
நாம் நாமே என்று பெருமை பேசும் காலம் நெருங்கி விட்டது.
வாருங்கள் தமிழர்களே ஒன்று சேருவோம்.

வேதாந்தி